பயிர்வள மண்ணில் உயிர்ப்புடன் ஒரு மானிடன்

.
- முருகபூபதி

வானுயர்ந்த கட்டிடங்கள், கோபுரங்களை அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் விரையும்போது கண்ணில் பதியும் காட்சிகளினால் அந்தப்பரவசத்தை ரசித்திருக்கின்றேன். ஆனால் அபூர்வமாகத்தான் அந்த நிர்மாணங்களின் பின்னணியிலிருந்த கடின உழைப்பைப்பற்றி நினைத்திருப்பேன். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுதான் இயல்பு.

கட்டிடங்கள், கோபுரங்களுக்கு அடியில் கண்களுக்கு புலப்படாமலிருக்கும் அத்திவாரம் பற்றியாருக்குத்தான் என்ன அக்கறை? என்ன கவலை.?
யாருக்கு சிந்தனை?

நெடுஞ்சாலைகளுக்கு அடியில் நிரந்தரமாக உறங்கும் அந்தக்கற்களைப்பற்றி யார்தான் நினைத்துப்பார்க்கிறார்கள்.?

மழைவெள்ளத்தால் வீதியில் பள்ளமும் திட்டியும் தோன்றி; அந்தக்கற்கள் விழித்து மேலெழுந்துவிடும்போது பயணிக்கும்பாதையை திட்டிக்கொண்டே செல்வோம்.



பேசாமடந்தைகளான வீதிக்கற்களையும் கட்டிட கோபுர அத்திவாரங்களைப்போலவே இந்த உலகத்தில் பலர் மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகத்துக்கு தெரிவது அபூர்வம்.

எனது வாழ்வில் அப்படி ஒரு அபூர்வமான மனிதரை சந்தித்திருக்கின்றேன்.

எனது முதலாவது சிறுகதையை மல்லிகைக்காக அச்சுக்கோர்த்த சந்திரசேகரம் அவர்களைத்தான் இந்தப்பத்தியில் அபூர்வமான மனிதர் எனக்குறிப்பிடுகின்றேன்.

எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியீட்டு நிகழ்வை யாழ்ப்பாணத்தில் மல்லிகைப்பந்தல் சார்பாக ஒழுங்குசெய்துவிட்டு ஜீவா எனக்கு அஞ்சலட்டை மூலம் அழைத்திருந்தார். இத நிகழந்தது 1975 ஆம் ஆண்டு.

யாழ். ராஜா தியேட்டருக்கு சமீபமாக காங்கேசன்துறை வீதியில் பிரசித்திபெற்ற மூத்திரஒழுங்கைக்குள்ளிருந்து மாதாமாதம் மல்லிகை மலரும் சிறிய கட்டிடத்தை மட்டுமல்ல அதனுள்ளிருந்து அச்சுக்கோர்க்கும் சந்திரசேகரம் அண்ணரையும் அன்றுதான் பார்த்தேன். எல்லாம் நேற்று நிகழ்ந்ததுபோன்று நினைவில் தங்கிய காட்சிகள் அவை.

ஜீவா அறிமுகப்படுத்தினார்.

“இதுதான் எங்கட முருகபூபதி”

மலர்ந்தமுகத்துடன் என்னை அன்று 35 வருடங்களுக்கு முன்னர் வரவேற்ற அவர், அதே பரவசத்துடன்தான் மீண்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது சொந்த ஊரான நீர்வேலியில் என்னை வரவேற்றார்.

1975 முதல் 1986 இறுதி வரையில் அதாவது நான் அவுஸ்திரேலியா புறப்படும் வரையில் யாழ்ப்பாணம் சென்ற பல சந்தர்ப்பங்களிலெல்லாம் மல்லிகை காரியாலயத்திற்கு செல்லத்தவறுவதில்லை.

புலம்பெயர்ந்தபின்னர் இலங்கைக்கு பலதடவைகள் வந்தபோதும் யாழ்.மண்ணை எட்டிப்பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திரும்பும்போது அந்தக்கவலையையும் சுமந்துகொண்டுதான் பயணிப்பேன்.

இந்த ஆண்டு பயணத்தில் நிச்சயமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு செல்லவேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலுடன்தான் புறப்பட்டேன். வடக்கு சென்றால் நான் சந்திக்கும் முக்கியமான அன்பர்கள் யார்? என்று மனதில் பட்டியலிட்டபோது முதலிடத்திலிருந்தவர் சந்திரசேகரம் அண்ணன்தான். மற்றவர்களுடன் எனக்கு அவ்வப்போது கடித,தொலைபேசி தொடர்புகள் இருந்தன. ஆனால் எந்தத்தொடர்புகளும் இன்றியே என் நினைவில் நிறைந்திருந்தவர்தான் சந்திரசேகரம் அண்ணன்.

கம்பியூட்டர் யுகம் இலங்கையில் தோன்றியதும் நான் மிகவும் கவலைப்பட்டது, அதனால் தமது வேலைகளை இழந்த அச்சுக்கோப்பாளர்களைப்பற்றித்தான். விஞ்ஞான தொழில் நுட்பம் பலரதும் வயிற்றில் அடித்திருக்கிறது என்பதை நாம் முதலில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியாகிக்கொண்டிருந்தபோது ஜீவாவுக்கு எழுதும் கடிதங்களில் நான் மறக்காமல் பதிவுசெய்யும் பெயர் சந்திரசேகரம். மல்லிகையும் ஜீவாவும் கொழும்புக்கு இடம்பெயர்ந்தபின்னர் சந்திரசேகரம் பற்றி தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும்தான் கேட்டுதெரிந்துகொண்டேன். அவர் இந்த வசதி வாய்ப்புகள் எதுவும் இன்றி நீர்வேலி கிராமத்தில் சுகமாக இருக்கிறார் என்ற தகவல் மாத்திரம் எனக்குத்தெரிந்திருந்தது.

இறுதியாக 1986 இல் யாழ். மல்லிகைகாரியாலய வாசலிலிருந்து நானும் ரத்தினசபாபதி ஐயரும் காவலூர் ஜெகநாதனும் இன்னுமொரு தாவடி நண்பரும் (பெயர் நினைவில் இல்லை) ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தோம்.

ஜீவாவைத்தவிர எமது உரையாடலில் புலப்பெயர்வுதான் பேசுபொருளாக இருந்தது.

காவலூர் ஜெகநாதன் தான் தமிழ்நாட்டில் செட்டில் ஆகப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். நான் எங்கே செல்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஆனால் எங்காவது போய்விடுவேன் என்றேன்.

எமது உரையாடலை எரிச்சலுடன் உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த சந்திரசேகரம் வந்து “ போகிறவர்கள் எல்லாம் போங்கோ…நானும் ஜீவாவும் மல்லிகையும் எங்கும் போகமாட்டோம்.” என்றார்

அவர் அன்று சொன்ன வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை.

காவலூர் ஜெகநாதன் தமிழகம் சென்றார் அங்கேயே காணாமலும் போய்விட்டார்.

நான் முகவரி தேடும் மனிதனாக அவுஸ்திரேலியாவில் அலைந்துழல்கின்றேன்.

தாவடி நண்பர் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டார்.

ரத்தினசபாபதி ஐயரும் மல்லிகையும் ஜீவாவும் கொழும்போடு இடம்பெயர்ந்தனர்.

ஆனால் மூத்திர ஒழுங்கை மல்லிகைக் கட்டிடம் இன்றும் அதே இடத்தில்.; அதனுள்ளிருந்து வருடக்கணக்காக எங்கள் எழுத்துக்களையெல்லாம் அச்சுக்கோர்த்துக்கொண்டிருந்த சந்திரசேகரம் அண்ணர் இன்றும் இடுப்பில் சாரத்துடன் தோளில் சிறுதுண்டுடன் கிராமத்தானாகவே உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்துக்கு ஒரு இரவுப்பொழுது சென்றடைந்தபின்னர் மறுநாள் என்னுடன் வந்த நண்பர் எழுத்தாளர் டொக்டர் நடேசனையும் அழைத்துச்சென்று மல்லிகையின் முன்னாள் யாழ். காரியாலயத்தை காண்பித்தேன். அவர் முகப்பை படம் எடுத்தார்.

கதவுசாத்தி மூடப்பட்டிருந்த மல்லிகையின் அந்த வாயிலை சில கணங்கள் பரவசத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை பேராசிரியர்கள் அந்த வாசல் படிக்கட்டுகளில் ஏறிவந்து மல்லிகைக்கானதமது ஆக்கங்களை சந்திரசேகரத்திடமும் ஜீவாவிடமும்; கொடுத்திருப்பார்கள்.

ஒழுங்கையூடாக ஆடி ஆடி வரும் எங்கள் ஏ.ஜே.கனகரட்னா அந்த வாசலில் நின்று சொன்ன சுவாரஸ்யமான கதைகள்தான் எத்தனை?

ஏ.ஜே., சந்திரசேகரத்துக்கு ஒரு பட்டமும் சூட்டியிருந்தார்.

அதுதான் மல்லிகையின் எடிட்டர் இன் சார்ஜ். (நுனவைழச in உhயசபந)

மல்லிகை அச்சிட்டதும் ஜீவா கொழும்புக்கு பயணமாகிவிடுவார். அதன் பின்னர் அவர் யாழ். திரும்பும் வரையில் சந்திரசேகரம்தான் காரியாலயத்தையும் மல்லிகையையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

சிரித்திரன் சிவஞானசுந்தரம் ஜீவாவை காணும்போதெல்லாம், “ உமக்கென்னப்பா சந்தரசேகரம் என்ற சொத்து அச்சுக்கோப்பாளராக கிடைத்திருக்கிறார்” என்று சொல்வதுண்டு.

பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், படைப்பாளிகள் பலரதும் நல்லபிமானத்தைப்பெற்றவர்தான் சந்திரசேகரம்.

சில படைப்பாளிகளிடம் உரிமையுடன், ‘ அடுத்த முறைவரும்போது உமது படைப்புடன் வரவேண்டும். இல்லையென்றால் இந்தப்பக்கம் வரவேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் இந்த எடிட்டர் இன் சார்ஜ்.

இந்த சுவாரஸ்யமான நினைவுகளை சமீபத்தில் நீர்வேலியில் அவர் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச்சென்ற நண்பர் கருணாகரன் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

யார் இந்த கருணாகரன்?



முன்னர் வன்னியிலிருந்து வெளியான வெளிச்சம் இதழின் ஆசிரியர். கலை. இலக்கிய, ஊடகவியலாளர். வன்னியில் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழக தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜாவும் முள்ளும்மலரும் மகேந்திரனும் சந்திக்கவந்தபோது அவர்கள் கருணாகரன் இல்லத்தில்தான் தங்கினார்கள். கருணாகரனின் மகன், மகேந்திரன் அங்கு இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறார் தற்பேது இலங்கை தமிழ் ஊடகங்கள் பலவற்றில் வன்னியிலும் மற்றும் தமிழ்ப்பிரதேசங்களிலும் போருக்குப்பின்னரான நிலைமைகளை விரிவாக ஆய்வுசெய்து மிகவும் கனதியான ஆக்கங்களை எழுதிக்கொண்டிருப்பவர்தான் கருணாகரன்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாயிலில் கருணாகரனை முதல் முதலில் சந்தித்ததும் நான் அவரிடம் விடுத்தவேண்டுகோள்:- “என்னை நீர்வேலிக்கு நீர்தான் அழைத்துச்செல்ல வேண்டும்.”

சந்திரசேகரம் அவர்களது வீட்டைத்தேடி அந்த செம்பாட்டு கிராமத்துக்கு பயணமானோம். தோட்டப்பயிர்ச்செய்கைக்கு பெயர்போன அந்த கிராமத்தின் ரம்மியமான சூழல் என்னை பெரிதும் கவர்ந்தது.

அவர் வீட்டுக்கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி குரல் கொடுக்கிறார். “ உங்களைத்தேடி யாரோ வந்திருக்கினம்”

“.இருக்கச்சொல்லும். வாரன்.”

உடனே கருணாகரன் முற்றத்திலிருந்து குரல் கொடுக்கிறார், “ அண்ணை உங்களைப்பார்க்க ஒருவர் தொலைவிலிருந்து வந்திருக்கிறார். நான் கருணாகரன் அவரை அழைத்து வந்திருக்கிறேன்.”

“இதோ வாரன்.”

அவர் குளித்துமுடித்து, துவாயால் துவட்டிக்கொண்டு வருகிறார். என்னைப்பார்த்ததும் ‘ “அட எங்கட முருகபூபதி” என்னை கட்டி அணைத்துக்கொள்கிறார்.

நீண்ட நேரம் உரையாடினோம்.

மல்லிகை45ஆவது ஆண்டுமலரை கொடுத்தேன். ஒரு குழந்தையை வாஞ்சையோடு; அணைத்துக்கொள்வதுபோன்று பெற்று நெஞ்சோடு வைத்துக்கொண்டார். படங்கள் எடுத்துக்கொண்டோம். எமது வாகன சாரதி நண்பர் படங்களை பல கோணங்களிலும் எடுத்தார். ஐயா உங்களைப்பற்றி ஒரு ஆவணப்படமே எடுக்கவேண்டும். என்றேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டவர்தான் சந்திரசேகரம் அண்ணர். அத்துடன் அந்தக்காட்சி ஒளிப்படமாக மல்லிகையின் அட்டையிலும் பிரசுரமானது.

ஒரு இதழின் அச்சுக்கோப்பாளர் இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது உலகவரலாற்றில் அதுதான் முதல் தடவை என்று குறிப்பிடலாம்.

மல்லிகை பல படைப்பாளிகளை பிரமுகர்களை கல்விமான்களை அட்டையில் பிரசுரித்து கௌரவித்திருக்கலாம்.

ஆனால், மல்லிகையின் அச்சுக்கோப்பாளரை கணம்பண்ணி இவ்வாறு கௌரவித்திருப்பதானது பலருக்கும் குறிப்பாக தமிழக இலங்கை இதழ்களுக்கு முன்மாதிரியானது. ஓரு சாதாரண அச்சுக்கோப்பாளரை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து தேடிச்செல்வதிலிருந்து அவரது பெறுமதியை கணித்துக்கொள்ளலாம்.

என்னைப்போன்ற பல படைப்பாளிகளின் ஆக்கங்களை இன்று கணனி உள்வாங்கி அச்சுவாகனம் ஏற்றலாம். ஆனால் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாக பொறுமையுடன் கோர்த்து அச்சுவாகனம் ஏற்றி எமது இருப்பை இலக்கிய உலகத்திற்கு மல்லிகை வாயிலாக அடையாளம் காட்டினாரே சந்திரசேகரம் அவர் அன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் “ போகிறவர்கள் எல்லாம் போங்கோ.. நானும் மல்லிகையும் ஜீவாவும் இந்த மண்ணில்தான் இருப்போம்.” என்று சொன்ன வார்த்தைகள்தான் நீர்வேலியில் அவரையும் அவரது மனைவியையும் சந்தித்து விடைபெறும்போது நினைவுக்கு வந்தது.

பல இலக்கிய நண்பர்களை அன்போடு விசாரித்தார். ஜீவாவின் மகன் திலீபன் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் தம்மை வந்து பார்த்துச்செல்வதாக பெருமிதத்துடன் சொன்னார்.

அவர் மிகவும் கவலையுடனும் அக்கறையுடனும் விசாரித்த படைப்பாளி எங்கள் புதுவை ரத்தின துரை.

‘திருகோணமலைக்கும் செல்கிறேன். அங்கே அவரது மனைவி பிள்ளைகளை பார்ப்பேன்.” என்றேன். அவருக்குச்சொன்னபடி திருகோணமலை சென்று அவர்களையும் பார்த்தேன்.

சந்திரசேகரம் நீர்வேலியில் பிரதான வீதி வரையில் வந்து எமக்கு விடைகொடுத்தார்.

நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறிய திருப்தியுடன் தாயகத்தைவிட்டு தற்காலிகமாக விடைபெற்றேன்.

1 comment:

kirrukan said...

[quote]நான் முகவரி தேடும் மனிதனாக அவுஸ்திரேலியாவில் அலைந்துழல்கின்றேன்.[/quote]

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நிச்சயம் ஜயாவுக்கு முகவரி தேடித் தரும்