குருடர்களின் யானை- எஸ். சந்திரமௌலி



.
அத்தியாயம் 20

லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப் பகுதிக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பேட்டி காண விரும்பினோம். அவரும் சம்மதித்தார். ஆழ்வார்ப்பேட்டை (இன்றைய)  டி.டி.கே. சாலையில் இருந்த அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அந்த இடத்துக்கு ஜெயகாந்தன் சூட்டியிருந்த செல்லப் பெயர் ’மடம்’. எழுத்தாளர் ம. வே. சிவகுமாரிடம் கேட்டால் தனது மடத்து அனுபவங்களை மணிக்கணக்கில் சொல்லுவார்.
அந்தப் பேட்டியில் நாங்கள் கேட்ட ஒரு கேள்வி, “உங்கள் முதல் கதையை அச்சில் பார்த்தபோது எப்படி இருந்தது?” அதற்கு ஜே.கே.வின் பதில், “என் எழுத்தை அச்சில் பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது.”


இந்த பதில் எனக்கு  ஆச்சரியத்தை அளித்தது. அடுத்த சில நாள்களுக்கு நான் பலரிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடைய சக மாணவன் ஒருவன் இதையே குமுதத்துக்கு எழுதி அனுப்பினான், அது பிரசுரமானது. அதற்காக நான் அந்த மாணவருக்குப் பாராட்டு தெரிவித்தாலும், “அட! இந்த விஷயத்தை ஒரு பெரிய பத்திரிகைக்கு எழுதலாம் என்று நமக்குத் தோன்றவில்லையே!” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.
கல்லூரி நாளில்தான் என்றில்லை, எழுத ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டாலும், இன்றுகூட ஓர் அபாரமான மேட்டரைப் பத்திரிகையில் படித்தால் ’அட! இந்த சூப்பர் ஐடியா நமக்கு  வரவில்லையே!’ என்ற எண்ணம் எனக்கு வருகிறது.
****************
1986ல் ஜெயகாந்தனுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அப்போது நான் அவரைப் பேட்டி காணச் சென்றேன். பவ்யமாக “விருது கிடைத்துள்ள தகவல் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது? அதை அறிந்ததும் உங்களுடைய ரியாக்ஷன் என்ன?” என்று கேட்க ஆரம்பித்தேன்.
ஜே.கே. “உங்களுக்கு எப்படித் தெரியுமோ, அப்படிதான் எனக்கும் தெரிந்தது” என்று ஆரம்பித்தவர் ஒரு சின்ன இடைவெளி கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார், “ஒருவேளை விருது கிடைக்கப்போகிறது என்கிற விஷயம் எனக்கு முன்னாலேயே தெரிந்திருந்தாலும், அது எப்படித் தெரிந்தது என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசெல்லாம் எனக்குப் புதுசில்லை; விருதுகள் என்னைப் பிரமிக்கவைக்கவில்லை” என்று பதிலை முடித்தார்.
“கொஞ்சகாலமாக எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்போல இருக்கிறதே! ஏன் இந்த  வனவாசம்?” என அடுத்த கேள்வியைக் கேட்டேன். “என்ன? வனவாசமா? அந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள்” என்றார். “பத்திரிகைகளில் எழுதவில்லை என்பதால் நான் ஆளே இல்லாமல் போய்விட்டேன் என்று அர்த்தமா? நான் இன்னமும் பிசிதான். கதைகள், கட்டுரைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் என் சிந்தனையின் வெளிப்பாடுகள்!”
“ஆனால் வாரப் பத்திரிகைகளில் எழுதுவதில்லையே?” என்று கேட்டேன் நான். “நான் என்றைக்குமே அவர்களிடம் போய் நின்றதில்லை. அவர்களாக என்னிடம் வரும்போது எழுதித் தருகிறேன்” என்றார்.
“மாத நாவல் புற்றீசலில் நீங்களும் சிக்கிக்கொண்டுவிட்டீர்களே?” என்றதும் “இந்த ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான். இன்றைக்கு அது ஒரு பெரிய பிஸினசாகிவிட்டது. எனக்கு வேண்டிய ஒரு சிலர் என்னை எழுதிக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர்களுக்காக நான் எழுதித் தருகிறேன். தட்ஸ் ஆல்!” என்று பதில் வந்தது.
”வழக்கமாக எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைச் சினிமாவாக எடுக்க அனுமதி கொடுத்துவிட்டு, அது படமாக்கப்பட்டபிறகு, தங்கள் கதை சின்னாபின்னமாகிவிட்டதாகக் குறை சொல்கிறார்கள். நீங்கள் ஓர் எழுத்தாளர்மட்டுமில்லை, திரைப்பட இயக்குனரும்கூட. உங்கள் கதைகள் மற்றவர்கள் இயக்கத்தில் படமாகிறபோது அப்படி நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? உங்களுடைய “பாரிசுக்குப் போ” நாவல்கூட டி.வி. சீரியலாக ஒளிபரப்பாகப்போகிறதே?” என்ற கேள்விக்கு ஜே.கே. சொன்ன பதில் வெகு எதார்த்தமானது. “எனக்குத் திருப்திதான்! எழுத்து ஒரு மீடியத்திலிருந்து இன்னொரு மீடியத்துக்குப் போகும்போது சில மாற்றங்கள் அவசியமாகலாம். அவை கதையின் பெட்டர்மென்ட்டுக்காகதானே? மாற்றத்தை ஏன் காம்ப்ரமைஸ் என்கிறீர்கள்?”
அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதுபற்றிக் கேட்டபோது பட்டென்று பதில் வந்தது, “மாணவன் பழையவன்; ஆசிரியர் பழையவர்; பள்ளிக்கூடம் பழையது; சூழ்நிலை பழையது; அப்புறம் எப்படி வந்தது புதிய கல்விக் கொள்கை?”
“சமீபகாலமாக நீங்கள் சினிமா ஒன்றும் எடுக்கவில்லையே?”
”முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன்; சிந்தனையாளன்; சமூக மேம்பாட்டுக்காகச் சிந்திக்கிறேன். மக்கள் என்னைச் சிந்திக்கப் பணித்திருக்கிறார்கள். சினிமா ஒரு கிளை. அவ்வளவே!”
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் கர்ஜித்துக்கொண்டிருந்த ஜெயகாந்தன் அப்போது காங்கிரஸ் கட்சியின் மேடைகளில் பேசத் தொடங்கியிருந்தார். ஏற்கனவே தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அனுபவம் அவருக்கு உண்டு. எனவே “உங்களுக்குத் தேர்தலில் நிற்கக் காங்கிரஸ்  கட்சியில் சீட் கொடுத்தால் போட்டி இடுவீர்களா?” எனக் கேட்டேன். “மாட்டவே மாட்டேன். இப்போது நான் அமர்ந்துகொண்டிருக்கிறேனே இந்த அரியணைக்கு வேறு எதுவும் ஈடாகாது” என்று சொல்லிவிட்டுப் பலமாக சிரித்தார்.
கடைசியாக, ”இன்று எழுதுகிற பலர் தங்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஜெயகாந்தன்தான் என்று சொல்கிறார்களே?” என்று கேட்டேன். அதற்கு ஜே.கே.வின் பஞ்ச் பதில், “குருடர்கள் தடவிப் பார்த்த யானைதான் இவர்கள் எல்லோருக்கும் ஜெயகாந்தன்”
*********************
கல்கியில் நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடர் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், “இந்த தொடர்ல ஜே.கே.வைப் பத்தி எழுதறதுக்கு முன்னாடி அவரை ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரணும்” என்றார் நாகேஷ். அவரும் நானும் கே.கே. நகரில் ஜெயகாந்தன் வீட்டுக்குப் போனோம்.
ஜெயகாந்தனுக்கு நாகேஷைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம். “பார்த்து எத்தனை நாளாச்சு!” என்று நெகிழ்ந்தார் நாகேஷ். ஜே.கே. வீட்டு மொட்டைமாடியில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து நெடுநேரம் பல விஷயங்களை அசை போட்டார்கள்: வட சென்னையில் ஜே.கே மீட்டிங் பேசப் போனபோது நாகேஷும் கூடப் போனது, ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்கு வந்து மணிக்கணக்காக ஜே.கே. பல விஷயங்களைப் பற்றியும் பேச, நாகேஷ் ஒரு வார்த்தை பேசாமல் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது, ஓர் அரசியல் தலைவரது பிறந்த நாள் விழாவுக்கு ஜே.கே.வை அழைக்க வந்திருந்த கல்லூரி மாணவர்களைக் கேள்விகளாலேயே பின்னி எடுத்துத் துரத்தியது, ’எதிர்நீச்சல்’ நாடகம் பார்க்க ஜே.கே.வை வீடு தேடிப்போய் அழைத்தது, அவரும் வந்து நாடகம் பார்த்துவிட்டுப் பாராட்டியது … இன்னும் பல.
திடீரென்று “ஜேகே! தொழுப்பேடு லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட் திறப்பதற்காகக் காத்திருந்தவேளையில் பிச்சை எடுத்தோமே! ஞாபகமிருக்கா?” என்றார் நாகேஷ். “என்ன பிச்சை எடுத்தீங்களா?” என்று நான் மிரண்டுபோய் கேட்டேன். “அதுவும் ஓர் அனுபவம்தானே?” என்றார் ஜெயகாந்தன். பின்னர் நாகேஷ் அந்தக் கதையை எனக்குச் சொன்னார்:
ஒருமுறை ஜெயகாந்தனும் நாகேஷும் இன்னொரு நண்பரும் காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தார்கள். வழியில் தொழுப்பேடு ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடியிருந்தது. அது திறக்கபப்டுவதற்காக நெடுநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.
“இப்போ என்ன பண்ணலாம்?” என்று ஜே.கே. கேட்டுவிட்டுத் தானே பதிலும் தந்தார். “பிச்சை எடுக்கலாமா?”
“என்ன சொல்றீங்க ஜே.கே.?” என்று நாகேஷ் மிரட்சியோடு கேட்க, “ஏன்? ரயில்வே கேட் திறக்கிறவரைக்கும் சும்மாதானே இருக்கணும்? பிச்சை எடுத்துப் பார்ப்போமே!”
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பேன்ட், சட்டையைக் கழற்றிவிட்டு உள்டிராயரோடு ரோட்டோரத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். அந்தக் கோலத்தில் இவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ரயில்வே கேட் திறக்கும்வரை போகிறவர், வருகிறவர்களிடம் இவர்கள் பிச்சை கேட்க, சில்லறை சேர்ந்தது.
கடைசியாக, ”யாருக்கு எவ்வளவு தேறியது என கணக்குப் பார்த்தபோது, அதில்கூட ஜே.கே.தான் திறமைசாலி என்று தெரியவந்தது” என்று முடித்தார் நாகேஷ்.
அன்றைய சந்திப்பில் ஜே.கே. சொன்ன இன்னொரு சுவாரசியமான விஷயம், ஒருமுறை எழுத்தாளர் மணியன் ஜெயகாந்தனைப் பார்க்க வந்திருக்கிறார், “எம்.ஜி.ஆர். உங்களைச் சந்திக்க விரும்புகிறார். எப்போது வருகிறீர்கள்? நானே அழைத்துக்கொண்டு போகிறேன்”
பதிலுக்கு ஜே.கே. “அவருக்குதானே என்னைச் சந்திக்கவேண்டும்? நீங்கள் அவரை இங்கே அழைத்துக்கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, மணியன் அப்செட் ஆனாராம்.
இது நடந்து சில மாதங்களுக்குப்பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காகச் சென்னை மத்தியச் சிறைச்சாலைக்குச் சென்றார் ஜெயகாந்தன், அப்போது அங்கே தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த எம்.ஆர். ராதாவை சந்தித்தார். இந்தச் செய்தி பரவலாக வெளியானது. இதைப் படித்த எம்.ஜி.ஆர். “ஜெயகாந்தன் ஜெயிலுக்குப் போய் எம். ஆர். ராதாவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அன்றைக்கு நான் அவரைப் பார்க்கவேண்டும் என்று சொன்னபோது என்னையே வரச்சொன்னாரே” என்று மணியனிடம் கேட்டிருக்கிறார்.
இந்த விவரத்தை மணியன் ஜே.கே.யிடம் சொன்னபோது பட்டென்று வந்த பதில், “எம்.ஜி.ஆரும் ஜெயிலுக்குப் போகட்டும்; அங்கே வந்து அவரைப் பார்க்கிறேன்.”
***********************
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தபோது, அவரது நெருங்கிய நண்பரும் அவரது எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமான கே. எஸ். என்கிற கே. சுப்ரமணியனிடம் ஜே.கே. பற்றிக் கேட்டு எழுதினேன். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.
ஒரு நாள் இரவு, ஜே.கே. வீட்டுக்கு ஒரு திருடன் வந்திருக்கிறான். அவர் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய்களைப் பறித்திருக்கிறான். ஆனால் அவன் பறித்துப் போட்ட தேங்காய்கள் கீழே விழுந்த சத்தத்தில் ஜே.கே. தூக்கத்திலிருந்து விழித்துவிட்டார். வெளியே வந்து பார்த்தால், மரத்தின் மேல் திருடன்!
மனிதர் பதற்றப்படவே இல்லை. ரொம்பக் கூலாக “மரத்தில தேங்காயெல்லாம் முத்திப்போச்சே, பறிக்க ஆள் இல்லையேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். நல்ல காலம் நீ வந்தே! எல்லாக் காய்களையும் பறிச்சுப் போடு, நீ பாதி எடுத்துக்கோ” என்றார்.
தேங்காய் திருட வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அன்று பறித்த தேங்காய்களில் ஆளுக்குப் பாதி!

No comments: