இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 03

.


தமிழர் குடியேற்றம்

இலங்கையில் பழைய கற்காலம், குறுணிக் கற்காலம் என்பவற்றைச் சேர்ந்த பண்பாடுகளே மிகவும் புராதனமானவை.
பழைய கற்காலத்து மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்குக் கல்லினால் அமைந்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் இவர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.




இவர்களை அடுத்துக் குறுணிக்கற்காலத்து மக்கள் தோன்றினர். அவர்கள் சிறிய அளவிலான கூரிய கற்களை எலும்புகளிலோ, மரத்துண்டுகளிலோ பொருத்தித் தமது தேவைகளுக்கு பயன்படுத்தினர்.

அவை, மணற்பாங்கான நிலத்திலே கிளறி கிழங்குகளை எடுப்பதற்கும், காய்கனிகளை வெட்டுவதற்கும், விதைகளை உடைத்து உண்பதற்கும் பயன்பட்டன. சிற்றாறுகளிலும், ஆறுகளிலும், கடற்கரையிலும் பிடிக்கக்கூடிய மீன்களையும், முயல், காட்டு ஆடுகள் போன்ற சிறிய மிருகங்களைப் பிடித்து அவற்றை உரித்து மாமிசத்தை துண்டமாக்குவதற்கும் பயன்படுத்தினார்கள்.

இராக்காலத்திலும், மழை, குளிர் ஆகியவற்றிலிருந்தும் கொடிய மிருகங்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் குகைகளில் வசித்தார்கள். மகாவம்சம் இலங்கையின் புராதன குடிகளாக இயக்கரையும் நாகரையும் குறிப்பிடுகின்றது.

தமிழர் வரலாறு பற்றிய நூல்களில் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் இயக்கர், நாகர் என்போரை இலங்கையின் ஆதிவாசிகளாகக் கொள்கின்றது.

நாகரீகமடையாத ஆதிவாசிகளை இந்நூல்கள் இயக்கர் என்று குறிப்பிடுகின்றன. அவர்களை காட்டிலும் நாகர் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது.

இலங்கையிற் காணப்படும் 2000திற்கும் அதிகமான பிராமிச் சாசனங்களில் நாகரைப் பற்றிய குறிப்புக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

மகாவம்சம் குறிப்பிடுகின்ற புராதன அரசர்களிற் பலர் நாக வம்சத்தினர். இளநாகன், குஞ்ச நாகன், கல்லாட்டாநாகன், மகல்லக நாகன் முதலான அரசர்கள் நாகர் என்று சொல்லப்படுகின்றது.

இலங்கையின் வடக்கில் அமைந்த யாழ்ப்பாண தீபகற்பமும் அதனோடு இணைந்திருக்கின்ற பெரு நிலப்பகுதியும் முற்காலத்தில் நாகதீபம் என்று குறிப்பிடப்பட்டது.

அங்கு நாகர்கள் வாழ்ந்தனர் என்று மகாவம்சத்திலும் குறிப்புகள் உள்ளன. நாகர்கள் இலங்கையின் வேறு பகுதிகளிலும் வாழ்ந்தனர். மேற்குக் கரையோரம், கிழக்குக் கரையோரம், வடமத்திய பகுதி முதலானவற்றிலும் அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தமைக்கு பல ஆதாரங்கள் உண்டு.

தென்கிழக்கு இலங்கையில் அண்மைக்காலத்திற் கண்டெடுக்கப்பட்ட நாணயம் ஒன்றில் திசபுர தாட்ட நாகரசன் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

நாகரில் சிலர் பிராகிருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர் என்பதை இந்த வாசகம் உணர்த்துகின்றது.

இலங்கையின் பூர்வகுடிகளான நாகருக்கும் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்திருத்தல் வேண்டும். பழந்தமிழ் நூல்களில் அடங்கிய பாடல்களின் ஆசிரியர் பலர் நாகனார் என்ற பெயரால் வழங்கினர்.

அங்கு பல இடப்பெயர்களும் நாகர் என்ற சொல்லோடு தொடர்புடையனவாக காணப்படுகின்றன. புராதன காலத்தில் நாகர் எனப்படுவோர் பரத கண்டத்தின் பல பாகங்களிலும் பரவியிருந்தனர்.

கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் மத்திய இந்தியாவில் நாக என்ற பெயருடைய குலத்தவர் பலர் அரச பதவி பெற்றிருந்தனர்.

அதுமட்டுமன்றி அவர்களுடைய சாசனங்களிற் சைவ சமயத்தின் மீது நாகர் அபிமானம் கொண்டுள்ளனர் என்பதையும் அறிய முடிகின்றது. நாகருடைய தொடர்பு இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னமும் சரியாக விளக்கப்படவில்லை.

நாகர்கள் தமிழ் மொழி பேசினார்கள் என்ற கருத்து இலங்கையிற் சில தொல்லியல் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றது. இது வருங்கால ஆராய்ச்சிகளின் மூலமாகவே தெளிவாக்கம் பெறும்.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: