பிள்ளையோ பிள்ளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது


தெரிந்த விஷயமே!ஆனால் சில படங்கள் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டதும் உண்டு.அந்த வகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் தான் பிள்ளையோ பிள்ளை.

வசனகர்த்தாவாகவும்,அரசியல்வாதியாகவும் திகழ்ந்து பின்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர் மு கருணாநிதி.இவரின் மூத்த மகன் மு க முத்து.கருணாநிதியின் முதல் தாரமான பத்மாவதியின் ஒரே மகனான முத்து சிறு வயதிலே தாயை

இழந்தவர்.தாய்மாமனான பிரபல பாடகர் சிதம்பரம் எஸ் ஜெயராமனின் மகளை மணந்தவர்.1972ல் அரசியலில் உச்சம் தொட்டிருந்த கருணாநிதிக்கு தன் மகனை நடிகனாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்டபட்டது.அதன் விளைவாக தன்னுடைய தாயின் பெயரில் அஞ்சுகம் பிச்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.அதிலும் முதல் படத்திலேயே இரட்டை வேடம்!ஈஸ்ட்மேன் கலரில் படம் உருவானது.

தி மு க வில் சக்திவாய்ந்த பிரமுகராகத் திகழ்ந்த எம் ஜீ ஆரின் திரை வாரிசாக முத்துவை உருவாக்க காரியங்கள் நடந்தன.55வயதாகி விட்ட எம் ஜீ ஆருக்கு மாற்றீடாக தன் மகன் உருவாவதே பொருத்தமானது என்று நினைத்த கருணாநிதி அதற்கு ஏற்றாற் போல் படத்தின் கதை வசனத்தை எழுதினார்.தன் நெருங்கிய நண்பர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரையும் படத்தின் இயக்குனராக அமர்த்தினார்.வாலியும் கண்ணதாசனும் பாட்டெழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார்.

படத்தின் ஆரம்ப பூஜையின் போது எம் ஜீ ஆர் அதில் கலந்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.இவ்வளவு வேலையும் நடந்த போதும் படத்தில் நடிக்க கதாநாயகனாக உருவாக முத்து ஆர்வம் காட்டினாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.இதனால் படப்பிடிப்பின் போது அலட்சியமாகவே முத்து செயற்பட்டார்.அவரின் முழு ஒத்துழைப்பை பெற இயக்குனர்கள் சிரமப்பட்டார்கள்.ஆனாலும் நல்லவிதமாக படம் பூர்த்தியானது.


பகுத்தறிவு,நாஸ்திகம் ஆகிய கொள்கைகளை தி மு க கொண்டிருந்த போதும் படத்தின் ஆரம்பத்தில் பல கோயில்கள் காட்டப்பட்டு மங்கள இசைமுழங்க படத்தின் எழுத்துகள் ஓடுகின்றன.பக்தனாகவும்,நல்லவனாகவும் வேடம் போடும் கங்காதரன் இரு தாரம் கண்டவன்.சந்தேகத்தின் காரணமாக ஒரு மனைவியை கொலை செய்கிறான்,மற்றவளை வீட்டை விட்டு துரத்துகிறான்.அவனின் இரண்டு மகன்களில் ஒருவன் வக்கீலாகவும்,மற்றவன் திருடனாகவும் இருவேறு இடங்களில் வளர்கிறார்கள்.தந்தை என்று தெரியாமல் கங்காதரனை எதிர்க்கிறார்கள்.

படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக அமைத்தது படல்கள் தான்.மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ,மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி,ஏழையின் சிரிப்பில் இறைவன் ஆகிய பாடல்கள் டி எம் எஸ் சுசிலா குரலில் இனிமையாக ஒலித்தன.ஆனாலும் பாடல் காட்சிகளில் முத்து தடுமாறும் போது லட்சுமி அதனை சமாளிக்கிறார்.அழகு,இளமை,நடிப்பு எல்லாவற்றிலும் லட்சுமி முன்னிற்கிறார்.

ஒட்டகத்தின் முதுகை சமப்படுத்த முடியாது,அசோக வனத்தில்

இருந்து விட்டு வருகிறாயா அல்லது அசோகா ஹோட்டலில் இருந்து விட்டு வருகிறாயா,விஸ்வாமித்திரரே மேனகையின் விஸ்வாசமித்திரர் ஆனாரே,உள்ளம் தான் உண்மையானது உருவம் மாயை போன்ற வசனங்களில் கருணாநிதியின் முத்திரை பளிச்சிட்டது.அதுமட்டுமன்றி தனது அரசு அறிமுகப்படுத்திய மதுக்கடை திறப்பு,லாட்டரி சீட்டு விற்றபனை,குடிசை ஒழிப்பு திட்டம் என்பன பற்றியும் வசனங்களுக்கிடையில் செருகி இருந்தார் அவர்.

வில்லன் கங்காதரனாக வரும் மனோகர் வழக்கம் போல,அவரின் அடியாள் எம் ஆர் ஆர் வாசு ஓவர் ஆக்ட்டிங்.இவர்களுடன் கருணாநிதியின் பல படங்களில் இடம் பெறும் விஜயகுமாரியும் இப்படத்தில் முத்துவின் தாயாக வருகிறார்.இவர்களுடன் நாகேஷ்,சச்சு.வி கே ராமசாமி,ஜீ சகுந்தலா, எஸ் வரலக்ஷ்மி,கள்ளபாட் நடராஜன்,நம்பிராஜன்,தேங்காய் சீனிவாசன் ,புத்தூர் நடராஜன் ஆகியோரும் நடித்தனர்.

எம் ஜீ ஆரின் படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைக்கும் ஷியாம் சுந்தர் இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை அமைத்தார்.கருணாநிதியின் உறவினரான அமிர்தத்தின் ஒளிப்பதிவு தரமாக இருந்தது.முத்துவுக்கு மேக் அப் போட்டவர் எல் முத்தப்பா.முத்துவின் உருவத்தை எம் ஜீ ஆரின் சாயலுக்கு மாற்றிய பெருமை இவரையே சாரும்!


பிள்ளையோ பிள்ளை வெற்றி படமாகவே அமைந்தது.ஆனால் தன்னைப் போல் முத்துவை உருவாக்க கருணாநிதி எடுத்த முயற்ச்சிகளை எம் ஜீ ஆர் விரும்பவில்லை.எம் ஜீ ஆர் கருணாநிதி மோதலுக்கு இதுவும் ஒரு காரணமானது.பிள்ளையோ பிள்ளை வெளி வந்து நான்கு மாதங்களுக்குள் எம் ஜீ ஆர் தி மு கவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.அதன் பாதிப்பு முத்துவையும் தாக்கியது.அதன் பிறகு சில படங்களில் முத்து நடித்த போதும் நட்சத்திர அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை.சினிமா என்ற ஏணியில் ஏறி அரசியல் என்ற கோபுரத்தை அவரால் எட்டவும் முடியவில்லை.வாரிசுகள் உருவாக வேண்டும்,உருவாக்க முடியாது என்பதற்கு முத்து ஓர் உதாரணம்!

No comments: