அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ! நிரந்தர நண்பரும் இல்லை !! அவதானி


இலங்கை, இந்திய அரசியலை தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற முதுமொழிகள்தான் நினைவுக்கு வரும்.

சமகாலத்தில் இலங்கையில் அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் எமக்கு,  கூட்டணிகள், கூத்தணிகளாக மாறியிருப்பது அதிசயமல்ல. இதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளின் கூத்துக்களை பார்த்து வந்திருப்பவர்கள்தான்.

தேர்தல் காலம் நெருங்கும்போது இக்கூத்துக்கள் ஊடகங்களில் அம்பலமாகிவிடும்.  எனினும்,  மக்கள் ஏதாவது ஒரு கூத்தணிக்கு வாக்களித்துவிட்டுத்தான் வருவார்கள்.

அத்தகைய கூத்தணிகளுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை என்பதுபோன்று எவராவது கிடைத்தும் விடுவார்கள்.

இம்முறை நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்  வடக்கிலிருந்து மாத்திரம்  சுமார் 23  அரசியல் கட்சிகள் களமிறங்கவிருப்பதாக அறியப்படுகிறது.  அவற்றின் பெயர்களில்   “ தமிழ்  “ என்ற சொல் மாத்திரம் நிச்சயம் இருக்கும்.  அதனால் வாக்களிக்கும் மக்களுக்கு மனக்குழப்பமும் வருவதுண்டு.

எனினும்,  அவர்கள் எளிதாக மாவையின் கட்சி,  விக்னேஸ்வரன் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் கட்சி, சிவாஜிலிங்கம் கட்சி, சித்தார்த்தன் கட்சி, கஜேந்திர குமார் கட்சி, டக்ளஸின் கட்சி, சந்திரகுமார் கட்சி,  வரதராஜப்பெருமாள் கட்சி,  ஆனந்தசங்கரி கட்சி , அங்கஜன் கட்சி,  விஜயகலா மகேஸ்வரன் கட்சி , ஜனநாயகப் போராளிகள் கட்சி என அடையாளம் கண்டுகொள்வார்கள். மக்களுக்கு இதுவிடயத்தில் பல வருட இனம் காணும் அனுபவம் இருக்கிறது.

இம்முறை வீடு சின்னத்தில் போட்டியிடவிருக்கும் தமிழரசுக்கட்சிக்கும், குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவிருக்கும்,  புதிய தமிழ்த்தேசியக்கூட்மைப்பினை உருவாக்கியிருக்கும் சில கட்சிகளும் மத்தியில் பலமான போட்டியிருந்தாலும், இவர்களுக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகள்  விக்னேஸ்வரனின் கட்சியாலும், கஜேந்திரகுமாரின் கட்சியாலும்,  அங்கஜன், டக்ளஸ்,  மற்றும் இதர கட்சிகளினாலும் சிதறண்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

முன்னர்,  ரணில் விக்கிரமசிங்காவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேன்நிலவு கொண்டாடிய காலத்தில் யாழ்ப்பாணம் வந்த ரணிலை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம். பி. யுமான சுமந்திரன் தமது வடமராட்சி இல்லத்திற்கு அழைத்து இளநீரும் பனம் நுங்கும் கொடுத்து உபசரித்தார்.

ஆனால், இம்முறை ரணில்  தைப்பொங்கல் வேளையில் வந்தபோது, முன்னைய அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவரும் 2008 ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்தவேளையில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டவருமான மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கே வந்து திரும்பியிருக்கிறார்.

இதே மகேஸ்வரனின் துணைவியார் கடந்த பொதுத்தேர்தலில், ரணிலை எதிர்த்த சஜித் பிரேமதாசவுக்கே தனது ஆதரவை வழங்கியிருந்தார். அத்துடன் தேர்தலில் தோற்றும் போனார்.

இவற்றையெல்லாம் திரும்பிப்பார்க்கும்போதுதான், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்ற கூற்றின் சூட்சுமம் புரிகிறது.

இந்தப்பின்னணியில் யாழ்ப்பாணம் மேயர் பதவியை தருவதாகச்சொல்லி, தமிழரசுக்கட்சி ஒரு புதிய வேட்பாளரை களமிறக்கப்போவதாக செய்தி கசிந்திருக்கிறது. யாழ்ப்பாணம் இதற்கு முன்னர் பல மேயர்களை கண்டிருக்கிறது.

அவர்களில் சிலர் படுகொலையும் செய்யப்பட்டனர். அல்ஃபிரட் துரையப்பா, சரோஜினி யோகேஸ்வரன், பொன். சிவபாலன், ஆகியோரைத் தொடர்ந்து மேயர் பதவிக்கு வந்தவர்கள் அனைவரும் சவால்களையே சந்தித்தனர்.

அண்மையில் யாழ். மேயர் மணிவண்ணனும் தனது பதவியை இராஜிநாமா செய்ய நேரிட்டது.  மீண்டும் யாரை அந்தப் பதவியில் அமர்த்துவது என்பதில் தொடர்ந்தும்  குழப்பங்கள் நீடிக்கிறது. யாழ். மாநகர மக்களுக்கு ஏன் இந்த சோதனை…?!

இடையில்,  யாழ்ப்பாணத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை.  அதனால், இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவருக்கே  அந்தப்  பதவியை வழங்கவேண்டும் என்று இலங்கை சிவசேனைத் தலைவர் ஒருவர் கேட்கத் தொடங்கியுள்ளார்.

எமது சமூகம் எங்கே செல்கிறது…?

புதிய மேயர் தெரிவு இடம்பெறாமலேயே அடுத்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

சில கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டன. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, ஜே.ஆர். ஜெயவர்தனாவுக்குப் பின்னர் அரசியலில் ராஜதந்திரி என நன்கு அறியப்பட்டவர்.  அவரால் இதர கட்சிகள் மற்றும்  விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்கனவே பிளவுகள் உருவாகியிருக்கின்றன என அரசியல் அவதானிகள் சொல்லி வருகின்றனர். இவரது ராஜதந்திரம்  சில சமயங்களில் அவதந்திரமாகி, அவருக்கே அந்தரமாகிப்போன செய்திகளும் பல உண்டு.

ரணில்,  தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கத் தொடங்கியவுடனேயே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள் பிளவுகள் தோன்றிவிட்டன. அத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை விட்டு ஏற்கனவே வெளியேறியிருந்த விக்னேஸ்வரன், கஜேந்திர குமார் கட்சிகள் தங்கள் விமர்சன அறிக்கைகளையும் வெளியிடத் தொடங்கியிருந்தன.

தற்போது,  ரணில் விக்கிரமசிங்காவின் யாழ். விஜயத்துடன், அங்கே தமிழர் தரப்பு அரசியலில் புதிய நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

இவற்றை அவதானிக்கும் ஶ்ரீமான் பொதுஜனன் தனக்குள் இவ்வாறு பேசிக்கொள்கிறார்: -     தேசியத்தலைவர் என வர்ணிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபகாரன் தற்போது  இல்லாதமையினால்தான் , இத்தகைய காட்சிகள் அரங்கேறுகின்றன. அவர் இருந்திருப்பின் இவர்கள் எவரும் யாழ்ப்பாணம் பக்கமே வந்திருக்க மாட்டார்களே… ! இவர்கள் மட்டுமா, பாழாய்ப்போன போதை வஸ்தும் வந்திருக்காது 

மாணவர் முதல் பெரியவர்கள் வரையில் போதை வஸ்து ஆட்கொண்டிருக்கும்போது,  எமது தமிழ்த் தலைவர்களை ஆணவம் நிரம்பிய அரசியல் போதை திக்குமுக்காடச்செய்துகொண்டிருக்கிறது.

மேல் உலகம் சென்றுள்ள தந்தை செல்வநாயகம்  “ தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்  “ என இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பார் போலும் !

---0---

 

 

 

 

 

 

No comments: