சிறுத்தொண்டநாயனார் வரலாறு - பகுதி - 1

 உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா) வாரந்தோறும் நடாத்தும் “சிவத்தோடு நாம்” திருமுறை பாராயணத்திபோது சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்திலன்று நடைபெற்ற சிறுத்தொண்ட நாயனார் குருபூசையை முன்னிட்டு திரு தெட்சணாமூர்த்தி சிவராமலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறுத்தொண்டர் வரலாறும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றையும் இரண்டு பகுதிகளாக இங்கே தரப்பட்டுள்ளது.

 

பகுதி - 1                 சிறுத்தொண்டநாயனார்  வரலாறு

ஓம் நமசிவாய


சோழவளநாட்டில்
திருச்செங்காட்டங்குடி என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு செங்காட்டங்குடி எனப் பெயர் வருவதற்கு ஒரு புராணக்கதை உண்டு. விநாயகப்பெருமான் கஜமுகா அசுரனை வதம் செய்தபோது சிந்திய குருதியின் சிவப்பு நிறம் காரணமாக அந்த மண் செம்மண்ணாக மாறியது. இதனால் அந்த வனப்பகுதி செங்காட்டங்குடி எனப் பெயர் பெறலாயிற்று பின்பு அது மருவி திருச்செங்காட்டங்குடி என்ற பெயர் வந்தது. இப் பகுதியில் விநாயகர் சிவபெருமானை வழிபட்ட கணபதீச்சுவரம் என்ற ஆலயமும் அமைந்துள்ளது.

இவ் ஊரிலே மாமாத்தியர் குலத்திலே *பரம்சோதியார்* (சிறுத்தொண்டர்) அவதரிக்கிறார். மாமாத்தியர் குலம் என்பது பூநூல் போட்டு ஆயுர்வேத வைத்தியம் செய்யும் இனம் ஆகும். இதனால் இவர் இளமையிலேயே ஆயுர்வேதம், வடமொழி போன்றன பயின்றதுடன் வாள்வித்தை, குதிரையேற்றம் போன்ற போர்க்கலைகளையும், பிற போர்த்தந்திரங்களையும் பயின்றிருந்தார். இக்காலத்தில் காஞ்சிபுரம் பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது. இதனை *நரசிம்மபல்லவ * மன்னன் ஆட்சிசெய்து வந்தார். இம்மன்னர் பரம்சோதியாரின் அறிவு, ஆற்றல், திறமைகளைப் பற்றி கேள்வியுற்றமையால் அவரை அழைத்து பல்லவநாட்டுப் போர்ப்படைகளை தலைமையேற்று வழிநடத்தும்படி வினவினார். அதனால் அவருக்கு சகல வசதிகளும் செய்து சேனாதிபதியாக (தளபதி) நியமனம் செய்தார். அதாவது சேக்கிழார் பெருமானுக்கு, அநபாயசோழன் மன்னனும், மாணிக்கவாசகப் பெருமானுக்கு, அரிமர்த்தனபாண்டிய மன்னனும் செய்தது போன்று.

இந்நிலையில் நரசிம்மபல்லவன் சிறுவனாக இருந்த போது அவர் தந்தை மகேந்திர பல்லவ மன்னன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வடபகுதியான பம்பாய்க்கு அருகில் உள்ள பெல்ஹம் என்ற பகுதியின் தலைநகராக வாதாபி நகரம் விளங்கியது. இப் பகுதியை சாளுக்கிய இனத்தின் தலைவராக இரண்டாம் புளகேசி மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனது இயற் பெயர் இறைஅம்மான். இவனுக்கு இரு பட்டப்பெயர்கள் உண்டு.

 

 1) புளகேசி, இது மருவி புலிக்கேசி ஆனது.

2) சத்தியாச்சிரே.

புளகேசி என்றால் மயிர்க்கூச்செறியும் தன்மை. அதாவது இவன் போர்

செய்யும் போது அவனது கேசங்கள் மயிர்க்கூச்செறிந்து ஆனந்தமாய் இருப்பான். ஆனால் அவன் முன்பு நிற்கும் எதிரி மயிர்கூச்செறிந்து பயந்து போய் இருப்பான். எனவே இவ் புளகேசி மகேந்திரவர்ம பல்லவ மன்னன் காலத்தில் பல்லவ நாடு மீது படை எடுத்து அவரைத் தோற்கடித்து காஞ்சிபுரத்தில் உள்ள செல்வங்களையும் பொருட்களையும் சூறையாடிச் சென்றான். இதன்போது சிறுவனாக இருந்த நரசிம்மபல்லவன் தனது தந்தையை தோற்கடித்ததனால் கடும் கோபமுற்று இருந்தார். பின்பு தனது ஆட்சிக் காலத்தில் பரம்சோதியாரை தளபதியாக நியமித்த பின் வாதாபிநகரைக் கைப்பற்றி புளகேசியை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணி, வாதாபிநகர் மீது படை எடுக்கும்படி பரம்சோதியாருக்கு முழுமையான அதிகாரத்துடன் அனுமதி அளித்தார். இதன் பின் பரம்சோதியார், காலாற்படை, குதிரைப்படை, யானைப்படை, போன்றவற்றுடன் வாதாபிநகர் மீது படையெடுத்துச் சென்று அப் போரில் அவர் புளகேசி மன்னனையும், அவனது போர் வீரர்களையும் கொன்று, போரில் வென்று பல வீரர்களை சிறைப்பிடித்தும், அங்குள்ள செல்வங்களையும், பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு வந்து நரசிம்மபல்லவ மன்னரிடம் சமர்ப்பித்தார். போரின் போது வாதாபிக்கோட்டையின் மேல்மாடத்தில் அவன் வழிபட்ட ஒரு விநாயகர் சிலையைக் கண்டதும் பெருவிருப்புடன் அதனையும் எடுத்துவந்து மன்னரிடம் கொடுத்தார். பரம்சோதியாரின் போர் ஆற்றலையும், போர் வெற்றியையும் கண்டு வியப்படைந்து பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார். மேலும் ஆச்சரியமடைந்த மன்னர் பரம்சோதியார் எவ்வாறு பல உள்ளூர்ப்போர்களிலும், வாதாபிநகரையும் கைப்பற்றி எவராலும் இலகுவில் வெல்ல முடியாத புளகேசியையும், அவன் படைகளையும் கொன்று வெற்றி பெற்றார் என மற்றைய அமைச்சர்களை வியந்து கேட்டார். உடனே சக அமைச்சர்கள் அவரின் மறுபக்கத்தைக் கூறினார்கள். அவர் *மிகச் சிறந்த சிவபக்தி உடையவர். சிவனடியார்களுக்கு உணவளித்து அதன் பின்பு தான் உணவு உண்பதை ஒரு விரதமாகக் கடைப்பிடிப்பவர். இதனால் அவர் செய்யும் பணி எல்லாம் சிவப்பணி என்று கருதக்கூடியவர். எனவே அவரிடம் சிவபக்தியினால் வாய்ந்த வலிமை இருப்பதனால் அவருக்கு எதிரி என்று எவரும் இல்லை. அவருக்கு சமானமாகவும் எவரும் இல்லை * என்றார்கள் இதனை சேக்கிழார் பெருமான் *மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால் *   என அருளுகின்றார்.

 

நரசிம்மபல்லவ மன்னனும் ஒரு சிவபக்தன். எனவே அவன் தான் ஏதோ தெய்வக்குற்றம் செய்துவிட்டேன். இவர் ஒரு சிவனடியார் என்று தெரியாது அவருக்கு கட்டளையிட்டு போர்க்குற்றத்தில் ஈடுபடுத்திவிட்டேன் என எண்ணி அஞ்சி, நடுங்கி அவரைப் படைத்தளபதி பதவியில் இருந்து விடுவித்தால் மேலும் அவர் சிவநெறியில் சிறந்த தொண்டு செய்து தாம் உய்வதுடன் மேலும் பல உயிர்களையும் உய்யச்செய்வார் என எண்ணி, மன்னன் அவரைப் பணிந்து வேண்டி தளபதி பதவியில் இருந்து விடுவித்து பொன்னும், பொருளும் கொடுத்து இராசமரியாதையுடன் அவரின் சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடிக்கு அனுப்பி வைத்தார். அவ்வேளை மன்னர் அனுமதியுடன் வாதாபியில் இருந்து எடுத்து வந்த விநாயகர் சிலையையும் எடுத்துச்சென்று செங்காட்டங்குடி கணபதீச்சுவரம் ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தார்.

திருச்செங்காட்டங்குடிக்கு வந்தபின்பு பரம்சோதியார் திருமணம் செய்கிறார். அவர் இல்லறவாழ்வின் இன்பநுகர்வுக்காக திருமணம் செய்யவில்லை. இதனை சேக்கிழார் பெருமான் கூறுகிறார் *வேதகாரணர் அடியார் வேண்டிய மெய்ப்பணி செய்யத்* அதாவது அடியார்களுக்கு சிவப்பணி செய்வதற்காக திருமணம் செய்துள்ளார். அதற்காக சேக்கிழார் வாக்கு *தீதில் குடிப்பிறந்த திருவெண்காட்டு நங்கையெனும் * பெண்ணை மணம்செய்கின்றார். அப்பெண் அன்பும், அறமும், ஒழுக்கமும், சிவபக்தியும்

 உடைய மனையாள் ஆக வாழ்ந்து வரும் வேளையில் ஒரு புதல்வன் அவதரிக்கின்றார். இதனை சேக்கிழார் கூறுகிறார் *பேராளர் அவர் தமக்குப்     பெருகுதிரு மனையறத்தின் வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கைபால் சீராளதேவர் எனும் திருமைந்தர் அவதாரித்தார் * அதாவது ஒரு மரத்தின் வேர் அதனை தாங்கிப்பிடித்து  உயிர்ப்புடனும், துணையாகவும், உறுதியாகவும் வைத்திருப்பது போல், இவ் இல்லறத்தின் வேராக இருக்கும் திருவெண்காட்டுநங்கைபால் சீராளதேவர் என்ற புதல்வன் அவதாரம் செய்தார். அந்தக் குழந்தையும் அன்பு, அறிவு, பக்தி, ஒழுக்கம் உள்ள பிள்ளையாக வளர்ந்து வருகிறார். இவர்களுடன் சிவபக்தி, பண்பு, ஒழுக்கம், அறிவுள்ள பணிப்பெண் சந்தணமங்கை. இவர்கள் சிவனடியார்களுக்கு உணவளிக்கும் சிவப்பணிக்கும், மற்றய வேலைகளுக்கும் துணையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிவபெருமான் தனது திருவிளையாடல் மூலம் இவரின் சிவபக்தியை உலகம் அறியவேண்டுமென திருவருள்புரிய எண்ணுகிறார். ஒருநாள் சிறுத்தொண்டருக்கு (பரம்சோதியார்) ஒரு சிவனடியாரும் உணவளிக்க கிடைக்கவில்லை. எனவே அவர் அருகிலுள்ள ஆலயவீதியில் யாரும் சிவனடியார்கள் இருப்பார்கள் போய் அழைத்து வருகிறேன் என மனைவியிடம் கூறிவிட்டு செல்கிறார். அப்போது காபாலிகபைரவர் வேடம் பூண்டு வடநாட்டு சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வருகிறார். அப்போது சிவனடியார் தனது தரிசனத்தை முதல் காட்சியாக பணிப்பெண் சந்தணமங்கைக்கு கொடுத்துக்கொண்டு கேட்கிறார் இதுதானா சிவனடியார்களுக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் வீடு என. அதற்கு அப்பெண் முகமலர்ச்சியுடன் வரவேற்று வீட்டின் உள்ளே வரும்படி அழைக்கிறார். அதற்கு நாம் ஆண்கள் இல்லாத வீட்டுக்குள் வரமாட்டோம் எனக் கூற உடனே பன்னிப்பெண் உள்ளே சென்று திருவெண்காட்டுநங்கைக்கு கூற அவாவும் விரைந்து வந்து சொல்கிறார். அவர் சிவனடியார்களை அழைத்து வர வெளியே சென்றுவிட்டார், உள்ளே வாருங்கள் என அழைக்கிறார். அதற்கு மீண்டும் சிவனடியார் நாம் ஆண்கள் இல்லாத போது உள்ளே வரமாட்டோம். ஆலயத்தின் ஆத்திமரத்தின் கீழ் இருப்போம் எனக் கூறிவிட்டுச் செல்கின்றார். பின்பு சிறுத்தொண்டர் ஒரு சிவனடியாரும் கிடைக்கவில்லை என்று மனக்கவலையுடன் வீடு திரும்பி வரும் நிலையில் மனைவி ஆவலுடன் நடந்தவற்றைக் கூறி ஆலயமரத்தடியில் இருப்பார் போய் கூட்டிவாருங்கள் எனக்கூறுகிறார். உடனே அவர் பெரு மகிழ்வுடன் ஆலயம் நோக்கி விரைந் து செல்கிறார். அங்கு சிவனடியாரின்

*ஒளிமயமான தோற்றத்தை* பார்த்ததும் வியந்துபோய் விருப்பமுடையவராய் மகிழ்ச்சியுடன் அவரை வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார். அதற்கு சிவனடியார் நீயோ *பெரிய சிறுத்தொண்டன் * எனக்கேட்க சிறுத்தொண்டர் அடக்கத்துடன் கூறுகிறார் *விபூதி இட்டுக்கொள்ளும் சிவனடியார்களுக்கு முன்பு நிற்க தகுதியில்லாத ஒரு எளியவன்* எனக்கூறுகிறார். பின் சிவனடியார் கூறுகிறார் நாம் நரமாமிசம் சாப்பிடுப்பவன். அதுவும் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் சாப்பிடுவோம். இன்றுதான் அந்தநாள் ஆகும். ஆனால் உன்னால் சாப்பாடு போடமுடியாது எனச்சொல்கிறார். அதற்கு சிறுத்தொண்டர் இல்லை சுவாமி நீங்கள் கேட்கும் எப்படிப்பட்ட, எந்தவகை உணவாயினும் என்னால் போடமுடியும் எனச்சொல்கிறார். அதற்கு சிவனடியார் பல நிபந்தனைகளை விதிக்கிறார்.

1) நாம் நரப்பசு தான் சாப்பிடுவோம்.

2) அதுவும் வயது ஐந்து பராயம் இருக்கவேண்டும்

3) உடலில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது

4) அக் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக இருக்க வேண்டும்

5) தாய்பிடிக்க தந்தை அரிய வேண்டும்

6)அவ் வேளை பிள்ளை கதறக்கூடா து தாய்,தந்தை அழக்கூடாது.

எனக் கூறி இவ் நிபந்தனைகளுக்கு அமைய குற்றம் இல்லாது உணவாக்கும், கறியைத்தான் நாம் உண்போம் எனச் சொல்கிறார். இதனைக் கேட்டதும் சிறுத்தொண்டர் இக் கறி சமைக்க நாம் என்ன செய்வது, எங்கே போவது, என்று எதைப்பற்றியும் யோசியாது ஆறு மாதத்திற்கு ஒரு தடவை சாப்பிடும் ஒரு பெரிய அடியார் கிடைத்துவிட்டார் என்ற பெருமகிழ்ச்சியுடன் தனது வீடு நோக்கி விரைந்து வந்து மனைவியிடம் சிவனடியார் கூறியவற்றை கூறுகின்றர். அதற்கு மனைவி மலர்ந்த முகத்துடன் கூறுகிறார் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை உணவு உண்ணும் இவ் பெரும் அடியாருக்கு *உணவு அளிக்க எம்மைக் காப்பதற்காக எமக்கு இருக்கும் மகனப் போய் பள்ளியில் கூட்டிவாருங்கள்* என்றார் (சேக்கிழார் வாக்கு) *நம்மைக் காக்க வருமணியைச் சென்று பள்ளியினிற் கொண்டு வாரும் என்றார் திருவனை யார்* பின்பு பிள்ளையை பள்ளியில் இருந்து கூட்டி வந்ததும் நீராட்டி தலைதுவைத்து வாசனைத்திரவியங்கள் பூசி முத்தம்மிட்டு அசுத்தமாக்காமல் தாய்பிடிக்க தந்தை தலையையும் மற்றைய உடல்பாகங்களையும் அரிகின்றார். பின்பு அரிந்த தலை, கறி சமைக்க உதவாது என எண்ணி மறைத்து வைக்கும்படி பணிப்பெண்ணிடம் கொடுத்தார்கள். ஆனால் ஞானம் உள்ள பெண் என்பதால் பிள்ளைக்கறி கேட்கும் சிவனடியார் ஏன் தலைக்கறி சாப்பிடமாட்டார் என எண்ணி அவர்களுக்கு தெரியாது தலையையும் கறியாக்கி வைத்தார். மற்றய உடல்பாகங்களும் குற்றமில்லாது சமைக்கப்பட்டபின் சிறுத்தொண்டர் முன்பு இருந்த நிலையிலும் பார்க்க பெருமகிழ்ச்சியுடன் மீண்டும் ஆத்திமரத்தடிக்குப் போய் சிவனடியாரை வணங்கி வீட்டுக்கு அழைத்து வருகிறார். பின் இருவரும் அவரைவணங்கி இருக்கையில் இருத்தி பாதம் கழுவி, மலர்களால் பூசித்து, பணிவிடை செய்தபின் அவரை அமர்த்தி இலை போட்டு உணவைப் பகுதி பகுதியாக வைத்துப் பரிமாறுகிறார்கள் அப்போது அவர் எங்கே தலைக்கறி அதனையும் நாம் உண்போம், நீ குற்றம் செய்துவிட்டாய் என சினம்கொள்ள உடனே சந்தனமங்கை தான் தலையும் கறிசமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்து வந்து கொடுக்க பின் மகிழ்வோடு அத்தனையும் பரிமாறினார்கள். பின் சிவனடியார் கூறுகிறார் நாம் தனியே உணவுண்ண மாட்டோம் என்னோடு அமர்ந்து உண்பதற்கு மேலும் ஒரு சிவனடியார் வேண்டுமென்றார். இதற்கு சேக்கிழார் பாடல் *யானுந் திருநீறு சகத்தி லிடுவார் தமைக்கண்டே யிடுவேனென்று தாழ்ந்திறைஞ்ச* அதாவது சிறுத்தொண்டர் பணிவுடன் கூறுகிறார். மற்றவர்கள் திருநீறு இடுவதனைப் பார்த்து நானும் இடுவேன் என்றார். அப்போ சரி உனக்கும் ஒரு இலை போட்டு இரு என்றார். பின் சிறுத்தொண்டர் இலையில் உணவுகள் வைத்ததும் சிவனடியார் உணவு உண்பதற்கு தாமதமாகுமென எண்ணி, தான் முதலில் சாப்பிட்டால் தான் அவரும் சாப்பிடுவாரென எண்ணி தான் முதல் சாப்பிட முனைந்தார். இதன்போது சிவனடியார் வெகுண்டு ஆறுமாதத்திற்கு ஒரு தடவை சாப்பிடும் நான் இன்னும் பசியோடு இருக்கிறேன், தினமும் சோறு சாப்பிடும் நீ முதலில் சாப்பிடமுனைகிறாய், உனக்கு அவ்வளவு பசியா, என்று கூறி எங்கே உனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனையும் கூப்பிடு, சேர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்ல, அதற்கு சிறுத்தொண்டர் அவன் இப்போது அவன் உதவான் என்றார். மீண்டும் சிவனடியார் நாம் இங்கு உணவு உண்ண வேண்டுமென்றால் அவன் வந்தால் தான் சாப்பிடுவோம். எனவே போய் அவனை*நாடி அழையும்*(சேக்கிழார் வாக்கு) என்றார். பின் வெளியே வீட்டு வாசலில் நின்று கொண்டு கணவன் மனைவி இருவருமாக கூப்பிடுகிறார்கள். இங்கு சிறுத்தொண்டர்-மைந்தா வா எனவும், தையலார்-சீராளா வா, எனவும் அழைக்கிறார்கள். இந்நிலையில் ஈசன் அருளால் அவன் பள்ளியில் இருந்து வரும் சிறுவன் போல ஓடிவருகிறான். இந்நிலையில் கறிசமைத்த பிள்ளை எப்படி வந்தது என்ற எண்ணம் எதுவும் இல்லாது, சிவனடியார் உணவுண்ண தாமதமாகும் என்ற பரிதவிப்பில் உள்ளே ஓடிவருகிறார்கள். அப்போது அங்கு சிவனடியார் இல்லாது இருப்பதைக் கண்டு, எங்கே சிவனடியார் என பணிப்பெண்ணைக் கேட்கிறார்கள். அவரும் தெரியாது எனச் சொல்ல சிவனடியார் உணவு பரிமாறத் தாமதமானதால் கோவித்துக்கொண்டு போய் விட்டாரோ எனப் பயந்து, நடுங்கி தவித்த நிலையில் அங்கு சமைத்து வைத்திருந்த உணவுகளும் இல்லாது இருப்பதைக் கண்டு மேலும் தவித்த நிலையில் நான்கு பேருமாக வெளியே ஓடி வந்து பார்க்கிறார்கள். இந்நிலையில் *சிவபெருமான் ஒளிவீசும் பிறைச்சந்திரனை சூடிய நிலையில் ரிஷபவாகனத்தின் மேல் அம்பாளுடனும், சரவணக்குமரனுடனும், முனிவர்களுடனும், பூதகணங்களுடனும் பரவெளியில் கருணைநோக்குடன்* சிறுத்தொண்டநாயனார், திருவெண்காட்டுநங்கை, சீராளாதேவர் சந்தணமங்கை, நால்வர்க்கும் அருள் காட்சி கொடுத்து முத்திப்பேறு அளித்தார்.

 *இவ் அருள் காட்சி சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் அன்று நடைபெறுகிறது .

*இன்றும் திருச்செங்காட்டங்குடியில் பிள்ளைக்கறி சமைக்கும் விழா நடைபெறுகிறது.

*திருச்செங்காட்டங்குடி கணபதீச்சுவரம் ஆலயத்தில் இன்றும், அவ் ஆத்திமரமும், வாதாபியில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலையும் இருக்கின்றன.

*சிறுத்தொண்டநாயனார் வாழ்ந்த வீடும் ஆலயத்துக்கு அருகில் உள்ளது.

 ஓம் நமசிவாய.

 

 பகுதி – 2 தொடரும்

 

No comments: