இலங்கைச் செய்திகள்

யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறை அறிமுகம்

யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு 

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்காக நிதி ஒதுக்கீடு

சிறப்பாக நடைபெற்ற நுவரெலியா சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு


யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு 

May 17, 2024 8:37 am

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,  பல்வேறு தரப்பினரையும் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாராளுமன்ற  உறுப்பினர்கள், தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை  அமெரிக்கத்  தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங்குடனான சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் மானிப்பாயிலுள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கும் அமெரிக்கத் தூதுவர் விஜயம் செய்து அங்குள்ள நிலைமையை  பார்வையிட்டுள்ளார்.

வடக்கு மாகாண கடற்படைத் தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட  இடங்களையும் அமெரிக்கத் தூதுவர் சென்று  பார்வையிட்டுள்ளார்.  யாழ். விசேட நிருபர்   நன்றி தினகரன் 




LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறை அறிமுகம் 

- இந்தியா இலங்கை இடையிலான நிதி தொழில்நுட்ப இணைப்பு மேலும் முன்னேற்றம்

May 16, 2024 5:28 pm 

இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறைமையை நேற்றையதினம் (15) இலங்கையில் ஆரம்பித்து வைத்தது.

வங்கித் துறையினைச் சேர்ந்த உயரதிகாரிகள், கட்டண முறைமை வழங்குனர்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களினது பிரசன்னத்துடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஶ்ரீ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண கொடுப்பனவு செயலி அமைப்பானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலகுவான முறையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றமை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் ஊக்குவிக்குமென தெரிவித்திருந்தார். அத்துடன் ஹோட்டல்களை முற்பதிவு செய்தல், வாகன முற்பதிவு மற்றும் ஏனைய விநியோக சேவைகளுக்காக UPI முறைமையினைப் பயன்படுத்திக்கொள்ளூம் வாய்ப்புகளை இந்திய கம்பனிகளுடன் இணைந்து இலங்கை கம்பனிகள் உருவாக்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இலங்கையில் ஒருங்கிணைந்த கட்டண முறைமையான UPIஇனை ஆரம்பித்து வைத்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஜூலை மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ஆவணத்தினை மேற்கோளிட்டு அச்சந்தர்ப்பத்தில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி, நிதி இணைப்புகளை வலுவாக்குதல் அந்த ஆவணத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

குறித்த முறைமை ஆரம்பித்துவைக்கப்பட்ட தருணத்திலிருந்து இதுவரையில் இலங்கையில் 6000க்கும் அதிகமான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 240 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொடுப்பனவாக அவை பதிவாகியுள்ளன. இந்நிலையில் PhonePayUPI அங்குரார்ப்பணமானது, குறிப்பாக இலங்கையின் முன்னணி வாடகை வாகன மற்றும் விநியோக செயலியான PickMe போன்ற சேவை வழங்குனர்களுடன் மேலதிக இணைப்புகளை மேற்கொள்வதன் மூலமாக டிஜிட்டல் நிதி தொழில்நுட்ப இணைப்பினை மேலும் விஸ்தரிக்கின்றது.

டிஜிட்டல் துறைகள் மூலமாக இணைப்புகளை விஸ்தரிப்பதன் மூலமாக இரு நாட்டு மக்களிடையிலுமான தொடர்புகள் வலுச்சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், இரு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழில்நுட்பத்துறையின் புதிய மற்றும் வளர்ந்துவரும் சகல துறைகளிலும் இந்தியா இலங்கை இடையிலான பங்குடைமைக்கான உறுதியான உதாரணமாகவும் இது அமைகின்றது.   நன்றி தினகரன் 





யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு 

May 14, 2024 8:55 pm 

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அதனை அடுத்து வீட்டினுள் சென்று பொலிஸார் சோதனை நடாத்தியபோது , அறை ஒன்றினுள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான கட்டமைப்பு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தடயவியல் பொலிஸார் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோருக்கு பொலிஸார் தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தமது துறை சார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் சில மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்து சென்றுள்ளனர்.

அதன் ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில் , இரசாயன பதார்த்தங்களை பிரித்தெடுத்து , ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் கட்டமைப்பு காணப்படுகிறது. இவை சாதாரண நபர்களால் இலகுவில் செய்ய கூடியதில்லை. இவை இராசயன பதார்த்தங்களை கையாள கூடிய நபர்களால் தான் மேற்கொள்ள முடியும். இரசாயனவியல் தொடர்பிலான அறிவு உள்ள நபர்கள் மூலமாக தான் இவற்றை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் , இரசாயன பகுப்பாய் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தப்பி சென்ற நபர்களையும் , குறித்த வீட்டில் வசித்து வந்தவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

அதேவேளை குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் , பிரதான சந்தேகநபர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்ட குற்றங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர் எனவும் , தற்போது வன்முறை சம்பவங்களில் இருந்து விலகி வாழ்வதாக நீதிமன்ற வழக்குகளில் குறித்த நபர் தெரிவித்து வந்த நிலையில் , போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.விசேட நிருபர்   நன்றி தினகரன் 





முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு 

- ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் பிரதானியாக நியமனம்

May 17, 2024 11:28 am

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (RWP, RSP, VSV, USP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாக, அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட அவர், ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் பிரதானியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய(17) தினம் நியமிக்கப்பட்டார்.   நன்றி தினகரன் 




கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்காக நிதி ஒதுக்கீடு

- அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு

May 17, 2024 9:22 am

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04) ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு, இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின் மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும் பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம்திகதி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிறஞ்சன் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவித்தார்.

மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாங்குளம்  நிருபர் - நன்றி தினகரன் 







சிறப்பாக நடைபெற்ற நுவரெலியா சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

May 19, 2024 4:43 pm 

நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதைம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்று (19) நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஆலய தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், சமாதான தூதுவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, கோயம்புத்தூர் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி, பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார். வடிவேல் சுரேஸ், சீ.பி.ரட்ணாயக்க மருதபாண்டி ராமேஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பிரதி தூதுவர் டாக்டர் எஸ்.ஆதிரா உட்பட இந்தியா, நேபாளம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும், பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

நுவரெலியா நிருபர் - நன்றி தினகரன் 

No comments: