நான் மகான் அல்ல: திரைப்பட விமர்சனம்

.
கதவுக்கு பின்னால் 'ஹால்' இருந்தால் பரவாயில்லை, ஒரு மயானம் இருந்தால்? அப்படிதான் இருக்கிறது ரகளையான முன்பாதியும், ராட்சசத்தனமான பின்பாதியும்.
இரண்டையும் பூட்டி சவாரி செய்த விதத்தில் சூப்பர் ஜாக்கியாக செயல்பட்டிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

டீன் ஏஜ் பையன் கார்த்தி, அந்த வயசில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார் நிம்மதியாக! கஷ்டப்படாமலே காஜல் அகர்வாலை கவிழ்த்துப்போடும் அவரது 'சைட்'டாலஜியை ரசித்துக் கொண்டிருக்கும்போதே, கத்தியை தீட்டிக் கொண்டு வருகிறது இரண்டாம் பாதி. ஒரு நண்பனை போல பழகும் அப்பாவை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கார்த்தி, அழுது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பாவை கொன்றவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார். வேதனை என்னவென்றால் யார் கொலையாளிகள் என்பதையே அவர் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மர்ம நாவலின் அடுத்தடுத்த பக்கங்கள் போல விறுவிறுப்பாக நகர்கிறது படம். க்ளைமாக்ஸ்...? நாமெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் அந்த நிமிடம், நமது விரல் நகமெல்லாம் காலி!




கார்த்திக்குக்காகவே ஒரு ஃபார்முலா ஃபார்ம் ஆகியிருக்கிறது கோடம்பாக்கத்தில்! 'லவ் பெயிலியருங்க' என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும்போதே அடுத்த ரகளை என்னவாக இருக்கும் என்று ஆவல் கொள்ள வைத்துவிடுகிறார் மனுஷன். காஜல் அகர்வாலின் வீட்டுக்கே போய் பெண் கேட்கிற தைரியமும், தன்னை போட்டு தள்ள வரும் பிரபல ரவுடியையே "நாயகன் கமலுண்ணா நீங்க" என்று கவிழ்ப்பதுமாக கார்த்தியின் காவடியாட்டத்திற்கு கரங்கொட்டி மகிழ்கிறது தியேட்டர். வேலை கொடுத்த பாலகிருஷ்ணனை அவரது மனைவியிடம் போட்டுக் கொடுக்கிற காட்சியெல்லாம் ரகளையோ ரகளை. பழைய கார்த்திக் ரிப்பீட் ஆகிவிட்டாரோ என்று கொண்டாடுகிற அளவுக்கு பின்றீங்க பிரதர்!

கோழிமுட்டை கண்களும், குதிரை உடல் வாகுமாக காஜல் வருகிற காட்சிகள் எல்லாமே அகர்வால் ஸ்வீட்! கதையின் போக்கு ரத்தப்போக்கு ஆனபின் இந்த அழகான ஸ்வீட் கடையை மூடி கண் வறள வைத்துவிட்டார் இயக்குனர்.

வெட்டி ஆபிசர் மகனுக்கு பாக்கெட்டில் பணம் வைத்து அனுப்புகிற அன்பு அப்பாவாக ஜெயப்பிரகாஷ். (போன படத்தில் வில்லனாக பார்த்த நினைவு) கேரக்டரோடு மிக்ஸ் ஆகிக் கொள்கிற வித்தையை புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தானோ என்னவோ அந்த கொலைக் காட்சியில் பதறிப்போகிறோம் நாம். வருங்கால மருமகள் காஜல் அகர்வாலிடம் இவர் பேசுகிற காட்சியை ஒவ்வொரு இளைஞனும் ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்க்க வைக்கிற அளவுக்கு மனசுக்கு அருகில் வருகிறார் மனுஷன்.

அப்புறம்... அந்த இளைஞர்கள்! வடசென்னை புழுதியில் போட்டு புரட்டி எடுத்த மாதிரி அப்படியரு நேர்த்தியான தேர்வு. அதிலும் விழியிலேயே ஒரு உருட்டுக்கட்டையை வைத்திருக்கிறான் அந்த முட்டைக்கண் இளைஞன். ஒரு கொலையை மறைக்கவும்

மற்றொரு கொலையை நிகழ்த்தவும் உதவி கேட்டு போகிற இந்த இளைஞர் கோஷ்டி ஒரு வீட்டின் கதவை தட்ட, அங்கே நாம் பார்க்கிற நபருக்கும் அப்படியரு ரவுடிக் களை! இதுபோன்ற நடிகர்கள் தேர்வுதான் காட்சிக்கு காட்சி நிஜம் சேர்த்திருக்கிறது.

மிக கவனமாக லாஜிக்கை கையாண்டிருக்கிறார் சுசீந்திரன். ஆஸ்பிடலில் கார்த்தியின் செல்போனை வாங்கிப் பேசும் அந்த ரவுடிப் பையன், பின்பு அதே நம்பரை தொடர்பு கொண்டு கார்த்தியை திசை திருப்பும் காட்சியை ஒரு உதாரணமாக சொல்லலாம்.

முன்பாதிக்கும் பின்பாதிக்கும் தொடர்பே இல்லாமல் அறுத்து விட்டதை போல இருப்பதுதான் வித்தியாசமான திரைக்கதை யுக்தி. ஆனால் அதுவே ஒரு குறையாகவும் தோன்றுவதை சொல்லிதான் ஆகவேண்டும்.

ஒரு படத்தின் எடிட்டிங் எப்படி நமது காலில் சக்கரம் கட்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப்படம். ஹார்ட்ஸ் ஆஃப் காசி விஸ்வநாதன். இறகை போலே என்ற ஒரு பாடல் டாப். மற்ற பாடல்களும் இனிமை என்று யுவன் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது மதியின் சிறப்பான ஒளிப்பதிவு.

நல்ல நீதிக்கதை. ஓடுகிற விஷயத்தில் நல்ல 'நிதி'க்கதையாகவும் இருக்கக் கடவது!
நன்றி வீரகேசரி இணையம்

No comments: