பாகிஸ்தானின் பாதையில் சீனாவைப் பின்தொடர்கிறதா இலங்கை?

 

08 May, 2025 | 10:40 AM

(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வதேச அளவில் சீனாவின் பரந்த விரிவாக்கம், பெரும்பாலும் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி போன்ற திட்டங்கள் மூலம், பரஸ்பர நன்மை தரும் பொருளாதார ஒத்துழைப்பாகவே விவரிக்கப்படுகிறது. ஆனால், அதன் பின்னணியில் உள்ள நெருக்கடியான நுட்பங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய சூழல் இலங்கை போன்ற நாடுகளுக்கு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாக்கிஸ்தான் சிறந்ததொரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மூலம் சீனாவுடன் ஆழமாக இணைந்த பாக்கிஸ்தான், ஆரம்பத்தில் பொருளாதார வளங்களை எதிர்பார்த்தது. ஆனால், இதன் விளைவாக நிலவும் கடன் சுமை, உள்ளடங்கிய சமூகமறுப்பு, மேலும் சீனாவின் பாதுகாப்பு உள்ளடக்கங்களின் விரிவாக்கம் ஆகியவை அந்த நாட்டின் முழுமையான இறையாண்மை மற்றும் மக்கள் நலனில் கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. இலங்கையிலும் இதே மாதிரியான நிலை உருவாகும் அபாயம் உள்ளதா? என்ற கேள்வி நேர்மையாக எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில் பலூசிஸ்தானில் சீன முதலீடுகள், அபிவிருத்திக்கு பதிலாக மக்கள் எதிர்ப்புகளுக்கு காரணமாகியுள்ளன.

பாகிஸ்தானில், குறிப்பாக இயற்கை வளங்களில் செழிப்புடைய பலூசிஸ்தான் மாகாணத்தில், சீன முதலீடுகள் பெரும் கலகக்குரலாக உருவெடுத்துள்ளன. வலுவான வளர்ச்சி  என்ற முன்மொழிவுடன் கொண்டுவரப்பட்ட சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள், குவாடர் துறைமுகம் உள்ளிட்ட தளங்களில்  முற்றிலும் மாறுபட்ட யதார்த்தத்தை உருவாக்கியுள்ளன. பலூச் இன மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்புகளின் பிரகாரம், இந்தப் பெரிய திட்டங்களில் உள்ளூர் சமூகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் பஞ்சாபியர்கள் மற்றும் சீனர்கள் உள்ளிட்ட வெளியுறவாளர்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த நிலைமை பலூச் மற்றும் பஞ்சாபியர் மையமாகக் கட்டுப்படுத்தப்படும் பாக்கிஸ்தானின் இடையே நீண்ட காலமாக நிலவிய மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், சீனத் திட்டங்கள் இந்த மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களை முடக்கியுள்ளன. குறிப்பாக குவாடரில் வாழும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்லும்  வழிகள் புதிய கட்டுமானத்தால் தடைப்பட்டுள்ளன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி என வாக்குறுதி அளிக்கப்பட்டாலும், பலூசிஸ்தானில் பலருக்கும் அது எட்டாத கனவாகவே உள்ளது. எனவே தான அந்த மக்;கள் பாக்கிஸ்தானிலிருந்து பிரியும் தனிநாட்டு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். குறிப்பாக புறக்கணிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை அழிவுகளை எதிர்கொள்ளும் இந்த மக்களுக்கு பொருளாதார சுமைகள் மேலும் கடுமைப்படுத்துகின்றன. சீனத் திட்டங்கள் பாக்கிஸ்தானின் கடன் சுமையை அதிகரித்துள்ளதுடன்,  இஸ்லாமாபாத்தை சீனாவின் நிதி ஆதரவை நம்பும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.

மிகவும் கவலையூட்டும் வளர்ச்சி என்னவெனில், பாக்கிஸ்தானில் சீனாவின் பாதுகாப்பு தாக்கம் தெளிவாக விரிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் இது, பலூசிஸ்தானில் சீன பணியாளர்கள் மற்றும் முதலீடுகளை தீவிரவாத தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அவசியம் என விளக்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சமீபத்தில் பாக்கிஸ்தான், முக்கியமான சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களை பாதுகாப்பதற்காக சீனாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அதுவும் சீன பாதுகாப்பு படையணிகளை அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மீதான முழுமையான உரிமையை இழக்கும் படியாகவே பார்க்கப்படுகிறது.

இது எதிர்காலத்தில் சீனாவின் இராணுவக் கட்டுப்பாடுகளுக்கு வழி வகுக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக, குவாடர் போன்ற முக்கியமான போக்குவரத்து மற்றும் மூலதன நெடுங்கால மையங்கள், பாக்கிஸ்தானின் தேவைகளை விட சீனாவின் பாதுகாப்பு மற்றும் புவிசார் நோக்கங்களுக்கே முதன்மை அளிக்கும் வகையில் மாறக்கூடும் என்பது நீண்ட கால எச்சரிக்கைகளாக உள்ளன. அதிக முக்கியத்துசமாக பலூசிஸ்தானில் ஏற்பட்டுள்ள அல்லது மேலும் தீவிரமான உள்ளக நிலைமுறைகளை தன்னால் கையாள முடியும் என்றும், பொருளாதார மீட்பு கூட தான்;னின்றி சாத்தியமில்லை என்றும் நம்பிக்கையை சீனா உருவாக்கியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானை,  பாதுகாப்பிலும் பொருளாதாரத்திலும் பூரணமாக தன்னிடம் சார்ந்ததாக சீனா மாற்றியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இங்குள்ள இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் சூழ்நிலையில், பாக்கிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் சீன பாதிப்புகளுடன் உள்ள ஒற்றுமைகள் நாளுக்கு நாள் வெளிப்பட  தொடங்கியுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன கடனில் கட்டப்பட்டு, அதன் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் 99 வருடங்களுக்கு சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இது பாக்கிஸ்தானின் குவாடர் துறைமுக அனுபவத்தை பிரதிபலிக்கிறது.

இந்த துறைமுகத்தின் இரட்டை பயன்பாடு, நவீன இராணுவத் தளமாக மாறும் அபாயம் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது. குறிப்பாக யுவான் வோங் 5 போன்ற சீன ஆய்வுக் கப்பல்களின் வருகையைத் தொடர்ந்து சீனா இராணுவத்தின் பிரசன்னங்கள் தொடர்பில் பிராந்தியத்தில் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. பொருளாதார ரீதியாக, கொழும்பு துறைமுக நகர் திட்டம் போன்றவை முதலீடுகள் வருவதாக வாக்குறுதி அளித்தாலும், அதன் பயன்கள்  இதுவரையில் அவ்வாறு இல்லை. மேலும், நீண்ட கால கடன் சுமை குறித்து இந்தியப் பெருங்கடலில் சில சாய்வுகள் பாக்கிஸ்தானின் அனுபவங்களை நினைவூட்டுகின்றன.

முக்கியமாக, சீனா இலங்கையின் உணர்வுப்பூர்வமான இன உறவுகளில் மெதுவாக ஈடுபட தொடங்கியுள்ளது. இது பாகிஸ்தானில் பலூச் மற்றும் பஞ்சாபியர் இடையிலான இடைவெளியை உபயோகித்தது போல், இலங்கையில் சிங்கள-தமிழ் இடையிலான பிளவுகளை பயன்படுத்தும் முயற்சியாக கருதப்படுகின்றது.  அண்மையில் தேசிய இனக் கொள்கைகள் ஆணைக்குழுவின் சீன உயர்மட்ட அதிகாரிகளின் 'இன நல்லிணக்கம்' குறித்த பேச்சுவார்த்தைகளும், அதேசமயம் வட மாகாண தமிழர் பெரும்பான்மை பகுதிகளில் உதவிகள் வழங்கும் திட்டங்களும் பலரது கவனத்தை ஈர்த்திருந்தன.

இவை அனைத்துமே மேலோட்டத்தில் மக்கள் நலனுக்கான முயற்சிகள் போல இருந்தாலும், உள்ளார்ந்த யதார்த்தத்தில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை கூர்மையாக்கும் அபாயம் உள்ளது. இது சீனாவிற்கு ஒரு மத்தியஸ்தர் அல்லது அதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறும் வாய்ப்பை வழங்குகிறது. மறுபுறம் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற வளம் வாய்ந்த பகுதிகளை நோக்கிய சீன பார்வையை விரிவாக்கும் ஒரு வழியாகவும் உள்ளது.

இலங்கை, பாக்கிஸ்தானை போன்று ஒரு இடைக்கால நெருக்கடிக்குள்ளாகி, அதன் உள்நாட்டுப் பிளவுகளை வெளிநாட்டு சக்திகளால் பயன்படுத்தப்பட அனுமதிக்க கூடாது என்பதே இங்கு  முக்கியமாகின்றது. பாக்கிஸ்தானின் சோதனையான அனுபவம் குறிப்பாக சீனாவின்  சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள் வாயிலாக அனைத்து அத்தியாயங்களையும் வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் வலுவான வளர்ச்சி சாத்தியமென காட்டப்பட்டாலும், உண்மையில் அந்த நாட்டின் சமூகச் சீர்கேடுகள், ஆளுமை இழப்புகள், மற்றும் கடன் அடிமைத்தனம் மூலமாக சீனாவின் புவிசார் நோக்கங்களை நிறைவேற்றும் வழியாகவே மாறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் போன்ற திட்டங்கள், இலங்கையின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளை மறுவடிவமைக்கும் சக்திகளாக மாறிவிட்டுள்ளன. சமூகக் கலவரங்கள், இன உறவுகளின் பிளவுகள் ஆகியவற்றின் ஊடாக சீனா நுழைந்து, நல்லிணக்கத்தின் பெயரில் ஓர் இடத்தை பிடிக்க முயற்சிப்பது கவலையூட்டும் முன்மாதிரியை வெளிப்படுத்துகிறது. இது பாக்கிஸ்தானில் பலூச் - பஞ்சாபி பிளவுகளை நுட்பமாக பயன்படுத்தியது போலவே உள்ளது.   நன்றி வீரகேசரி 

No comments: