.
அந்த பெரிய பலாமரம் எனது வீட்டின் எல்லையில் தான் இருந்தது. தடித்த தண்டில் கீழ்நோக்கி கிளந்த வேர்கள் தன் நீட்சியை மண்ணில் புதைத்திருந்தது. மேல்நோக்கி ஓங்கி வளர்ந்த கிளைகள் நான்கு பக்கமும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது. எந்தவொரு பருவ நிலையிலும் அதன் பசுமை மறைவதில்லை.
எனக்கு அப்போது நான்கு வயது. மழை "சோ" என்று கொட்டியது, இடியும் மின்னலும் வேறு சேர்ந்து கொண்டு பயமுறுத்தியது. "உர்" என்ற சப்தத்துடன் காற்று பலமாக அடித்தது.
வீட்டை சுற்றிலும் இருந்த மரங்கள் அனைத்தும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சுழன்று கொண்டிருந்தது. தீடிரென "கிரீக்" என்ற ஒலி காதில் ஒலித்தது. வீட்டின் திண்ணையில் இருந்து மழையை ரசித்து கொண்டிருந்த அப்பா "நமது பலாமரத்தின் கிளையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது, முறிந்தாலும் முறிந்து விடலாம்" என்றார்கள். எனக்கு "திக்" என்று இருந்தது.
காற்றின் வேகம் குறைந்து, மழை முற்றிலும் நின்ற பின்பு ஓடி சென்று பலாமரத்தை பார்த்தோம். நான்கு பக்கமும் பரப்பியிருந்த கிளையில் ஒரு கிளையில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அப்பா உடனடியாக மரத்தில் ஏறி அந்த விரிசல் ஏற்பட்டிருந்த கிளையை தேங்காய் நார் கயிற்றால் கட்டி, பக்கத்தில் இருந்த பலமான கிளையுடன் சேர்த்து கட்டினார். விரிசல் நாளடைவில் காணாமல் போனது. அந்த பலாமரம் எனது தாத்தா நட்டு வைத்தது என்று அப்பா சொல்வார்கள்
வருடத்திற்கு வருடம் அந்த மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அதன் வேர்கள் மண்ணில் இருந்து வெளியில் தெரிய ஆரம்பித்தது. சுற்றி படந்திருந்த வேர்கள் தான் எங்களுக்கு வண்டி, அந்த வேர்களில் முதன்மையாக புடைத்திருந்த வேர்தான் டிரைவர் உக்காரும் இடம். அதில் பெரும்பாலும் நான் தான் இருப்பேன். எனது அண்ணன் தான் டிக்கட் கொடுப்பவர். அந்த பலாமரத்தின் பழுத்த இலைதான் டிக்கட், வண்டியில் ஏறுபவர்களுக்கு அந்த இலையில் குச்சியால் ஓட்டையிட்டு கொடுப்பான். வேரில் அமர்ந்த வாறே, டுர்..டுர்ர்ர் என்ற சப்த்ததுடன் வண்டி பயணம் தொடரும். பக்கத்தில் உள்ள ஊர்களில் பெயரை சொல்லி சப்தத்தை நிறுத்துவேன். ஒவ்வொருவரும் இறங்குவார்கள்.
பலாமரத்தில் கிளைகள் அடந்து வளந்திருந்ததால் சூரியனின் கதிர்கள் முற்றிலும் மேலே விழுவது இல்லை, எனவே பொழுதோரமும் அதன் அடியில் தான் எங்களின் பொழுது போகும். அக்கா, அண்ணனுடன் சேர்ந்து கொண்டு கூட்டாஞ்சோறு செய்து விளையாடும் போது நான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது இந்த பலாமரத்தை தான். மண்ணில் வீடுகள் கட்டி, இலை தழைகளை பறித்து வந்து சமையல் செய்து விளையாடுவது தனிசுகம். மாலைநேரம் ஆகிவிட்டால் கையில் புளியங்கொட்டையுடன் பலாமரத்தடிக்கு கிளம்பி விடுவோம். ஏற்கனவே தோண்டி வைத்தியிருக்கும் பாண்டி விளையாட்டு குழியில் நிரப்பி ஆட துவங்கிவிடுவோம்.
மரத்தில் இருந்து பழுத்து விழும் இளமஞ்சள் இலைகளை சேகரித்து அவைகளை வைத்து ராஜா, ராணி கீரிடம் செய்வது தனி அழகு. அதில் எனது அண்ணன் கை தேர்ந்தவன். அந்த இலையின் ஒரு முனையை மற்றொரு முனையுடன் சேர்ந்து வைத்து தென்னங்குச்சியால் பிணைத்து அழகாக கோர்த்து விடுவான். அதை தலையில் அணிந்து கொண்டு வலம் வருவதும் உண்டு. அதை நினைக்கும் போது, கற்கால மனிதர்கள் வாழ்க்கை தான் ஞாபகம் வரும்.
வசந்த காலங்கள் வர தொடங்கிவிட்டால் அந்த மரத்தில் காக்கையின் கூடுகளை பார்க்க முடியும். குறைந்தது இரண்டு கூடுகளாவது இருக்கும். காலையில் எழுதவுடன் முதலில் வந்து பார்பது இந்த காக்கையின் கூட்டை தான், சிறு குச்சிகளால் கட்டபட்டிருக்கும் கூட்டில் உள்ள முட்டைகளை கீழே இருந்து பார்த்து சந்தோசப்பட்டு கொள்வேன். அவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும் வரை அந்த மரத்தில் எப்போதும் காக்கைகளை பார்க்க முடியும். முட்டையிட வரும் சோம்பேறி குயிலுடனும் சண்டையும் நடக்கும். இந்த காக்கைகளின் பாதுகாப்பையும் மீறி எப்படியாவது குயில் அந்த கூடுகளில் முட்டையிட்டுவிடும். அந்த முட்டைகள் குஞ்சு பொரித்து, சிறிது வளரும் போது அது குயில் என்று தெரிந்தவுடன், காக்கைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை கொத்தி துரத்தும்.
ஓண பண்டிகை காலங்களில் ஊஞ்சல் கட்டுவது எங்கள் ஊரில் வழக்கம். எல்லாருடைய வீடுகளிலும் சின்ன மரங்களில் தான் ஊஞ்சல் கட்டியிருப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் இந்த பெரிய பலாமரத்தின் கிளையில் பெரிய வடாம் கயிறு கொண்டு கட்டி தருவார்கள். அதில் ஆடுவதற்கு என்று பல அக்கா, அண்ணன்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
இந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழமும் சுவையாக இருக்கும். எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பலாமரங்கள் இருக்கும். அதனால் பலாப்பழம் விற்பனை என்பது எங்கள் ஊரில் இருக்காது(இப்போது தலைகீழ்). எங்கள் மரத்தில் காய்க்கும் பழத்தை வெட்டி அந்த மரத்தின் அடியிலேயே வைத்து "யாருக்கெல்லாம் வேணுமோ அவர்கள் எடுத்து போங்கள்" என்று எங்கள் வீட்டிற்கு வருபவர்களிடம் எனது அப்பா சொல்வார்கள். அவர்கள் வீட்டில் மரங்கள் வைத்திருந்தாலும் "இந்த மரத்தின் பழம் நல்லா இருக்கும்" என்று சொல்லிவிட்டு எடுத்து போவார்கள். ஊரில் நான் இருக்கும் வரை அந்த மரத்தின் பழங்களை விற்றது கிடையாது.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஊருக்கு போயிருந்த போது, வீட்டின் எல்லையில் இருந்த பலாமரத்தின் இடத்தில் பள்ளம் மட்டுமே இருந்தது. மரம் வெட்டபட்டிருந்த அடையாளங்கள் மட்டும் தெரிந்தன, கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டின் ஹாலில் புதிதாக செய்யப்பட்ட மரத்தாலான தொட்டிலில் எனது குழந்தை அழகாக சிரித்து கொண்டிருந்தான்.
குறிப்பு: இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. எனக்கு விருது கொடுத்த அனைத்து சகோதர/சகோதரிகளுக்கு என் நன்றிகள். தொடந்து எனக்கு பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
1 comment:
[quote]ஓண பண்டிகை காலங்களில் ஊஞ்சல் கட்டுவது எங்கள் ஊரில் வழக்கம். எல்லாருடைய வீடுகளிலும் சின்ன[/quote]
நானும் எதோ நம்மட ஊர் பலாமர கதையாக்கும் என்று வாசித்தால்,அம்முகுட்டி கதையாககிடக்கு
Post a Comment