வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில், பலரதும் எழுத்துப் பிரதிகளை படித்து, எழுத்துப் பிழைகளை திருத்தி, ஒப்புநோக்கி, செம்மைப்படுத்தியிருக்கின்றேன்.
இந்தப்பணி, நான் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் முற்றுப்பெறாமல்
தொடருகின்றது. வீரகேசரியில் எமது அலுலக நிருபர்கள்
மற்றும் வெளியூர் நிருபர்கள் எழுதும் பிரதிகளின் உருவ அமைப்பு இன்னமும் எனது மனக்கண்களில்
வாழ்கிறது. அவர்களில் பலர் இன்று இல்லை.
அத்தகையோர் பற்றி அவ்வப்போது நினைவூட்டி எழுதிவருகின்றேன். அவர்கள் எனது வர்க்கத்தை, அதாவது எழுத்தாளர் வர்க்கத்தை
சேர்தவர்கள். ஆயினும், அவர்களுக்கு ஊதியம் வழங்கிய நிறுவனத்தின் தலைவர்கள்
அவர்களை உரியமுறையில் கவனித்தார்களா..? என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன.
இலங்கையில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் காலம் பூராவும் உழைத்த எழுத்துக்கூலிகள் அவர்கள். பலருக்கு ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்கள். அவர்களின் ஊடக எழுத்துக்களினால், உயர்ந்த அரசியல்வாதிகளும், தாழ்ந்த அரசியல்வாதிகளும் பலர் இருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்திற்கும் உதவிய அந்த ஊடகவியலாளர்கள் , தத்தமது
பொருளாதார மாற்றம் குறித்து என்றைக்கும் சிந்திக்கவில்லை.
முடிந்தவரையில் ஓடினார்கள். முடியாதவிடத்து நாட்டை விட்டு ஓடினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
காணாமல்போன ஊடகவியலாளர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள்
தொடர்பாக நீண்ட பட்டியலும் இருக்கிறது.
தென்னிலங்கையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
பற்றி அறிந்திருப்பீர்கள். அத்துடன் புலம்பெயர்ந்து சென்று, புகலிடம் பெற்ற நாடுகளிலிருந்து
தமக்குத் தெரிந்த ஒரே தொழிலான பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களையும்,
மீண்டும் தாயகம் திரும்பி, அதே தொழிலை மேற்கொள்பவர்கள் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
1987 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்த தொடக்க காலத்தில் இலங்கையில் வீரகேசரி, தினகரன், ஆகிய தமிழ்த்தேசிய நாளேடுகளுக்கும் புகலிடத்தில் பாரிஸ் ஈழநாடு, தமிழன், ஈழகேசரி முதலானவற்றுக்கும் எழுதிக்கொண்டிருந்தேன்.
பத்து ஆண்டுகள் கடந்தவேளையில் அதாவது 1997 ஆம் ஆண்டளவில்
கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளில் சில மாற்றங்கள் நேர்ந்தன.
அத்தகைய மாற்றங்கள் அதற்கு முன்னர், நான் இலங்கையில் வாழ்ந்த
காலப்பகுதியில் சிங்கள – ஆங்கில நாளேடுகளில் நிகழ்ந்தன.
ஏரிக்கரை இல்லம் என அழைக்கப்பட்ட Lake
House
விஜயவர்தனா என்ற பெரும் செல்வந்தரின் வாரிசுகளிடமிருந்து
கைமாறி, அரசுடமையானது. எம். டீ. குணசேனா நிறுவனத்தின் வசமிருந்த பெரிய பத்திரிகை
நிறுவனம் ( தவஸ, Sun
,
தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி முதலானவற்றை
வெளியிட்ட நிறுவனம் ) ஶ்ரீமாவோ பண்டார நாயக்காவின்
கூட்டரசாங்கத்தின் காலத்தில் சீல் வைத்து மூடப்பட்டது.
பின்னர் ஜே.ஆர், - பிரேமதாச காலத்தில் திறக்கப்பட்டது. பின்னர் நிருவாகத்தினாலேயே இழுத்து
மூடப்பட்டது.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பல பத்திரிகையாளர்கள் வேறு பத்திரிகைகளுக்கு சென்றனர். சிலர் நாட்டை விட்டு பறந்தனர். சிலர் மறைந்தனர்.
விஜயவர்தனா குடும்பத்தைச்சேர்ந்த உபாலி ஜெயவர்தனா கெண்டோஸ்,
டெல்டா இனிப்பு - சொக்கலேட் கம்பனிகளையும் நடத்திவந்தார். இவரை இவரது நெருங்கிய உறவினர் ஜே.ஆர்.
ஜெயவர்தனா, பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவுக்கும் (
Greater Colombo Economic Commission
) தலைவராக்கினார். அத்துடன் கட்டுநாயக்காவில்
அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்த வலயத்திலும் முக்கிய பொறுப்பினை, ஜே. ஆர். அவருக்கு வழங்கினார்.
1981 ஆம் ஆண்டளவில் உபாலி, சில எதிர்காலத்திட்டங்களுடன் The Island , திவயின, சித்திர மித்திர முதலான
பத்திரிகைகளை ஆரம்பித்தார். இதில் சித்திர
மித்திர சிறுவர்களுக்கான சித்திரக்கதைகள் கொண்ட இதழ்.
உபாலிக்கு சிறந்த அனுபவம் மிக்க பத்திரிகையாளர்கள் கேலிச்சித்திரக்காரர்கள்
தேவைப்பட்டனர். எங்கள் வீரகேசரியிலிருந்து நண்பர் டீ. பி. எஸ்.
ஜெயராஜ் சென்றார். ஏரிக்கரையிலிருந்து பிரபல கேலிச்சித்திரக்காரர் விஜேசோமா சென்றார்.
ஒருதடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸீ. எஸ். ஹமீத்
வெளிநாடொன்றுக்குச்சென்று திரும்பியிருந்தார். இவரை அப்போது எதிர்க்கட்சியினர், “ அவர் தனது உடைகளை லொண்டறிக்கு போடுவதற்காக தாயகம் வந்து செல்லும் வெளிவிவகார அமைச்சர் “ என்றும் கேலி செய்தனர். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தார். அந்தத் தடவை அவர் வந்திருந்த போது அவர் பற்றிய படத்திற்குப்பதிலாக வேறு ஒரு படம் Daily News பத்திரிகையில் பிரசுரமாகிவிட்டது. ஆனால், படத்தின் கீழே அவர் பெயர்தான் இருந்தது.
இதனை அன்றைய ஜே.ஆரின் அரசில் அவரது கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காண்பித்து கண்டித்தனர். அதனால் அந்தப்பத்திரிகை
ஆசிரியர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு மன்னிப்புக்கோர வைக்கப்பட்டார்.
அன்று அந்த சிங்களப்பத்திரிகையாளரின் சிறப்புரிமைக்காக குரல் கொடுத்த தமிழர் - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம்தான்.
அமிரின் உரைகளை அன்றைய சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின்
துணைவியார் கூட பாராளுமன்ற களரியில் அமர்ந்திருந்து அவதானித்து பாராட்டுக் கடிதமும்
எழுதியிருக்கிறார். இத்தகைய நாகரீகம் அன்றிருந்தது.
அதே சமயம் உபாலி விஜேவர்தனாவின் அபரிமிதமான வளர்ச்சியை சகிக்க
முடியாமலிருந்தவர்கள் இருவர். ஒருவர் நிதியமைச்சர் ரொனீ டீ மெல். மற்றவர் பிரதமர் ஆர்.
பிரேமதாச. தங்கள் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா
தனக்கு அரசியல் வாரிசாக உபாலியை உருவாக்குகிறார் என்ற கோபம் இவர்களுக்கிருந்தது.
அக்காலப்பகுதியில் கொழும்பில் ஒரு வகையான நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை
நாம் அறிவோம்.
சித்திரமித்திர சிறுவர் சஞ்சிகையில் வரும் ஒரு சித்திரக்கதையில்
இடம்பெறும் நாய்க்குட்டிக்குப் பெயர் ரொனீ. இதனை அன்று பாராளுமன்றத்தில் ஒரு எதிரணி உறுப்பினர் சொன்னபோது, ரொனி டீ மெல் வெகுண்டெழுந்தார்.
அப்போது நிதியமைச்சர் சொன்ன வார்த்தைகளை இங்கே எழுத்தில்
பதிவிட முடியாது.
பிரதமர் பிரேமதாசவின் துணைவியார் நெட்போல் விளையாடியபோது
எடுக்கப்பட்ட படத்தையும் உபாலியின் பத்திரிகைகள் வெளியிட்டு கேலி செய்திருந்தன.
ஒரு சுதந்திர தினக்கொண்டாட்டத்தின்போது திருமதி பிரேமதாச விலையுயர்ந்த சேலை அணிந்து அலங்காரமாக வந்திருந்தார். அதே சமயம் திருமதி ஜே.ஆர். ஜெயவர்தனா மிகவும் சாதாரண சேலை அணிந்து வந்திருந்தார். இக்காட்சிகளை படமெடுத்து வெளியிட்ட உபாலியின் பத்திரிகைகள், அந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு மாவட்ட மாணவர்களை பெரிதும் கவர்ந்த காட்சி எது என்ற தலைப்பில் ஒரு போட்டியையும் நடத்தியது.
ஏன் இந்தப்போட்டி நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
உபாலியின் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு படப்பிடிப்பாளர்
தெருவைக்கடக்கும்போது வாகனவிபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டார்.
பின்னாளில் அரசியல் அங்கதச் சுவை கொண்ட சிங்கள நாடகத்தை
மேடையேற்றிய சிங்களத் திரைப்பட நடிகரும், ரூபாவாகினியில் செய்தி வாசித்தவருமான ரிச்சர்ட் டீ சொய்சா கொல்லப்பட்டார்.
1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உபாலி விஜேவர்தனாவும்
ஒரு விமான விபத்தில் காணாமலே போனார். உபாலியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி The
Island
பத்திரிகையில் விரிவான தொடர் கட்டுரையும் வெளிவந்தது. அத்துடன் பத்திரிகையாளர் டீ.
பி. எஸ். ஜெயராஜும் உபாலி பற்றி சில பதிவுகளை எழுதியிருக்கிறார்.
இத்தனை கதைகளையும் எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் ஏன்
எழுதுகின்றேன்…? , என்று இதனை வாசித்துவரும் அன்புக்குரிய வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
இதுவரையில் தென்னிலங்கையில் சிங்கள - ஆங்கில ஊடகத்துறையில்
நிகழ்ந்த சில குறிப்பிடத்தகுந்த சம்பவங்களை மாத்திரமே விரிவஞ்சி சுருக்கமாக சொன்னேன்.
1997 ஆம் ஆண்டில் கொழும்பில் தமிழ்ப்பத்திரிகை உலகிலும் சில மாற்றங்கள் நேர்ந்தன. தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பினை எனது இனிய நண்பர் ராஜஶ்ரீகாந்தன் பொறுப்பேற்றார். அவர் முன்னர் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் சோவியத் நாடு, சோஷலிஸம்: தத்துவமும் நடைமுறையும் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவிருந்தவர். மொழிபெயர்ப்பாளர். அத்துடன் சிறந்த சிறுகதைப் படைப்பாளி. அழகு சுப்பிரமணியத்தின் நீதிபதியின் மகன் உட்பட பல கதைகளை தமிழுக்கு வரவாக்கியவர். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் நிறுவனர் சூரனின் சரிதத்தை பதிப்பித்து வெளியிட்டவர்.
தினகரன் ஆசிரியர் பொறுப்பினை அவர் ஏற்கும்போது தொலைபேசி ஊடாக
அவருக்கு வாழ்த்துக்கூறினேன். “ தினகரன் ஏரிக்கரை பத்திரிகை. ஆட்சி மாற்றம் வரும்போது உங்கள் பதவியும் பறிபோவதற்கு
வாய்ப்புகள் இருக்கலாம்.
எல்லோராலும் முன்னைய பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன்
போன்று நெளிவு சுழிவுகளுக்குள் நகர முடியாது. யோசித்து பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். “ என்றேன்.
தினகரனின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க கடுமையாக உழைத்த
அவர், இறுதியில் நோயுற்றார். அத்துடன் கசப்பான அனுபவங்களுடன் வெளியேறினார். அவர்
மறைந்தபோது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க
அனுதாபச்செய்தியும் வெளியிட்டு, மலர் வளையமும்
அனுப்பியிருந்தார்.
அவர்பற்றிய விரிவான
நூலும் எழுதினேன். ( ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் )
ஏரிக்கரையில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதற்கு முன்னர் வீரகேசரியிலும்
மாற்றங்கள் நிகழத் தொடங்கின.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் பல வெளியூர் நிருபர்களின் எழுத்துப்பிரதிகளை
வாசித்து பிழை திருத்தி, செம்மைப்படுத்தியிருப்பதாக சொல்லியிருந்தேன்.
யாழ். நிருபர்கள் செல்லத்துரை, காசி. நவரத்தினம், அரசரத்தினம்
, கண்டி நிருபர் க. ப. சிவம், அட்டன் நிருபர் தியாகராஜா, மட்டக்களப்பு நிருபர்கள் கதிர்காமத்தம்பி, நித்தியானந்தன், மாத்தறை நிருபர் முகம்மட், குண்டசால நிருபர் குவால்தீன், புலோலி நிருபர் தில்லை நாதன், திருகோணமலை நிருபர்
இரத்தினலிங்கம், வவுனியா நிருபர் மாணிக்கவாசகர்,
வவுணதீவு நிருபர் இரத்தினசிங்கம், புங்குடு தீவு நிருபர் துரைசிங்கம், தம்பலகாமம்
நிருபர் வேலாயுதம், சுன்னாகம் நிருபர் கே. பி. நடனசிகாமணி உட்பட வீரகேசரி அலுவலக நிருபர்கள்
பலரதும் எழுத்துப் பிரதிகளை இன்றளவும் என்னால் மறக்க முடியாது.
இவர்களில் துரைசிங்கம், நடனசிகாமணி ஆகியோரின் எழுத்துக்கள்
அழகாகவும் இருந்தன.
அண்மையில் மெல்பனில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனசிகாமணியின்
புதல்வியை சந்தித்தபோதும் அவரது தந்தையாரின் அழகான எழுத்துப்பற்றியே சிலாகித்தேன்.
கொழும்பு வடக்கில் மட்டக்குளியிலிருந்து தினக்குரல் பத்திரிகை
குறிப்பிட்ட 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவருவதற்கு
தூண்டுகோளாகவிருந்தவரும் இந்த கே. பி. நடனசிகாமணிதான் என்பதை பின்னாளில் அறிந்துகொண்டேன்.
இவர் சிறந்த தொடர்பாளர். சாதாரண மனிதர்கள் முதல் தமிழ் வர்த்தக புள்ளிகள்
வரையில் பலருடனும் சிநேகிதத்தை வளர்த்துக்கொண்டவர். அத்துடன் சமய, சமூக பணிகளில் ஈடுபடுபவர்கள்
மற்றும் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள்
வரையில் இவருக்கு நிறைய தொடர்புகள் இருந்தன.
இவருடைய மற்றும் ஒரு நண்பரான சாமி என்ற வர்த்தகப்பிரமுகர்,
கொழும்பில் கலண்டர், டயறி அச்சிடும் நிறுவனத்தையும்
வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்திவந்தார். இவருக்கு தமிழ்ப்பத்திரிகை ஒன்றையும் ஆரம்பிக்கவேண்டிய விருப்பம் மனதில் துளிர்விட்டிருக்கிறது.
அவருடைய நண்பரான நடனசிகாமணி, அவருக்கு வீரகேசரி வார வெளியீட்டுக்குப்
பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலை அறிமுகப்படுத்திவைக்கிறார்.
ராஜகோபாலைத்தேடி அவரது வெள்ளவத்தை வீட்டுக்கே செல்கிறார்
வர்த்தகர் சாமி.
இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில்,
லண்டன் பி. பி. சி. நிருபர்கள் எவ்வாறோ வீரகேசரியில்
பணியாற்றிய சிலர் யாழ்ப்பாணம் சென்று திரும்பியவேளையில் சந்தித்த அனுபவங்களை கேட்டுத்
தெரிந்துகொண்டதுடன் செய்திகளையும் ஒலிபரப்பியிருக்கின்றனர்.
அதனால், வீரகேசரி நிருவாகம் இந்திய தூதுவராலயத்தின் அழுத்தங்களை
சந்தித்திருக்கிறது.
அதனால், பொன். ராஜகோபால் கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கிறார். இந்தப்பின்னணியில் சாமி என்ற வர்த்தகப்பிரமுகரின்
வேண்டுகோளை ஏற்று அவர் ஆரம்பித்த புதிய பத்திரிகையை வெளியிடும் பணியில் இரவு பகலாக
உழைத்த ராஜகோபால், தன்னோடு வீரகேசரியிலிருந்து தனபாலசிங்கம், இராஜநாயகம் பாரதி, தேவகௌரி,
பூபாலசிங்கம் சீவகன், பிரண தார்த்தி கரன், ஒளிப்படப்பிடிப்பாளர் ஜோய் ஜெயக்குமார் மற்றும் தினகரனில் பணியாற்றிய நிலாம் ஆகியோர் உட்பட
நாற்பதிற்கும் மேற்பட்டோரை தினக்குரலுக்கு அழைத்துச்சென்றார்.
வீரகேசரி நிருவாகத்துடன் முரண்பட்டு வெளியேறியிருந்த அதன்
ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வனும் பின்னர் தினக்குரல் ஆசிரியரானார். நான் வீருகேசரியில் பணியாற்றிய காலத்தில் செய்தி
ஆசிரியராகவிருந்து, தனக்கு பிரதம ஆசிரியர் பதவி தரப்படாத கோபத்தில் வெளியேறி, மத்திய கிழக்கு நாடொன்றில் தனக்கு சம்பந்தமே இல்லாத
தொழிலை மேற்கொண்டிருந்த டேவிட் ராஜூ, மீண்டும் இலங்கை வந்து தினக்குரலில் விளம்பரப்பிரிவில்
இணைந்துகொண்டார். அத்துடன் முன்னர் வீரகேசரியில் பணியாற்றிய எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோனும் அதே தினக்குரல் விளம்பரப்பிரிவில் பணியாற்றினார்.
வீரகேசரியில் நேர்ந்த மாற்றங்களையும், தினக்குரலின் தோற்றத்தையும்
அந்த 1997 ஆம்
ஆண்டில், அவுஸ்திரேலியாவிலிருந்து அவதானித்துக்கொண்டிருந்தேன்.
தான் நிருவாகப்பணிப்பாளராகவிருந்த காலத்தில், பொன். ராஜகோபால்
பலரையும் அழைத்துக்கொண்டு தினக்குரலை தொடக்கிவிட்டாரே என்ற கடும் கோபத்திலிருந்தவர்
எம். ஜி. வென்செஸ்லோஸ். இவர்
தொடக்கத்தில் அச்சிடும் காகிதாதிகளின் மொத்த விற்பனையாளராக தனது தொழில் துறையை
விருத்தி செய்தவர். தமது மூத்த புதல்வி நிர்மலாவின் பெயரில் கொழும்பு ஜெம்பட்டா
வீதியில் நிர்மல் ட்ரேடிங் கம்பனியை ஆரம்பித்தவர்.
நிர்மலா, தென்னிந்திய நடிகை மஞ்சுளாவுடன் படித்தவர்.
பைலட் பிரேம்நாத் திரைப்படப்பிடிப்பு 1978 இல் கொழும்பில் நடந்தபோது, வருகை தந்திருந்த மஞ்சுளா
– விஜயகுமார் தம்பதியரை நிர்வாகப் பணிப்பாளர் எம். ஜி. வென்செஸ்லோஸ், வீரகேசரி
ஆசிரிய பீடத்திற்கும் அழைத்து வந்திருந்தார்.
நிருவாகத்தில் கடும்போக்குள்ளவர். இவர் காலத்தில்தான் வீரகேசரி யாழ்ப்பாணத்திலும்
அச்சிட தயாரானது. எனினும் அங்கிருந்த அரசியல் சூழ்நிலைகளினால் அது
சாத்தியமாகவில்லை.
தினக்குரலின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து
இரவுபகலாக கடுமையாக உழைத்த பொன். ராஜகோபால், அதே 1997 ஆம் ஆண்டு திடீரென மறைந்தார்.
பகுத்தறிவுவாதியான அவரது பூதவுடல் அவரது இறுதி விருப்பத்தின் பிரகாரம்
மருத்துவ பீட மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் மூலமாக வர்த்த பிரமுகர் சாமியின் ஏற்பாட்டில்
தினக்குரல் பத்திரிகை உருவாகக்காரணமாகத் திகழ்ந்த நிருபர் கே. பி. நடனசிகாமணி
பின்னர், மீண்டும் வீரகேசரியில் இணைந்தார்.
இவரை 1999 ஆம் ஆண்டு அங்கே சென்றவேளையில் சந்தித்தேன். அத்துடன் அதே ஆண்டில்
வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய சூரிய குமாரி பஞ்சநாதனின் தாயார் திருமதி
அன்னலக்ஷ்மி பஞ்சநாதனின் மரணச்சடங்கின்போது இறுதி மரியதை செலுத்த வந்த நிர்வாகப்
பணிப்பாளர் எம். ஜி. வென்செஸ்லோஸையும் சந்தித்து உரையாடினேன்.
கே. பி. நடனசிகாமணிக்கு 1999 ஆம் ஆண்டு மணிவிழாக்காலம். அதனை முன்னிட்டு, வெளிவந்த சிறப்பு மலருக்கு நிர்வாகப்
பணிப்பாளர் எம். ஜி. வென்செஸ்லோஸ் வாழ்த்துச் செய்தியும் வழங்கியிருக்கிறார்.
ஏன் இந்தப்பதிவில் கடந்துசென்றுவிட்ட இத்தனை தகவல்களையும்
நனவிடை தோய்ந்து எழுதுகிறேன் என்று இதனை படிக்கும் வாசகர்கள் மற்றும் தமிழ் ஊடகத்துறை நண்பர்கள் கேட்கக்கூடும்.
ஊடகவியல்
தனித்துவமான தொழில். அதில்
ஈடுபடுபவர்களை அரசியல் வாதிகளும் வர்த்தக பிரமுகர்களும் தங்கள் தேவைக்காக எப்போதும் பயன்படுத்தியே வந்திருக்கிறார்கள்.
ஆனால், தங்கள் தேவை முடிந்ததும் இறுதியில் கைவிட்டுவிடுவார்கள்.
காணாமலாக்கப்பட்ட – கொல்லப்பட்ட - நலிவுற்ற பல ஊடகவியலாளர்கள் தமது வாழ்வில்
வெறும் எழுத்துக் கூலிகளாவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கென சங்கங்கள்
இருக்கின்றன.
நீண்ட காலம்
ஊடகத்துறையில் பணியாற்றியவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஆவன
செய்யவேண்டும். அரசியல்வாதிகளை முழுமையாக
நம்பி, அரசியல் பதவிகளுக்காக
காத்திருந்து ஏமாறும் ஊடகத்துறை
நண்பர்கள் எச்சரிக்கையோடு தமது பணிகளை தொடரவேண்டும் என வினயமாகக்
கேட்டுக்கொள்கின்றேன்.
வீரகேசரி பத்திரிகையை
வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
சிலோன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர்
திரு. குமார் நடேசனுக்கு இந்தியாவின்
அதி உயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
இவரது காலத்திலும் வீரகேசரியில்
பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
90 ஆண்டுகளை கடந்து வாழ்ந்துவரும் எனது மற்றும் ஒரு தாய்வீட்டின் தற்போதைய பிள்ளைகளுக்கு இந்த அங்கத்தை
சமர்ப்பணம் செய்கின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment