Published By: Digital Desk 2
11 May, 2025 | 03:12 PM
-கபில்
வடக்கு, கிழக்கில் ஒரு பலப்பரீட்சை நடந்து முடிந்திருக்கிறது.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுகின்ற இந்த பலப்பரீட்சை, தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர் பேரினவாத கட்சிகள் என்ற போட்டியை எட்டியிருந்தது.
தமிழ்த் தேசிய கட்சிகள் நான்கு முக்கியமான அணிகளாக போட்டியிட்டிருந்தாலும் அவற்றுக்கிடையில் இருந்த போட்டியை விட, தேசிய மக்கள் சக்தியுடனான போட்டிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்துக்குள், தமிழ்க் கட்சிகளை இல்லாமல் செய்து விட்டு, அந்த இடத்தை தான் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற வெறித்தனத்துடன் தேசிய மக்கள் சக்தி செயற்பட்டிருந்தது.
அது தமிழ்க் கட்சிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கியது என்பதில் சந்தேகம் இல்லை.
அதனால், உள்ளூராட்சி தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்கான பலப்பரீட்சையாகவும் மாறியது.
அதனால் தான், தமிழ்க் கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான நேரடி பலப்பரீட்சையாக இந்தத் தேர்தல் மாற்றம் பெற்றது.
இந்த பலப்பரீட்சையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபித்திருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியினால் , வடக்கில் வவுனியாவில் இரண்டு மன்னாரில் ஒன்று என, மூன்று சபைகளில் மாத்திரம் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடிந்திருக்கிறது.
மற்றபடி தமிழ் பகுதிகளில் தமிழரசுக் கட்சி 37 சபைகளில் அதிக ஆசனங்களுடன் வெற்றியை பெற்றிருக்கிறது.
தமிழ்க் காங்கிரஸ் மூன்று நகர சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றிருக்கிறது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈ.பி.டி.பி கைப்பற்றியிருக்கிறது.
கிழக்கிலும் தமிழ் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் சவாலை தமிழ்த் தேசியக் கட்சிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சி, முறியடித்திருக்கிறது.
திருகோணமலையில் பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழ் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கடும் சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், திருகோணமலை மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி தனது. பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருக்கிறது.
தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் புதுக்குடியிருப்பு, கரைச்சி, பூநகரி, வெருகல் என நான்கு பிரதேச சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பலத்தையும் பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி தனது பலத்தை வெகுவாக உயர்த்தி இருக்கிறது, நிரூபித்திருக்கிறது.
அந்த கட்சிக்குள் இருந்து வந்த முரண்பாடுகள், பிரச்சினைகளைத் தாண்டி இந்த வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.
அதற்காக, இந்த வெற்றியை வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடுகளில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றோ, அதன் தற்போதைய போக்கை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றோ அர்த்தம் இல்லை.
இந்த தேர்தல் எதிர் கொள்ளப்பட்ட முறையும் சூழலும் வேறு விதமானது.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ குறைபாடுகளோ, செயற்பாடுகளோ இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக இருந்ததால், உள்ளக குழப்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவே இல்லை.
தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் பெற்றிருக்கின்ற வெற்றியை, சாதகமான திசையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் இருப்பையும் அதன் அவசியத்தையும் யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.
அதன் இருப்பு அவசியமற்றது என்ற நிலைப்பாடும் யாரிடமும் இருந்ததில்லை.
தமிழரசுக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஆனந்தசங்கரி கூட, கடைசி நேரத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது ஒரு முக்கியமான விடயம்.
அதேபோல, தமிழரசுக் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், தந்தை செல்வாவின் பாதையில் பயணிக்குமேயானால் அதனுடன் இணைந்து செயற்பட தயார் என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இவையெல்லாம் கடைசி நேரத்தில் தமிழரசுக் கட்சி தொடர்பான சாதகமான நிலைப்பாட்டை மக்கள் எடுப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் பல்வேறு தரப்புகளுடன் கூட்டணி அமைத்திருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
ஆனாலும், எதிர்பார்க்கப்பட்டளவுக்கு ஆசனங்கள், வாக்குகள் கிடைக்காமல் போயிருக்கிறது.
யாழ்ப்பாணத்தை தாண்டி, தமிழ்க் காங்கிரஸ் தன்னை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் தெரிவு விடயத்தில் பல இடங்களில், தமிழ்க் காங்கிரஸ் போதிய செலுத்தியிருக்கவில்லை.
அது அந்தக் கட்சியின் பின்னடைவுக்கு ஒரு காரணம்.
அது தவிர, போதுமான பிரசாரங்களையும் அது முன்னெடுத்திருக்கவில்லை.
இதே சிக்கல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இருந்தது.
அந்த கட்சியும் பாராளுமன்றத் தேர்தலை விட இரண்டு மடங்கு வாக்குகளை பெற்றிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டளவிற்கு வவுனியாவிலோ மன்னாரிலோ அல்லது மட்டக்களப்பிலோ தன் செல்வாக்கை நிரூபித்திருக்கவில்லை.
தமிழ் மக்கள் கூட்டணி நான்கு பிரதேச சபைகளில் மாத்திரம் போட்டியிட்டு பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு இணையான வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதுவும் பலவீனமான நிலையில் இல்லை என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்கு அணிகளாகப் போட்டியிட்டிருந்தாலும், உள்ளூராட்சி தேர்தல் முறைமையின் காரணமாக, தமிழ் மக்களுக்கு இது பெரும் பாதிப்பை கொடுத்திருக்கவில்லை.
மாகாண சபை தேர்தலிலோ பாராளுமன்றத் தேர்தலிலோ இதேநிலை இருக்காது. அங்கு வாக்குகள் பிளவுபடுகின்ற போது, ஆசனங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் ஆளும்கட்சிகளும், அவற்றின் எடுபிடிகளாக இருந்த தரப்புகளும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் இருப்புக்கு சவாலாக இருந்து வந்திருக்கின்றன.
அவை காலத்துக்கு காலம், கடும் போட்டியை கொடுத்திருக்கின்றன.
தமிழ் மக்களின் வாக்குகளை தங்களின் பக்கம் இழுத்து, தமிழ் மக்களின் அபிலாஷை தொடர்பான ஒரு பொய்யான விம்பத்தை காண்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் காலத்துக்கு காலம் முறியடிக்கப்பட்டு வந்திருக்கின்றன .
இப்போது, தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், அவர்களின் கடந்த கால இழப்புக்களையும் மலினப்படுத்தி, அவர்களை எதுவுமே அற்றவர்களாக , சிங்களத் தேசியத்துக்குள் ஒன்றிக்க செய்யும் ஆபத்தான அரசியல் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டது.
அந்த ஆபத்தான அரசியல் முயற்சிக்கு உள்ளூராட்சி தேர்தல் தடை போட்டிருக்கிறது.
ஆனால், இது நிரந்தரமானது அல்ல. தேசிய மக்கள் சக்தி அடிபட்ட பாம்பாக இருக்கிறது.
அது தமிழ் மக்களை அரவணைத்து, அவர்களின் அரசியல் அபிலாஷைகளை நீர்த்துப்போக செய்கின்ற மூலோபாயத்தை கைவிட்டு விடப்போவதில்லை.
அதற்கு தமிழர்களையே பயன்படுத்தவும் போகிறது.
கடந்த காலங்களில் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் எவ்வாறு தமிழர்களை பயன்படுத்தி, தமிழர்களின் போராட்டத்தை, பலவீனப்படுத்தியதோ, அதே உத்தியை தேசிய மக்கள் சக்தியும் பயன்படுத்தும்.
இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் இருப்பை உறுதி செய்வதன் ஊடாக மாத்திரமே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தமிழ் கட்சிகளின் பிளவுகளும் பிரச்சினைகளும் தமிழ் தேசியத்தின் இருப்புக்கு எந்தளவுக்கு அச்சுறுத்தலையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதை, தமிழ் கட்சிகள் மீண்டும் உணர்ந்து கொண்டுள்ளன.
இந்தச் சூழலில் அவை பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது.
சபைகளில் ஆட்சி அமைக்கும் விடயத்தில், அற்பமான பதவிகளுக்காகவோ சலுகைகளுக்காகவோ, முரண்டு பிடிப்பதை விட்டு, தமிழ் மக்கள் விரும்பியபடி, தமிழ் கட்சிகள் தமிழர் பிரதேசத்தை ஆளக்கூடிய வகையில், ஒவ்வொரு சபைகளும் சுமூகமாக இடம்பெறுகின்ற சூழலை உருவாக்க வேண்டும்.
மறுபுறத்தே, தேசிய மக்கள் சக்தி வலுவான ஒரு சக்தியாக இன்னமும் இருக்கிறது என்பதை மறந்து விடலாகாது.
அது உள்ளூராட்சி சபைகளில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.
ஏற்கனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிற கட்சிகளின் வசமுள்ள சபைகளுக்கு ஒன்றுக்கு பத்து முறை யோசித்தே நிதி ஒதுக்கவோம் என கூறியிருந்தார்.
இந்தச் சூழலை கவனத்தில் கொண்டு, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுக்கொன்று இணக்கப் போக்குடன் செயற்பட்டு, சுமுகமான முறையில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கொண்டு நடத்த முன்வர வேண்டும்.
தமிழ் கட்சிகள் மீது தேசிய மக்கள் சக்தி சுமத்திய குற்றச்சாட்டுகளை துடைக்கின்ற வகையில், ஆட்சியை நடத்துவது தான், அவர்களுக்கு கொடுக்கின்ற சரியான அடியாக இருக்கும்.
அதேவேளை, இன்னொரு பலப் பரீட்சைக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாராக வேண்டிய நிலையில் இருக்கின்றன.
அந்தப் பலப்பரீட்சை தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எதிர்கொள்ள கூடிய ஒன்று அல்ல. அது கூட்டாக நின்று வெல்ல வேண்டிய ஒரு களம் என்பதை மறந்து விடக் கூடாது. நன்றி விராகவ்சரி
No comments:
Post a Comment