பிரான்ஸ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
ஜப்பானில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம்
நியூசிலாந்து பிரதமர் ஆர்டன் திடீர் இராஜினாமா அறிவிப்பு
மேற்கத்திய கனரக ஆயுதங்களால் உக்ரைன் போர் தீவிரமடையும்
இரகசிய ஆவண விவகாரம்; ஜோ பைடனுக்குச் சிக்கல்
பிரான்ஸ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பிரான்ஸில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62ஆக உள்ளது. இதனை 64ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் முயற்சித்து வருகிறார். இந்த மாத ஆரம்பத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின் படி 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பாரிஸ் நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் நடனம் ஆடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நாடு முழுவதும் வெடித்தெழுந்த போராட்டம் காரணமாக ஓய்வூதிய சீர்திருத்த கொள்கையை நிறுத்தி வைக்க ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நன்றி தினகரன்
ஜப்பானில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம்
ஜப்பானில் பணவீக்கம் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
முக்கிய நுகர்வுப் பொருட்களின் விலை முந்தைய ஆண்டில் இருந்து கடந்த மாதத்தில் 4 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது ஜப்பான் மத்திய வங்கி இலக்கு வைத்த அளவை விடவும் இரண்டு மடங்காக உள்ளது.
இது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை குறைக்கும் வகையில் வட்டி வீதத்தை நிர்ணயிக்க ஜப்பான் மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது.
விலை அதிகரிப்பு ஏற்பட்டபோதும் உலகின் மிகக் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் தொடர்ந்தும் நீடிக்கிறது. உலகின் ஏனைய நாடுகளின் போக்குக்கு அமைவாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ள ஜப்பான் கடந்த ஆண்டு வட்டி வீதத்தை வேகமாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த டிசம்பரில் அமெரிக்காவில் பணவீக்கம் 6.5 வீதமாக இருந்ததோடு யூரோ வலயத்தில் 9.2 வீதமாகவும் பிரிட்டனில் 10.5 வீதமாகவும் பதிவானது. நன்றி தினகரன்
நியூசிலாந்து பிரதமர் ஆர்டன் திடீர் இராஜினாமா அறிவிப்பு
நியூசிலாந்து பிரதமர் பதவியை அடுத்த மாதம் இராஜினாமா செய்யப்போவதாக ஜெசின்டா ஆர்டன் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தலைமை வகிப்பதற்கான ஆற்றல் தொடர்ந்தும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
வரும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன்னதாக ஆளும் தொழில் கட்சி தலைமை பதவியில் இருந்து அவர் விலகவுள்ளார். அவரது இடத்திற்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்தில் வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கோடை விடுமுறையில் தனது எதிர்காலம் பற்றிய தீர்மானத்தை எடுத்ததாக 42 வயதான ஆர்டன் குறிப்பிட்டுள்ளார். “அந்தக் காலப்பகுதியில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நான் முடிவெடுத்தேன். துரதிருஷ்டவசமாக என்னால் (பதவியில்) தொடர முடியாது என்பதோடு நான் பதவியில் தொடர்ந்தால் நியூசிலாந்துக்குச் செய்யும் அவமதிப்பாக இருக்கும்” என்று ஆர்டன் நேற்று (19) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு தனது 37 வயதில் பிரதமராக தெரிவானபோது உலகின் இளம் பெண் பிரதமராக பதிவானார். ஓர் ஆண்டின் பின் பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாவது பெண் தலைவராக பதிவானார்.
கொவிட் பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை மற்றும் கிறிஸ்சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு காலப்பகுதியில் அவர் நியூசிலாந்து தலைவராக இருந்துள்ளார்.
2020 தேர்தலில் ஆர்டனின் தொழில் கட்சி பெரு வெற்றி பெற்றபோதும், அண்மைக் காலத்தில் அவரது புகழ் நாட்டில் பெரும் வீழ்ச்சி கண்டிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரியவருகிறது. நன்றி தினகரன்
மேற்கத்திய கனரக ஆயுதங்களால் உக்ரைன் போர் தீவிரமடையும்
ரஷ்யா கடுமையான எச்சரிக்கை
உக்ரைனுக்கு போர் டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் போன்ற கனரக ஆயுதங்களை நேட்டோ வழங்கினால் போர் “மிக ஆபத்தான” கட்டத்திற்கு விரிவடையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவுடனான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனுக்கு மேலும் சக்திவாய்ந்த இராணுவ உபகரணங்களை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் உறுதி அளித்திருக்கும் நிலையிலேயே ரஷ்யா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதில் கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. பல நூறு ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை வழங்க பல ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.
குறிப்பாக உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க ஜெர்மனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. போதுமான கனரக ஆயுதங்கள் கிடைக்காதது பற்றி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கடும் வேதனையை வெளியிட்டிருந்தார். சலஞ்சர்ஸ் 2 டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து ஜெர்மனி லெபார்ட் 2 டாங்கிகள் அல்லது ஜெர்மனி தயாரிப்பு டாங்கிகளை போலந்து வழங்க அனுமதிப்பதற்கு ஜெர்மனி மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் மற்றும் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கக் கூடாது என மேற்கத்திய நாடுகளை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
“இது மிக அபாயகரமானது. இதனால் மோதல் முழுமையாக புதிய கட்டத்திற்கு இட்டுச்செல்லும். நிச்சயமாக, உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு நல்லதாக அமையாது” என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்யாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்.
மறுபுறம், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மட்வெடேவ் எச்சரித்துள்ளது.
“அணு சக்தி நாடு ஒன்று சம்பிரதாயப் போர் ஒன்றில் தோற்பது அணு ஆயுதப் போரைத் தூண்டும்” என்று டெலிகிராம் செயலியில் மட்வெடேவ் எச்சரித்துள்ளார். மேற்கத்திய போர் டாங்கிகளை வழங்குவதன் காரணமாக உக்ரைனிய போர் விரிவடையும் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று நேட்டோவின் ஐரோப்பிய கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
“எம்மால் அச்சுறுத்தலை சமாளிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். பொதுவில் எம்மால் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என அமெரிக்க ஜெனரல் கிறிஸ்டோகர் கவோலி பிரசல்ஸில் கடந்த வியாழனன்று (19) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நன்றி தினகரன்
இரகசிய ஆவண விவகாரம்; ஜோ பைடனுக்குச் சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அலுவலகத்திலும் அவருடைய முன்னாள் அலுவலகத்திலும் இரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வில்மிங்டன் டெலாவேரில் உள்ள ஜனாதிபதி இல்லத்துக்குச் சென்று திரும்பியவர்கள் பற்றிய பட்டியல் ஏதும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
பாதுகாப்பு அக்கறை அதிகரித்துள்ள வேளையில் அந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று குடியரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. பைடனின் தனிப்பட்ட இல்லத்தில் வருகையாளர் பதிவேடு வைத்துக் கொள்ளப்படவில்லை என்று அங்கு பாதுகாப்பு வழங்கும் இரகசியச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவருடைய மாரா லாகோ குடியிருப்பில் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததற்காக ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதேபோன்ற சம்பவம் நடந்திருப்பது அவமானம் என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் டெபி ஸ்டாபெனோவ் கூறினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment