தமிழ்த் திரையில் அதிர்வுகளை ஏற்படுததியுள்ள பொன்னியின் செல்வன் - ச . சுந்தரதாஸ்

 


சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையை விளக்கும் விதத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பல்லாண்டு கால முயற்ச்சியில் பின் திரைக்கு வந்துள்ளது.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது என்பது போல் நவீன தொழில் நுட்ப வசதிகளை பயன் படுத்தி பிரம்மாண்டமான படமாக இதனை இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.


1950 ம் ஆண்டுகளில் கல்கி வார இதழில் இந்த தொடர் வெளிவந்த போது பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை அது பெற்றுக் கொண்டது.தொடர்ந்து இன்றும் வாசகர் மத்தியில் ஆதரவை பெற்ற நூலாக திகழ்கிறது.அத்தகைய கதையை திரைப் படமாக்கும் போது அதனை மிக லாவகமாக கையாளவேண்டும்.அந்த சவாலையே மணிரத்னம் இந்தப் படத்தின் சந்தித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே மூலக் கதை அமரர் கல்கி என்று காட்டப்படுகிறது.அத்துடன் படத்தின் சுவாரசியம் கருதி கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சொல்லிவிடுகிறார்கள்.இதனால் படத்தின் வரக் கூடிய கதை மாற்றங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தாத வண்ணம் முன்னெச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

ஓரு கல்கி எழுதிய கதைக்கு மணிரத்னம்,ஜெயமோகன்,குமரவேல் என்று மூவர் அடங்கிய குழு திரைக்கதை எழுதி அதுவே படமாகியுள்ளது.ரசிகர்கள் இந்த மாற்றங்களுக்கு உடன் பட்டாலே படத்தை உள்வாங்க முடியும் என்பதே நிதர்சம்.

நாவல் ஆடி 18ல் வந்தியத்தேவன் தனது பிரயாணத்தை தொடங்குவதுடன் ஆரம்பமாகிறது.ஆனால் படமோ ஆதித்த கரிகாலன் யுத்தத்தில் வெற்றி பெறுவதுடன் ஆரம்பமாகிறது.திரையுலகுக்குரிய சென்டிமென்டல் காரணமோ என்னவோ!கரிகாலனாக வரும் விக்ரமன் வேடத்துக்கு பொருந்துகிறர்.கார்த்திக் தான் வந்தியத்தேவன்.
பொன்னியின் செல்வனாக நடிப்பவர் ஜெயம் ரவி .இவர்கள் மூவரும் அளவுடன் நடிக்கிறார்கள்.அவர்களின் நட்சதிர செல்வாக்கு தலை தூக்க வண்ணம் கதாபாத்திரத்துக்குள்ளேயே அவர்களை அடக்கி வைத்துள்ளார் இயக்குனர்.

நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் இன்றும் இளமையுடன் கட்சியளிப்பது அவர் ஏற்ற இரட்டை வேடத்தை நியாயப்படுத்துகிறது.குந்தவையாக வரும் திரிஷா கரிகாலனுடன் சீறும் காட்சியில் நிறைவாக செய்கிறார்.இவர்களுடன் சரத்குமார்,ஜெயராம்,பிரகாஸ்ராஜ்,பிரபு,ரஹ்மான்,ஐஸ்வர்யா லக்ஷ்மீ,ஜெயசித்ரா,என்று பலர் நடித்துள்ளனர்.

மூலக் கதையின் முக்கிய பாத்திரமான அநிருத்த பிரம்மராயர் படத்தில் காணாமலாக்கப்பட்டுள்ளார்.மூலக் கதையில் வராத இலங்கை அரசன் மகிந்த படத்தில் தோன்றுகிறார்.கோவிலுக்கு பூ கட்டி தொண்டு செய்யும் சேந்தன் அமுதனுக்கு பூணுல் அணிவித்து அவரை எனோ பிராம்மணனாக்கி இருக்கிறார்கள். நாவலில் படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தர சோழர் படத்தில் அவ்வப்போது எழுந்து நடனமாடுகிறார். இது போன்ற நாவலில் இல்லாத சில மாற்றங்களுடன் படம் நகர்கிறது. ஆழ்வார்க்கடியான்,பூங்குழலி ஆகியோரின் அறிமுக காட்சிகளில் அழுத்தம் இல்லை. குறிப்பாக ஆழ்வார்க்கடியான் அந்த காலத்து raw வை சேர்ந்தவர் என்பது தெளிவுப்படுத்தப் படவில்லை.ஆனால். வேடத்துக்கு ஜெயராம் பொருந்துகிறார்.

படத்தின் வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார்.ஆழமான வசனம்,கருத்துள்ள வசனம் என்று கூறும்படி எதுவும் இல்லை. குறிப்பாக படத்தில் சோழர்களுடைய பெருமையை எடுத்து கூறும்படி வசனங்கள் எதுவும் இல்லை .குறைந்த பட்சம் பாடலிலாவது அதனை வெளிப்படுத்தி இருக்கலாம். அல்லது
கல்கி கதையில் எழுதிய வசனங்களையே கூடுமானவரை படத்தில் பயன்படுத்தி இருக்கலாம்.ஆனாலும் அரங்க நிர்மாணத்தை அமைத்த தோட்டா தரணியை பாராட்ட வேண்டும்.அவரின் அனுபவம் படத்தில் வெளிப்பட்டது.அதே போல் ரவிவர்மாவின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.யுத்த காட்சிகளை விறுவிறுப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ ஆர் ரஹ்மான் , மணிரத்னம் கூட்டணி இந்தப் படத்தில் சொல்லும்படி அமைய வில்லை.

தமிழில் சரித்திர படம் என்றால் அதற்கென சில வரைமுறைகள் உள்ளன. அவற்றை கடந்து இன்றைய காலத்துக்கு ஏற்றாற் போல் படத்தை எடுத்துள்ளனர்.

கல்கியின் கள்வனின் காதலி,பார்த்திபன் கனவு கதைகள் படமாக்கப் பட்ட போது அவை வெற்றிப்படவில்லை.அதே போல் ராஜ ராஜ சோழன் படமான போது படம் மேடை நாடகம் போல் காட்சியளித்ததால் தோல்வியை தழுவியது.இதே போல் அகிலனின் கயல்விழியும் படமான போது வெற்றி பெறவில்லை.இவற்றை எல்லாம் கவனத்துக்கு எடுத்தே படத்தை ஜனரஞ்சகமாக மணிரத்னம் உருவாக்கியுள்ளார் எனலாம்.ஆனாலும் கதையின் ஜீவநாடி கெடாமல் படத்தை முழுமையாக்கி உள்ளாரா என்பதை இரண்டாம் பாகத்தை பார்த்த பின்னரே தெரிந்த கொள்ளலாம்.பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு ஒரு ரசனை,வாசிக்காமல் படம் படம் பார்த்தோருக்கு ஒரு ரசனை,படம் எடுத்தோருக்கு ஒரு ரசனை,பிராமண ஆதரவு ,பிராமண எதிர்ப்பு என்ற நிலையில் இருப்போருக்கு ஒரு ரசனை இவ்வாறு பலவித ரசனைக்கு மத்தியில் படம் வெளிவந்துள்ளது.


தமிழில் தயாரிக்கப் பட்டு ஹிந்தி,தெலுங்கு ,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றப் பட்டு திரைக்கு வந்திருக்கும் பொன்னியின் செல்வன் வர்த்தக வெற்றிக்காக சில சமரசங்களை செய்துள்ள போதும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளான்!

No comments: