எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 34 எங்கள் ஊரில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1997 இல் நடந்த மல்லிகைஜீவா விழா ! முருகபூபதி

 மெல்பனில்  1997 ஆம் ஆண்டு இலக்கியப் பிரவேச வெள்ளிவிழாவை


நடத்திவிட்டு, இலங்கை செல்லத் தயாரானேன்.

1987 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மெல்பனுக்கு வந்தபின்னர், 1990 ஆம் ஆண்டுதான் நாடு கடந்தேன்.

அந்தப்பயணத்தில் தமிழகம் சென்றவேளையில்,  அங்கு நடந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.

அவ்வேளையில் மல்லிகை ஜீவா,   “ எப்போது இலங்கை வரப்போகிறீர்…?  உமது நண்பர்கள் பலர் உமக்காக காத்திருக்கிறார்கள்  “ என்றார்.

97 ஆம் ஆண்டுவரையில் பொறுத்திருங்கள்.  நிச்சயம் வருவேன் என


அவருக்கு வாக்கு கொடுத்திருந்தேன்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.  மெல்பனில்  நான்கு கலை, இலக்கிய ஆளுமைகளை எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில் பாராட்டி கொண்டாடியதையடுத்து,  மல்லிகை ஜீவாவையும் எங்கள் ஊருக்கு அழைத்து பெருவிழா நடத்தவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தேன்.

அதனை ஒரு கனவாகவே வைத்திருந்தேன்.

எந்தவொரு நோக்கமும் வெற்றியடையவேண்டுமாயின்,  அப்துல்கலாம் சொன்னதுபோன்று நாம் கனவு காணவேண்டும். அதன்பிறகு அந்தக்கனவை நனவாக்க உழைக்கவேண்டும்.  இறுதியில் வெற்றி  நிச்சயம்.

இந்தச்செய்தியை மெல்பனில் அக்காலப்பகுதியில் நடந்த ஒரு நடனநிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டேன். அந்த நடனக்குழுவிலிருந்த அனைத்து ஆண் – பெண் கலைஞர்களும் இளம் தலைமுறையினர்.  அவர்களுக்கு கண் பார்வையில்லை. தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.

அவர்களை அழைத்துவந்த மற்றும் ஒரு மூத்த கலைஞர்தான், கனவு – உழைப்பு – வெற்றி பற்றிய செய்தியை சொன்னார்.

1997 இல் இலங்கை சென்றபோது எனது மகன் முகுந்தனையும் அழைத்துச்சென்றேன். அப்போது அவனுக்கு பதினொரு வயது பிறந்துவிட்டது.  அவனுக்கு சிங்கப்பூரை பார்க்கவேண்டும் என்ற ஆசை. அத்துடன், இலங்கையை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற ஆவல்.

அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   சிங்கப்பூரில் குடும்ப நண்பர் கட்டிட பொறியிலாளர் கலாநிதி சற்குணராஜா வீட்டில் தங்கினோம். அவரது மனைவி பத்மினி கலை, இலக்கிய ஆர்வலர். இவரது தம்பி கவிஞர் காவியன் முத்துதாசன் விக்னேஸ்வரன் எனது நீண்ட கால ஊர் நண்பர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில்  படித்தவாறே திநகரிலிருந்த கண்ணதாசன் பதிப்பகத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தவரை, 1991 ஆம் ஆண்டு ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கிருந்த பதட்ட சூழ்நிலையினால்,  அக்கா பத்மினி  சிங்கப்பூருக்கு அழைத்து வந்துவிட்டார்.


சிங்கப்பூரில் இயங்கிய ஶ்ரீலங்கா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விக்னேஸ்வரன் பணியாற்றத் தொடங்கினார்.  அவரே என்னையும் மகனையும் சிங்கப்பூர் விமான நிலையம் வந்து அழைத்துச் சென்றார்.

அத்துடன்,  சிங்கப்பூரிலிருந்த சில கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார்.  அவ்வாறு எனக்கு அறிமுகமானவர்கள்தான் எழுத்தாளர்கள் கனகலதாவும் கண்ணபிரானும். நா.


கோவிந்தசாமியும்.

நா.கோவிந்தசாமி 1999 ஆம் ஆண்டு  மறைந்துவிட்டார். இவர்பற்றி சுந்தரராமசாமியும் காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார்.

கனகலாதா எங்கள் ஊர் கிருஷ்ணய்யரின் மகள்.  சிறுகதை இலக்கியத்திற்காக சிங்கப்பூர் அரசின் விருதுகள் பெற்றவர். அத்துடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றுகிறார்.


கண்ணபிரான்  பின்னாளில் எனது நண்பர்கள் வட்டத்தில் முக்கியமானவரானார்.  இவர்கள் பற்றி பின்னர் தனித்தனியாக எழுதவேண்டும்.

சுமார் பதினொரு வருடங்களின் பின்னர்  இலங்கை சென்றாலும், வடக்கு – கிழக்கிற்கு செல்ல முடியாத நிலை. அங்கெல்லாம் போர் மேகங்கள் கருக்கட்டியிருந்தன.

 நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை இதழை வெளியிட்ட டொமினிக்ஜீவா , அங்கிருக்க முடியாமல் கொழும்போடு வந்துவிட்டார்.  ஶ்ரீகதிரேசன் வீதியில் அலுவலகம் அமைத்து மல்லிகையை வெளியிட்டவாறு மல்லிகைப்பந்தல் பதிப்பகத்தின்


ஊடாக நூல்களையும் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

எனது பாட்டி சொன்ன கதைகள் நூலையும் அவர்தான் வெளியிட்டார். அதன் வெளியீட்டரங்கை முன்னர் குறிப்பிட்ட நான்கு ஆளுமைகளை பாராட்டும் நிகழ்வுடன் மெல்பனில்  நடத்திவிட்டுச் சென்றிருந்தமையால்,  ஜீவாவை எங்கள் ஊருக்கு அழைத்து பாராட்டி விருது வழங்கவேண்டும் என்ற நீண்ட நாள் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அச்சமயம் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக


பொறுப்பேற்றிருந்த நண்பர் ராஜஶ்ரீகாந்தன் எனக்கு ஆலோசனைகளை வழங்கி பக்கத்துணையாகவிருந்தார்.

அவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில் முழுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை இலக்கிய ஆர்வலர் துரை விஸ்வநாதன் அவர்களது நிறுவனத்தின் மேல் மாடியில் நடத்தினார்கள்.

தினகரன் பிரதம ஆசிரியர்  பொறுப்பினை ஏற்றிருந்த நண்பரையும் 


அவுஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்த என்னையும் வரவேற்பதற்காகவும்  அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை நாமிருவரும் அங்கே சென்ற பின்னர்தான் அறிந்துகொண்டோம்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?  பின்னாளில்  மல்லிகை ஜீவாவின் சம்பந்தியான தம்பையா அண்ணர் என்னைக்கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக்கொண்டார்.  அவரது சிகையலங்கார நிலையம் புறக்கோட்டையில் அமைந்திருந்தது.


தம்பையா அண்ணரும் சிறுகதைகள் எழுதியவர். இறுதியாக அவரது கடலில் கலந்தது கண்ணீர் நூல்வெளியீட்டுக்காக            ( யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தது ) சென்றிருந்தேன்.

அவரது மகளைத்தான் ஜீவாவின் மகன் திலீபன் மணம் முடித்தார். அந்திம காலத்தில் கொழும்பு மட்டக்குளியாவில்  ஜீவா,  மகன் திலீபனுடன்தான் இருந்தார்.

துரைவிஸ்வநாதனின் நிறுவனத்தில் நடந்த சந்திப்பில்,  நீர்கொழும்பில் ஜீவாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் செய்தியை சொன்னேன்.

அனைவரும் வரவேற்றனர். 

அதற்கான ஏற்பாடுகளை நீர்கொழும்பு இந்து இளைஞர்


மன்றத்திலேய மேற்கொண்டேன்.   1972 ஆம் ஆண்டு மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழை வெளியிட்டபோது, அதற்காக வௌியீட்டு அரங்கை நடத்துவதற்கு இதே மன்றத்திடம் நான் அனுமதி கேட்டபோது தருவதற்கு அன்றைய நிருவாகம் மறுத்தது.

பின்னாளில் அதே மன்றத்தில் நானும் அங்கத்தவராக இணைந்து, செயற்குழுவிலும் பொதுச்செயலாளர், நிதிச்செயலாளர் பதவிகளிலும் இருந்தேன்.

காலங்கள் மாறியது.  கடற்கரை வீதி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக அமைந்திருந்த மன்றத்தின் மண்டபம்


வீதிக்கு முன்புறம் ஆலயத்தின் அருகில் புதிய கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியபோது எமது உறவினரான அ. மயில்வாகனன் மாமா தலைவராகியிருந்தார்.

குறிப்பிட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் திறந்துவைத்தார். அப்போது நான் அங்கே இல்லை.

ஜீவாவுக்கு நீர்கொழும்பில் விழா எடுக்கவிருக்கும் எனது விருப்பத்தை மயில்வாகனன் மாமாவிடம் சொன்னதும், அவர் மண்டபத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரது தலைமையில் விழா நடந்தது.

கொழும்பிலிருக்கும் அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் தகவல் வழங்கினேன்.

தினக்குரலிலிருந்து ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வன், தினகரனிலிருந்து அதன் ஆசிரியர் ராஜஶ்ரீகாந்தன், இலங்கை வானொலியிலிருந்து இளையதம்பி தயானந்தா,  ரூபவாகினியிலிருந்து தமிழ்ச்சேவை பணிப்பாளர் வன்னியகுலம்,  வீரகேசரியிலிருந்து பத்திரிகையாளர் சூரியகுமாரி பஞ்சநாதன்,  தினக்குரல் செய்தி ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், நவமணி பத்திரிகையிலிருந்து சிவலிங்கம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்திலிருந்து தெளிவத்தை ஜோசப், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்,  மற்றும் எழுத்தாளர்கள் வதிரி சி ரவீந்திரன்,  திக்குவல்லை கமால், மேமன்கவி,  நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு. பஷீர் ,  நீர்கொழும்பு தருமலிங்கம், இலக்கிய ஆர்வலர்கள் மாணிக்கவாசகர்,  தங்கவடிவேல் மாஸ்டர், கொழும்பு சிலம்புச்செல்வர் ம.பொ.சி மன்றத்திலிருந்து த. மணி, துரை .விஸ்வநாதன்  உட்பட பெருந்திரளானோர் வருகை தந்தனர்.

எனது தொடக்க கால பாடசாலை ஆசான் நிக்கலஸ் அல்ஃபிரட், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், கொழும்பு தமிழ்ச்சங்கத்திலிருந்து ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ஆகியோரும் வருகை தந்தனர்.

எனது தாய் மாமனார் இரா. சுப்பையா மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். எனது பாட்டி சொன்ன கதைகள் நூலை ஜீவாவிடமிருந்து எனது அம்மாவே பெற்றுக்கொண்டார்.

அன்றைய விழா,  எனது இலக்கிய வாழ்வில் ஒளியேற்றிய மல்லிகை ஜீவாவுக்கு மாத்திரமல்ல பல இலக்கியவாதிகளுக்கும் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அன்று நாம் அனைவரும் ஒன்று கூடியிருந்தோம்.

இருபத்தியைந்து வருடங்களாகிவிட்டன. அந்த விழா இன்றும் எனது மனக்கண்ணில் வாழ்கிறது.

எனது அம்மா, அக்கா,  மற்றும் மாமாமார், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி, ராஜஶ்ரீகாந்தன், மாணிக்கவாசகர், தங்கவடிவேல் மாஸ்டர், மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், துரைவிஸ்வநாதன், த. மணி,  ஆகியோர் இந்த 25 வருடகாலத்துள் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர்.

அவர்கள் குறித்த அஞ்சலிப்பதிவுகளும் எனது எழுத்தில் அங்கமாகிவிட்டது.

இந்த அங்கத்தில் நீர்கொழும்பில் நடந்த மல்லிகைஜீவா பாராட்டு நிகழ்வு படங்களை வாசகர்கள் பார்க்கலாம்.

( தொடரும் )

 

 

 

 

1 comment:

Anonymous said...

நினைவுகள் தொடரட்டும்.