'நான் எழுதும் கதைகளை உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே
இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்குகிறேன்' என்று எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் சிறுகதைத் தொகுப்பொன்றில் கூறியிருக்கிறார்.
கருவொன்றை தாய் சுமந்து குழந்தையாக உருவாவதற்கும், கருவொன்றை கதாசிரியர் சுமந்து கதையாவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காதென இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.
படைப்பாளியின் இயல்பான திறன், அழகியல் ரசனை என்பவற்றிற்கு ஏற்ப படைப்பின் தரம் பலவாறாக நிர்ணயிக்கப் படுகின்றது.படைத்த பின்னும் அக்குழந்தை எதிர்காலத்தில் நற்பெயர் பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும் இரண்டுக்குமே பொதுவானது.
ஜனரஞ்ஜக எழுத்தாளரான கே.எஸ். சுதாகர் அவர்களின்
'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பும் சிறப்பான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நியாயமே. தலைப்புக்குரிய முதலாவது சிறுகதையாகிய 'பால்வண்ணம்' , நுட்பமான புள்ளிகளால் வரையப்பட்ட வாழ்க்கைக் கோலங்களில், மனிதமனதின் உணர்வுச் சிதறல்களை அழகுறக் கூறுகிறது. இத்தொகுப்பு பற்றி எழுதுவதற்குரிய முக்கிய உந்துசக்தியாகவும் அதுவே அமைந்தது.
பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்டுள்ள இத்தொகுப்பு சென்னை 'எழுத்து' பதிப்பகத்தின் பிரசுரமாகும். இலங்கையின் 'ஞானம்' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் Dr.தி.ஞானசேகரன் அவர்களின் விரிவான முன்னுரை தொகுப்பை அணிசெய்கிறது. 'பாத்திரங்களின் மனோநிலையை வார்த்தைகளால் காட்டாது, வாசகரின் மனதில் ஏற்றி விடுவதில் சுதாகரின் அபாரத் திறமை பளிச்சிடுகிறது. எழுத்தாளனது வெற்றியானது தனது படைப்பின் மூலம் வாசகனின் சிந்தையில் ஊடுருவுவதிலேதான் பெரிதும் தங்கியுள்ளது' என்ற முன்னுரையாளரின் கூற்று சிறப்பானது.
இத்தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளில் பேசப்படும் பிரதான தொனிப் பொருளாக இன்றைய உலகில் மனிதமன அவசங்கள் , நவீன தொழில் நுட்பத்தின் சாதக பாதக விளைவுகள் , தலைமுறை மாற்றங்கள், புலம்பெயர்வின் மனநிலை மாற்றங்கள், ஆதிக்க சக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட அவலங்கள், கோவிட் நோய்நிலைமை ஆகியன அமைந்துள்ளன. வடிவ நேர்த்தியுடன் ஜனரஞ்சகமாக அமைந்திருக்கும் கதைகளினூடு ஆங்காங்கே மெலிதாக இழையோடும் நகைச்சுவை ரசிப்புக்குரியதாக இருக்கின்றது. நுட்பமான விடயங்கள் பல கதைத் தளமாக அமைந்திருக்கும் அதே சமயம், ஓரிரு கதைகளில் கூறப்படும் சம்பவங்கள் கேள்விக்கு உரியனவாகவும் இருக்கின்றன. நிறைகளை முதலில் கூறி குறைகளை பிறகு நோக்குவதே சிறப்பு.
'பால்வண்ணம்' சிறுகதையின்வாசிப்பு அனுபவத்தை அவ்வளவு எளிதாக எழுத்தில் கொண்டு வருவது சாத்தியமானதல்ல. ஒவ்வொரு சம்பவமும், உரையாடல்களும், முடிவும் ஆழ்ந்த உணர்வலைகளைத் தருபவை. வென்றாலும் தோற்றாலும் காதல் உணர்வுகள் காலத்தை வெல்வதுடன் நிரந்தரமானவையும்
ஆகும். செழுமையும் கூர்மையும் மிக்க சொற்களை சிறப்பாகக் கோர்த்து படைக்கப்பட்ட இக்கதை பலராலும் விதந்துரைக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அழகுகள் இல்லாவிட்டாலும் அவனின் மனம் கவர்ந்தவள். அவளை மணப்பதற்கு ஆசைப்பட்டாலும், கல்வியில் எல்லை இல்லாத கனவுகளைக் கொண்டிருக்கும் அவளை அடைவதற்கு அவனால் காத்திருக்க முடியவில்லை. முப்பது வருடங்களின் பின், லெளகீக வாழ்வின் நிறைவில், மனைவியின் இறப்பின் பின் சிட்னி நகரில் அவளை முதிர்கன்னியாகக் காண்கிறான். அவளின் வேண்டுதலின் பேரில் ஓரிரவை அவளது வீட்டில் கழிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் வாசகரின் எதிர்பார்ப்புகள் எத்தகைய உச்சங்களைக் கொண்டதாக இருக்கும்?
ஏன் தங்கச் சொன்னாள் என்ற சபலமும், கேட்பதற்குத் தயக்கமும், ஆழம் பார்க்கும் மனநிலையும், இளமையில் தான் அவளுக்கு எழுதிய கடிதத்தில் குடும்பத்தினரிடம் அவளைக் குற்றவாளியாக்கிய குயுக்தி நிறைந்த தந்திரமும், இனி இணைந்து வாழ்தல் சாத்தியமா என்பதாக அவன் மனதினுள் எழும் நியாயதர்க்கங்களும் மனிதமனதின் ஆழ அகலங்களை மட்டுமல்லாது ஆணியத்தின் தற்காத்தல் சிந்தனைகளையும் புலப்படுத்துகின்றன.
அன்று இரவு அவளின் இங்கிதமும் பாசமும் அவனை நெகிழ வைக்கின்றன. 'இரவு தங்கும் ஆயத்தங்கள் இல்லை' என்று அவன் கூறும்போது 'கவலைப்படாதீர்கள் உங்களுக்குத் தேவையான சகலமும் என்னிடமும் இருக்கின்றன' என்ற வசனங்களின் உள்ளார்ந்த அர்த்தங்கள், இவர்களின் காதல் வெற்றி பெற்றிருந்தால் உன்னதமான தம்பதியாக இருந்திருப்பர் என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கின்றது.
சஞ்சலங்கள் இல்லாத மன உறுதியுடன், கருணை மிகும் உயர்ந்த உள்ளத்தினை பாத்திரப் படைப்பில் வெளிப்படுத்தும் அந்தப் பெண் மனதில் பெருமதிப்பைப் பெறுகிறாள். ஆனால் இறுதியில் அவன் காலை இழுத்து இழுத்து நடப்பதற்கான காரணத்தை அறிந்து அவள் முகம் பொத்திக் கலங்கி அழும் விநாடியில், வாழ்நாளில் காதல் என்பதை ஒரு கணமாவது உணர்ந்த எந்த மனமும் அவர்களது உதிர்தல் இல்லாத காதலுக்காக நெகிழ்வது நிஜம். அந்த இடத்தில் இருவரும் உணர்வுகளால் இமயம் தொடுகின்றனர்.
இக்கதையில் வரும் 'கணப்பொழுதில் அளவெடுத்தாள்', 'கனிந்த பழமொன்று சுவைக்கப் படாமலே காலத்துடன் தன்னளவில் சுருங்கிப் போயிருப்பதாக' , 'விருந்தாளியாகிப் போனேன்' ,'எனக்கும் திருநீற்றுக் குறியிட்டாள்' என்ற சொற்றொடர்கள் மனதில் இனம்புரியாத வேதனையை ஏற்படுத்தும் அதேசமயம்,
'நாற்பது தடவைகள்', 'நூல்வேலி', 'உயர' எனும் அர்த்தம் பொதிந்த முத்திரைச் சொற்கள் மனதில் நிலைத்திருக்கும். தோல்வியடைந்த காதல்களே காவியமாகின்றன. உணர்வுபூர்வமான ஒரு காதலைக் கூறிய எழுத்தாளருக்கு விசேட பாராட்டுகள்.
காதலின் மேன்மை கூறும் மற்றுமொரு கதை 'கலைந்தது கனவு' . சந்தர்ப்பங்கள் வரும் வரை தவறுகள் இழைக்காதிருப்பது காதலின் மேன்மையல்ல, எந்நிலையிலும் தன்னை நம்பும் துணைக்கு துரோகம் செய்யாதிருப்பதே உண்மைக் காதல் என்பதை உணர்த்தும் படைப்பு. சிறுவயதில் இருந்தே 'இவனுக்கு இவள்தான்' என வளர்ந்தவர்கள் அவர்கள். மேல்படிப்பிற்காக மெல்பேர்ன் செல்லும் ஆண் ஒழுக்கம் தவறுகிறான். ஆனால் பெண்ணோ, தன்னை விரும்பும் மற்றுமோர் உண்மைக் காதலை மறுத்து, தான் விரும்பியவனுக்காக காத்திருக்கிறாள். காதலனின் துரோகமானது தனக்காக உயிர்நீத்த மற்றவனின் மேன்மையை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கின்றது. அவள் காத்திருக்கிறாள். ஆண்களுக்கு காதல் ஒரு சம்பவம். பெண்களுக்கு அது சரித்திரம் என்பது தற்காலத்தில் மாற்றம் அடைந்திருப்பினும், இவ்வாறான சிலர் இன்றும் நம்மிடையே வாழ்கின்றனர் என்பதே உண்மை.
ஏதேனும் ஒரு வழியில் என்றோ ஒருநாள், ஆதிக்க சக்திகளினால் வன்முறைகளையும் பேரழிவுகளையும் சந்தித்த சில இனங்களின் சமகால நிகழ்வுகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு கதைகள் அமைந்துள்ளன. இதில் அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் மீது குடியேறிகளாகிய வெள்ளை இனத்தவரால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் சார்ந்த இரு கதைகளும், இலங்கையின் அண்மைய ஆயுதப்போராட்டம், அந்நிய சக்திகளினால் நூற்றாண்டுகள் முன்பு மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் சார்ந்த இரு கதைகளும் அடங்கும்.
தமிழின அழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பல விடுதலை இயக்கங்கள் இறுதியில் தமக்குள்ளே பிளவு கொண்டமையால் தமது இன்னுயிரையும் விடுதலையையும் மட்டும் பறி கொடுக்கவில்லை, தனிப்பட்ட ரீதியிலும் அழிவுகளைச் சந்தித்து இருப்பதை 'நமக்கு நாமே ' சிறுகதை கூறுகிறது. ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தமையால் இளம்பெண் ஒருத்தி பொருந்தி வந்த மணவாழ்வுக்கான சந்தர்ப்பத்தை இழக்கிறாள். அதே சமயம் பிறிதோர் இயக்க ஆதரவாளரின் காதலை அவள் நிராகரித்ததால், வன்புணர்வுக்கு உட்பட்டு கொலை செய்யப்படுகிறாள். 'கிருஷ்ணவேணியை சிங்கள இராணுவம் கொல்லவில்லை. ஆயுதம் எடுத்தோம். நமக்கு நாமே எதிரியானோம்' என்ற இறுதி வசனங்கள் எத்தனை ஆழமானவை. தமிழினத்தின் சாபங்கள் இவையென்றே நினைக்கத் தோன்றுகிறது. சுயநிர்ணய உரிமைகள் கிடைத்தாலும் இத்தகைய மனோநிலைகளை நம்மவர்களால் களைய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
'ஏன்' என்ற கதை வித்தியாசமானது. புலம் பெயர்ந்த தமிழ் தம்பதிக்கு வெள்ளை வெளேரென்ற உடலுடனும் பழுப்பு நிற தலைமுடியுடனும் பூனைக் கண்களுடனும் ஒரு குழந்தை பிறந்தால் என்னென்ன குடும்பப் பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள்? ஏனையோரின் பார்வை எவ்வாறு இருக்கும்? பிறந்த குழந்தை இறந்து விட்டது என்று பொய் கூறுமளவிற்கு
பிரச்சனைகள் உக்கிரமாக இருக்கும். இதற்கான பதில் தலைமுறைகளுக்கு முந்தியது. கதையில் ஒரு வசனம். 'நம் இனத்தில் எத்தனை பெண்கள் சிங்களக் காடையர்களுக்கும் இராணுவத்தினருக்கும் பலியாகிப் போய் விட்டார்கள். நூற்றாண்டுகளுக்கு முன் வந்த ஐரோப்பியரும் இதைத்தானே செய்தார்கள்'. உண்மைதான். குற்றம் செய்தவர் இருக்க குற்றமற்றவர்கள் தலைமுறைகள் கடந்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதை வாசிக்கும் போது விநோதமான எண்ணம் ஒன்று தோன்றியது. இவ்வாறான தமிழ் சிங்கள கலப்பு இனமாக தோன்றும் சிலராவது எதிர்காலத்தில் பரந்தமனம் கொண்டு நாட்டின் தலைவர்களாகி, இனங்களுக்கு இடையே நியாயமான தீர்வொன்றைத் தர மாட்டார்களா என்பது. இந்த எதிர்பார்ப்பு எவ்வழியிலாவது நிஜமாகும் என்ற நம்பிக்கையைத் தருவது கீழ்காணும் வேறு இரு கதைகள்.
'நிறவெறியை அமுல் படுத்தியவர்களின் வாரிசுகளும் நிறவெறிக்கு உள்ளானவர்களின் வாரிசுகளும் இன்று மனமொத்து இணைகிறார்கள்' -தலைமுறை தாண்டிய தரிசனங்கள் கதை முடிவு இவ்வாறு கூறுகிறது. அவுஸ்திரேலிய பழங்குடியினரான ஆதிவாசி இனப் பெண்கள் மீது, குடியேறிகளாகிய ஆங்கிலேயர்களின் பாலியல் வன்புணர்வு காரணமாக வெள்ளைத் தோல் கொண்ட கலப்பினக் குழந்தைகள் உருவாகினர். இக்குழந்தைகளும் ஆதிக்குடிகளிடம் இருந்து களவாடப்பட்டு வெள்ளையர்களின் சமூகத்தினால் வளர்க்கப்பட்டனர். ஆனால் நிறவெறிக் கொள்கைகளை அமுல் படுத்திய ஆங்கிலேய மூத்த தலைமுறையினரின் வாரிசுகள் பின்னாளில் மனமாற்றம் கண்டு, பழங்குடியினரின் உரிமைகளையும் வாழ்விடங்களையும் படிப்படியாகக் கையளித்தார்கள். இதனால் அடோனி, கரோலின் போன்றோர்களது காதல் மட்டுமல்ல பழங்குடி இன மக்களின் வாழ்வும் நம்பிக்கையான எதிர்காலம் நோக்கிப் பயணிக்கின்றது என்கிறார் கதாசிரியர்.
இந்த மனமாற்றத்தினை விளக்கும் மற்றுமொரு கதையாக 'கனவு காணும் உலகம்' சிறுகதை அமைந்துள்ளது. இங்கு தர்னி என்னும் கலப்பின ஆதிவாசிப் பெண்ணின் தாத்தா வெள்ளை இனத்தவர். பூர்வீக குடிகளின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பற்றிய குகை ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்து அவர்களுடனே மலையில் வாழ்கிறார். பிரபலமான கலைஞர். அவரது பேத்தி தர்ணி, மற்றும் கலைஞரது மரணத்தறுவாயில் தர்ணியை சிக்கலான நேரத்தில் மலைக்கு அழைத்துச் செல்லும் மனிதாபிமானம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ் ரக்சி ஓட்டுனர் தர்மு ஆகிய இருவரின் பாத்திரப் படைப்பும், உள்ளூறும் நகைச்சுவையும் ரசிப்புக்கு உரியவை. அந்த மனிதாபிமானத்துக்காக தர்ணியினால், தர்முவுக்கு அளிக்கப்படும் அன்பு முத்தமும் பெறுமதி மிக்கது. தர்மு திகைத்திடத் தேவையில்லை. மகிழலாம்.
முன்பு அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களைக் குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளிய வெள்ளைக்காரர்களே பின்பு அதற்காக அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார்கள். பறித்த நிலங்களையும் படிப்படியாகக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அங்கீகரிக்கிறார்கள். தர்ணியின் தாத்தா போன்ற பரந்த மனப்பான்மை உள்ள உதாரண புருஷர்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் ஒருநாள் கிடைப்பார்கள்.
'உந்தநிலை ஆருக்கும் வரலாம். எந்த இனத்துக்கும் வரலாம். அதாலைதான் இந்தப் பூமி இன்னமும் எங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கின்றது' என்ற தர்முவின் வார்த்தைகளும் எதிர்கால நம்பிக்கைக்கான அத்திவாரங்களே.
'அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை' புலம்பெயர்வானது சாதியம் சார்ந்து தந்த மனநிலை மாற்றங்களையும், 'பாம்பும் ஏணியும்' கதை புலம்பெயர்ந்தாலும் பெண்களை மயக்கி ஏமாற்றும் கீழ்மை மனநிலை சிலரிடம் மாறாதென்பதையும்,
'தூங்கும் பனிநீர்' கதை போதைவஸ்து பாவனையின் பாதகங்களுடன், புலம்பெயர்ந்தாலும் சிலரிடம் ஆணாதிக்க மனநிலை தொடரும் அவலத்தையும் கூறுகின்றன. எவ்வாறோ புலம்பெயரும் பெண்ணொருவரின் வாழ்தலுக்கான போராட்டம் ஆணை விட மிகச் சிரமானதாகவே உள்ளது.
தொழில் நுட்ப வளர்ச்சி என்பது சாதகங்களை வாரிஇறைக்கும் அதேசமயம் பாதகங்களையும் சேர்த்தே வழங்குகிறது. பொறாமை கொண்ட தோழியினால் பரிசளிக்கப்படும் ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலியின் விளைவாக தன்னை யாரோ தொடர்வதாக எண்ணி மனநிலை பாதிக்கப்படும் பெண்ணின் அவலத்தைக் கூறும் கதை 'யாரோ ஒளித்திருக்கிறார்கள் '. நவீன தொழில் நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தும் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்.
சில குறைகளை நோக்கினால்...
'பால் வண்ணம்' எவ்வளவு நுட்பமான சிந்தனைகளுடன் படைக்கப்பட்டு இருந்ததோ அதற்கு எதிராக 'அனுபவம் புதுமை' எனும் சிறுகதை பல முரண்களையும் கேள்விகளையும் மனதில் எழுப்புவதாக அமைந்துள்ளது. இறுதி வருட மருத்துவம் கற்கும் ஏழு பேர் கொண்ட மாணவர் குழுவின் ஒப்படை ஒன்றிற்காக தொற்றாநோய் கொண்ட நோயாளி ஒருவர் பெயரிடப் படுகிறார். வீட்டில் தனியாக வாழ்பவர். ஒரு வருடகாலத்தில் பன்னிரண்டு தடவைகள் நோயாளியை அவதானிக்க வேண்டும். ஒப்படை முடிவதற்கிடையில் நோயாளி மரணமடைகிறார். பல்கலை நிர்வாகம் வேறு நோயாளியை தரமாட்டார்கள், தமது படிப்பு ஒரு வருடம் தாமதமாகலாம் என்ற யோசனையில் நோயாளி உயிருடன் இருப்பது போன்று பாவனை செய்து ஒப்படைகள் தயாரிக்கப்பட்டு பேராசிரியரிடம் கையளிக்கப் படுகின்றன. சிறப்பாக சித்தி எய்தி பட்டமளிப்பும் நடந்து மாணவர்கள் வேலைக்குச் சென்ற பின் தான் பேராசிரியருக்கு நோயாளி இடையில் இறந்து விட்டார் என்பது தெரியவர மிகுந்த கோபம் கொள்கிறார். 'தொலைந்தார்கள் அனைவரும்' என கர்ஜிக்கிறார். அக்குழுவில் இருந்தவர்களின் பெயர்களை தேடி எடுத்தவர் அதிர்கிறார். ஜெசிக்கா என்ற அவரின் மகளும் குழுவில் இருக்கிறார். மனச்சாட்சியுடன் போராடுகிறார். மகளையும் தண்டிக்க வேண்டி வருமே எனக் குழம்புகிறார்.
சிட்னியின் மருத்துவக் கல்வி விதிமுறைகள் வாசகர் அனைவரும் அறியாதது. எனினும் மனதில் எழும் கேள்விகளால் குழம்ப நேர்கிறது.
நோயாளி இடையில் இறந்தது மாணவர்களின் குற்றமல்ல. ஒரு வருடம் மாணவர்களைத் தாமதமாக்குவது நியாயம் தானா?
பேராசிரியரின் மகளுக்கு அவரே பரீட்சைப் புள்ளிகளை இடுபவராக இருப்பது அங்கு வழக்கமானதா? பொதுவான தர்மநெறிமுறைகள் இதனை அனுமதிக்குமா?
பக்கம் 134 இல் நோயாளி இறந்தபின் 'துவாரகன் இரண்டு தடவைகள் நோயாளியைச் சந்தித்தான்' என்றிருப்பது சரிதானா? இந்த வசனத்தை தவிர்த்திருக்கலாம்.
குழுவின் ஏழுபேரில் இருவர் மட்டுமே நோயாளியைச் சந்திப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. ஏன்?
சில குறைகள் இருப்பினும் நிறைகள்
மிகுந்த ஏனைய கதைகளின் மூலம் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தந்த எழுத்தாளர் சுதாகருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
No comments:
Post a Comment