முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை இலங்கைத் தலைநகரின் அரசியல் – பொருளாதார – சமூக மாற்றத்தை களனி கங்கையின் தீரத்தில் சித்திரிக்கும் நூல் ! வாசிப்பு அனுபவம் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா ( கனடா )


நீர் இன்றி அமையாது உலகு 
என நீரின் சிறப்பை எடுத்துரைக்கிறது திருக்குறள். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த பண்டைய காலத்து மன்னர்கள் இயற்கை நீர்நிலைகளைப் பாதுகாத்ததுடன் ஏரிகள், குளங்கள் போன்ற செயற்கையான நீர்நிலைகளையும் உருவாக்கினர்.

 நாட்டின் பொருளாதாரத்தையும் சூழல் சமநிலையையும் மேம்படுத்த உதவுகின்ற இத்தகைய நீர்நிலைகள் விலங்குகளினதும் பறவைகளினதும் வாழிடமாக இருப்பதுடன்,  மனிதர்களின் குடிநீர்த் தேவைகளையும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் தேவைகளையும்கூடப் பூர்த்திசெய்கின்றன.

 வையை நதியின் சிறப்புப் பற்றியும், அது பெருக்கெடுத்துப்பாயும்போது


கரைபுரண்டோடும் மக்களின் மகிழ்ச்சி பற்றியும் சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் எடுத்தியம்புகிறது. அத்துடன், அந்தக் கால மக்களின் பண்பாட்டையும் அவை பறைசாற்றுகின்றன. அவ்வாறே நடந்தாய் வாழி காவேரி என காவேரி ஆற்றின் சிறப்பைக் கூறி அதனை வாழ்த்தும் பாடல்கள், அகத்தியர் என்ற திரைப்படத்திலும், சிலப்பதிகாரத்தில் மாதவி பாடும் கானல்வரிப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

 வானம் பொழியும் மழையை உள்வாங்கி சமவெளிகளினூடாகப் பாயும் ஒரு நதியின் பயணம் என்பது, அந்த நாட்டின் நாகரீகத்தின் பயணமாகவும், புராதனங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்து, முகத்துவாரம் என்ற இடத்தில் இந்து சமுத்திரத்துடன் கலக்கின்ற, இலங்கையின் நான்காவது பெரிய ஆறான களனி கங்கைக்கும் ஒரு சரித்திரம் உள்ளது.

 


களனி கங்கையுடன் இணைந்து பயணிக்கும் நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் மாற்றங்களைப் பற்றி, அரங்கம் என்ற வார இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் தொடராக எழுதியிருந்தார். நடந்தாய் வாழி களனி கங்கை என்ற தலைப்பிலான அந்தத் தொகுப்பு, பின்னர் குமரன் பதிப்பகத்தினரால் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அதனைக் களனி கங்கையின் மர்மங்கள் The mystique of Kalani River என்ற பெயரில் நூர் மஃரூப் முகம்மட் அவர்கள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நூலை வாசிக்கும்போது, எந்த மனிதனும் முழுமையாகக் கெட்டவனும் இல்லை, நல்லவனும் இல்லை என வியாசர் குந்திதேவிக்குக் கூறிய தேற்றுதல் தனக்கு நினைவுவந்ததாக மொழிபெயர்ப்பாளர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களில் நல்ல குணங்களுடன் கெட்ட குணங்களும் காணப்படுகின்றன என்பது சரி, ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்றும், துக்கத்திற்கு வழிவிடக் கூடாதென்றும் கூறப்படும் அந்தத் தேற்றுதல் வேண்டுமென்றே கட்டியவிழ்க்கப்பட்ட பிரச்சினைகளை அனுபவித்த எம் நாட்டவர்களுக்கு நிச்சயமாகப் பொருத்தமானதல்ல.

உடமைகளை மட்டுமன்றி, உயிர்களையும் இழந்தவர்களுக்கு, அது அவர்களின் செயலின் விளைவெனலாமா?

 ஆனால், நமது கடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை இந்த நூலும் எங்களுக்கு நினைவுபடுத்துகிறது எனலாம்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர், மல்லிகை ஜீவா அவர்களால் இலக்கியவுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட முருகபூபதி அவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருது பெற்ற இவர்,  எனது பெற்றோரின் ஒரு மாணவர் எனக் கூறுவதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு.

இனி நூலை நோக்கினோமெனில், கௌதமபுத்தர் இரண்டு தடவைகள் விஜயம் செய்த பெருமையையும், மகாத்மா காந்தியின் அஸ்தியை தனக்குள் வாங்கிக்கொண்ட சிறப்பையும் கொண்ட களனி கங்கைப் பகுதியிலிருந்து வந்த அரசியல்வாதிகளான,

ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிறில் மத்யூ போன்றவர்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் காறி உமிழ்ந்த வெறுப்பின் விளைவினால் உயிர்களை இழந்த மனிதர்களின் உடல்களையும்கூடக் காவிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் களனி கங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் இந்த நூல் ஆதாரங்களுடன் கூறுகிறது.

 மேலும் பண்டா- செல்வா ஒப்பந்த எதிர்ப்புத் திட்டம் போன்ற இனத்துவேச நடவடிக்கைகளும் அந்தப் பகுதியிலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. சீதையினதும், இராமனினதும், அனுமனினதும் துயரத்தில் ஆரம்பமான வரலாறு, இன்று இன்னும் மோசமான இரத்தக் கறைகளுடனும் வன்புணர்வுகளுடனும் தொடர்வது மிக வேதனையே என்ற நிதர்சனத்தையும் இது கூறுகிறது.

 காளி கோவில் உள்ளடங்கலாக இந்து ஆலயங்களில் வேண்டுதல்கள் செய்த சிங்கள அரசியல் தலைவர்கள் குண்டுகள் பொழிந்து அந்த ஆலயங்களை அழிக்கவும் தவறவில்லை என்பதும், விடுதலைக்காகப் போராடியவர்களும் கோவில்களிலும் கொலைகளைச் செய்யத் தவறவில்லை என்பதும் கடவுள்களின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வரலாறுச் சம்பவங்களே.

 அத்துடன், இராவணன் காலம் முதல் இராஜபக்க்ஷ காலம் வரையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியிடங்களிலிருந்தே சமாதானத் தூதுவர்கள் வந்திருக்கிறார்கள், அது அனுமானான வானரப்படையாகவும் இந்தியன் ஆமியைக் கொண்ட சமாதானப் படையாகவும் முடிவில் நோர்வேயிலிருந்து வந்த நல்லெண்ணத் தூதுவராகவும் அமைந்திருந்தது என்பதையும், அவற்றினால் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்ற சோகத்தையும் இந்த நூல் சொல்லிச்செல்கிறது.

இராமர்,  இராவணனை போரில் வென்று அயோத்திக்குத்  திரும்பமுன், இராவணனின் தம்பி விபீஷணனை இலங்கையை ஆட்சி புரியச்செய்தார். இந்தியன் அமைதிப்படைக் காலத்தில் வரதராஜப்பெருமாள் அரியணை ஏறியிருந்தார்.

 ஆறுகளின் நீரை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவே பொதுவாக அரசியல் பிரச்சினைகள் உருவாவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், களனி கங்கை தொடர்பாக அப்படியொரு பிரச்சினை  நிகழவில்லை என்றாலும்கூட, பாலத்தின் ஊடாக குதிரைப் பந்தயத்திடலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 400 ஆயிரம் ரூபா பணம் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது என்பது உள்ளடங்கலாக அது சாட்சியாக இருந்த அனர்த்தங்கள் எண்ணிலடங்காதவை என்பதையும் இந்நூல் தொட்டுச்செல்கிறது.

 உதாரணத்துக்கு, களனி கங்கையின் கரையோரத்தில்தான் மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகை அலுவலகம் இயங்கியது என்பதையும் அவர்களில் பலரது சடலங்கள், இதே களனி கங்கையில்தான் வீசப்பட்டன என்பதையும் இது பதிவுசெய்திருக்கிறது.

 அதேவேளையில், பல்வேறு வகையான நன்மைகளையும் செய்யவும் களனி கங்கை தவறவில்லை. அதன் ஆற்றுப்படுக்கையில் கீரை போன்ற பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன, ஆற்று மணல் கட்டிட நிர்மாணத்துக்குப் பயன்படுகிறது, அத்துடன் பீடி, சுருட்டு போன்ற குடிசைக் கைத் தொழில்கள் அப்பகுதியில் அதிகமாக நிகழ்ந்திருந்தன. களனி கங்கை நீர்,  கொழும்பு மக்களின் குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது.

 சுதந்திரத்துக்கு முன்னர் விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கைக்கு வரக்கூடியதாக இருந்தமையால், இப்பகுதியில் அவர்கள் ஆரம்பித்திருந்த நகைக்கடைகள், பத்திரிகை நிறுவனங்கள், சைவ உணவகங்கள் ஊடாக நாட்டின் பொருளாதரத்துக்கும் அந்நிய செலவாணிக்கும் அவர்கள் பெருமளவில் உதவியிருந்தனர், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்திருந்தனர். பின்னர், நிகழ்ந்த தோட்டத் தொழிலாளர் வெளியேற்றமும் இனக்கலவரங்களும் பெருந்தோட்டச் செய்கையின் சரிவுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாகின என்பன உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

 கலைஞர்கள், வர்த்தகர்கள் போன்றோரின் பங்களிப்பும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 1983 கலவரத்துப் பின்பான காலங்களில், ரயில்கள்  யாழ்ப்பாணத்துக்கு  ஓடாமல் இருந்தபோது, போக்குவரத்துக்கு உதவிய KG சொகுசுப் பேருந்துக்கள் மற்றும்  தியேட்டர்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய கே. குணரத்தினம் போன்றோர் கொல்லப்பட்டமை மற்றும் இனக்கலவரங்களின்போது சொத்துக்களில் ஏற்பட்ட சேதங்கள் என்பனவற்றால் நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டமை போன்ற அவலங்களும் இதில் பதிவாகியுள்ளன.

 இனப்பிரச்சினைக்குத் தூபமிட்ட அரசியல்வாதிகளின் மனித நேயமற்ற தன்மையைப் பற்றிக் கூறும் அதேவேளையில்,  தனிப்பட்ட மனிதர்களாய் பார்க்கையில் அவர்களில் இருந்த சிறப்புக்களையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை.

 உதாரணத்துக்கு கல்விப் புலம் ஏதுமற்று அரசியலுக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டார நாயக்கா அணிசேரா நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் தலைமைதாங்கி நடத்தியமை, ஏழ்மை நிலையிலிருந்து பிரதமராக உயர்ந்த பிரேமதாச சிறுவர் இலக்கியம் உட்பட பல படைப்புக்களை சிங்களத்தில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுதியமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

 இலங்கையில் பிறந்த  எம் ஜி ஆரின் வள்ளல் தன்மையையும்  ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

 ஒன்பது தசாப்தங்களாக வீரகேசரி பத்திரிகை இயங்கும் அலுவலகத்தின் அமைவிடமே ஜே ஆர் பிறந்த வீடு என்பதும், அதனை தன் நினைவாலயமாக்க ஜே ஆர் விரும்பியபோதும் நடைமுறைப் பிரச்சினைகளால் முடியவில்லை என்பதும் சுவாரஸ்யமான செய்தி அல்லது நான் புதிதாக அறிந்துகொண்ட ஒரு செய்தி எனலாம்.

 அத்துடன் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா முதன் முதலாகப் பாராளுமன்றத்துக்கு உடுத்துச் சென்ற கைத்தறிச் சேலையை எழுத்தாளர் அருண்விஜயராணியின் தந்தை கே ரி செல்வத்துரைதான் டிசைன் பண்ணியிருந்தார் என்பதையும் அறிந்தேன்.

 பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோருக்குச் சிலைகள் நிறுவப்பட்டிருப்பதைக் கூறும் ஆசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அருணாசலம் ஹோலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கு  அருணாசலம் ஹோல் மட்டுமல்ல ராமநாதன் ஹோலும் உள்ளது என்பதை இங்கு நான் பதிய விரும்புகிறேன். அருணாசலம் ஹோல், ஆண்களுக்கானதாகவும் இராமநாதன் ஹோல் பெண்களுக்கானதாகவும் இருக்கிறது.

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் களினி பகுதியை சுனாமி தாக்கிய பின்னர்தான் தலைகரம் கொழும்புக்கு மாறியது என்கிறார்கள் வரலாற்றாளர்கள் என்பதையும் அக்காலத்தில் மத்திய கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் இருந்து வியாபாரம் நிமித்தம் வணிகர்கள் வந்து இறங்கிய இடமாகவும் களனி இருந்திருக்கிறது என்பதையும் இணையத்தில் நான் பார்த்தேன்.

 கொழும்புக்கு குடிநீர் வழங்கும் குழாய் நீருக்கான தேவையின் பெரும் பகுதியை களனி கங்கை நிறைவேற்றுகின்றது. அதேநேரத்தில் இலங்கையில் அதிகம் மாசுபடுத்தப்படுகின்ற ஒரு ஆறாக களனி கங்கை இப்போது இருப்பது உண்மையிலேயே மிகவும் கரிசனைகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். தொழில்துறை கழிவுகள், விவசாயக் கழிவுகள், உள்ளூர் மாநகர கழிவுப்பொருட்கள் போன்றன நீர் மாசுறுதலின் பிரதான மூலங்களாக இருக்கின்றன என்றும், குறைந்த வருமானக் குடியிருப்புகளின் கழிவு வாய்க்கால்களும் நேரடியாக ஆற்றுக்கே விடப்படுகின்றது என்றும் கூறுகிறது இணையம்.

 அவ்வாறே காலத்துக்குக் காலம் நிகழும் வெள்ளப்பெருக்கினால், நதிக்கரையை அண்டியிருக்கும் வயல்கள், ஆற்றுப்படுகைகளிலுள்ள கீரைத்தோட்டங்கள் மட்டுமன்றி, ஏழை மக்களின் குடியிருப்புக்களும் நீரில் மூழ்குகின்ற நிலையும் இன்னொரு சோகமான யதார்த்தமாகும். இவற்றையெல்லாம் சீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் இந்த நேரத்தில் என் பங்குக்கு பதியவேண்டியது முக்கியமென நான் நினைக்கிறேன்.

மேலும், அண்மையில், ஜூன் 22 இல் தாய் ஒருவர் தனது ஐந்து வயதான குழந்தையை களனி கங்கையில் வீசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறே யுவதி ஒருவரின் தலையை அவரின் பயணப் பையில் இட்டு களனி கங்கையில் அவரின் ஆண் நண்பர் வீசியிருக்கலாம்  எனச் சந்தேககிக்கப்படுகிறது. குளிக்கப்போய் மரணமடைபவர்களும் தொடர்கிறார்கள். இப்படியாக களனி கங்கை இன்னும்தான் சடலங்களைச் சுமந்து கொண்டிருக்கிறது என்பது வேதனையே.

 நிறைவாக, களனி கங்கை மீதான கவனத்தையும் வரலாறு பற்றிய மீட்டலையும் கொண்டுவந்திருக்கும் முருகபூபதி அண்ணாவின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

---0---

No comments: