பச்சை விளக்கு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தவர்


இராம அரங்கண்ணல். அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட இவர் ஒரு திரைப்பட வசனகர்த்தா கூட. ஆனாலும் ஆரம்பத்தில் இவர் வசனம் எழுதிய படங்கள் எல்லாம் குறித்த காலத்தில் வெளிவராமல் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்து திரைக்கு வந்து தோல்வியை கண்டன. இதனால் இவரை ராசியில்லாத ரைட்டர் என்று பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். ஆனால் தனது தொடர் முயற்சிக்கு பிறகு அரங்கண்ணல் திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். ஏவி எம் பட நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பச்சை விளக்கு என்ற படத்தை தயாரித்தார். இந்த பச்சை விளக்கு அரங்கண்ணல் திரை வாழ்வில் பச்சை விளக்காக மாறியது.


சிறு வயதில் அன்னையை இழக்கும் சாரதி தன்னையும் தன் தம்பி

மணியையும் வளர்த்து ஆளாக்கிய அன்னம்மாளின் மகள் சுமதியை டாக்டராக உருவாக்குவதாக உறுதி எடுத்துக் கொள்கிறான். இதன் பொருட்டு தன்னுடைய தாம்பத்திய வாழ்வையும் தவிர்க்கிறான். ரயில் சாரதியாக பணிபுரிந்து அதில் கிடைக்கும் வருமானத்தை சுமதியின் கல்விக்காக செலவிடுகிறான் . அதற்கு அவன் மனைவி பார்வதியும் உடன்படுகிறாள். படிப்பில் சிறந்து விளங்கும் சுமதிக்கு எதிர்பாராத விதமாக பார்வதியின் தம்பி பசுபதியுடன் திருமணம் நடக்கிறது. பட்டிக்காட்டானான பசுபதி அவளின் கல்விக்கு தடை சொல்லாவண்ணம் அவள் தொடர்ந்து படிக்க அனுமதி கொடுக்கிறான். இதனால் சுமதி டாக்டராகிறாள். ஆனால் சாரதியின் சித்தப்பா ரஜாபாதர் அவனின் குடும்பத்தை பல வழிகளிலும் துன்பத்துக்கு உள்ளாக்குகிறான். இறுதியில் சாரதியின் தியாகம் உணரப்பட்டதா என்பதே படமாகும்.


படத்தில் சாரதியாக வரும் சிவாஜி படம் முழுதும் உணர்ச்சிகரமாகவே நடிக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் எல்லையை தாண்டாமல் பாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். அவருக்கு இணையாக வரும் சௌகார் ஜானகி பாந்தமாக நடிக்கிறார். சாதுவான பத்திரமாக இருந்த போதும் படத்தின் இறுதியில் தியாகத்தின் மேருவாக சௌகாரின் பாத்திரம் அமைந்தது. சுமதியாக வரும் விஜயகுமாரி கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்ல. அவருக்கு ஜோடி எஸ் எஸ் ராஜேந்திரன் . அவரின் வேடம் மழுங்கி விடாமல் டைரக்டர் பார்த்துக் கொண்டார். நாகேஷ் ஆங்கிலோ இந்தியனாக வந்து சிரிக்க வைக்கிறார். எஸ் வி ரங்காராவ், வி நாகையா, இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டு நடிப்பது போல் நடிக்கிறார்கள். இளம் ஜோடியாக ஏவி எம் ராஜன் புஷ்பலதா தோன்றுகிறார்கள். இவர்களுடன் ஸ்ரீராம், கே கே சௌந்தர், எஸ் ஆர் ஜானகி, நம்பிராஜன்,ஜெமினி பாலு ஆகியோரும் நடித்தனர்.

1964ம் ஆண்டு தமிழ் திரையுலகை நடிகவேள் எம் ஆர் ராதா

மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் போல் தெரிகிறது. இந்தப் படத்திலும் அவர் தான் வில்லன். நடைமுறை வாழ்விலும் இவரை போல் பலர் உள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் அவரின் பாத்திரம் அமைக்கப் பட்டு அவரும் அதனை அனாயசியமாக செய்திருந்தார். சிகரெட்டும் நெருப்பும் மாதிரி நாம் எங்களை பிரிக்க ஏலாது , என் கிட்டே கவனமா இருந்துகோ ராகு காலத்தில் பிறந்தவன் நான் , அவன் பணக்கார வீட்டு பயல் எப்படி வேணுமானாலும் நடந்து கொள்வான் எனக்கு வேண்டியது பணம் எவன் எப்படி கெட்டு போனால் எனக்கு என்ன என்று அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை அதிர வைத்தன.


படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர். நல்ல வேளை இசை பெரிதா, பாடல் பெரிதா என்ற விவகாரத்தில் இறங்காமல் வாங்கிய பணத்துக்கு கொடுத்த வேலையை செய்ததால் அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்தன. ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது, கேள்வி பிறந்தது அன்று, வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன், அவள் மெல்ல சிரித்தாள், கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா என்று சுசிலா, ஈஸ்வரி டீ எம் எஸ் குரலில் படல்கள் இன்றும் ரசிகர்கள் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

படத்தை ஜி விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்தார். பால்துரைசிங்கம்

படத் தொகுப்பை கவனித்தார். படத்தின் வசனங்களை இராம அரங்கண்ணல், இறைமுடிமணி இருவரும் எழுதினார்கள் . வசனங்கள் கருத்துடன் அமைந்தன.

படத்தை இயக்கியவர் ஏ பீம்சிங். குடும்ப சென்டிமென்டல், உணர்ச்சிகரமான காட்சிகள் , நடிப்பு, பாடல்கள் என்று எல்லாவற்றையும் சம அளவில் கலந்து இயக்கும் பீம்சிங் இப் படத்திலும் அதனை முறையாக செய்து பச்சை விளக்கை ரசிகர்கள் ஏற்கும் படி செய்தார். படமும் வெற்றி பெற்றது.

No comments: