அதிகாரம் 4 : தவறுகள்
வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன
கணவனும் மனைவியும் தங்கள்
தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில்
சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு
ஆரம்பம்.
மக்காறியோவின் மீதான விசாரணை
புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன்
மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.
ஆனால் என்ன வேடிக்கை,
இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு
சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு
சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.
புங் ஒரு அப்பாவி போலவும்
எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.
அவளுடன் உரையாடலை எப்படித்
தொடங்குவது என்று நந்தனுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவள் நினைத்த நேரம்
நினைத்த இடத்தில் பேச்சை ஆரம்பித்துவிடுவாள். சுற்றுச்சூழ இருப்பவர்களை அவள் கணக்கில்
எடுப்பதில்லை.
“இப்போதே ஒல்லியாக
இருக்கின்றாய். முன்பு பள்ளியில் படிக்கும்போது எப்படி இருந்திருப்பாய்?”
உடனே வாயைச் சுழித்துவிட்டு
சிரிக்கத் தொடங்கினாள்.
“என் இளமைக் காலங்களில்
துவிச்சக்கரவண்டியில் சிட்டாகப் பறப்பேன். அப்போது ஒடிந்துவிழும் தேகம் எனக்கு.
எங்கேனும் மோதிவிடுவேனோ என்று பயப்படுவேன். இப்ப சைக்கிள் ஓடி எத்தனை வருடங்கள்
இருக்கும்? கணவனிடம் சொல்லி எனக்கொரு சைக்கிள் வாங்க வேண்டும்.”
மறுநாள் தன் பதின்ம வயதுப்
படங்கள் கொண்ட அல்பம் ஒன்றை நீட்டி நந்தனைப் பார்க்கச் சொன்னாள். அவன் அதைப்
பார்த்ததும் கிறங்கிப் போனான்.
“நீ அப்போது நல்ல வடிவாக
இருக்கின்றாய்?”
“ஏன் இப்ப என்ன குறைச்சல்?”
நந்தனின் காதைத் திருகினாள்.
நந்தனும் புங்கும் சோடியாக
வேலை செய்யத் தொடங்கினார்கள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் அவர்களை ’வேர்க்கிங்
பாற்னேஸ்’ என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படி வேலை செய்யாத சிலவேளைகளில் ’எங்கே
உனது பாற்னர்’ என்று நந்தனைச் சிலர் கேட்பதுண்டு.
புங் மிக வேகமாக தனது
வேலையைச் செய்வாள். இருக்கும் சிறிய இடைவெளிக்குள் நந்தனுக்கும் உதவி புரிவாள்.
வேலை செய்யும் நேரங்களில் சிலசமயம் ஒருவரின் அவயவங்கள் மற்றவர்மேல் படுவதுண்டு.
அப்போதெல்லாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வார்கள்.
ஆனால் புங் அப்படியல்ல. தொடுவது, தட்டுவது எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
வேலை செய்யுமிடத்தில்
கார்களைக் கொன்வேயர் தான் இழுத்துச் செல்லும். கொன்வேயர் நின்றுவிட்டால் அவளும்
தன் வேலையை நிறுத்திவிடுவாள். அவளின் இந்த வேலை செய்யும் சூக்குமத்தை நந்தனும்
பழகிக் கொண்டான்.
ஒருமுறை அங்கிருப்பவர்கள்
பலர் சேர்ந்து சீட்டுப் போட்டார்கள். கழிவு சீட்டு என்று ஒன்றும் இல்லை. வரும்
முழுத்தொகையையும், சீட்டுப் போட்டு யார் முதல் இலக்கத்தைப் பெறுகின்றாரோ
அவருக்குக் கொடுக்கப்படும். சீட்டிற்கு புங் தான் சில வாரங்கள் பொறுப்பாக
இருந்தாள். அதில் அவளுக்கு மகிழ்ச்சி. எல்லாரும் அவளிடம் வருவதும் கதைப்பதுமாக
இருந்தார்கள். மற்றவர்கள் கொடுக்கும் காசை அவர்கள் கண் முன்னே எண்ணி தனது
ஆடைக்குள் வைத்துக் கொள்வாள். சிலவேலைகளில் ஓவரோலைத் திறந்து நெஞ்சிற்குள்
செருகுவாள். அக்கம்பக்கம் யார் நிற்கின்றார்கள் என்ற கவலை அவளிற்கு கிடையாது.
மின்னலென சில காட்சிகள் தோன்றி மறையும். நந்தனுக்கும் சிலவேளை அந்தத் தரிசனம்
கிடைத்ததுண்டு. அவன் அப்படிப் பார்ப்பதையும் அவள் அறிவாள்.
புங் வம்பு வார்த்தைகள்
கதைப்பதில் ஆர்வம் உடையவள். சமயத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை அள்ளி
வீசுவாள். இட்லி என்னும் உணவிற்கு வியட்நாமில் ‘பன்பால்’ என்று சொல்வார்கள்.
ஒருநாள் சீட்டுக்காசை தன் மேலாடைக்குள் வைக்கும்போது,”என்னிடம் பன்பால் இல்லை”
என்று சிரித்தபடி புங் நந்தனிடம் சொன்னாள். தேநீர் இடைவேளைகளின் போது, தேநீரைக்
கலக்குவதற்கான ஸ்ரிக் இருக்காத சந்தர்ப்பங்களில், நந்தன் ஸ்ரிக் தேடி அலைவதுண்டு.
அவ்வேளைகளில் ”உன்ரை விரலை
விட்டு உள்ளே கலக்கு” என்று நந்தனிடம் சொல்வாள். ஒருமுறை புங்கிடம் நந்தன் ”உன்னிடம் ‘Three seasons’ சிடி இருக்கின்றதா என்று கேட்டான். அதற்கு அவள் “உனக்கு Four seasons” வேண்டுமா என்று திருப்பிக் கேட்டாள். நந்தன்
கேட்டது ஒரு வியட்நாமியத் திரைப்படம். அவள் சொன்னது 'கொண்டோம்'. இப்படி சமயத்தில்
செக்ஸ் எல்லாம் அள்ளி வீசிவிடுவாள்.
அவளுடன் தினமும் வேலை
செய்வதற்கு நந்தனின் மனம் விரும்புகின்றது. றோஸ்ரரில் தன்னுடன் அவளுடைய பெயர்
இல்லாவிடில் நந்தனின் மனம் சோர்ந்துவிடுகின்றது. அவள் வேலைக்கு வராவிடில் அன்றைய
நாள் முழுவதும் நந்தனுக்கு செத்தவீட்டு நாளாகிவிடுகின்றது.
சிலவேளைகளில் சொக்கிளேற்,
லொல்லி, வியட்னாம் புளியுடன் புங் வருவாள். நீங்கள் நினைக்கப்படாது இவை
எல்லாவற்றையும் நந்தனுக்கு மட்டும் தான் அவள் கொடுக்கின்றாள் என்று. அருகில் யார்
யாரெல்லாம் நிற்கின்றார்களோ அனைவருக்கும் கொடுப்பாள். ஆனால் ஒன்றிரண்டு மாத்திரம்
இருந்தால் நந்தனுக்கு மட்டும்தான்.
அவள் சிலவேளைகளில் ஏதாவது
பாடல்களை முணுமுணுத்துப் பாடுவதுண்டு. முணுமுணுத்தல் சிலவேளைகளில் வால்யூம் கூடி
உரப்பாவதுமுண்டு. என்ன நாசத்தைத் தன் மொழியில் பாடுகின்றாளோ எல்லாவற்றையும் நந்தன்
ரசிப்பான். அவளுக்கும் அது தெரியும். ஒரு பெண்ணைப் பிடித்துப் போனால், அவளின்
சேஷ்டைகள் அத்தனையும் பிடித்துப் போகும். அவளின் தும்மல்கூட இனிமையான சங்கீதம்
போன்றதுதான். அவள் தனக்கு விருப்பமான ஆங்கிலப் பாடல்கள் என்று மூன்று பாடல்களைச்
சொன்னாள். அவற்றுள் ஒரு பாடலை நந்தன் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை. இருப்பினும்
அவை எல்லாம் தனக்கும் பிடிக்கும் என்றான் நந்தன். அந்தப் பாடல்களில் இருந்து
சிலவரிகளை ராகத்துடன் பாடிக் காட்டினாள்.
“நீ நன்றாகப் பாடுகின்றாய்!”
செல்லமாக நந்தனின் தலையில்
ஒரு குட்டுக் குட்டினாள்.
“நீ நன்றாகச் சமைப்பாய்.
அடுத்தவருக்கு உதவி செய்வாய். ஒருவரிடமும்
கோபம் கொள்ள மாட்டாய். பாட்டுப் பாடுவாய். அழகழகாய் ஆடைகள் அணிவாய். எல்லாரையும்
சமாளித்து அனுசரித்துப் போவாய். கருணை கொள்வாய்” ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, அவள்
குந்தி எழும்பி குந்தி எழும்பிச் சிரித்தாள். சிரிப்பில் அவள் களைத்துப் போனாள்.
பின்னர் அவள் கொஞ்ச நேரம் நந்தனை உற்றுப் பார்த்தபடி இருந்தாள்.
“எல்லாம் நிஜம்மா” என்றாள்.
அன்று வேலை முடிந்ததும் தனது
பாக்கைத் தூக்கிக் கொண்டு நந்தனிடம் வந்தாள்.
“வா… வீட்டிற்குப் போவோம்”
பலர் முன்னிலையில் சொன்னாள். நந்தனுக்கு வெட்கமாகிப் போய்விட்டது. செய்வதறியாது மந்திரக்காரியைப்
பின் தொடர்ந்தான்.
அவர்கள் இருவரினதும்
நடத்தைகளை அவதானித்த சக தொழிலாளர்கள் அவர்கள் இருவருக்குமிடையே முடிச்சுப்
போட்டார்கள். தானே அழகு என எண்ணச் செருக்குடன் அதுவரை இருந்த ஆச்சிமா, உள்ளே
புழுங்கும் உக்கிரத்துடன் அந்தக் கைங்கரியத்தைத் தொடக்கி வைத்தாள். அவள் தொடக்க,
மற்றவர்கள் நேர்பட சொன்னார்கள். இதை அறிந்துகொண்ட புங், எல்லோர் முன்னிலையிலும்
“உன்னை நான் தொட்டாலும், நீ
என்னைத் தொட மாட்டாய். சரியான பயந்தாங்கொள்ளி நீ” என்று நந்தனை எள்ளி நகையாடினாள்.
நந்தன் பயந்த சுபாவம்
உடையவன். அவனின் கேலி, கிண்டல் எல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். அப்புறம் ஒன்றுமே
நடக்காது. அவனது பண்பாட்டிற்கும் உணர்ச்சிகளுக்குமிடையே ஒரு மோதலை ஏற்படுத்தினாள்
புங்.
காலம் இப்படியாகக்
களிப்புடன் நகர்வது போல நந்தனுக்கு இருந்தது.
உண்மையில் கதை வேறு திசை
நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
தொடரும்….
No comments:
Post a Comment