சம்பந்தனின் அறிவுரை பொருத்தப்பாடுடையதா?

 May 14, 2024


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்து வது தொடர்பில் கட்சிகள் அவசரப்படக் கூடாது – குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்த விடயத்தில் அவசரப்படக் கூடாது, நிதானமாக செயல்பட வேண்டுமென்று, மூத்த அரசியல்வாதி சம்பந்தன் அறிவுரை கூறியிருக்கின்றார். இதற்கு முன்னரும் தமிழ் பொது வேட்பாளர் தொடர் பில் சம்பந்தன் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.
சம்பந்தன் தற்போது அரசியலில் இயங்கும் நிலையில் இல்லை. ஊடகங்கள் அணுகினால், அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒருவராகவே இருக்கின்றார். இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டில் அவசரப்பட வேண்டாமென்று சம்பந்தன் கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சம்பந்தன் இந்த விடயத்தில் மட்டுமல்ல, கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் எவற்றிலுமே அவசரப்படவில்லை – நிதானமாக கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் ஒருவராகவே இருந்திருக் கின்றார். இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், அவசரப்பட வேண்டாமென்றே கூறினார்.
டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அலுவலகத்தை திறக்க வேண்டும், அதன் மூலம் அங்குள்ள இராஜதந்திர தரப்புக்கள், சிந்தனைக் கூடங்கள், ஊடகங்கள் அனைத்துடனும் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட வேண்டும் – அப்போதுதான், இழக்கப்பட்ட இந் திய கரிசனையை மீட்டெடுக்க முடியுமென்று, கூட்டமைப்பின் பங்கா ளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுத்துரைத்த போது –
அப்போதும் அவசரப்பட வேண்டாம் என்றே குறிப்பிட்டிருந்தார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முற்றிலும் சாதகமானதொரு அரசியல் சூழல் ஏற்பட்டிருந்தது.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சம்பந்தன் பேசி னார். அதன் சாத்தியமின்மை தொடர்பில் சம்பந்தனிடம் எடுத்துரைக் கப்பட்டது. அரசமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயங்களை முதலில் சாத்தியப்படுத்து வதே சரியானது. தற்போது, முற்றிலும் சாதகமான சூழல் தென்னிலங் கையில் இருக்கின்றது – நிச்சயமாக புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரவே முடியாது –
என்று சம்பந்தனிடம் ஏனைய கட்சிகளும் புத்திஜீவிகளும் வலியுறுத்தியிருந்தனர். அப்போதும் சம்பந்தன் நாங்கள் அவசரப்படக் கூடாது, நிதானமாக பயணிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டிருந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது, சிறுபிள்ளைகள் போல் பதிலளித்து, அதனை தவிர்த்திருந்தார்.
அப்போதும் நாங்கள் அவசரப்படக் கூடாதென்னும் பதிலே சம்பந்தனிடமிருந்து வந்தது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, இந்தியா வின் தலையீட்டைக் கோரி, இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப் பும் முயற்சியை மேற்கொண்ட போதும், அப்போதும் சம்பந்தன் அவச ரப்படக் கூடாதென்றே குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பதினைந்து வருடங்களாக சம்பந்தனின் அவசரப்படாத அணுகுமுறையால் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? கல்முனை பிரதேச செயலகப் பிரச்னையை கூட, சம்பந்தனால் தீர்த்து வைக்க முடிந்திருக்கவில்லை. அந்த மக்கள் வீதியில் நிற்கின்றனர். இனியும் தமிழ்க் கட்சிகளை – குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை அவசரப்பட வேண்டாமென்று சம்பந்தன் குறிப்பிடுகின்றார் என்றால் – சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிறிதும் கரிசனையில்லாத ஒருவராகவா இருக்கின்றார்?   நன்றி ஈழநாடு No comments: