மின்னஞ்சல்
யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து
கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் அரிதாகிவிட்டது.
தொலைபேசி, கைப்பேசி,
ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்அப் ,
முகநூல், மெய்நிகர் முதலான
சாதனங்கள் விஞ்ஞானம் எமக்களித்த வரப்பிரசாதமாகியிருந்தபோதிலும்
, அந்நாட்களில் பேனையால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்பாடலை
ஆரோக்கியமாக வளர்த்து,
மனித நெஞ்சங்களிடையே உணர்வுபூர்வமான நெருக்கத்தை வழங்கின.
உலகம்
கிராமமாகச் சுருங்கிவரும் அதே சமயம், மனித மனங்களும் இந்த
அவசர யுகத்தில் சுருங்கி வருகின்றன.
இலக்கியங்கள்
மனிதர்களை செம்மைப்படுத்தி
மேன்மையுறச்செய்துள்ளன. அவ்வாறே
கடித இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே அறிவுபூர்வமாகவும்
உணர்வு
பூர்வமாகவும் நெருக்கத்தையும் தேடலையும் வளர்த்து வந்துள்ளன.
இலங்கையில்
மலையகம் தலாத்துஓயாவில் வாழ்ந்து மறைந்த எமது இனிய
இலக்கிய நண்பர் கே.கணேஷ் அவர்கள் சுவாமி விபுலானந்தர், சிங்கள
இலக்கிய மேதை மார்டின் விக்கிரமசிங்கா ஆகியோருடன் இணைந்து
ஒருகாலத்தில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை
ஸ்தாபித்தவர். பின்னர் இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தை 1950 களில் உருவாக்கியவர்.
அப்பொழுது நான்
இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.
கே.கணேஷ் ஈழத்து
தமிழ் இலக்கிய முன்னோடி, படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர். எனக்கும்
அவருக்கும் இடையே மலர்ந்த உறவு தந்தை -
மகனுக்குரிய நேசத்தை உருவாக்கியிருந்தது.
இதுபற்றி விரிவாக, முன்னர்
எழுதிய காலமும் கணங்களும் என்ற தொடர் பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல்
வந்தபின்னர், அவர் எனக்கு
ஏராளமான கடிதங்கள்
எழுதியிருக்கிறார். மாதம் ஒரு கடிதமாவது அவரிடமிருந்து
வந்துவிடும். நானும் உடனுக்குடன் பதில் எழுதுவேன். இடைக்கிடை
தொலைபேசியிலும் பேசிக்கொள்வோம்.
அவர் மறையும் வரையில் எனக்கு கடிதங்கள்
எழுதிக்கொண்டிருந்தார். அக் கடிதங்களை தனி நூலாகவும்
தொகுக்கமுடியும்.
கே. கணேஷ் பல நூல்களின்
ஆசிரியர். பல வெளிநாட்டு இலக்கியங்களை
தமிழுக்குத்தந்தவர். கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின்
இயல்விருது பெற்றவர்.
அடுத்த ஆண்டு
பெப்ரவரி மாதம் வந்தால் நான்
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு
புலம்பெயர்ந்து 38 வருடங்களாகிவிடும். மூன்று
தசாப்த காலத்துள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை
முன்பு எழுதியிருக்கின்றேன்.
ஆனால்,
கணினியுகம் வந்தபின்னர் மின்னல் வேகத்தில்
கடிதங்களை
பதிவுசெய்து அனுப்பிக்கொண்டிருக்கும் அவசர
வாழ்க்கைக்கு பலியாகியவர்களில் நானும் ஒருவன்.
தற்போதைக்கு
இந்த மின்னஞ்சலுடன் நின்றுகொள்வதுதான் மனதுக்கு
ஆறுதலாக இருக்கிறது. என்னிடம் முகநூல்
இல்லையென்பதால், எனது முகமும் மறந்துபோய்விடும் என்று ஒரு
நண்பர் சொன்னார்.
முகநூல்களினால் தமது முகவரிகளைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில்
எனது மனதில்
ஆழமாகப்பதிந்த மூத்த இலக்கிய
முகங்களை அடிக்கடி நினைத்துப் பார்க்கின்றேன்.
ஏற்கனவே
எனக்கு வந்த பல இலக்கிய ஆளுமைகளின் கடிதங்களை பொக்கிஷம்
போன்று பாதுகாத்து வருகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர் கடிதங்கள் என்ற
நூலையும் வெளியிட்டேன். அதில் சுமார் 80 பேரின்
இலக்கிய நயம் மிக்க கடிதங்கள் பதிவாகியுள்ளன. கே.
கணேஷ் அவர்களின் கடிதமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
அன்னாரின் நூற்றாண்டு 2020 ஆம் ஆண்டே
தொடங்கிவிட்டது.
2005 ஆம் ஆண்டு நான்
வெளியிட்ட எழுத்தாளர் ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலை அமரர் கே. கணேஷ்
அவர்களுக்கே சமர்ப்பித்தேன்.
அண்மையில்
லண்டனிலிருந்து எனது இலக்கிய நண்பர் திரு.
பத்மநாப ஐயர் தொடர்புகொண்டு, கே. கணேஷ்
அவர்களின் புதல்வி திருமதி ஜெயந்தி கணேஷ்
என்னைத் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்ற தகவலைத் தெரிவித்தார்.
அப்போது நான்
சிட்டினியில் மறைந்துவிட்ட கவிஞர் அம்பியின் இறுதி நிகழ்வுக்காக மெல்பனிலிருந்து
பயணித்துக்கொண்டிருந்தேன். சில
நிமிடங்களில் கொழும்பிலிருந்து ஜெயந்தி
கணேஷ் தொடர்பு கொண்டார்.
இவரை முன்னர்
இலங்கையில் சந்தித்திருக்கின்றேன்.
“ அப்பாவின்
நூற்றாண்டு கடந்துவிட்டது. ஒரு சிறப்பு மலர் வெளியிடவேண்டும். அப்பாவைத் தெரிந்த இலக்கிய
அன்பர்களிடமிருக்கும் அப்பாவின் ஆக்கங்கள்
பெறுவதற்கு உதவ முடியுமா..? “
எனக்கேட்டார்.
சிட்னியால்
திரும்பியதும், அதற்கான முயற்சிகளில்
ஈடுபடுவேன் என்று அவருக்கு
வாக்குறுதி அளித்தவாறு, ஊடகங்களுக்கு
தகவல் அனுப்பினேன்.
( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன்
இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும்
பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும்
ஆக்கங்கள் இந்த நூற்றாண்டு காலப்பகுதியில் வெளியாகவேண்டும்.
கே. கணேஷ்அவர்களின் படைப்புகளின் ஆவண மலரை வெளியிடும்
பணியில், அன்னாரின் மைத்துனரும், முன்னாள் தமிழ் மொழி அமுலாக்கல், இந்து கலாசார அமைச்சருமான திரு. பி. தேவராஜ், மற்றும் மலையக இலக்கியவாதியும்
பத்திரிகையாளருமான திரு. கே. பொன்னுத்துரை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
---0--
No comments:
Post a Comment