விபுலாநந்த அடிகளார் துறவறம் பூண்டு 100 ஆண்டுகள் நிறைவு

அடிகளாருடன் மிகவும் கேண்மை பூண்டு வாழ்ந்த தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் விபுலாநந்த அடிகளாருக்கு அளித்த  வாழ்த்து ஒன்றினைத் தமிழ் முரசு நேயர்களுடன் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்

                                 -------------------------பாரதி இளமுருகனார்.

 


 தங்கத் தாத்தா” சோமந்தரப் புலவர் அவர்கள் விபுலானந்த அடிகளாருக்கு அளித்தருளிய

வாயுறை வாழ்த்து

  வாழி யினியதமிழ் வாழி தமிழகத்தார்

  வாழி மணியிலங்கை வான்கழகம் - - வாழியரோ

  பேரா சிரியன் பெரியவிபு லானந்தன்

  ஓரா யிரம்பாண் டுலகு          


நிலைமண்டில ஆசிரியப்பா

  வடாஅது வான்றொடு வேங்கட மலையுந்

  தெனாஅது கன்னித் தெய்வதன் குமரியுங்

  குடாஅதுங் குணாஅதுந் தொடுகடற் பரப்புமென்

  றுந்நாள் வரைந்த விந்நான் கெல்லையுள்

  கடுவொடு பிறந்த வமிழ்துதலை குளிக்குஞ்

  சுவையொடு பிறந்த தமிழ்வளங் குலகில்

  ஒருகடல் குடித்த குறுமுனி நாணச்

  சீரிய வாரியத் திருமொழி யென்றா


போரியல் மன்னர் பொதுமொழி யென்றா

அந்தமில் சீர்த்தித் செந்தமி ழென்றா

முக்கடல் குடித்த வித்தக முனிவ!

ஆரியத் துறையினு மருந்தமிழ்த் துறையினும்

நேரிய ஞான நிறைகலைத் துறையினும்

முறைமுறை தோய்ந்து பசையறப் பருகி

இருள்கெட விமைக்கும் அருளொளி முகத்தில்

இளநகை மின்னல் மின்னி வளமுறும்

ஈழமு மிமையமும் வாழிய கேட்ப

வாய்மொழி  முழக்கந் தூய்மையின் முழங்கி

அறிவுமழை பொழியுங் கருணைமா முகிலே!

பன்னிய வேழிசைப் பாற்கடற் குளித்து

மன்னிய வரும்பொருள் மாமணி யெடுத்து

யாழ்நூ லென்னுங் கோவையிற் குயிற்றி

வண்டமிழ்த் தாயின் மங்கலக் கழுத்துத்

தண்டாச் சிறப்புறத் தந்தருள் வள்ளால்!

கல்வியுஞ் சமயமுங் கலங்கிய காலை

நல்லைவந் தெழுந்த நாவலர் பெருமான்

திருவடிச் சுவட்டிற் சேவடி பொருத்திக்

கடிமணங் கடிந்து கல்வியை மணந்தே

எழுமையுந் தொடரும் பொருளு மஃதென்று

இருமையு மருளுஞ் சிவநெறி யொழுக்குமென்

றிவ்விரண்  டுதவும் மெய்யற மோங்க

மண்ணக வரைப்பின் வயின்வயின் வைத்துப்

புண்ணியம் வளர்க்குங் கண்ணிய வண்ணால்!

இருவர் தேவர் தருமணி யுடனே

உருவளர் மதங்கசூ ளாமணி யொன்றுந்

திடமுட னருளிய நடனநூற் செல்வ!

சுத்தம் மிச்சிர மசுத்தமென் றுரைக்கும்

ஜந்து மேழு மாறிரண் டிரட்டியும்

ஆறா றகற்றி யருளொளி யேற்றித்

தன்னொரு நிலையும் தலைவனின் னிலையுங்

கண்ணொடு கண்ணொளி கதிரொளி போல

மன்னுமத் துவித மாண்பெருங் கலப்பின்

உண்மை யுணர்ந்த புண்ணிய மூர்த்தி!

எண்ணக் கதியரு ளிருந்தவப் பெயர்பெறும்

புண்ணியச்  செல்வன் போகாப் பொருடரக்

காணாக் கதியருள் காமரு தலத்தில்

மாணுற வமைத்த வான்கலைக் கழகத்துப்

பொருந்திய வாய்மைப் பொன்னுரை பொழிந்தே

அருந்தமிழ் வளர்த்த வண்ணலா சிரிய!

மீண்டவர்ப் பெறாத வெள்ளிமால் வரைகண்

டீண்டுவந் தருளிய வெங்கள்மா தவமே!

தத்துவந் தருபிர புத்தபா ரதமெனும்

பத்திர நடாத்திய வித்தக முதல்வ!

யாழுங் குழலுங் கீPழுற வோங்கிய

மழலை மாறா விளமைக் காலத்து

நால்வகைச் செஞ்சொல் மாமல ரெடுத்து

நூல்வகை யாப்பின் மேவரத் தொடுத்துத்

தூமணங் கமழும் பாமணி மாலை

தாய்கழுத் தணிந்த வாய்மொழிப் புலவ!

மாவலி வளஞ்சேர் மணியிலங் காபுரி

மேவிய பல்கலை வியன்கழ கத்தே

ஆங்கிலம் முதன்மை யடைவது நோக்கி

ஏங்கிய தமிழ்த்தாய் யிரங்குகுரல் கேட்டுத்

தாய்குரல் கேட்ட தூயவான் கன்றென

மால்வரை யிமையம் வறிதுற மீண்டு

நூல்வரை நுண்டமிழ் நுவல்தே சிகனாய்

வந்தெமக் கருளிய சுந்தரத் தோன்றால்!

விரிந்தபே ரறிவின் மேவிய வின்பம்

நயந்தகா ரணத்தால் நல்லவ ரிட்ட

விபுலா னந்தப் பெயர்பெறு மேலோய்!

ஈன்ற தமிழ்தா யென்;றுமின் படைய

ஆன்றநற் றொழிலெலா மாற்றுதல் நின்கடன்

ஆழிசூ ழுலகத் தாயிரம் யாண்டுநீ

வாழிய பெரிதென வாழ்த்தலென் கடனே!

---------------------------------------------------------------------------------------------ஈழப் புலவர் பரம்பரையை இலங்கச் செய்ய அவதரித்த  தங்கத் தாத்தா பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான செந்தமிழ்ப் பாக்களை இயற்றித் தமிழன்னைக்கு அணிசேர்த்தவர். இதுவரை ஈழத்திழலே தோன்றிய மாபெரும் புலவர்களிலே சின்னத்தம்பிப் புலவர் - முத்துக்குமாரக் கவிராயர் - சேனாதிராய முதலியார் - சிவசம்புப் பலவர் - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகிய ஜவரும் யாழ்ப்பாணத்துப் பஞ்ச இரத்தினங்கள் என்பது; பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் போன்ற தமிழழறிஞர்களின் கனதிமிக்க தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------

 

No comments: