முதல் பிடில் -சிறுகதை -

.
                                                                                                                                - ந.பிச்சமூர்த்தி

நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது.



"சூ... சூ" என்று ஒருவர் மாத்தி ஒருவராக கத்தினார்கள். காதலுக்கு கண் மட்டுமல்ல, காது கூட கிடையாது போல் இருக்கிறது. பூனைகள் இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, காதல் தீ மூளப் பாடுவதை நிறுத்தவுமில்லை.

நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு ஓங்கி, இரவின் நிசப்தத்தில் பயங்கரத்தின் பிரத்யக்ஷ உருவாயிற்று. வந்த ஆத்திரத்தில் தெருவாசி ஒருவர், எதையோ எடுத்து பூனையைப் பார்த்து விட்டெறிந்தார். அதற்குப் பிறகு எழுந்த குரல் ஒரு நீண்ட ஓலம் மாதிரியிருந்தது. அவ்வளவு தான், அப்புறம் ஆண்பூனையின் குரல் கேட்கவில்லை. மீளவும் நடுநிசியின் மோனம்... மறுநாள் காலை மாடியில் ஒரு ஆண் பூனை செத்துக் கிடந்தது. வீட்டுக்காரர் அதை தூக்கிக் கொல்லை மைதானத்தில் எறியச் சொன்னார்.

பூனையின் சவம் மெத்தென்ற பொருள்மீது வந்து விழுந்தது.

"என்ன மேலே வந்து விழுகிறாய்" என்றது அந்த மெத்தென்ற பொருள்.

"கோபித்துக் கொள்ளாதே நான் வேண்டுமென்று செய்யவில்லை. பிசகு அந்த வீட்டு மனுஷன் மேலே" என்று சமாதானம் சொல்லிவிட்டு, பூனையின் உடல், மேலே கேட்டது. "அது போகட்டும், என்னைப் போல நீயும் ஏதாவது செய்துவிட்டு இந்த மாதிரி தண்டனை அடைந்திருக்கிறாயா என்ன - மைதானத்திலே ஈ மொய்த்துக் கிடக்கிறாயே?"

அங்கே கிடந்தது செத்துப்போன பந்தயக் குதிரை ஒன்று.

"என் எஜமான் ஒரு இந்தியன், பந்தயப் பித்து. எனக்கு முந்தி எத்தனையோ குதிரையை வாங்கி வளர்த்து, பந்தயம் ஓட்டியிருக்கிறான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம் ஒரு தடவை கூட ஜயிக்கவில்லை. ஜயம் தான் கிட்டவில்லையே, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிடக் கூடாதா? அதுதான் இல்லை. கடைசித் தடவை என்று சபதம் கூறிக் கொண்டு தன் சொத்து முழுவதையும் விற்று என்னை வாங்கினான். எனக்காக அவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்ட மனிதனுக்கு நான் துரோகம் செய்யவில்லை. பந்தயத்தில் முதலாவதாகவே வந்து கொண்டிருந்தேன். ஜனங்களுடைய உற்சாகத்தையும் என் எஜமானருடைய கர்வத்தையும் வர்ணிக்கத்தரமல்ல. பந்தயம் முடியும் இடம் வந்தது. என்ன காரணத்தாலோ என் கால் தடுமாறி, கீழே விழுந்துவிட்டேன். முன்னங்கால் இரண்டும் என்னாயிற்றோ. எழுந்திருக்க முடியவில்லை. நான் கீழே விழுந்ததும் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த இரும்பு வர்ணக் குதிரை ஜயித்து வெற்றி மாலை சூடிற்று. என் எஜமானன் பந்தய வெறியன் அல்லவா? என் மீது பிறந்த வெறுப்பில் கைத்துப்பாக்கியால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். அதுமுதல் அவனுக்குப் பித்துபிடித்து விட்டதாம். இந்த மைதானத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வாரமாக இங்கே கிடக்கிறேன் கேட்பாரற்று. இப்பொழுது நீ வந்து சேர்ந்திருக்கிறாய் தோழனாக" என்று சொல்லி நிறுத்திற்று குதிரையின் சவம்.
"அப்பொழுது சரிதான். என்னைக் கொன்றவன் மீது பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் மனித ஜாதியையே பழிவாங்க வேண்டுமென்று தோன்றுகிறது - எப்படிப் பழிவாங்குவோம் சொல்லு" என்றது பூனை.

"நான் பழிவாங்க யோசிக்க வேண்டாம். தானாக நடக்கும் பார்! மனிதன் மண் மீது இருக்குமட்டும் நம்மை மறக்க முடியாமல் ஆகிவிடும் பாரேன்."

"எனக்கென்னவோ இதில் நம்பிக்கை இல்லை. வசவுக்கு வசவு, பிறாண்டலுக்கு பிறாண்டல், கொலைக்கு கொலை இது தான் நான் அறிந்த சட்டம்."

"பின்னொரு சட்டமும் உண்டு. மரத்தை வெட்டுகிறார்களே, அதற்காக, கோடாலிக்காரனுக்கு நிழல் தர மாட்டேன் என்கிறதா?"

"இதெல்லாம் மனிதன் சொல்லுகிற கட்டுக்கதை. எனக்குப் புரியாது. என் கருத்தை அப்பொழுதே சொல்லிவிட்டேன். பிறகு உன்னிஷ்டம். ஆனால் ஒன்று. நான் மாத்திரம் தனித்து நின்றால் என்ன செய்யமுடியும்? நீ சொல்கிறபடி கேட்கிறேன்."

"வா வழிக்கு. நாம் இருவரும் மனம் ஒத்து சும்மா கிடந்தால் அதுவே பழி வாங்குவதற்கு மேல் பலனளிக்கும் பாரேன்..."

இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அந்த மைதானத்தின் வழியாக வந்தான் ஒரு பித்துக்குளி இந்தியன். வாய் ஓயாமல் குதிரைகளைப் பற்றி பாடிக்கொண்டிருந்தான். மைதானத்து ஓடத்தில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் அடிபாகத்தில் போய் நின்று கொண்டு, குதிரைகளைப் பற்றி ஒரு ஆவர்த்தம் வைதுவிட்டு, ஒரு பத்து கஜம் விழுந்தடித்து ஓடினான்.

குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளைவால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடிமயிரை உருவி எடுத்துக்கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில்  நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்து பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாக பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்!


No comments: