புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 02 -சாந்தினி அருளானந்தம் யாழ் பல்கலைக்கழகம்

.

பொதுவாக பண்டைய காலத்தில் சமயத் தலைவர்கள் அரசர்களுடைய அவையிலே பல்வேறு நிலைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர்
அநுராதபுர இராசதானியில் பிராமணர்கள் ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும், சமயக்கடமைகளை ஆற்றுவோராகவும் பணிபுரிந்தமைக்கு பாளி இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன.



பௌத்தசமயம் எழுச்சியடைந்ததையடுத்து பௌத்தபிக்குகள் அவ்விடத்தைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் புத்தருடைய கருத்துக்களைப் போதித்தல், கற்பித்தல் போன்ற பணிகளில் ஆரம்பகாலத்தில் ஈடுபட்டனர்.

பௌத்தமதத்தை அநுராதபுரத்திலும், பிறஇடங்களிலும் பரப்புவதிலும் ,அதனை நிலைநிறுத்துவதிலும் இவர்கள் பெரும்பங்களிப்புச் செய்தனர்.

அவ்வப்போது இவர்கள் கல்வி மற்றும் புனித யாத்திரைகளின் பொருட்டு அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வந்தமை பௌத்தத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததென்பதை மறுப்பதற்கில்லை.

அங்குள்ள நாலந்தா, தட்சசீலம் போன்ற பௌத்த கல்விக்கூடங்களுக்கு இலங்கைப்பிக்குகள் செல்வதும், அங்கிருந்து பிக்குகள், யாத்திரிகர் உள்ளிட்ட பலர் இலங்கையிலிருந்த மகாவிகாரை, அபயகிரி விகாரை போன்றவற்றுக்கு வருகை தருவதும் வழக்கமாக இருந்தது.

பிற்காலத்தில் சீனா, ஜப்பான், திபெத், கம்போடியா போன்ற நாடுகளுடனும் இலங்கைப்பிக்குகள் சமயரீதியிலான தொடர்புகளை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது ஆரம்பகாலங்களில் நகருக்கு ஒதுக்குப் புறத்தில் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த பிக்குகள் காலப்போக்கில் அரசவையிலும் அரச குடும்பத்திலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர்.

இவர்கள் இருசோடி ஆடைகள், பிச்சா பாத்திரம், ஊசி, நூல், சவரக்கத்தி ஆகிய பொருட்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது பௌத்த மதத்தின் தொடக்ககால மரபாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் சாதாரண மக்கள் தொட்டு அரசகுடும்பம் வரைத் தானமாக வழங்கிய நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை என்பவற்றால் பௌத்த சங்கம் உருவாகி, அது அரசிற்குச் சமமான நிலையில் சொத்துடைய நிறுவனமாக வளர்ந்தது.

இதனால் பௌத்த துறவிகளின் பணி போதனைக்கப்பால் கல்வி, சமூக நலன், மருத்துவம் என விரிவடைந்தது.

இத்தகைய கொடைகளால் பொருளாதார ரீதியாகவும் எழுச்சியடைந்த பிக்குகள் செல்வாக்கிலும் அரசுக்கு நிகராக எழுச்சி பெற்றனர்.

அரசர்களும் அரசபதவியும் மாறும் தன்மையுடையதாக இருந்தபொழுது பௌத்தசங்கம் என்றும் நிலைபெற்றிருக்கும் நிறுவனமாக விளங்கியது.

இதனால் பொருளாதார ரீதியாகக்கூட பொதுமக்கள் சங்கத்துடன் தொடர்புகளைப் பேணக் கூடியதாக இருந்தமை சங்கத்தின் அதிகாரவளர்ச்சிக்கு ஏதுவாகியது.

நாளடைவில் அரசியல் பிணக்குகளைத் தீர்த்து வைக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றமையைச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

தென்னிந்தியத் தமிழ்ப் படையெடுப்பாளர்களிடமிருந்து வட்டகாமணியைப் பாதுகாத்தவர் குபிக்கல மகாதிஸ தேரர் என்ற பிக்குவேயாவர்.

இதற்கு நன்றிக் கடனாக வட்டகாமணி அபயகிரி விகாரையைக் கட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இவ்விகாரை பிற்காலத்தில் மகாஜான பௌத்தத்தின் மையமாக விளங்கியமை குறிப்பிடத்தக்ககது.

மேலும் இவர்கள் நாட்டின் ஆட்சியாளரின் கொள்கைகளையே மாற்றும்படி செய்தமைக்கு மகாசேனனின் ஆட்சி சிறந்த சான்றாக அமையும்.

தமிழ்நாட்டிலிருந்து வந்த சங்கமித்திரர் என்ற பிக்கு மகாசேனனின் ஆசிரியராகி, மகாஜான பௌத்தக் கொள்கைகளை ஏற்கச்செய்து, தேரவாதபௌத்த மையங்களையும் இந்துக்கோயில்களையும் அழிக்கச் செய்தமையை மகாவம்சம் அறியத்தரும்.

இக்காலகட்டத்தில் தேரவாத – மகாஜான பௌத்த பிக்குகளிடையே பெரும்வாதங்கள் நடைபெற்றதை அவதானிக்கலாம்.

மகாபாரக்கிரமபாகுவுக்கும் கஜபாகுவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கும் பௌத்த சங்கமே காரணமாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிகழ்வுகள் பௌத்தசங்கமும் , பௌத்தபிக்குகளும் ஆரம்ப காலத்தில் இலங்கையில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவனவாகவுள்ளன.

வளரும்.
நன்றி யாழ் மண்

1 comment:

putthan said...

பல நூற்றாண்டுகளுக்கு முதல் இந்தியா, இலங்கை என்ற நாடுகள் இருக்கவில்லை, என்பதை இந்த கட்டுரையாளர் அறியவில்லை போலும்.பிரித்தானியருக்கு பிறகு உருவாகிய இரு நாடுகளை வைத்து பழைய சரித்திரம் எழுதுகிறார் கட்டுரையாளர்.இதன் உள்நோக்கம் என்ன?

இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தொன்மை வாய்ந்த நாடுகள் என்று சொல்ல முற்படுகிறார்கள் போலும்.