கல்யாணியின் கணவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகில் பிரபலமாக விளங்கிய


தயாரிப்பாளர்,டைரக்டர்களில் குறிப்பிடக்கூடியவர்களில் ஒருவர் பக்க்ஷிராஜா பிலிம்ஸ் அதிபர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு.சென்ற நூற்றாண்டில் இவர் தயாரித்து இயக்கிய சிவகவி,ஆரியமாலா,ஜெகதலப்ரதாபன்,மலைக்கள்ளன்,மரகதம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று திரையுலக சரித்திரத்தில் இடம் பெற்றன.அதிலும் இவர் உருவாக்கிய மலைக்கள்ளன் ஜனாதிபதி விருதை பெற்ற முதல்

தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.அதுமட்டுமன்றி இப் படம் ஹிந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையா
ளம்,சிங்களம் என்று ஆறு மொழிகளில் இவரால் உருவாக்கப்பட்டு சாதனை படைத்தது.கோயமுத்தூரில் இருந்த தனது சொந்த ஸ்டுடியோவான பக்க்ஷிராஜாவில் தனது அனைத்து படங்களையும் இவர் தயாரித்து வந்தார்.


அந்த வகையில் 1963ம் ஆண்டு இவர் உருவாக்கிய படம் கல்யாணியின் கணவன்.சிவாஜி , சரோஜாதேவி இணைந்து நடித்த இப் படம் காதல்,சஸ்பென்ஸ் என்று இரண்டு கதைக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

தோழிகளுடன் நீச்சலுக்கு செல்லும் கல்யாணி ஆற்றில் மூழ்கி விடுகிறாள்.அவளை பட்டதாரியும் விவசாயியான கதிரேசன் காப்பாற்றுகிறான்.இருவரிடையில் காதல் அரும்புகிறது.தன் தந்தையிடம் சொல்லி அவரின் அலுவலகத்திலேயே கதிருக்கு வேலை வாங்கி கொடுக்கிறாள் கல்யாணி.இருவரும் காதலிப்பதை அறிந்து திருமணத்துக்கு ஏற்பாடும் செய்கிறார் விஸ்வநாத்.ஆனால் எதிர்பாராத விதமாக கதிரேசன் மீது கொலைப்பழி விழுகிறது.திருமணமும் தடைப் படுகிறது.கதிர் கல்யாணியின் கணவன் ஆனானா என்பதே மீதி கதை.

கதிராக சிவாஜியும்,கல்யாணியாக சரோஜாதேவியும் நடித்தார்கள்.இருவரும் கொடுத்த வேலையை செய்திருந்தார்கள் .ஆனாலும் சரோஜாதேவியின் நடிப்பில் தென்பட்ட குறும்புத்தனம் ரசிக்கும் படி இருந்தது. அண்மையில் தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடிய சரோஜாதேவி இளமையும் வனப்பும் மிளிர படத்தில் காட்சியளித்தார்.


எம் ஆர் ராதா டைரக்டரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மிகை இல்லாத நடிப்பை வழங்கியிருந்தார். எஸ் வி ரங்காராவ்,முத்துலட்சுமி,டி ஆர்.ராமசந்திரன்,ஓ ஏ கே தேவர்,ஏ கருணாநிதி, ஏ ராமராவ் , சீதாலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

படத்துக்கு தெம்பாக அமைந்தது பாடல்கள் தான்.பிரபல இசையமைப்பாளரான எஸ் எம் சுப்பையா நாயுடு படத்துக்கு இசையமைத்திருந்தார்.கண்ணதாசனின் பாடல்களாக எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்,உனக்கா தெரியாது நிலவே,சொல்லித் தெரியாது சொல்ல முடியாது,கை இருக்குது கால் இருக்குது முத்தையா ஆகிய பாடல்கள் பிரபலமாகின. சுப்பையா நாயுடுவுக்கு ஒரு சபாஷ்!

படத்துக்கான கதை,வசனத்தை வேலவன்

எழுதியிருந்தார்.ஒளிப்பதிவை சலைன் போஸ் கையாண்டார்.விறுவிறுப்பாக நகர வேண்டிய படம் திரைக் கதையில் ஏற்பட்ட தொய்வால் தடுமாறியது. படத்தின் ஆரம்பத்தில் துணிச்சலுடன் ஆற்றில் பாய்ந்து கதாநாயகியை காப்பாற்றும் சிவாஜியின் பாத்திரம் பின்னர் மழுங்கடிக்கப் பட்டு விடுகிறது.பாதிப் படத்துக்கு மேல் படம் ஓடுகிறதோ இல்லையோ , போலீசாரிடம் இருந்து தப்ப சிவாஜி ஓடிக் கொண்டே இருக்கிறார்.


இதனால் நட்சத்திர நடிகர்கள் இருந்தும் படம் வெற்றி படமாக அமையவில்லை.அதுமட்டுமன்றி இந்தப் படமே பக்க்ஷிராஜா பிலிம்ஸ் தயாரித்த கடைசி தமிழ் படமாகவும் அமைந்தது!

No comments: