அவரடியைத் தினம்பரவி அவராசி பெற்றிடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா

            

அன்னையும் தந்தையும் காட்டிடுவார் ஆசானை


ஆசானோ அசடகற்றி ஆண்டவனைக் காட்டிடுவார்
அகமிருக்கும் அழுக்கனைத்தும் அகற்றிடுவார் ஆசானும்
அவரடியைத் தினம்பரவி அவராசி பெற்றிடுவோம் 

கற்பவற்றைத் தேர்ந்தெடுத்து கருவாக்கி நின்றிடுவார்

கற்றவற்றை மனமமர்த்த கண்ணியமாய் உழைத்திடுவார்
கற்றபடி நடந்துவிட கைகாட்டி ஆகிடுவார் 
கற்றுத்தந்த ஆசானின் கழல்பணிந்தி நின்றிடுவோம் 

அறவழியில் நடப்பதற்கு அவர்துணையாய் ஆகிடுவார்


புறவழியில் மனமதனைப் போகாமல் செய்திடுவார்
துணிவுடனே நடப்பதற்கு துணையாக அமைந்திடுவார்
அவனிதனில் ஆசானின் ஆசியினைப் பெற்றிடுவோம்

ஏணியாய் இருந்து எமையேற்றி விட்டிடுவார் 

ஞானியாய் மலர்ந்து நல்லுரைகள் நவின்றிடுவார்
ஈனமாம் நினைப்பை இல்லாமல் செய்திடுவார்
எல்லோரும் குருவினது திருவடியைப் பணிவோமே

தோழமை உணர்வுடனே தொட்டுமே அனைத்திடுவார்

ஆழமாம் உரிமையுடன் அவரெம்மைக் கடிந்திடுவார்
கோழையெனும் நினைப்பதனைக் குழியிட்டுப் புதையென்பார்
குவலயத்தில் ஆசானைக் கொண்டாடி மகிழ்வோமே

வாய்மைதனை மனமிருத்தி வாழுவென்று உரைத்திடுவார் 

கீழ்மைதனை மனமிருந்து கிழித்தெறிந்து விடுவென்பார்
தாய்மையுடன் அனைவரையும் தழுவியே நடவென்பார்
தரணியிலே ஆசாற்கு தலைவணங்கி நிற்போமே

ஆசானின் அறிவுரைகள் அத்தனையும் பொக்கிஷமே

அவரன்பைப் பெறுவதுவே அனைவர்க்கும் முக்கியமே
அகிலமதில் ஆண்டவனாய்க் காட்சிதரும் ஆசானை
அனைவருமே அடிபரவி அகநிறைவு பெறுவோமே
No comments: