உலகச் செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே வடக்கு, தெற்கு காசாவில் உக்கிர மோதல்

காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல்

வடக்கு காசாவில் முன்னேறிவரும் இஸ்ரேலிய படைக்கு கடும் எதிர்ப்பு

காசாவின் ரபாவுடன் ஜபலியா முகாமிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

ரபாவின் மேலும் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு


இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

May 16, 2024 10:14 am 

இஸ்ரேலின் ரபா தக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்கா ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்களில் டாங்கி குண்டுகள், மோட்டார்கள் மற்றும் மூலோபாய கவச வாகனங்கள் அடங்குவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அமெரிக்க பாராளுமன்றம் உறுதி செய்ததாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதற்கு அமெரிக்க பாராளுமன்றம் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும். காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் படையெடுத்தால் அதற்கான ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக 900 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக பைடன் நிர்வாகம் உறுதி செய்தது.

இஸ்ரேலுக்கு வழங்கிய சில அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை (10) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.   நன்றி தினகரன் 

 இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே வடக்கு, தெற்கு காசாவில் உக்கிர மோதல்

May 16, 2024 8:11 am 

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கை பற்றிய அச்சத்துக்கு மத்தியில் தெற்கு காசா நகரான ரபாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில் பலஸ்தீனர்கள் நேற்று 1948 இன் ‘நக்பா’ அல்லது ‘பேரழிவு’ தினத்தை அனுஷ்டித்தனர்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சுமார் 760,000 பலஸ்தீனர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வை நினைகூறும் வகையிலேயே நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெரும்பாலான மக்கள் காசா மற்றும் மேற்குக் கரையில் அடைக்கலம் பெற்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசாவின் பல இடங்களிலும் உக்கிரம் மோதல் நீடித்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டு வரும் சூழலிலேயே நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த மே 6ஆம் திகதி தொடக்கம் ரபாவில் இருந்து சுமார் 450,000 பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் இருந்து சுமார் 100,000 பேர் வெளியேறி இருப்பதாக ஐ.நா. நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி 2.4 மில்லியன் காசா மக்கள் தொகையில் சுமார் கால் பங்கினர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரஸ், முற்றுகை பகுதியில் உள்ள மக்களுக்கு மேலும் உதவிகள் செல்லும் வகையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

‘காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன். ரபா கடவை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், காசா முழுவதும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் நேற்று முன்தினம் (14) எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போர் மற்றும் முற்றுகை காரணமாக காசாவில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு உதவிகள் செல்வதில் இருக்கும் கட்டுப்பாடு வடக்கு காசாவில் பஞ்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா தொடர்ந்து கூறி வருகிறது.

இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கு ரபாவை நோக்கி முன்னேறியது தொடக்கம் உதவிகள் வரும் எகிப்துடனான காசா எல்லை மூடப்பட்டிருப்பதோடு மற்றொரு எல்லைக் கடவையான கெரெம் ஷலோமும் போதிய பாதுகாப்பு இன்றி ஏற்பாட்டியல் ரீதியில் அணுகுவதற்கு சாத்தியமான சூழல் இல்லாதிருப்பதாக கடந்த திங்களன்று வெளியான ஐ.நா. அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. காசா மக்கள் கடந்த மே 9 தொடக்கம் எந்த உதவியையும் பெறவில்லை என்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.

உக்கிர மோதல்

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் சிறு பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நேற்று உக்கிரமைந்திருந்தது. வடக்கு மற்றும் தெற்கு காசாவிலேயே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

வடக்கு காசாவில் போராளிகள் பலம் பெற்றிருக்கு ஜபலியா நகரின் சனநெரிசல் மிக்க சுற்றுப்புறங்கள் மற்றும் குறுகிய சந்துகளை இஸ்ரேலிய டாங்கிகள் அடைந்திருப்பதோடு அங்கு கடும் மோதல் வெடித்திருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள வீடுகளை தகர்த்து வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1948இல் இஸ்ரேலின் உருவாக்கத்தை அடுத்து அமைக்கப்பட்ட எட்டு அகதி முகாம்களில் மிகப் பெரியதான கிழக்கு ஜபலியாவில் இடம்பெற்ற கடும் மோதலின்போது இஸ்ரேலிய காலாட்படை வீரர்களை கொன்றதாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

‘ஆக்கிரமிப்பாளர்கள் முகாமை அழிக்க முயன்றனர். குடியிருப்பாளர்கள் இருக்கும்போதே அவர்கள் வீடுகள் மீது குண்டுகளை வீசுகின்றனர். பல குடும்பங்களும் தமது வீடுகளுக்குள்ளேயே சிக்கி உள்ளனர்’ என்று அந்த முகாமின் குடியிருப்பாளர் ஒருவரான அபூ ஜெஹால் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதில் போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வருவதாகவும் அபூ ஜெஹால் தெரிவித்துள்ளார்.

‘எமது போராளிகள் வேதனை மிக்க பாடத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்கள். நாம் வெடிப்புச் சத்தங்களை கேட்கிறோம். அவர்களிடம் விமானங்கள் மற்றும் டாங்கிகள் இருப்பது எமக்குத் தெரியும், ஆனால் எமது போராளிகள் புரட்சியின் தொட்டில் என அறியப்படும் ஜபலியாவை காத்து வருகிறார்கள்’ என்று அவர் கூறினார்.

மறுபுறம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்னா பகுதிகளிலும் தென்கிழக்கு குடியிருப்பு பகுதிகளிலும் தமது படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் மத்திய ரபாவை நோக்கி முன்னேற முயல்வதாகவும் ஆனால் ஹமாஸ் போராளிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு ரபாவில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த வாரம் ரபாவில் தரைவழி படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கொல்லப்பட்ட முதல் படை வீரர் இவர் என்று இஸ்ரேலிய அரச ஒலிபரப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள ஐ.நா. மருத்துவ மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான மருத்துவ மையங்கள் மீது இஸ்ரேல் இந்தப் போரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவ்வாறான 171 மையங்கள் சேதமடைந்திருப்பதாகவும் அதனை நடத்தும் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் புரஷ் குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜபலியா நகரில் அபூ அல் ஹசனி குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று அதிகாலை வீசிய குண்டில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா கூறியது.

கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல்

உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியர் தீ வைப்பு

May 15, 2024 8:46 am 

வடக்கு காசாவின் ஜபலியா நகரில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு தெற்கில் ரபா நகரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

காசாவின் தெற்கு மற்றும் வடக்கில் மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காசாவெங்கும் நேற்றும் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியது.

கடந்த திங்கட்கிழமை (13) நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவின் நுஜைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தக் கட்டத்தில் சுமார் 100 பேர் வரை தங்கி இருந்திருப்பதோடு அண்மையில் ரபாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் இங்கே அடைக்கலம் பெற்றிருந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அவர்களை காப்பற்ற போதுமான உபகரணங்கள் இல்லை என்று மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜபலியா அகதி முகாம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் பலத்துடன் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகளே தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறைந்தது மூன்று வெளியேற்ற மையங்களை இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைத்துள்ளன. அங்கு சிக்கி உள்ள மக்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளனர். ஜபலியா நகரில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பல மாதங்களுக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள காசா நகரின் செய்தூன் பகுதியில், புறநகர் பகுதி ஊடாக டாங்கிகள் செல்வதற்கு புதிய பாதையை அமைக்கும் வகையில் அங்குள்ள வீடுகளை புல்டோசர்கள் தகர்த்து வருகின்றன.

75 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த பரந்து விரிந்துள்ள ஜபலியாவுக்குள் ஆழ ஊடுருவ முயற்சி மேற்கொள்ளும் இஸ்ரேலியப் படை கடும் செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் கிழக்கு ரபாவுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் ஆழ ஊடுருவி வருவதோடு அந்த டாங்கிகள் அல் ஜினைனா, அல் சலாம் மற்றும் அல் பிராசில் பகுதிகளுக்குள் நுழைந்திருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்த டாங்கிகள் இன்று (14) காலை சலாஹுதீன் வீதியின் மேற்காக பிராசில் மற்றும் ஜினைனா பகுதிகளுக்குள் நுழைந்தன’ என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ‘அவை வீதிகளில் நிலைகொண்டிருப்பதோடு மோதல்களும் இடம்பெற்று வருகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் எகிப்துடனான ரபா எல்லை கடவையை கைப்பற்றி மக்களை வெளியேறும் உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை சுமார் 450,000 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘மக்கள் தொடர்ந்து சோர்வு, பசி மற்றும் பயத்தை எதிர்கொள்கின்றனர்’ என்று அந்த ஐ.நா நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை. உடன் போர் நிறுத்தம் ஒன்றே ஒரே நம்பிக்கையாக உள்ளது’ என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

கிழக்கு அல் சலாம் பகுதியில் அல் யாஸின் 105 ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேலிய வாகனம் ஒன்றை தாக்கி அழித்ததாகவும் சிலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முழு அளவில் படையெடுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரபா நகர எல்லையில் இஸ்ரேலிய இராணுவம் போதுமான துருப்புகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ரபா மீது படையெடுத்தால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருக்கும் சூழலில் அவ்வாறான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பதில் உறுதியற்ற சூழல் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ரபா நகருக்கு அருகில் ஐரோப்பிய மருத்துவமனைக்கு பயணித்த ஐ.நா. வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் அங்கு சர்வதேச பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது இருப்பதோடு இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், முழுமையான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் போர் வலயத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 234 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 35,173 பேர் கொல்லப்பட்டு மேலும் 79,061 பேர் காயமடைந்திருப்பாக அந்த அமைச்சு கூறியது.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை ஊடாக ஜோர்தானில் இருந்து காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

‘ஜோர்தானில் இருந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காசா செல்லும் இந்த வாகனத் தொடரணிகள் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மூர்க்கத்தனமானது’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவான் சாடியுள்ளார்.   நன்றி தினகரன் 
வடக்கு காசாவில் முன்னேறிவரும் இஸ்ரேலிய படைக்கு கடும் எதிர்ப்பு

ரபாவில் முன்னேறாது சரமாரித் தாக்குதல்

May 17, 2024 9:16 am

வடக்கு காசாவில் உள்ள ஜபலியா நகரின் மையப் பகுதியை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று முன்னேறியதோடு அங்கு நிலைகொண்டிருக்கும் பலஸ்தீன போராளிகள் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர். தெற்கின் ரபா நகரில்  இஸ்ரேலியப் படை முன்னேறாமல் கடும் தாக்குதல்களை நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இஸ்ரேலிய படைகள் முன்னேற்றம் காண்பதில் தடுமாற்றம் கண்டு வரும் சூழலில் அங்கு ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் ஆயதப் பிரிவு மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலிய துருப்புகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் வடக்கில் ஜபலியா மற்றும் தெற்கில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் அதிக அவதான செலுத்தி இருப்பதோடு அங்கு பதில் தாக்குதல்களும் தீவிரமாக உள்ளன.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடத்தப்பட்ட பணயக்கைதிகளுடன் ஹமாஸின் நான்கு படைப் பிரிவுகள் ரபாவில் இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. எனினும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது தரைவழி படை நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் முன்னெடுப்பதற்கு நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு உள்ளது.

அங்கு இடம்பெறும் படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.

‘ரபா படை நடவடிக்கை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களை இலக்கு வைத்ததாக உள்ளது’ என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் கேர்ணல் நவாட் ஷொபானி நேற்று தெரிவித்தார். இராணுவ செயற்பாடுகள் தொடர்பான உளவுத் தகவல்கள் அடிப்படையிலேயே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் கான் யூனிஸில் உள்ள குடும்ப வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நடந்த படை நடவடிக்கையில் கான் யூனிஸ் நகர் பெரும் அழிவுக்கு உள்ளாகி உள்ளது. எனினும் ரபாவில் இருந்து வெளியேறும் பலஸ்தீனர்கள் பலர் இந்த நகரில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

மறுபுறம் ஜபலியா நகரின் அல் பலூஜா பகுதியில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. ரபா நகரிலும் வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 39 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,272 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 79,205 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவில் பாரிய இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

அங்கு ஹமாஸ் மீண்டும் ஒருங்கிணைவதை தடுப்பதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் படை நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில் நேற்று ஜபலியாவின் இதயப் பகுதியில் இருக்கும் பிரதான சந்தைப் பகுதி மீது டாங்கிகள் குண்டு மழை பொழிந்தன. இதன்போது பல கடைகள் தீப்பற்றியதாக குடியிருப்பாளர்கள் மற்றும் காசா ஹமாஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

ஜபலியாவில் இஸ்ரேலிய துருப்புகளின் வாகனங்களை உள்ளூர் தயாரிப்பு அல் யாசிஸ் 105 டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகளை கொண்டு போராளிகள் தாக்கி அழத்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

‘அவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று குண்டுகளை வீசி முகாமில் உள்ள வீடுகள் மற்றும் சந்தைகளை அழித்து வருகின்றனர்’ என்று அந்த முகாமில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்தப் படையினர் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுத்திருப்பதாலேயே அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்றும் அந்தக் குடியிருப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

டாங்கிகள் வடக்கு நகரான பைத் ஹனுன் வாயில் வரை பின்வாங்கியதாகவும் இஸ்ரேலிய புல்டோசர்கள் தொழிற்சாலைகள் மற்றும் சொத்துகளை அழித்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

காசாவின் தெற்கு முனையில் ரபா புறநகர் மற்றும் அதன் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறாமல் நிலைகொண்டிருப்பதோடு வான் மற்றும் தரைவழியாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ரபாவில் பத்து நாட்களுக்கு முன் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் அந்த நகரில் இருந்து சுமார் 600,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய டாங்கி நடத்திய தாக்குதல் ஒன்றில் சிக்கி தமது ஐந்து படை வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அதிக படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

‘எமது படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக புதன்கிழமை மாலை ஜபலியா முகாமில் 202 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து படையினர் கொல்லப்பட்டனர்’ என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

இந்தப் படைப் பிரிவு பயன்படுத்திய கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய டாங்கிகள் இரண்டு தாக்குதல் நடத்தியதில் இந்தப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  நன்றி தினகரன் காசாவின் ரபாவுடன் ஜபலியா முகாமிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

போருக்கு பின்னரான 'அராஜகம்' குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

May 14, 2024 6:00 am 

இஸ்ரேலிய டாங்கிகள் கடும் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு காசாவின் ஜபலியா நகருக்கு முன்னேறி வருவதோடு, தெற்கில் ரபா புறநகர் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை ஒன்றை கடந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் துருப்புகள் முன்னேறுவதாக குடியிருப்பாளர்கள் மற்றும் பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் இருக்கும் எட்டு அகதி முகாம்களில் மிகப்பெரியதான ஜபலியா அகதி முகாமின் மையப் பகுதியை நோக்கி டாங்கிகள் முன்னேற முயன்று வருகின்றன. செல்குண்டுகள் முகாமின் மையப்பகுதியில் விழுந்து வருவதாகவும் வான் தாக்குதல்களில் வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த முகாமில் கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் இடம்பெற்று வரும் உக்கிர தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதால் அங்கு மருத்துவ உதவிகளை அனுப்ப முடியாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸை தடுப்பதற்காகவே ஜபலியாவில் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ‘அவர்கள் வீடுகளை இழந்த மக்கள் வசிக்கும் பாடசாலைகளுக்கு அருகில் மற்றும் எல்லா இடங்களிலும் குண்டு வீசுகிறார்கள்’ என்று 45 வயதான அங்குள்ள குடியிப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையே ஜபலியாவில் காண முடிகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜபலியாவில் இருந்து ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பல வாரங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையிலேயே அங்கு மீண்டும் படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் வான் மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ரபாவின் பிரேசில் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

குண்டு வீசப்பட்ட கட்டடம் ஒன்றை அடைய முயன்ற மீட்புப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் அளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு முன்னதாக குறிப்பிட்டது.

ரபாவின் கிழக்கு பகுதியை பிரிக்கும் சலாஹுத்தீன் வீதியை இஸ்ரேலிய டாங்கிகள் துண்டித்திருக்கும் அதேநேரம் ரபாவின் கிழக்குப்பகுதி வெறிச்சோடி இருப்பதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ரபாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேலிய படை மற்றும் டாங்கிகள் நிலைகொண்டிருக்கும் நிலையில் அங்கு உக்கிர மோதல் வெடித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ரபா ஊடுருவல் இன்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுக்கொள்ளும் அளவில் இருப்பதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் ஜான் லியு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் ரபாவுக்குள் நுழைந்தால் அதற்கு வழங்கும் ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக எச்சரித்திருந்தார்.

‘ஜனாதிபதி அண்மையில் வழங்கிய பேட்டியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலின் இதுவரையான செயற்பாடு எமது முரண்பாட்டுக்கான பகுதியை எட்டவில்லை. நாம் உண்மையான முரண்பாட்டை எட்டமாட்டோம் என்று நம்புகிறோம்’ என்று இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியு கூறினார்.

கிழக்கு ரபா மற்றும் கிழக்கு ஜபலியாவின் வீதிகளில் இஸ்ரேலிய படைகளுடன் தமது போராளிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

காசாவுக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதிகளில் நேற்று பல தடவைகள் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. பலஸ்தீன ரொக்கெட் அல்லது மோட்டார் குண்டு தாக்குதலுக்கான எச்சரிக்கையாக அது சந்தேகிக்கப்படுகிறது.

ரபாவின் கிழக்கு பகுதியில் இருந்து மக்களை வெளியேறும் உத்தரவை கடந்த வாரம் வெளியிட்ட இஸ்ரேல் இராணுவம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த இடங்களை விரிவுபடுத்தியது. இந்நிலையில் ரபாவில் இருந்து இதுவரை 360,000 பேர் வரை வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இங்கே எங்கு போவதற்கு இடமில்லை. போர் நிறுத்தம் இன்றி பாதுகாப்பு இல்லை’ என்று அந்த நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காசாவில் சுகாதார அமைப்பு சில மணி நேரங்களில் செயலிழந்து விடும் என்று காசா சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. ‘மருத்துவமனைகளின் இயக்கம், அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளில் பற்றாக்குறை இருப்பதாக’ அது சுட்டிகாட்டியுள்ளது.

எகிப்துடனான காசாவின் ரபா எல்லைக் கடவையை இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது தொடக்கம் காசாவுக்கான உதவி மற்றும் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

ரபா எல்லை கைப்பற்றப்பட்டது அண்டை நாடான எகிப்தினது எதிர்ப்பை வலுக்கச் செய்துள்ளது. இந்நிலையில் காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை சாசனத்தின் கடப்பாட்டை மீறியதாக குற்றம்சாட்டும் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கில் உத்தியோகபூர்வமான இணைந்ததாக எகிப்து அறிவித்துள்ளது.

பலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் கெய்ரோ இந்த வழக்கில் சேர விரும்பியதாக எகிப்து வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (12) கூறியது.

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியே கடந்த ஜனவரியில் தென்னாபிரிக்கா இந்த வழக்கை தொடுத்தது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 35,000ஐ தாண்டியுள்ளது.

எனினும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை மற்றும் ஹமாஸ் ஆட்சி மற்றும் அதன் படை பலம் ஒழிக்கப்படும் வரை காசா போர் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் குறிப்பிட்டுள்ளார். மௌன்ட் ஹாசிலில் இடம்பெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், ‘இந்தப் போர் இஸ்ரேலியர்களின் வாழ்வை வரவிருக்கும் தசாப்தங்களில் வடிவமைக்கும்’ என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் காசாவின் ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை ஹமாஸை ஒழிக்காது, அராஜகத்தையே தூண்டிவிடும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ஞாயிறன்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ரபா மீதான படை நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

‘ஹமாஸ் விட்டுச் செல்லும் பல ஆயுதக் குழுக்களின் கிளர்ச்சி அல்லது அவ்வாறு விட்டு விட்டால் அந்த இடைவெளியில் குழப்பம், அராஜகத்திற்கே இஸ்ரேல் வழிவகுக்கும் என்பதோடு அது ஹமாஸினால் மீள நிரப்பச் செய்யப்படலாம்’ என்று சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் நினைவு தின நிகழ்வு ஒன்றில் நேற்று பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘எமது சுதந்திரப் போர் இன்னும் முடியவில்லை. இன்றும் கூட அது தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவதில் நாம் உறுதியாக உள்ளோம்’ என்றார்.

இஸ்ரேலின் சுதந்திர தினத்தை ஒட்டியே நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1948 இல் இஸ்ரேலின் உருவாக்கத்தை பலஸ்தீனர்கள் ‘நக்பா’ அல்லது பேரழிவு தினமாக அனுஷ்டிக்கின்றனர். அப்போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது சொந்த வீடுகளில் இருந்து துரத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
ரபாவின் மேலும் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

இதுவரை 300,000 பேர் வெளியேற்றம்: காசாவில் தாக்குதல் உக்கிரம்

May 13, 2024 6:00 am

ரபா மீதான வெளியேற்ற உத்தரவை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல், காசாவில் நேற்றும் (12) கடும் தாக்குதல்களை நடத்தியது. சனநெரிசல் மிக்க தெற்கு நகரான ரபா மீதான முழு அளவிலான படையெடுப்பு வரலாற்று அழிவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

மத்திய நகரான டெயிர் அல் பலாஹ்வில் நேற்று இரு மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறி இருக்கும் அதேநேரம் காசா நகருக்கு அருகில் உக்கிர மோதல் இடம்பெற்றதாகவும் இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் கடும் சூடு நடத்தியதாகவும் ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. இதில் கொல்லப்பட்ட பலரும் சிறுவர்கள் என்பதோடு மேலும் பலம் காயமடைந்துள்ளனர். வடமேற்கு ரபாவின் ஹஷாஷ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே இஸ்ரேல் குண்டு போட்டுள்ளது. இதேவேளை வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேலிய போர் விமானங்கள் ஜபலியாவின் கிழக்கு பகுதியில் கார்ப்பட் – குண்டு தாக்குதல்களை நடத்தி பலரையும் கொன்றதாக உள்ளூர் தரப்பை மேற்கோள்காட்டி வபா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு பகுதியில் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசாமல், அப்பகுதி முழுவதையும் குண்டு வீசி அழிப்பது கார்ப்பட் – குண்டுவீச்சு என அழைக்கப்படுகிறது. இதில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை உடன் உறுதி செய்ய முடியவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மத்திய ஜபலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மருத்துவ வசதி ஒன்றுக்கு அருகில் அம்புலன்ஸ்கள் மீதும் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வபா கூறியது.

ஜபலியாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் முன்னதாக கூறிய நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்தேச எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலிய துருப்புகள் ரபாவின் கிழக்கு பகுதிக்கு நுழைந்ததோடு அங்குள்ள எகிப்துடனான உதவிகள் வரும் எல்லைக் கடவையையும் மூடியது.

கடந்த வாரம் கிழக்கு ரபாவில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்ட நிலையில் அங்கிருந்து இதுவரை 300,000 பேர் வரை வெளியேறிய நிலையில் அந்த வெளியேற்ற உத்தரவை மேலும் பல இடங்களுக்கு இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

மக்கள் நீர் தொட்டிகள், படுக்கைகள் மற்றும் மற்ற உடைமைகளை வாகனங்களில் ஏற்றி மீண்டும் ஒரு முறை வெளியேற்றத்திற்கு தயாராகி வருகின்றனர்.

“எமக்கு எங்கே போவது என்று தெரியவில்லை” என்று ரபாவில் இருந்து வெளியேறத் தயாராகும் பரீத் அபூ ஈதா தெரிவித்தார். அவர் ஏற்கனவே காசா நகரில் இருந்தே ரபாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவராவார்.

“காசாவில் பாதுகாப்பான அல்லது மக்கள் நிரம்பாத இடம் ஒன்று இல்லை. நாம் செல்வதற்கு எந்த இடமும் இல்லை” என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

ரபாவின் வடமேற்குக் கரையில் உள்ள அல் மவாசியின் ‘மனிதாபிமான வலயத்திற்கு’ செல்லும்படியே மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரபாவின் மத்திய மற்றும் மேற்கு ஆகிய புதிய பகுதிகளுக்கு இஸ்ரேல் தனது ஊடுருவலை விரிவுபடுத்தி இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ள அதேநேரம் கிழக்கு ரபாவில் பல டஜன் பயங்கரவாதிகளை ஒழித்ததாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார்.

ரபாவில் முழு அளவிலான படை நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தால் ‘வரலாற்று மனிதாபிமான நெருக்கடி ஒன்றை’ காசா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். காசாவில் இஸ்ரேலின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவீடனில் நடைபெற்ற யூரோவிஷன் பாடல் போட்டிக்கும் பரவியது. அந்த நிகழ்வு இடம்பெறும் அரங்குக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

டெல் அவிவில் உள்ள ரசிகர்களும் பெரிய திரையில் அந்த நிகழ்ச்சியை பார்த்தபோதும், அந்தப் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேலிய போட்டியாளர் ஈடன் கொலன் வெற்றிபெறவில்லை. ‘ஈடன் சிறப்பாக இருந்தார்… ஆனால் அவர்கள் எம்மை வெறுக்கிறார்கள்’ என்று 20 வயதான இஸ்ரேலிய ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.

வலுக்கும் சர்வதேச எதிர்ப்பு

ரபாவில் இஸ்ரேலிய படை நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் சீற்றம் அதிகரித்துள்ளது.

ரபா பொதுமக்கள் பாதுகாப்பற்ற பகுதிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்ல்ஸ் மிக்கல், அது ஏற்க முடியாதது என்று சமூக ஊடகத்தில் கண்டித்தார்.

ரபாவில் உள்ள தள மருத்துவமனை ஒன்றில் இருந்து 22 நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணியை ஆரம்பித்திருக்கும் எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பு, அந்த நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை உயிர்காப்பு மருத்துவ உதவிகளை வழங்குவதை சாத்தியமில்லாததாக்கும் என்று எச்சரித்தது.

இஸ்ரேலின் ஏற்க முடியாத விரிவாக்கத்தை காரணம் காட்டி ரபா எல்லைக்கடவையில் இருந்து உதவிகள் செல்வதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கு எகிப்து மறுத்துள்ளதாக எகிப்தின் அல்கெஹரா செய்மதி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் நிலைமை மோசமடைவதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று எகிப்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரபா எல்லைக் கடவையை கைப்பற்றிய இஸ்ரேல் அதனை மூடியதோடு உதவிகள் செல்லும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு எல்லைக் கடவையான கெரெம் ஷலோமையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் முற்றுகையில் உள்ள காசாவுக்கு வெளி உலகில் இருந்து உதவிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்ததோடு அப்போது கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்தும் சுமார் 128 பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கணித்துள்ளது.

கிழக்கு ரபா சுற்றிவளைப்பு

பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான மத்தியஸ்தர்களின் முயற்சிகள் ஸ்தம்பித்திருக்கும் சூழலில், இஸ்ரேல் வான் தாக்குதலினால் காயத்திற்கு உள்ளான பணயக்கைதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் – இஸ்ரேலிய ஆடவரான நவாட் பொபல்வெல் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக இசதீன் அல் கஸ்ஸாம் படை குறிப்பிட்டுள்ளது. எதிரிகள் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளை அழித்திருப்பதால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல்போனது என்றும் அந்தப் படை கூறியது. இது தொடர்பில் இஸ்ரேல் உடன் எந்த பதிலையும் அளிக்கவில்லை. பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக மதிப்பிடுவது நியாயமானது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியது, ஆனால் ஆயுத ஏற்றுமதியைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.

காசா மீதான படை நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தால் குறிப்பிட்ட குண்டுகள் மற்றும் பீரங்கி செல்களை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து இரண்டு நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ரபா மீது படையெடுக்க தயாராகும் நிலையில் பைடன் நிர்வாகம் ஏற்கனவே இஸ்ரேலுக்கான 3,500 குண்டுகளை வழங்குவதை நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல் போர் வெற்றிக்கு ரபாவில் உள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளை ஒழிப்பது அவசியம் என்று கூறுகிறது. இந்நிலையில் ரபாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை பிரிக்கும் பிரதான வீதியை இஸ்ரேலிய டாங்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியது. இதன்மூலம் அந்த நகரின் கிழக்கு பகுதியை சுற்றிவளைப்பதற்கு இஸ்ரேலால் முடிந்துள்ளது.

காசாவில் கடந்த எட்டு மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தை தாண்டி இருப்பதாக பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சுமார் 10,000 உடல்கள் சிக்கி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் சி.என்.என். தொலைக்காட்சிக்கு இதனைத் தெரிவித்துள்ளது.

‘பல மாதங்களாக நாம் சாதாரண உபகரணங்களுடன் பணியாற்றி வருகிறோம், அது எமது நேரம் மற்றும் முயற்சிகளை விரயம் செய்கிறது’ என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார். சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் 70 தொடக்கம் 80 வீதமான திறனை இஸ்ரேல் அழித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

‘ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதாபிமான குழுக்கள் உடன் தலையிட்டு தேவையான மீட்பு உபகரணங்கள் வருவதை அனுமதிப்பதற்கு நாம் கோருகிறோம். எனவே எமக்கு தொடர்ந்து பணியாற்றவும் இடிபாடுகளின் கீழ் காணமால்போயிருப்பவரை மீட்பதற்கும் சிவில் பாதுகாப்பு வாகனங்கள் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்’ என்றும் பசல் தெரிவித்தார்.   நன்றி தினகரன் ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு

May 16, 2024 9:47 am 

ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ரொபட் ஃபிகோ (Robert Fico) மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது?
உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, “ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ரொபட் ஃபிகோ அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், “துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்?
பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அதை முறையில் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பேசுகையில், “நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்” என்றார்.

பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ரொபட் ஃபிகோ.

இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ரொபட் ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ரொபட் ஃபிகோ உறுதியளித்தார். .

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன.

ஒருவர் கைது
ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

உலகத் தலைவர்கள் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார்.

“நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ரொபட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் “ஆழ்ந்த அதிர்ச்சியில்” இருப்பதாக கூறியுள்ளார்.

செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் “அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், “எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ரொபட் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

யுக்ரேன் அதிபர் கண்டனம்

யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார்.

எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ரொபட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

No comments: