ஐங்குறுநூறு தரும் காதல் சுவை -பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா-

.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களிலே ஐங்குறுநூறு என்பதுவும் ஒன்று.

ஐங்குறுநூறு என்பது குறைந்த வரிகளைக்கொண்ட 500 பாடல்களின் தொகுப்பாகும்

இந்த நூல் எழுதப்பட்டமையைக் கூறும் வரலாற்றுச்செய்தியொன்று உள்ளது. முடியுடை மூவேந்தர்களிலே, கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் கடைச்சங்ககாலத்திலே ஆட்சியிலிருந்தவர்களில் ஒருவன்.


அந்த மன்னன் தமிழ்மொழியின் மீது தணியாத பற்றுடையவன். தமிழ்ப்புலவர்களிடம் அளவற்ற பாசம் உடையவன். தமிழ் இலக்கியங்களைப் படித்து இன்புறுவதிலே அவனுக்கு மிகவும் விருப்பம். அதிலும் அகத்திணை சார்ந்த காதல் இலக்கியங்களைப் படித்துச் சுவைப்பதென்றால் கரும்பைக் கடித்துச் சுவைப்பதுபோல அவனுக்கு இனிக்கும். அத்தகைய மன்னனுக்கு ஓர் ஆசை. அன்பின் ஐந்திணைகளுக்கும் அதாவது ஐவகை நிலங்களுக்கும் தனித்தனியாக நூறு பாடல்கள்கொண்ட நூல்களைப் புலவர்களைக்கொண்டு இயற்றுவிக்கவேண்டும், தமிழ் உலகம் அதனால் பயனுறவேண்டும் என்பதே அந்த ஆசை. மன்னன் தனது ஆசையைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற பெரும் புலவரிடம் கூறினான். அவரோ தான்பாடாமல் ஒவ்வொரு திணையிலும் சிறப்புற்று விளங்கும் ஐந்துபுலவர்களிடம் அப்பணியை ஒப்படைத்தார். புலவர்கள் பாடி அவரிடம் கையளித்ததும் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் வரிசைப்படுத்தித் தொகுத்து, மன்னனின் ஆசையை அவர் நிறைவேற்றினார்.

காதலர்களின் உள்ளத்து உணர்வுகளை மிகவும் துல்லியமாக எடுத்துக்கூறும் பாடல்களால் நிரம்பப்பெற்றது ஐங்குறுநூறு. காதலர் ஊடல், களிப்பிலே கூடல், காதலன் கள்ள உறவினைத் தேடல், பரத்தைப் பெண்களை நாடல், காதலி வாடல், தோழிப்பெண் காதலனைச் சாடல் என்றிப்படியெல்லாம் உள்ளங்களின் காதல் உணர்வுகளையும், உடல்களின் இன்ப உறவுகளையும் நல்லவிதத்தில் நயம்படச் சொல்லுகின்ற பாடல்களால் நிரம்பப்பெற்றது இந்நூல்.

ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக அமைந்த மருதத்திணைக்குரிய பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார் என்ற புலவர். அவரது பாடல் ஒன்று பின்வருமாறு:

தலைவன் பரத்தையொருத்தியின் வீட்டிற்குச் சென்று அவளோடு கூடிக்குலாவி இன்பம் அனுபவித்துவிட்டுத் தன் இல்லத்திற்குத் திரும்பிவந்து கொண்டிருக்கின்றான். தலைவியிள் தோழி அவனைக் காணுகிறாள். அவனது உடலிலும், வெளித்தோற்றத்திலும் அவன் விலைமாதரோடு களித்திருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அதைக்கண்டுகொண்ட தோழி அவனிடம் சொல்வதுபோல அமைந்தது இந்தப்பாடல்

“செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின், என்னா குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்,
பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே.”

(ஐங்குறுநூறு பாடல் இல: 84)

பிறபெண்களோடு நீ உறவாடுகின்றாய் என்பதைத் தன் காதினால் கேட்டாலே சொல்லில் அடக்க முடியாதளவு கடுங்கோபம் கொள்வாளே உன்காதலி. அப்படியிருக்கும்போது, தைத்திங்கள் நாளில், நறுமணம் வீசுகின்ற மலர்கள் சூடப்பட்ட கூந்தல்களையுடைய பெண்கள் எல்லாம் இறங்கி நீராடுகின்ற குளத்தைப்போல, விலைமாதர்கள் பலர் தழுவிக்கிடந்த உன் மார்பிலே காணப்படுகின்ற புணர்குறிகளை இப்போது அவள் கண்டால் என்ன ஆகுவாளோ? (உயிரையே விட்டுவிடுவாளே!)

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாக அமைந்த நெய்தல் திணைக்குரிய பாடல்களை அம்மூவனார் என்ற புலவர் பாடியுள்ளார்.

இரங்கல் என்பது அன்புடைய காதலர்கள் ஒருவரை ஒருவர் நினைத்து ஒருவருக்காக மற்றவர் இரங்கியிருத்தல். உதாரணமாகக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற காதலனை நினைத்து, அவன் கரையேறி வரும்வரை காதலி கலங்கியிருத்தல். நெய்தல் திணையின் உள்ளத்து உணர்வுகள் வேதனையோடு கூடியதாகவே இருக்கும். அத்தகைய சோக உணர்வுகளை சுவையாக வெளிப்படுத்துகின்றன ஐங்குறுநூற்றின் நெய்தல் திணைப்பாடல்கள்.

அவற்றிலிருந்து ஒரு பாடல் பின்வருமாறு:

“கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ!”

(ஐங்குறுநூறு பாடல் இல: 196)

தலைவியின் தோழியிடம் உதவி கேட்கிறான் தலைவன். அவன் தலைவியின் மேல் காதல் வயப்பட்டு அவளுடன் களவு உறவிலே ஈடபட விரும்புகின்றான். அவனது எண்ணத்தை அறிந்தும் அறியாதவள் போல, அவர்களது கள்ளத் தொடர்பு நீடிப்பதை விரும்பாமல் அவனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்தது இந்தப்பாடல்.

தெளிந்த நீரிலே சிறந்த இறால் மீன்கள் அகப்படுகின்ற குளிர்ந்த கடல் உள்ள நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவனே! சங்கை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களையும், தோளுக்குப் பொருத்தமான தோளணியினையும் அணிந்துள்ளவளும், பலவிதமாக முடித்த கூந்தலை உடையவளுமான அவளை நீ அடைவதற்கு விரும்பினால், முறைப்படி வந்து பெண்கேட்டு அவளைத் திருமணம் செய்துகொள்.

(அதைவிடுத்து களவு உறவிலே நீ அவளை அடைந்து இன்புற முடியாது என்பது கருத்து)


புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருளான குறிஞ்சித் திணைக்குரிய பாடல்களைப் பாடியவர் புகழ்பெற்ற புலவராகிய கபிலர். சங்க இலக்கியங்களில் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். ஐங்குறுநூறில் அவர்பாடிய நூறு பாடல்களில் ஒன்றைச் சுவைப்போம்.

“அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை யடுக்கத் திழிதரும் நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாள் இவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் - அன்னாய்!”

(ஐங்குறுநூறு பாடல் இல: 220)

அவளை மணம் முடிப்பதற்குப் பலர் பெண்கேட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாரையாவது அவளின் பெற்றோர் ஏற்றுக்கொண்டுவிடுவார்களோ என்று கவலைப்படுகிறாள், அவளின் காதல் தொடர்பை அறிந்த அவளது தோழி. அதனால், அவளின் செவிலித் தாயிடம் சென்று அவளின் காதல் பற்றிக் குறிப்பால் உணர்த்துவதாக அமைந்தது இந்தப் பாடல்.

இதன் கருத்து:

அன்னையே! அசைகின்ற மேகங்கள் பொழிகின்ற மழையினால், அகன்று பரந்து வீழ்கின்ற அருவி, (காற்றில்) ஆடிக்கொண்டிருக்கும் மூங்கில்கள் நிறைந்த மலைப்பகுதியிலே எந்நேரமும் ஒழுகிக்கொண்டே இருக்கும். அத்தகைய மலையைச் சேர்ந்தவன் மலை நாடன். மாமலைபோன்ற அவனது வெற்றி பொருந்திய அழகிய அகன்ற மார்பைத் தழுவாது விட்ட நாட்களில் உன் மகளின் மலர் போன்ற கண்கள் நீரைச் சொரியும். இதனை நீ அறிவாயாக.

அதாவது, ஒருநாள் மலைநாடனைத் தழுவாது விட்டாலும் அன்றெல்லாம் அழுதழுது கண்ணீர் வடிப்பவள் உன் மகள். அந்தளவு அவனோடு காதல் கொண்டிருப்பவளின் உள்ளம் வேறு யாரையும் தழுவுவதற்கு இடம் தருமா? எனவே, அவனுக்கே அவளை மணம் முடித்துக் கொடுத்துவிடு என்பது தெளிவான கருத்து.

பிரிதலும், பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாக அமையப்பெற்ற பாலைத்திணைக்கான பாடல்களைப் பாடியவர் புலவர் ஓதல் ஆந்தையார்.

காதலர்களுக்கிடையே பிரிவு ஏற்படும்போது உள்ளங்களின் நெருக்கம் மேலும் இறுக்கமாகும். ஒருவரையொருவர் நினைத்து ஏங்கும்போது இருவரின் இதயங்களிலும் காதல் கனிந்து உருகும். அந்த உணர்வுகளைப் புலவர் ஓதல் ஆந்தையார் மிகவும் அற்புதமாகச் சித்தரித்துள்ளர். அவரது பாடல்களில் இருந்து ஒன்று பின்வருமாறு.

மகளைக் காணவில்லையென்று தாய் தனது வீட்டில் அழுதுகொண்டிருக்கின்றாள். அவளது மகள் காதலனுடன் காட்டுவழியே சென்றதைக் கண்டவர்கள் அவளிடம் வந்து சொல்வதுபோல அமைந்த பாடல் இது.

“புன்கண் யானையொடு புலிவழங் கத்தம்
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே!”

(ஐங்குறுநூறு பாடல் இல: 386)

இதன் கருத்து:

நெடிய சுற்றுச் சுவராகிய மதிலால் பாதுகாக்கப்படும் நல்ல வீட்டிலே இருந்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பவளே! நீ முதன்முதலில் பெற்றெடுத்த உனது மகள், துன்பம்கொடுக்கும் யானைகளும் புலிகளும் அலைந்துதிரிகின்ற கொடிய காட்டுவழியையும் கடந்து தான் விரும்பிய காதலனுடன் ஒன்றுகலந்தவளாகச் சென்றுகொண்டிருக்கின்றாள்.

இவ்வளவு பெரிய பாதுகாப்பான அழகிய நல்ல வசதியான வீட்டில் வாழ்வதை விடுத்து, கொடிய விலங்குகள் வாழும் காட்டினூடாகச் செல்லவேண்டிய துன்பத்தையும், அபாயத்தையும் எதிர்கொண்டு செல்கிறாள் என்றால் அவள் அந்த அளவுக்குக் காதல்வசப்பட்டுள்ளாள் என்பதுதானே காரணம். அவளது காதலை நீ அங்கீகரித்து அவள் விரும்பியவனுக்கே அவளை மணமுடித்துக் கொடுத்திருந்தால் இப்படி அவள் சென்றிருக்கமாட்டாள் என்று இப்பாடலுக்கு விரித்துக் கருத்துக்கொள்ள வேண்டும். “நயந்த காதலற் புணர்ந்து சென்றனள்” என்பதுஅவள் விரும்பியவனோடு இணைந்து செல்கிறாள் வேறென்னதான் செய்வாள் என்ற கருத்தை அழகாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

முல்லைத்திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். இதற்கான பாடல்களை பேயனார் என்னும் பெரும்புலவர் பாடியுள்ளார்.

கார்காலம் வந்தது. அதுதான் இன்பம் நுகர்வதற்கு ஏற்ற காலம். வீடு திரும்பிய தலைவன் தலைவியுடன் கூடிமகிழ்ந்திருக்கிறான். ஒரு நாள் அவளை அழைத்துக்கொண்டு காடு நிறைந்த பகுதிக்குப் “பொழிலாட்டயர்தலை” நாடிச் சுற்றுலாச் செல்கின்றான். அங்கே கார்காலத்தில் எழக்கூடிய இன்ப உணர்வுகளால் விலங்குகள் ஒன்றுடன் ஒன்று கலந்து இன்புற்றிருப்பதைக் காணுகிறான், அவளுக்குக் காட்டுகிறான்.

“உயிர்கலந் தொன்றியசெயிர்தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா விருந்து கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல்! – புறவின் மாவே”

(ஐங்குறுநூறு பாடல் இல: 419)

இதன் கருத்து:

‘அன்பே! இந்தக் காட்டுப்பகுதியிலே உள்ள விலங்குகளைப்பார்! பருவகாலத்தின் இன்பத்தின் தூண்டுதலால் உடல்கள் மட்டுமன்றித் தம் உயிர்களும் ஒன்று கலந்துவிட்டவாறு அன்புப்பிணைப்போடு அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மகிழ்கின்றன. ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிவதென்பதையே அறியாதனவாக நம்மைப்போல விருப்போடு ஒன்றுசேர்ந்து களித்திருக்கின்றன’ என்று தலைவன் தலைவிக்குச் சொல்கிறான்.

“பிரிந்துறல் அறியா” என்பதன் மூலம், மனிதர்ளைப்போல காதலியைப் பிரிந்து காதலன் செல்கின்ற நிலைமைகளை விலங்குகள் அறியாதன. அவ்வாறு அவை எப்போதும் பிரிவதில்லை. பிரிவுத் தவறைச் செய்து துயரப்படுவது மனிதர்களாகிய நாம்தான் என்கின்ற உட்கருத்தும் இதில் இழையோடுகின்றது.

1 comment: