மண்குதிரையும் மரக்குதிரையும்- முருகபூபதி

.
                                           உருவகக்கதை
அந்த நதிக்கரையோரக்கிராமம் அமைதியானது. பசுமை நிறைந்த ஒரு புல்வெளிதேசத்தில் ஒதுக்குப்புறமாக இயற்கை அழகுடன் துலங்கியது. அங்கே ஒரு குடிசையில் அந்தக்கிராமவாசி ஒரு குதிரையுடனும் மிக இளம் வயது மகனுடனும் வாழ்ந்து வந்தான். குதிரைக்கென தனியாக ஒரு சிறிய லாயமும் அமைத்திருந்தான். குடிசையைச்சுற்றியிருந்த சிறிய நிலத்தில் பயிர்செய்து விளைபவற்றை ஒரு வண்டியில் ஏற்றி குதிரையின் துணையுடன் நதியைக்கடந்து அடுத்த கிராமத்து சந்தையில் விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது மகனை பராமரித்து வளர்த்து வந்தான்.

ஒழுங்கான மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்கிராமத்தில் அந்த மகனைப்பெற்றுவிட்டு தாய் இறந்துபோனாள். அன்று முதல் அந்த சிறிய மகனுக்கு தாயும் தந்தையும் அந்த குதிரைப்பாகன்தான்.

அந்தக்குதிரையும் ஏற்கனவே அயல் கிராமவாசி ஒருவனிடமிருந்துதான் இவனுக்குக் கிடைத்தது. அந்தக்கிராமவாசியும் இவனது நண்பன். அவனும் நோயுற்று இறந்துபோகவே குதிரை இவனது பராமரிப்புக்கு வந்தது. தனது மகனை நன்கு பராமரித்தது போலவே அந்தக்குதிரையையும் இவன் நன்றாக பராமரித்து வந்தான்.

இவனது மகனுக்கு தானும் ஒருநாளைக்கு தனியே குதிரைச்சவாரி செய்யவேண்டும் என்ற ஆசை வந்தது. தனது விருப்பத்தை தகப்பனிடம் ஒருநாள் சொன்னான்.

“ அப்பா எனக்கும் உங்களைப்போன்று இந்தக்குதிரையில் ஏறி அந்த நதியைக்கடந்து அயல் கிராமம் சென்று அங்கிருப்பவர்களையெல்லாம் பார்த்துவருவதற்கு ஆசையாக இருக்கிறது” என்றான்.

அதற்கு குதிரைப்பாகன், “ மகனே நீ இன்னும் கொஞ்சம் வளரவேண்டும். அதன் பிறகு உனக்கு நானே குதிரையேற்ற பயிற்சி தந்து பழக்குகிறேன். அதுவரையில் பொறுத்திரு”- என்றான்.

“ அப்படியானால் எனக்கு விளையாடுவதற்கு ஏதாவது செய்து தரமுடியுமா?”- எனக்கேட்டான்.

குதிரைப்பாகன், விடாக்கண்டனான மகனுக்கு அந்த நதிக்கரையோர சதுப்புநிலத்து மண்ணிலிருந்து ஒரு மண்குதிரையை அழகாக செய்துகொடுத்தான். அதற்கு அழகிய வர்ணங்களும் பூசி அழகுபடுத்திக்கொடுத்தான்.

அதனைப்பார்த்து மகன் மிகவும் மகழ்ச்சி அடைந்தான். தனக்கும் ஒரு அழகிய குதிரை கிடைத்துவிட்டது என்ற பெருமிதத்தில் துள்ளிக்குதித்தான்.

ஒருநாள் தந்தையான பாகன், உயிருள்ள குதிரையுடன் வண்டியை பிணைத்துக்கொண்டு நிலத்தில் பயிரிட்ட மரக்கறிவகைகளுடன் அயல்கிராமத்து சந்தைக்குப்போய்விட்டான்.

தந்தை சென்றபின்னர், மகன் அந்த மண்குதிரையை தூக்கிக்கொண்டு நதிக்கரைக்கு வந்தான். அதில் ஏறினால் நதியைக்கடந்து தந்தையைப்போன்று தானும் அக்கரைக்கிராமத்துக்குச்செல்ல முடியும் என நம்பினான்.

மண்குதிரையை நதியில் நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறினான். அதிலிருந்து சவாரி செய்யலாம் என நம்பினான். ஆனால் அந்தமண்குதிரை நதியில் தாழ்ந்து கரைந்து அந்தமண்குழம்பு சேறாக அவனது உடல்பூராவும் படிந்துவிட்டது. மிகுந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி அழுதுகொண்டிருந்தான்.

அவனது தந்தை அயல் கிராமத்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு குதிரையில் திரும்பிவந்தபோது, மகன் குடிசை வாசலிலிருந்து சேறுபூசிய தோற்றத்தில் அழுதுகொண்டிருந்தான். மண்குதிரையை நம்பி தான் ஏமாந்து விட்டதாக அழுது புரண்டான்.

தந்தை அவனைத்தேறுதல்படுத்தி நதிக்கு அழைத்துச்சென்று தோயவார்த்து சேறைப்போக்கினான்.

“ மண்குதிரையை நம்பி ஏறினாயே. அது உனக்கு விளையாடுவதற்குத்தானே செய்து கொடுத்தேன். சரி கவலைப்படாதே உனக்கு ஒரு மரக்குதிரை செய்து தருகின்றேன்.”- எனச்சொல்லிவிட்டு அந்தக்கிராமத்து பெரியமரமொன்றிலிருந்து ஒரு பெரிய கிளையை வெட்டி அதிலே ஒரு அழகான குதிரையொன்றை உளியினால் செதுக்கிக்கொடுத்தான். அதற்கும் அழகிய வர்ணங்களைத் தீட்டினான்.

மகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். மண்குதிரை நதியில் கரைந்துபோன துக்கத்தை மறந்து இப்போது மரக்குதிரையில் ஏறி விளையாடினான். அது கரையவில்லை. உடையவில்லை என்பது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மற்றுமொரு நாள் தந்தை நதியைக்கடந்து குதிரை வண்டிலுடன் அடுத்த கிராமத்துக்கு சென்றதன் பிறகு, இவன் அந்த மரக்குதிரையை எடுத்துக்கொண்டு நதிக்ரைக்கு வந்தான். நதியருகே அதனை நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய நினைத்தான். அந்த மரக்குதிரை நின்ற இடத்திலிருந்து நகரவோ அசையவோ இல்லை. அதன் பிருஷ்டத்திலும் முதுகிலும் முடிந்தவரையில் அடித்தும்பார்த்தான். அது நகரவே இல்லை. அன்று மாலைவரையில் அப்படியே அந்த மரக்குதிரையிலேயே பசியுடன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தான்.

மாலை மங்கிக்கொண்டிருந்தது.

அவனது தந்தையும் கிராமத்து சந்தை வியாபரத்தை முடித்துக்கொண்டு குதிரை வண்டியில் திரும்பினான். மகன் நதிக்கரையிலே அந்த மரக்குதிரையிலிருந்து அழுதுகொண்டிருப்பதைப்பார்த்துவிட்டு, “ மகனே... என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?”- எனக்கேட்டான்.

“ அப்பா, இந்தக்குதிரையும் என்னை ஏமாற்றிவிட்டது. இதில் ஏறி நானும் உங்களைப்போன்று அந்தக்கரைக்கு சென்றுவரலாம் என நினைத்திருந்தேன். அந்த மண்குதிரை நதியில் கரைந்து எனக்கு சேறையும் பூசிவிட்டது. இந்த மரக்குதிரையோ எவ்வளவுதான் அழகாக இலட்சணமாக இருந்தும் நகரவே முடியாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டே மிலாந்திக்கொண்டிருக்கிறது.” என்று மகன் ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் சொன்னான்.

“ மகனே. மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்பை தெரிந்துகொள்ளாமல் அவற்றிலே ஏறி சவாரி செய்ய நினைத்தது உனது தவறு. அவை பொழுதுபோக்குக்காக உனக்கு விளையாடுவதற்காக செய்து தரப்பட்டவை. இதோ பார் உயிருள்ள குதிரை. இப்பொழுது நீயும் சற்று வளர்ந்து விட்டாய். ஒரு நாளைக்கு நீயும் இதில் ஏறி சவாரிசெய்து நதியைக்கடந்து அடுத்த கிராமத்துக்குச்சென்றுவா.”- என்றான் அந்த குதிரைப்பாகனான தந்தை.

மகனுக்கு முதல் கட்டமாக ஒரு ஆலோசனையும் சொன்னான்.

“ நாளை அயல் கிராமத்தில் சந்தை கூடமாட்டார்கள். அதனால் நான் அங்கே போகமாட்டேன். வண்டிலுக்கும் அவசியம் இருக்காது. நீயே இந்த உயிருள்ள குதிரையை எடுத்துச்செல்.” என்றான் தந்தை.

மகன் மிகவும் உற்சாகமடைந்தான்.

மறுநாள் விடிந்ததும் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு முதல் தடவையாக அந்தக்குதிரையில் ஏறி நதிக்ரைக்கு வந்து நதியைக்கடந்தான். குதிரை அவனை குதூகலத்துடன் அழைத்துச்சென்றது.

அதில் சவாரி செய்வதில் அவனுக்கு எந்தச்சிரமமும் இருக்கவில்லை. அது அவனது விருப்பத்துக்கு ஏற்றவாறு வேகமாகவும் விரைந்தும் சென்றது. அதன் முதுகிலிருந்து சவாரி செய்வது அவனுக்கு புது அனுபவமாகவும் இருந்தது. அதன் முதுகை ஆதரவுடன் தடவிக்கொடுத்தான்.

அப்போது அந்த முதுகில் பல இடங்களில் குத்துகாயத்தழும்புகளைப்பார்த்தான். எப்படி இந்தத் தழும்புகள் வந்தன? அவன் யோசித்தான். குதிரையிடமே கேட்டுப்பார்த்தான்.

“ குதிரையே எனக்கு உன்னை நன்றாகப்பிடித்துவிட்டது. இனிமேல் நீதான் எனது நல்ல சிநேகிதன். அதுசரி.. இது என்ன? உனது முதுகிலே பல காயங்கள் ஆறிப்போன தழும்புகள் இருக்கின்றன. என்ன நடந்தது?” எனக்கேட்டான்.

“ மகனே... அதெல்லாம் பெரிய கதை. ஒன்றல்ல இரண்டல்ல பல கதைகள் அந்த தழும்புகளுக்குப்பின்னே இருக்கின்றன. நீ எனது முதுகை தடவும்போது அவை இப்போது நினைவுக்கு வருகின்றன. உனது அப்பா என்னை ஒரு குதிரைப்பாகனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முன்னர், நான் பல குதிரைப்பாகர்களிடம் நன்றாக உழைத்திருக்கின்றேன். எனது எஜமானர்களுக்கு நல்ல விசுவாசமாகவும் இருந்திருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் சுயநலவாதிகள். தங்களது இருப்பை வெளிப்படுத்துவதற்காக என்மீது சவாரி செய்தவர்கள். எனது வேகத்தையும் விவேகத்தையும் ஓட்டத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்தவுடன் ஏன் தங்களாலும் அப்படி இருக்கமுடியவில்லை என்ற எரிச்சலும் பொறாமையும் அவர்களுக்கு வந்துவிட்டது. தாங்கள் அமர்ந்து சவாரிசெய்த முதுகிலேயே குத்தி தங்கள் பொறாமையையும் இயலாமையையும் வெளிப்படுத்திக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு குதிரையின் குணம் தெரியாது. அதனால்தான் குதிரையின் குணம் அறிந்துதான் அதற்கு கடவுள் கொம்பு கொடுக்கவில்லை என்று உன்னையும் உன்னைச்;சார்ந்த மக்களும் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.” – என்றது குதிரை.

“ சரி குதிரையாரே... உனக்கு அவர்கள் முதுகிலே குத்தியபோது பேசாமலா இருந்தாய்?”- எனக்கேட்டான் அவன்.

“ம்ஹ_ம்... நானா? குத்துவலி பொறுக்காமல் ஒரு துள்ளுத்துள்ளி அவர்களை கீழே விழுத்தி எனது பின்னங்காலால் ஒரேஒரு உதைதான் கொடுப்பேன். அதன் பின்னர் எழுந்திருக்கவே மாட்டார்கள். ஊரேல்லாம் என்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரிவார்கள். நான் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீயும் இன்று என்னில் சவாரி செய்கிறாய். நாளை உனக்கும் என்மீது பொறாமை வரலாம். வந்தால் நீயும் முதுகிலே குத்தலாம். குத்தினால் என்ன நடக்கும் தெரியும்தானே?”

“ நன்றி குதிரையாரே... நீயும் அப்பாவும் எனக்கு நல்ல புத்திமதி புகட்டியிருக்கிறீர்கள். அப்பா மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்புகளை எனக்கு சொல்லாமல் சொல்லித்தந்தார். ஆனால் நீயோ இந்த உலகமே அறிந்துகொள்ளத்தக்க அறிந்துகொள்ளவேண்டிய செய்தியொன்றை எனக்கு இப்போது சொல்லித்தந்திருக்கிறாய். உன்னை நான் மறக்கவே மாட்டேன்.”
அந்தக்குதிரை அவனை அந்த அழகான கிராமத்தின் இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான இடங்களுக்கெல்லாம் தனது முதுகிலே வைத்து அழைத்துச்சென்றது. அவன் அந்தக்கிராமங்களின் பசுமையை ரசித்தான்.

No comments: