தமிழ் சினிமா

.
தூங்கா நகரம்

நட்புக்குள் துரோகத்தை சொன்னது சுப்ரமணியபுரம். துரோகமில்லா நட்பை சொல்கிறது தூங்கா நகரம். இனி மதுரை தொடர்பான எந்த படத்தை பார்க்க போவதற்கு முன்பும் பிளட் டொனெட் செய்துவிட்டு போவது நலம். எல்லாம் ஒரு பேலன்சுக்காகதான்!

வெவ்வேறு தொழில் செய்யும் நாலு வாலிபர்கள். 'புனிதமான' ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். வாந்திக்கும் இரைச்சலுக்கும் நடுவில் இறுக்கமாகிற அவர்கள் நட்பு ஒரு கொலை வரைக்கும் செல்கிறது என்பதுதான் கதை.



குடிகார நண்பர்கள் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனாவசியமாக குறுக்கிடுகிறார் அய்யர் ஒருவர். எம்பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு எம்எம்எஸ் என்று அவர் அலற, விபரம் கேட்கிற விமல் புறப்படுகிறார் ஆவேசத்தோடு. விஷயம் இதுதான். ஜவளிக் கடைக்கும் துணி எடுக்க வரும் பெண்களை உடை மாற்றும் அறையில் ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழிக்கிறார்கள் இரு இளைஞர்கள். அவர்களிடமிருந்துதான் இப்படி ஒரு எம்எம்எஸ்.

இருவரில் ஒருவனை நையப்புடைக்கும் விமல், அவன் கண்களையே குருடாக்கிவிட கோபம் கொண்டு எழுகிறார்கள் ஜவுளிக்கடை ஜாம்பவான்கள். வேலியில் போற ஓணான் மாதிரி போதையில் வந்த வம்பை சமாளிக்க முடியாமல் மதுரையை சுற்றியுள்ள சொந்த ஊருக்கு ஓடுகிறார்கள் நண்பர்கள். அப்படியிருந்தும் அடித்தவன் யார் என்பதை கண்டுபிடிக்கும் வில்லன் கோஷ்டி நீயே உன் நண்பனை கொல் என்று விமலுக்கு எதிராக மூவரையும் திருப்பி விடுகிறது. நட்பா? நமது உயிரா? என்று தடுமாறும் மற்ற மூவரும் எடுக்கிற முடிவுதான் மீதி.

விமலுக்கு இணையாகவே மற்ற நண்பர்களான கௌரவ், பரணி, நிஷாந்த் கேரக்டர்கள் இருந்தாலும் இவருக்கு மட்டும்தானே அஞ்சலி? அந்த வகையில் இவரே ஹீரோ என்று நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. விமலிடம் முந்தைய படங்களில் பார்த்த அதே உற்சாகம் கரைபுரண்டு ஒடுகிறது. எந்த வீட்டில் கலர் பல்ப் கட்டியிருந்தாலும் தைரியமாக உள்ளே நுழைந்து வீடியோ ஆர்டர் கேட்பதெல்லாம் செம ரவுசு.

டைரக்டர் கௌரவ் நால்வரில் ஓருவராக இருந்தாலும் தன்னை ஓவராக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததே மேல். இவருக்கு பிணம் எரிக்கிற வேலை. அதற்காக நண்பனின் மனைவி வளைகாப்பில் அவரை பிணம் போல நினைத்துப் பார்ப்பதெல்லாம் டூமச்!

பேசாமலே பின்னி எடுத்திருக்கிறார் நிஷாந்த். வில்லன் கோஷ்டியிடமிருந்து அவர் பஸ் ஸ்டாண்டில் தப்பிச் செல்லும் காட்சி ரசிகர்களுக்கு படபடப்பை தரும். அதே மாதிரிதான் லட்டுக்குள் விஷம் வைத்து நண்பனிடம் நீட்டுகிற காட்சியும்.

அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு பார்வையிலேயே நடுக்கத்தை ஏற்படுத்துகிறார் கமலா தியேட்டர் சிதம்பரம். இவர் ம்... சொன்னால் நல்ல நல்ல கேரக்டர்கள் தேடி வரலாம்.

அஞ்சலி, 'தெரு த்ரிஷா'வாம்! இந்த பாத்திரப் படைப்புக்காகவே டைரக்டருக்கு தனியாக ஒரு முறை கைதட்டலாம். ஒரே ஆறுதல், தன் வழக்கமான சோகத்தை தொலைத்துவிட்டு கலகலப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி. காமெடிக்கு இரண்டு கிழவிகளை பயன்படுத்தியிருக்கிறார் கௌரவ். குழந்தைகளும் பெண்களும் ரசிப்பார்கள்.

சுந்தர் சி பாபுவின் இசையில் வழக்கம் போலவே துள்ளல் துடிப்பு. அதிலும் கூரான பார்வைகள் மெலடியை திரும்ப திரும்ப கேட்கலாம். சில காட்சிகளில் கேமிரா எப்படி பயணம் செய்தது என்று யோசித்து கைதட்ட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.விஜய் உலகநாத். குறிப்பாக அந்த ஆரம்ப காட்சி.

தூங்கா நகரம்- மற்றுமொரு ஜிலீர்தண்டா!

-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி தமிழ்சினிமா.கொம்

நர்த்தகி
லீமா, அஸ்வின்


எஸ்.ஜி.பிலிம்ஸ் "புன்னகை பூ' கீதா தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நர்த்தகி'. இந்தப் படத்தில் திருநங்கை கல்கி கதாநாயகியாக நடிக்கிறார். கிரிஷ் கர்நாட் முக்கிய வேடம் ஏற்கிறார்.

இவர்களுடன் புதுமுகங்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய பத்மா. படம் குறித்தும், கதைக் களம் குறித்தும் அவரிடம் பேசிய போது, ""இந்தப் படம் மூலம் திருநங்கைகளின் வாழ்வை, அதிலுள்ள வலியை பதிவு செய்திருக்கிறேன். வழக்கமான சினிமாக்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டிருந்தாலும், கமர்ஷியல் சினிமாவாகவே இதை உருவாக்கி இருக்கிறோம். சமுதாயத்தால் அன்னியமாகப் பார்க்கப்படும் திருநங்கைகளின் வாழ்வை மிகவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். ஒரு இளம் வயது ஆண் மகன் மன உணர்வின் பாதிப்பில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தான் பெண்ணாக மாறிக் கொண்டிருப்பது அறிந்து படும் வேதனை என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்லும் கதைதான் "நர்த்தகி'.

அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண், தான் அவனால் நிராகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து படும் வேதனையையும் இதில் பதிவு செய்திருக்கிறேன். முடிவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை'' என்றார் விஜயபத்மா.

ஒளிப்பதிவு - சேசவன். இசை - ஜி.வி. பிரகாஷ்குமார். பாடல்கள் - நா. முத்துக்குமார்.
நன்றி தினமணி

No comments: