இலங்கையின் பொருளாதார நகர்வும் சவால்களும்

                                                                                             முன்தஸர் அஸ்ஸஅதி



பொருளாதார அபிவிருத்தி என்பது ஒவ்வொரு இலங்கைய னினதும் கனவாக காணப்படு கின்றது. 30 வருட யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள், பாதிப்புகள், பின்னடைவுகளிலிருந்து விடுபட்டு பாரிய பொருளாதார அபிவிருத்தியொன்றை காண்பதற்கு அனைத்து இலங்கையர்களும் ஆவலாய் உள்ளனர்.

எனினும், அதனை ஜனாதிபதி மஹிந்தவின் அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றமாக வீழ்ச்சிநிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது. இதற்கான காரணம் வினைத்திறனற்ற பொருளாதார திட்டமிடல்களா? அல்லது பொருளாதாரத் திட்டமிடல்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லையா என கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத தின் ஐந்து திட்டக் கருக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில்

முதலாவது கடற்துறை மையத்தினை அபிவிருத்தி செய்தல் இத்திட்டத்தின்படி அம்பாந் தோட்டை, கொழும்பு தெற்கு துறைமுகங்களை நிர்மாணித்தல், காலித் துறை முகத்தினை உல்லா சப்பிரயாண துறைமுகமாக அபிவிருத்தி செய்தல், ஒலுவில் -காங்கேசன்துறை துறைமுகங்களை நிர்மாணித்தல் என்பன முக்கிய அம்சங்களாகும்.

இரண்டாவதாக விமானத்துறை மையத்தினை ஏற்படுத்துதல். இதில் பிரதானமாக புதிய சர்வதேச விமானநிலையத்தினை அமைத்தல், ஏனைய 14 விமான நிலையங்களையும் நவீன மயப்படுத்தல் என்பன உள்ளடங்கியிருந்தன.

மூன்றாவதாக வர்த்தக மையத்தினை உருவாக் குதல். இதன்மூலம் வங்கிகள் வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதிகள் சட்டக் கோவை போன்றவற்றினை ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் என்பன எதிர்பார்க் கப்பட்டன.

நான்காவதாக சக்தி வலு மையத்தினை விருத்தி செய்தல். இதனடிப்படையில் நாட்டிற்குத் தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ் வதும் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ஐந்தாவதாக கற்றல் அறிவுசார் மையத்தினை ஏற்படுத்தி அதனூடாக வெளி நாட்டு மாணவர்களையும் இலங்கைக்கு வரவழைக்கும் திட்டம்.

இத்திட்டங்களுடன் நாட்டில் 15% ஆகக் காணப்படுகின்ற வறுமை நிலைமையினை 5 அல்லது 6 வருடங்களுக்குள் 2 % ஆக குறைத்தல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றனவும் முன்வைக்கப் பட்டன. எனினும் இவற்றை நடைமுறைப் படுத்துவதில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றது.

அரசின் கடன்சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பின்னடைவு என்பன மிக முக்கிய தடைகளாக இருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கையின் மொத்த வெளி நாட்டு கொடுகடனாக 1448.7 பில்லியன் காணப்படுகின்றது. இதில் 37% சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டியது.

நாட்டின் மொத்த திரண்ட கடன்தொகை கடந்த வருடத்தில் 4000 பில்லியனையும் தாண்டியி ருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80% இற்கும் அதிகமானதாகும். இதனை 2013 ஆம் ஆண்டு 60% ஆக கொண்டுவர வேண்டுமென குறிப்பிட்டபோதும் அது எட்ட முடியாத தொலைவிலே காணப் படுகின்றது.

அரசினால் தொடர்ந்தும் வரவு செலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய முடியாதுள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன்களைப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. கடந்தவருடம் மொத்த செலவுக்காக 119.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கிய போதும் முதல் எட்டு மாதத்திற்கான செலவு 844.7 பில்லியனாக இருந்தது.

கடன் தொகையினை அடைப்பது இன்று அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிகமான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது. 2008 இல் அரசு மீள செலுத்திய 592 பில்லியன் கடன்தொகையில் 212.5 பில்லியன் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. இது செலுத்திய தொகையின் 36% ஆகும்.

அரசு எதிர்நோக்குகின்ற மற்று மொரு சவால் அரச நிறுவனங்களிலும், திணைக்களங்களிலும் காணப்படும் ஊழலும் முறையற்ற நிருவாகமுமாகும். இதனால் பல கோடிக்கணக்கான அரச சொத்துக்கள் வீண்விரயமாக்கப்படுகின் றன. இலங்கை மின்சார சபை கடந்த வருடம் 7400 மில்லியன் ரூபா நட்டத்தில் செயற்பட்டுள்ளது என்பது இதற்கான சிறந்த உதார ணமாகும்.

இதேபோன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தபால் திணைக்களம், ரயில்வே திணைக்களம், மிஹின் லங்கா, போக்குவரத்து சபை என்பனவும் பாரிய நட்டத்திலே இயங்கி வருகின்றன.

இந்தப் பிரச்சினைகளின் வரிசை யில் அடுத்தது வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். எப்போது ஒரு நாட்டில் பொருளாதார சுதந்திர சுட்டி உயர்வினைக் காட்டுகின்றதோ அந்தநாட்டில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) அதிகரித்துக் கொள்ள முடியும். பொருளாதார சுதந்திரம் என்பது சர்வதேச, தேசிய, உள்ளூர் அரசுகளின் குறைந்த குறுக்கீடும் குறைந்த செலவீனத்துடன் வர்த்தக நட வடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுதந்திரமாகும்.

இவ்வுலக பொருளாதார சுதந்திர சுட்டி Economic freedom of the world (EFW) இனை கனடாவின் வான்கூர் நகரிலுள்ள Frazer Institute மேற்கொள்கின்றது. இதன் அளவீட்டிற்கு குறித்து 5 பிரதான பகுதிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.

1. அரசின் நிலை. (அரச செலவுகள், வரிகள், அரச பொது நிறு வனங்கள்)

2. சட்ட அமைப்பு, சொத்துரிமை பாதுகாப்பு

3. சரியான பண ஊடாட்டத்திற்கான வழி

4. வெளிநாட்டவர்களுடன் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சுதந்திரம்

5. கடன், தொழிலாளர், வர்த்தக சட்டங்கள்.

இவற்றுடன் தொடர்புற்ற 42 பகுதிகளினைக் கொண்டே EFW சுட்டி நிர்ணயிக் கப்படுகின்றது.பொருளாதார வளர்ச்சி, வறுமை, தலாவருமானம், கல்வி அறிவு... என்பவற்றிற் கும் பொருளாதார சுதந்திரத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்படு கின்றது. அவ்வாறே பொருளாதார சுதந்திரத்திற்கும் மனித உரிமைக் கும் இடையிலான தொடர்பும் அமைந்துள்ளது. ஒரு நாடு உயர் EFW சுட்டியினை காட்டுமாயின் அங்கு சிறந்த மனித உரிமை நிலை இருக்கின்றது என்பதைக் காட்டும்.

இங்குதான் அரசு போருக்கு முன்னரும், பின்னரும் எதிர்கொள்கின்ற சவால் காணப்படுகின்றது. இலங்கை மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் ஒன் றாக சர்வதேச கணிப்பீடுகள் காட்டுகின்றன.

கடந்த வருடம் நிறைவடைந்த போரின்போது நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டுமென சர்வதேசம், நிறுவனங்கள் பிடியாக நிற்பது இன்னும் இதனை பாதிப்புக்கு உட்படுத்தும். இதன்போது EFW சுட்டி குறைவடையும். இது வெளிநாட்டு முதலீடுகளினைத் தடுத்து விடும். அரசு தொடர்ந்து போர்க் குற்ற விசாரணை அவசியமில்லை என்றிருப்பதும் ஐ.நா.வின் செயலாளர் இலங்கை தொடர்பான அவருக்கான ஆலோசனைக் குழு அமைப்பதில் ஈடுபடுவதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத் தியைப் பிற்போடுகின்றது.

இந்த சவால்களைக் கடந்து அரசு பொருளாதார அபிவிருத்தியை அடைய வேண்டியுள்ளது.அரசு தனது பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்த வேண்டியுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை அரச மட்டங்களில் மாத்திரம் அடைய முடியாது. மாற்றமாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அதற்கு பங்காற்ற வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் இன்றைய இலங்கையின் கல்வி நிலையும் பொருளாதார அபிவிருத்திக்கு சவாலாக அமைந்துள்ளது. இலங்கையில் நவீன தொழில்நுட்ப வல்லுனர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே, கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். அறிவுள்ளோரே இன்று மூலவளமாக கணிக்கப்படுகின்றனர்.

நாட்டினை அழித்துக் கொண்டிருந்த யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார யுத்தத்தினையும் வெற்றிக் கொள்வாரா என்பதை சற்று தாமதித்துத் தான் கூற வேண்டும்.

- நன்றி: மீள்பார்வை -

No comments: