வைரவர் சாமியை பார்க்கும்போது பக்தியைவிட ஒரு பயம் தோன்றுவது தான் என் சின்ன வயசில் நான்கண்டுகொண்டது. பள்ளிக்கு செல்லும்போது வளியில் இருக்கும் பனங் கூடலுக்குள் ஒரு பனையின் கீழ் தன்னந்தனியாக வைரவர் சூலம் இருக்கும். சற்று எட்டி நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓட்டம். என்ன வேண்டி கும்பிட்டாய் என்று கேட்டால் வைரவரே என்னை ஒன்றும் செய்து போடாதே என்பது மட்டும் தான். அந்த அளவிற்கு வைரவர் கோபமானவர் என்று விளையாடப்போகும் போது பெரியவர்கள் சொல்லிவைத்தது என் மனதில் பதிந்து கிடந்தது.
சற்று இருட்டான பின்பு அந்தப்பாதையால் போக வேண்டி வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.காற்றில் சலசலக்கும் காவோலைச் சத்தம், வைரவர் சூலத்தை தூக்கிக் கொண்டு ஓடிவருவது போன்ற பிரமை, சத்தம்போட்டு வைரவரின் நாமங்களை சொல்வோமென்றால் வைரவர் என்ற பேரைத்தவிர வேறு நாமங்களே அவருக்கு கிடையாதிருந்ததால் திரும்பத் திரும்ப வைரவரே வைரவரே என்று கூறியபடி தாண்டிச் செல்வதென்பது ஒரு மலையைப் பிரட்டும் முயற்சிபோல் இருக்கும். தாண்டிவிட்டோம் என்று அப்பாடா என்று பெருமூச்சு விடுவோமென்றால் அதுவும் முடியாது.
நன்றி படங்கள் humanityashore.com
அடுத்து நூறு யார் செல்லும் போது இன்னொரு பனையின் கீழ் சின்ன ஓலைக் கொட்டிலின் கீழ் காளி கோவில் அதுவும் காளியின் உருவமில்லாத சூலம் மட்டும்தான்.அதையும் தாண்டிவிட்டால் உலக ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பெற்றுக்கொண்டது போல்தான்.
இதில் சுவாரசியமான விடயங்களும் இருக்கிறது. பகலில் பள்ளிக்கு
செல்லும்போது நண்பர்களோடு கூட்டமாக செல்லுவேன், அப்போது எங்கள் வகுப்பில் படிக்கும் எங்களுக்கு எதிரானவர்கள் அல்லது ஓட்டப்பந்தயம் நடக்கும்போது எங்களுக்கு சவாலாக வரக்கூடியவர்களுக்கு வெற்றி கிட்டக் கூடாதென்பதற்காகவும் இந்த வைரவரைத்தான் நம்பியிருப்போம். கையில் கிடைக்கும் ஜந்தசதம் அல்லது பத்துச் சதம் துணியில் முடியப்பட்டு வைரவரின் கழுத்தில் கட்டிவிடுவோம். நினைத்தது சிலவேளைகளில் வெற்றியைத் தரும் சிலவேளைகளில் வெற்றி கிட்டாது. அதையெல்லாம் ஆர்வமாக பார்த்துக்கொண்டதாகவும் எந்த ஞாபகமும் இல்லை.
அண்மையில் பசங்க என்ற படம் பார்த்துக்கொண்டிருந்த போது இப்படியான ஒரு கட்டம் வந்தது.சாமியை நேர்ந்து காசு கட்டுவார்கள். நான் வாய்விட்டே சிரித்து விட்டேன். அந்த நாட்களில் வருடத்தில் ஒரு முறை இந்த பனையடி வைரவருக்கு வைரவர் பொங்கல் நடைபெறும் அதுவும் இரவில்தான் இந்த பொங்கல் இடம் பெறுவது வழக்கம். பயங்கலந்த பிரதேசமாக காட்சியளிக்கும் அந்தப்பகுதி அன்று மட்டும் மிக கோலாகலமாக காட்சியளிக்கும்.பயம் மறந்து நாங்கள் ஒடி விளையாடும் இரவும் அதுவாகத்தான் இருக்கும்.ஆனால் ஒரேஒரு பயம் மட்டும் இருந்து கொண்டிருக்கும் அதுதான் பறைமேளச்சத்தம் என்ன காரணமோ தெரியாது அந்த விளாவின் போது செத்த வீட்டின் போது அடிக்கும் பறை மேளம்தான் அடிப்பார்கள் ஆனால் தாளக்கட்டில் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கும் அதைநான் உணர்ந்திருக்கிறேன்.
வைரவர் வழிபாடு பற்றி பேசும் போது ஒருவர் கூறினார் இந்தியாவில் வைரவர் வழிபாடு காணப்படுவதில்லை ஆனால் இலங்கையில் பரந்து காணப்படுகின்றது இதற்கான காரணம் சரியாக தெரியாது ஆனால் ஒரு ஊகத்தின் படி போத்துக்கேயர் இலங்கைக்கு படை யெடுத்த போது மதம் மாற்றினார்கள் இந்து வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டன. அதன்போது தங்கள் வீட்டு வளவுகளுக்குள் வைரவர் சூலத்தை நட்டு மறைவாக வளிபட்டிருக்கலாம் அதுவே காலப்போக்கில் வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இதுபற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை , இதன் வரலாறு தெரிந்தவர்கள் கட்டுரை மூலமாகவோ அல்லது இதன் பின்னீட்டு கருத்தாகவோ பதிவு செய்யலாம் இதன்மூலம் இதுபற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
4 comments:
ennakkum payam
[quote]ஒரு ஊகத்தின் படி போத்துக்கேயர் இலங்கைக்கு படை யெடுத்த போது மதம் மாற்றினார்கள் இந்து வளிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டன. அதன்போது தங்கள் வீட்டு வளவுகளுக்குள் வைரவர் சூலத்தை நட்டு மறைவாக வளிபட்டிருக்கலாம் அதுவே காலப்போக்கில் வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார்[/quote]
வளவுக்குள் பிள்ளையார்,முருகன்,சிவன் எல்லாம் வைக்கவில்லையே? கருத்தில எங்கயோ உதைக்குதே?
என்னடா இவன் கிறுக்கன் ..வைரவருக்கு நாய் வாச்ச மாதிரி டமிழ்முரசுக்கு வந்து வாச்சான் என்று நீங்கள் நினைக்க கூடாது.....
[quote]ennakkum payam [/quote]
எனக்கு பக்தி
நீண்டநாட்களின் பின் எங்கட ஊருக்கு போனமாரி இருக்கு. பனைக்கு கீழ உள்ள வயிரவர் சூலம் தான் முதல்ல இருந்தது பிறகு பிறகு மாறிப்போச்சு. நீங்க சொன்னது சரியா இருக்கலாம் சைவ ஆலயங்கள அவங்கள் உடைச்சபோது சனம் வளவுக்குள்ள வைச்சு ரெண்டு மூண்டு குடும்பமா கும்பிட்டிருக்கும். படங்கள பாக்கிறபோது எங்கட கோயில்களும் எங்கட பொங்கலும் கண்ணில தண்ணிய வரவளச்சுப்போட்டுது. தொடந்து இப்பியான விசயங்கள தந்தால் நல்லது. கிறுக்கன் எண்ட பேரோட ஒருவர் குறிப்பு போடுறேர் நல்ல எழுத்தோட்டம் உள்ளவர் போல தெரியுது. அவரயும் ஆரசுக்கு எழுத கேளுங்கோ. இலமறகாய்மறயா கனபேர் இருப்பினம் சந்தர்ப்பம் குடுத்தா அடையாளம் காணலாம். சோனா பிறின்ஸ் புதுசா கத எழுதியிருக்கிறா நல்லா இருந்தது. அது போல வேற ஆக்களும் எழுதுவினம்.
நன்றி
சுநதரலிங்கம்
சிட்னி
[quote]கிறுக்கன் எண்ட பேரோட ஒருவர் குறிப்பு போடுறேர் நல்ல எழுத்தோட்டம் உள்ளவர் போல தெரியுது. அவரயும் ஆரசுக்கு எழுத கேளுங்கோ[/quote].
கிறுக்கன் கிறுக்குத்தனமாக எதையாவது கிறுக்கிவிட்டால் பிறகு டமிழ்முரசின் கெளரவம் என்னாவது சுந்தரலிங்கம் ஜயா?
Post a Comment