இலங்கையில் கண்ணகி வழிபாடு - செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


வைகாசித் திங்கள் கண்ணகி கோயில் உள்ள ஊர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு மாதம். வைகாசிப் பூரணையையொட்டிய பத்து நாட்கள் அந்த ஊர்களெல்லாம் விழாக்கோலம் பூணும். ஆம்மன் கோயிலில் திருவிழா. ஊரிலே பெருவிழா. மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி உலா.

கிழக்கிலங்கையில் சிறப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்


கண்ணகிவழிபாடு மிகவும் பிரசித்திவாய்ந்ததும், பக்திமயமானதுமான வழிபாடாகக் காலம்காலமாக நிலவிவருகின்றது. அந்த வழிபாட்டு முறைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைச் சொல்வதற்கு முன்னர், கண்ணகி வழிபாடு தொன்றிய வரலாறு பற்றிச் சிலவிபரங்களைத் தருவது இங்கு பொருத்தமெனப் படுகின்றது.

வழிபாடு தோன்றிய வரலாறு


கண்ணகி சிலப்பதிகாரத்தின் நாயகி என்பதும், கோவலனின் மனைவி என்பதும், பாண்டிய மன்னனுடைய கவலையீனமான தீர்ப்பினால் கோவலன் கொலையுண்டான் என்பதும், கணவன் அநீதியாகக் கொல்லப்பட்டதால் துடித்தெழுந்த கண்ணகி பாண்டியனிடம் நீதிகேட்டு வாதாடி, கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தாள் என்பதும். மறுகணமே, தான் தவறிழைத்தமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பாண்டிய மன்னன் அரியணையிலிருந்து மயங்கி வீழ்ந்து இறந்தான் என்பதும், அதுகண்ட பாண்டிமாதேவியும் அக்கணமே உயிரைவிட்டாள் என்பதும், இவ்வளவிற்குப் பிறகும் கோபம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த பொதுவான விடயங்கள்.

பாண்டியனைத் தொடர்ந்து பாண்டிமாதேவி இறந்ததைக் கண்ணுற்ற கண்ணகி இறந்து கிடக்கும் பாண்டிமாதேவியை நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.
“கற்புள்ள பெண்கள் பிறந்த பூம்புகார் நகரிலேதான் நானும் பிறந்தேன். பாண்டிமாதேவியே! உண்மையில் நானும் ஒரு பத்தினியானால், உன்னைப்போல இப்போதே கணவனுடன் இறந்துவிட மாட்டேன். அரசை மட்டுமல்ல இந்த மதுரையையும் அழிப்பேன். எனது வஞ்சினத்தின் தன்மையை நீ காண்பாய்!” என்று கூறி அரண்மனையை விட்டு வெளியேறினாள். வேகமாக நடந்தாள். மதுரையை மூன்றுமுறை வலம் வந்தாள். தனது இடது மார்பைத் திருகி வீசி எறிந்தாள். மதுரை நகர் எரிந்தது.
“ பார்ப்பார். அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி என்னும் இவரைக் கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்று அக்கினியை ஏவினாள். மதுரை நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது.
பாண்டியனின் அரண்மனை பற்றியெரிந்து சாம்பலானது. வீதிகள் எல்லாம் கொழுந்து விட்டு எரிந்தன. படைவீரர்களும் தீக்கு இரையாகினர். நகரைக் காத்து நின்ற பூதங்கள் நகரை விட்டு நீங்கின. நல்லவர்களை விட்டுவிட்டுத் தீயவர்கள் எல்லோரையும் தீ நெருங்கியது.
‘இந்த நகருக்குள் கிழக்கு வழியாக என் கணவருடன் வந்தேன். இப்போது மேற்கு வழியாக வெளியேறுகிறேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணகி மதுரையை விட்டு வெளியேறினாள். எங்குமே தரித்து நிற்காமல் நடந்து கொண்டேயிருந்தாள். காடுகள், மேடுகள், பள்ளங்கள் எல்லாம் கடந்து சென்றாள். இரவென்றும் பகலென்றுக் கருதாமல் வைகைக் கரையோரமாக நடந்து சென்றாள். திருச்செங்குன்றம் என்னும் மலையை அடைந்தாள். அங்கே பூத்துக் குலுங்கிநின்ற வேங்கை மரம் ஒன்றின் அடியிலே அழுதுகொண்டே அமர்ந்தாள். மதுரையை எரித்த நாளிலிருந்த சரியாகப் பதினான்காம் நாள் கண்ணகி இவ்வுலகை நீத்துக் கோவலனுடன் வானுலகம் சென்றாள்.
“தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணியதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து” ஆக வானுலகம் சென்றாள்.

திருச்செங்குன்றத்து வேங்கைமர நிழலிலே கண்ணகி அமர்ந்திருந்ததையும், அவள் வானுலகு சென்றதையும் அங்கே வாழ்ந்த குறவர்கள் என்று சொல்லப்படும் குன்றவர்கள் கண்டார்கள். கண்ணகியைக் தெய்வம் என்று போற்றினார்கள். மலைவளம் காண்பதற்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த சேர மன்னன் செங்குட்டுவனிடம் இதுபற்றி அவர்கள் எடுத்துரைத்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைப்பதற்கு எண்ணினான். அந்த எண்ணம் அவனது மனதிலே நிலைபெற்றது.

இப்படியிருக்கையில், ஒரு திருமணவிழாவிலே வடநாட்டு ஆரிய மன்னர்கள் பலர் கூடியிருந்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களது முன்னைய தலைமுறையினரான வடநாட்டு மன்னர்களைத் தமிழ் மன்னர்கள் போர்களிலே வென்று இமயமலையிலே தங்கள் கொடிகளை நாட்டியமை பற்றிப் பேச்சு எழுந்திருக்கிறது.
சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் ஆரிய மன்னர்களைச் சிறைப்பிடித்து இமயத்திலே கொடி பதித்திருக்கிறான். கரிகாற்சோழன் வடநாட்டின்மீது படையெடுத்துத் தன் புலிக்கொடியை இமயத்தில் எற்றியிருக்கிறான். “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி” என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னனும் வடவரைவென்று இமயத்திலே மீன் கொடியை நாட்டியுள்ளான். இவ்வாறு தம்முன்னோர்களைத் தமிழ் மன்னர்கள் தோற்கடித்தமையையும், இமயத்திலே கொடி பொறித்தமையையும் பற்றி அவர்கள் உரையாடியிருக்கிறார்கள். அப்போது அங்கேயிருந்த கனகன். விஜயன் என்ற ஆரியமன்னர்கள் இருவர் தமிழ் மன்னர்களைப் பழித்துக் பேசியிருக்கிறார்கள். “தமிழ் மன்னர்கள் இங்குவந்து தமது கொடிகளை நாட்டியபோது. நம்மைப்பொன்ற வீரர்கள் இங்கே இருக்கவில்லைப்போலும்” என்று சொல்லி நகைத்திருக்கிறார்கள்.

இந்தவிடயத்தைக் கேள்வியுற்றான் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. தமிழ் மன்னர்களை இழிவாகப் பேசிய அவர்களைத் தோற்கடித்து, இமயமலையிலே கண்ணகிக்குச் சிலைவடித்து, அதனை அந்தப் பகையரசர்களின் தலைகளிலேஏற்றி வருவேன்” என்று சூழுரைத்தான். தமிழ் மன்னர்களைப் பழித்தமை மட்டும் அவனது கோபத்திற்குக் காரணமல்ல. தனது தந்தையின் வீரத்தை அவமதித்துவிட்டானே என்பதுதான் அவனுக்குக் கடும் சினத்தை மூட்டியது. ஆம்! இமயத்திலே கொடிபதித்த தமிழ் மன்னர்களிலே ஒருவர் அவனது தந்தை. இமய வரம்பன் என்று புகழப்படும் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவனதும், இளங்கோவடிகளதும் தந்தையல்லவா? அதனால்தான் ஆரிய மன்னர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதிலே அவன் அவ்வளவு தீவிரம் கொண்டான்.
அவ்வாறே பெரும்படையுடன் சென்று, எதிர்த்துப் போரிட்ட ஆரிய மன்னர்களை வென்று, மன்னர்கள் சிலரையும், கனகன், விஜயன் என்பவர்களையும், சிறைப்பிடித்தான்.   

கண்ணகிக்குச் சிலையெடுப்பதற்காகப் பொருத்தமான கல்லை தனது தளபதியான, வில்லவன் கோதை என்பவன் மூலம், இமயத்திலேயிருந்து பெயர்த்து எடுக்கச் செய்தான். சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கனகன், விஜயன் என்னும் மன்னர்களின் தலையிலே அந்தக் கல்லைச் சுமக்கச்செய்து கொண்டுவந்தான். பின்னர் அதனை முறைப்படி கங்கையிலே நீராட்டி, வஞ்சிமாநகரை அடைந்தான். அந்தக் கல்லிலே கண்ணகிக்குச் சிலை அமைப்பித்தான்.

நல்லதொருநாளில், “பத்தினிக்கோட்டத்திலே” கண்ணகியின் சிலையை நிறுவினான். பல்வேறு நாட்டு மன்னர்களும் அந்த விழாவிலே கலந்துகொண்டார்கள். கண்ணகியின் சிலையை நிறுவிய அந்த நந்நாளில் கனகன், விஜயன் உட்படச் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மன்னர்கள் அனைவரையும் விடுவித்தான். கண்ணகிக்குச் சிலை நிறுவிய விழாவிலே யார்யாரெல்லாம் வந்து கலந்துகொண்டார்கள் என்பதைச் சிலப்பதிகாரம் இப்படிச் சொல்கிறது:

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கொட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

அப்போது இலங்கையின் மன்னனாக இருந்த கஜபாகு என்பவன் செங்குட்டுவனின் அழைப்பின் பேரில் கண்ணகிக்குச் சிலையமைத்த விழாவிலே கலந்துகொண்டிருக்கிறான். அவன்தான் இலங்கைக்குக் கண்ணகி வழிபாட்டினைக் கொண்டுவந்தவன். கி.பி. 178 இல், கண்ணகி விழாவிலே கலந்துகொண்ட கஜபாகு மன்னன் பொற்சிலம்பு, வெள்ளி மாம்பழம், சந்தனக்கட்டையினாலான கண்ணகி சிலை என்பவற்றைத் தன்னோடு கொண்டு வந்தான்.

முதன் முதலில், யாழ்ப்பாணத்தில், அங்கணாமைக்கடவை என்ற இடத்திலே கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தினான். அதன் பின்னர் கண்டியிலே பத்தினித் தெய்வத்திற்குக் கோயில்  அமைத்தான். அங்கணாமைக்கடவையைத் தொடர்ந்து வடமாகாணத்தில் பல இடங்களில் கண்ணகிக்குக் கோயில்கள் அமைந்தன. அச்செழு, அல்வாய், ஆனைக்கோட்டை, ஊரெழு, எருவில், எழுதுமட்டுவாள், ஓமந்தை, கச்சாய், கற்கோவளம்,காரைநகர், குடத்தனை, கோப்பாய், கோணவளை, சுதுமலை, நாவற்குழி, பளை, பன்றித்தலைச்சி, புதுக்குடியிருப்பு, புங்குடுதீவு, மந்திகை, மட்டுவில், மண்டைதீவு, மயிலிட்டி, மாதகல், மிருசுவில், முகமாலை, முள்ளியவளை, வதிரி, வண்ணை, வட்டுக்கோட்டை, வற்றாப்பழை, வீமன்காமம் முதலிய ஊர்களிலும் மடு, வவுனியா, மற்றும் சிலாபம், ஆகிய இடங்களிலும்,  கண்ணகி வழிபாடு நிலவியிருக்கிறது. வடமாகாணத்தில் ஆறுமுக நாவலரின் காலத்திலும் அதற்குப் பின்னரும் சில ஆலயங்களில் கண்ணகி என்றபெயர் நாகபூசணி, நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி, இராஜராஜேஸ்வரி என்றவாறு மாற்றப்பட்டு விட்டன. இப்போது அவ்வாறான பெயர்களிலேயே ஆலயங்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு

சேரநாடு என்பது இப்போதைய கேரளம். அதாவது மலையாள மொழியைப் பேசுகின்ற மக்கள் வாழும் மாநிலம். அந்தச் சேரநாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையே மிகுந்த தொடர்பு இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கிழக்கிலங்கை மக்களுக்கும், சேரத்தமிழர்களுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் நிலவியிருக்கின்றன. பண்பாட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றை உறுதிப்படுத்தக்கூடியவாறாகக் கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கை முறையின் சிலகூறுகள் இப்போதும் அமைந்துள்ளதை அறியலாம். வீடு கட்டும் முறைகள், வீட்டைச்சுற்றிவரப் பச்சைப்பசேலென்ற தோட்டம், கிணற்றைச் சுற்றி கமுகுமரங்கள், பேச்சு வழக்கில் உள்ள மலையாளச் சொற்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் இப்படிப்பல விடயங்களில் கிழக்கிலங்கை மக்களுக்கும் கேரளத்து மக்களுக்கும் இடையே ஒருமைப்பாடு உள்ளது. மலையாளம் மாந்திரீகத்திற்குப் பெயர் பெற்ற இடம். மட்டக்களப்பும் அப்படியே! இப்போதைக்கு ஒரு தலைமுறை முந்திய காலம் வரை கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்கள் இப்பொழுதும் வாழ்கின்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் அமைத்த கண்ணகி கோட்டம்,  கேரளாவில், கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான எல்லையிலேயே அமைந்திருக்கிறது. அங்கு வைக்கப்பட்ட கண்ணகியின் சிலை இப்போது இல்லை. ஆனால், அந்த இடத்தில் மக்கள் இப்போதும் கண்ணகிக்கு வழிபாடு செய்துவருகின்றார்கள்.

எனவே, கஜபாகு மன்னன் மூலமாகக் கண்ணகி வழிபாடு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, ஆரம்பத்தில் இலங்கையின் எல்லாப் பாகத்திலும் நடைபெற்றிருந்தாலும், சேரத்தமிழ் நாட்டுக்கும், கிழக்கிலங்கைக்கும் இடையே நிலவிய பண்பாட்டுத் தொடர்பு காரணமாகக் கிழக்கிலங்கையில் அந்த வழிபாடு நிலைபெற்றுப்பரவி, வழக்கத்திற்கு வந்துவிட்டது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது கண்ணகி வழிபாடு. அதே காலப்பகுதியில் இலங்கையிலும் பரவியது. திருகோணமலை மாவட்டத்தில் பறையன்குளம், பாலம்போட்டாறு, நீலாப்பழை, மலைமுத்தல், கந்தளாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்த கண்ணகிகோவில்கள் பின்னர் பத்தினிக்கோவில்கள் என்ற பெயரிலே மாற்றம் பெற்றன. இதனைப்போலவே பொலனறுவை மாவட்டத்தில் உள்ள தம்பன்கடவையில் இருக்கும் கண்ணகிகோயிலும் கண்ணகியை விட்டுவிட்டுப் பத்தினிக்கோவில் என்ற பெயரிலேயே வழிபாடியற்றப்படுகின்றது.

அம்பாறையும் இணைந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவு. பாணமை, வீரமுனை, அக்கரைப்பற்று, கல்முனை, துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, மகிழூர், எருவில், கோவில் போரதீவு, மண்டூர், தும்பங்கேணி, மகிழடித்தீவு, ஈச்சந்தீவு, முதலைக்குடா, முனைக்காடு, குறிஞ்சாத்தீவு, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பழை, கன்னங்குடா, செட்டிபாளையம். புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, மண்முனை மஞ்சந்தொடுவாய், தாண்டவன்வெளி, அமிர்தகழி, சத்துகுக்கொண்டான், விடத்தல்முனை, சிற்றாண்டி, வந்தாறுமூலை, வாழைச்சேனை, கல்குடா, கோராவெளி முதலிய ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. திருகோணமலை மாவட்டத்தில், நீலாப்பழை, முகத்துவாரம், மூதூர், கடற்கரைச்சேனை, பாலம்போட்டாறு, கந்தளாய், ஈச்சந்தீவு, கிண்ணியா, தம்பலகாமம், ஆலங்கேணி, உவர்மலை, 10ஆம் குறிச்சி, நிலாவெளி, கும்புறுப்பிட்டி முதலிய இடங்களில் கண்ணகை அம்மன் ஆலயங்கள் உள்ளன.

 

இந்த ஆலயங்கள் வருடத்தில் ஒருமுறை மாத்திரம் திறக்கப்பட்டு பூசைகள் நடாத்தப்படும். வைகாசிப் பூரணைக்கு எட்டு நாட்களுக்கு அல்லது பத்து நாட்களுக்கு முன்னர் ஆலயக் கதவு திறக்கப்படும் எத்தனைநாள் சடங்கு வழிபாடு நடைபெறுவது என்பது ஒவ்வொரு ஊரின் வழக்கத்திற்கு அமைவாக வேறுபடும். இறுதிநாள் சடங்கு நிகழ்வுகள்  இரவு முழுவதும் நடைபெறும்மறுநாள் அதிகாலை திருக்குளுர்த்தியும் அதனைத் தொடர்ந்து திருக்கதவு பூட்டலும் இடம்பெறும். இரவு வைரவர் பூசை நடைபெறும். மேலும், ஆலயக்கதவு பூட்டப்பட்ட நாளிலிருந்து; எட்டாம் நாள் தெளிவு சடங்கு என்ற ஒன்று இடம் பெறும். அன்று ஆலயக் கதவு மீண்டும் திறக்கப்பட்டு, பூசைவழிபாடுகள் செய்யப்பட்டு கதவு மூடப்படும். அதன்பின்னர் ஆண்டு முழுவதும் ஆலயம் மூடப்பட்டே இருக்கும். ஆலயம் மூடப்பட்டிருக்கும் காலங்களில் மக்கள் ஆலயத்திற்குச் சென்று வெளிமண்டபத்தில் நின்று வழிபடுவார்கள். அக்காலங்களில் நேர்த்திக் கடன்செலுத்தப் பொங்கலிடுவதும் உண்டு.

கண்ணகை அம்மன் கோயில்களில் நடைபெறும் பூசைகளையோ விழாக்களையோ திருவிழா என்ற சொல்லதில்லை. “சடங்கு” என்றுதான் சொல்வார்கள்.  ஓவ்வொரு வைகாசிப் பூரணை தினமன்றும் நடைபெறும் “குளுர்த்தி” எனப்படும் சடங்குதான் உச்சக்கட்ட விழாவாக இருக்கும். கோபங்கொண்ட கண்ணகியம்மனைக் குளிச்சிப்படுத்தவதாக அந்தச் சடங்கு அமைகின்றது. கண்ணகை அம்மன் கோயில்கள் எல்லாவற்றிலும் குளுர்த்திச் சடங்கு நடைபெறும். குளுர்த்தியின்போது குளுர்த்திப்பாடல் பாடப்படும். இனிமையான அந்தப்பாடலின் முற்பகுதி கண்ணகை அம்மனின் வரலாறு கூறும். பிற்பகுதி கோபம் தணிந்து குளிர்ந்தருளுமாறு அம்மனை வேண்டும்.

இந்த ஆலயங்களில் சடங்குகள் எனப்படும் விழாக்களை நடாத்துவதற்கான பொதுவான நடைமுறை ஒன்று எல்லா ஊர்களிலும் வழக்கத்தில் உள்ளது. அதாவது ஊர்மக்கள் பல குடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே வழிவழியாக வந்துகொண்டிருக்கும் அந்த ஒழுங்கின்படி ஒவ்வொரு குடிமக்களுக்குமென ஒதுக்கப்பட்ட சடங்குகளை அவ்வந்தக் குடிமக்கள் செய்வார்கள்.

கண்ணகை அம்மன் கோவில் கதவு திறப்பதற்கு முதல் நாளிலிருந்தே ஊர்முழுவதும் துப்பரவு செய்யப்படும். வீதிகள் கூட்டிப்பெருக்கி அழகுபடுத்தப்படும். ஊர்மக்கள் தாமாகவே அவற்றைச் செய்வார்கள். ஆலயக் கதவு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஊரில் மச்சம். மாமிசம் தவிர்க்கப்படும். வெளிநாடுகளில் உள்ள ஊர்மக்கள்கூட, ஊரில் கோயில் சடங்கு நடைபெறும் காலங்களில் பெரும்பாலும் மச்சம் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்வார்கள். மாதவிலக்கு வந்த பெண்கள் பிற ஊர்களிலோ அல்லது ஊருக்கு ஒதுக்கப்புறமாகவோ உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலோ சென்று தங்குவார்கள்.

கண்ணகை அம்மன் ஆலயக்கதவு திறக்கப்பட்டுவிட்டால் ஊர் முழுவதும் விழாக்கோலம் பூணும். எல்லோருடைய மனங்களிலும் மகிழ்ச்சி நிலவும். காலை. மதியம். மாலை. இரவு என்று எந்நேரமும் மக்கள் கோவிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அங்கே கண்ணகி வழக்குரை காவியம் நாள் முழுவதும் பாடப்படும். அது காற்றோடு கலந்து ஊர்முழுவதையும் புனிதப்படுத்தும். பூசையின் போது ஊர்சுற்றுக்காவியம் பாடப்படும். 

ஏனைய ஆலயங்களைப் போலல்லாது கண்ணகை அம்மன் ஆலயங்களில் மக்கள் உண்மையான பயபக்தியோடு வழிபாடியற்றுவார்கள். அதாவது. வெறும் பக்தி மட்டுமன்றிப் பயம் கலந்த பக்தியோடு வணங்குவார்கள். வேண்டாத விவாதங்களிலே ஈடுபடுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல். மது அருந்துதல் போன்றவற்றை மக்கள் தாமாகவே தவிர்த்துக்கொள்வார்கள்.

சில ஆலயங்களில் விழாக்காலத்தில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. ஆலயத்திற்க வரும் எல்லோருக்கும் மதிய உணவு இலவசமாகப் பரிமாறப்படுகிறது. அதற்கென அன்னதான மடங்கள் அன்பர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயகாரரின் செலவில் இந்த அன்னதானம் நடாத்தப்படுகின்றது. ஆலயத்தின் அன்னதான மடத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, வேறுபாடுகளை மறந்து. அம்மாளை நினைந்து உணவருந்துவதில் பக்திசார்ந்த ஒருவித திருப்தியை உணரமுடிகிறது.

ஓவ்வொரு சடங்கிலும் தாமரை மலர்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும். எங்கிருந்தென்றாலும் தாமரை மலர்களை கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள். முக்கனிகளும்;, சர்க்கரைப் பொங்கலும் படைக்கப்படும். அம்மன் கோவிலில் உள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் பால்பொங்கல் படைத்து வழிபாடியற்றப்படும். பழங்கள், தேன், சர்க்கரை முதலிய ஐந்துவகை இனிப்புப் பதார்த்தங்களின் கலவையான பஞ்சாமிர்தம் ஒவ்வொரு சடங்கிலும் அம்மனுக்குப் படைக்கப்பட்டுப் பூசையின் பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

வணக்க முறைகளாக முள்ளுக்காவடி எடுத்தல், பால் காவடி எடுத்தல் அங்கப் பிரதட்சணம் செய்தல் என்பவற்றை ஆண்களும், தீச்சட்டி ஏந்துதல், மடிப்பிச்சை எடுத்தல் போன்றவற்றைப் பெண்களும் நிறைவேற்றுவார்கள். மடிப்பிச்சை எடுப்பது என்றால், பெண்கள் வீடுவீடாகச் சில வீடுகளுக்குச் சென்று பிச்சை கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் நெல்லைத்தான் பிச்சையிடுவார்கள். சிலர் அரிசி, தேங்காய், கற்பூரம் என்பவற்றையும் கொடுப்பதுண்டு. பிச்சையெடுத்தவர்கள் அவற்றையெல்லாம் அப்படியே ஆலயத்திற்குச் சென்று ஒப்படைப்பார்கள். அவ்வாறு சேர்ந்த நெல் ஆலயத்தில் குவிந்துகிடக்கும் அந்த நெல்லை குழுர்த்தியிலன்றிரவு உரலில் குற்றி அரிசியாக்கி குழுர்த்திப் பொங்கல் செய்யப்படும். அரிசியை ஊறவைத்து இடித்து மாவாக்கி ரொட்டி சுட்டெடுக்கப்படும். அது வைரவருக்குப் படைக்கப்படும்.

நெல் குற்றுவதில் கூட ஒழுங்குமுறையொன்று வழக்கத்தில் உள்ளது. குழுத்திச் சடங்கு செய்யும் குடிமக்களில் ஓவ்வொருவருடமும் யாருக்கு முதல் உலக்கை என்பது குறித்து ஒதுக்கப்படுகின்ற அந்த வழமையின் படி அந்த இரண்டு பெண்களிடம் ஆலயப் பிரதம குரு உரிய பூசைகளுக்குப் பிறகு உலக்கையை வழங்குவார். அவர்கள் முதன்முதலில் நெல்குற்றத் தொடங்குவார்கள். பிறகு ஏனையவர்கள் நெல் குற்றலில் பங்கேற்பார்கள். அவ்வாறு நெல் குற்றுதல், மாவிடித்தல் எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் என்பவை ஆலயத்தைச் சுற்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

சில ஆலயங்களில் கொம்புமுறி விளையாட்டு, போர்த்தேங்காய் அடித்தல், கலியாணக்கால் வெட்டுதல், ஊர் சுற்றுதல் முதலிய நிகழ்ச்சிகள் கண்ணகியின் வரலாற்றுத் தொடர்புடையனவாக நிகழ்த்தப்படும். திறந்தவெளி அலங்கார மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அறிஞர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறும். அம்மனுக்குச் சாத்தப்படும் பாளை விற்பனை இன்னொருபுறம் ஒலிபெருக்கி மூலமாக நடைபெறும். ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் நெற்றியிலே திருநீறு பூசி, சந்தனப் பொட்டிட்டு மகிழ்ச்சி பொங்க ஆலயவீதியெங்கும் நிறைந்திருப்பார்கள். ஆண்கள் பொதுவாக வேட்டி கட்டியிருப்பார்கள். சிலர் சட்டைபோடாமல் வேட்டியுடனும் இடுப்பில் கட்டிய சால்வையுடனும் இருப்பார்கள். அம்மன்கோயிலின் உள் மண்டபத்தினுள் செல்லும் ஆண்கள் மேற்சட்டை அணிவதில்லை.
இவ்வாறு காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் எத்தனையோ விடயங்கள் உள்ளன. அம்மன் கோவில் திறந்திருக்கம் காலம் அவ்வந்த ஊர்களுக்கு புதுவருடப் பிறப்பைப் போல ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து, வரும்போது வரவேற்றுப் பக்தியோடு கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக் காலம். உண்மையில் அது ஓரு பண்பாட்டுக் கோலம்.

 

-----------------

No comments: