அரசியல் அலைப்பறையில் மூழ்கிவிடும் அறிவுலகம் !? நிருவாகங்களில் புரையோடும் காயங்கள் ! அவதானி


வடக்கில் தற்போது எத்தனை அரசியல் கட்சிகள்?  என்று எவரேனும் கணக்குப் பார்த்தார்களா..?

ஆனால், இக்கட்சிகளின் அலைப்பறைகளை மாத்திரம் ஊடகங்களில் பார்த்து வருகின்றோம். அவை பற்றி விவாதித்து வருகின்றோம்.

வருடந்தோறும் ஜெனீவாவில் கொடியேறியவுடன் அங்கே பறக்கும் எம்மவர்களின் அறிக்கைகளையும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வருகின்றோம்.

இத்தனைக்கும் மத்தியில்தான், வடக்கில் போதை வஸ்து பாவனையும் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது.  தமிழர் மானமும்


பறக்கிறது.

இவ்வேளையில் யாழ். பொது நூலகத்தில் இயங்கிக்கொண்டிருந்த சிற்றுண்டிச் சாலையை சீல் வைத்து மூடுமாறு நிதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்து, அவ்வாறே நடந்தும் இருக்கிறது.

1981 ஆம் ஆண்டு தென்னிலங்கையிலிருந்து வந்த சீருடையினரால் தீவைத்து கொளுத்தப்பட்டு,  உயிர் மீண்ட சீதையாக காட்சியளித்த  பொதுநூலகத்தினை தினம் தினம் பயன்படுத்தி வருபவர்கள் பலர்.

 வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் தமது தேவைக்காக செல்லுமிடம்தான் பொது நூலகம்.

அவ்வாறு செல்பவர்கள் அங்கிருக்கும் சிற்றுண்டிச்சாலையையும் பயன்படுத்துவார்கள்.  அதனை நிருவகிப்பவர் எவ்வாறு நூலக நிருவாகத்தினால் தெரிவுசெய்யப்படுகிறார்? என்பது இங்கு முக்கியமில்லை.

ஆனால், அவர் எவ்வாறு அதனை நடத்துகிறார்? என்பதை கவனிக்கவேண்டியது பொது நூலகத்தின் தலையாய கடமை.

அந்த சிற்றுண்டிச்சாலையில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததும், யாழ். பொது சுகாதார பரிசோதகர் உடனடியாகவே நேரில் சென்று பார்த்துவிட்டு எச்சரித்துள்ளார். 

கடந்த மாதம் 09 ஆம் திகதி குறிப்பிட்ட சுகாதார பரிசோதகர் அங்கே அது இருந்த கோலத்தை கண்டுவிட்டு, துரிதமாக அதனை நடத்துபவர் அக்குறைபாடுகளை முற்றாக களையவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


அதற்காக சில நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பழைய குருடி கதையாகியிருக்கிறது.

அதன்பின்னரும் பொறுக்காத பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். பலன் – குறிப்பிட்ட சிற்றுண்டிச்சாலை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சீல் வைத்து மூடப்பட்டிருக்கிறது.

ஒரு சிற்றுண்டிச்சாலையையே சரியாக நேர்த்தியாக நிருவாகம்


செய்யத் தெரியாதவர்கள், எவ்வாறு இதர மக்கள் தேவைகள் சார்ந்த பணிகளை நிருவாகம் செய்வார்கள்..? என ஶ்ரீமான் பொதுஜனன் கேட்கிறார்.

கடந்த சில வருடங்களாக வடமாகாண சபையும் இயங்கவில்லை. அது இயங்கிய காலத்திலும் பல நிருவாகக் குறைபாடுகள் அங்கு நீடித்திருந்ததை அரசியல் அவதானிகள் அன்று சுட்டிக்காட்டினர்.


வடக்கு ஆளுநருக்கும் அங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஏழாம் பொருத்தம். இவர்களின் விதண்டா வாதங்களையும் நாம் ஊடகங்களில் பார்த்தோம்.

யாழ். மாநகர சபையிலும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடக்கும் சமர்களையும் பார்த்து வருகின்றோம்.

இந்த அரசியல் அலைப்பறைகள் அண்மையில் நல்லூரில் தியாகி


திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் உச்சபட்ச காட்சியாக அரங்கேறியது.

படித்தவர்கள், கல்விமான்கள் உருவாகிய வடபுலத்தில் தற்போது ஏன் இந்த அவல நிலை..?

யாழ். பொது நூலகம் அன்று எரிக்கப்பட்டபோது, அதனைக்கண்டு அதிர்ச்சியுற்று மாரடைப்பு வந்து மரணித்தவர் அருட்திரு. தாவீது அடிகள். பின்னர் புனரமைக்கப்பட்ட நூலகம் 2003 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்படவிருந்தபோது  நகர பிதாவாக இருந்தவர் திரு. செல்லன் கந்தையன்.  அவர் திறந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று அதனையும் அன்று தடுத்தவர்கள் சில சாதிமான்கள்.


அக்காலப்பகுதியில் வெளியான செய்திகள் இடம்பெற்ற பத்திரிகைகளை இங்கே காணலாம்.

இவ்வாறு யாழ். பொது நூலகம் காலத்திற்கு காலம் சர்ச்சைகளையே உருவாக்கியிருக்கிறது.

இப்போது,  அங்கிருந்த சிற்றுண்டிச்சாலை நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை வடபிரதேசத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் பொது நூலகம்  மின்சார கட்டணத்தை செலுத்தாமையினால் மின்சார சபை அதன் இணைப்பினை துண்டித்திருக்கிறது.

நாடெங்கும் அடிக்கடி மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் பின்னணியில், இந்தச்செய்தியும் வெளிவருகிறது.

சுமார் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு அண்மையில் நேர்ந்துள்ள அவலத்தை பாருங்கள்.

அங்கிருக்கும் கணினிகள் பாவனையாளர்களினால் அதிகம் பாவிக்கப்படாத நிலையில் மிகக்குறைந்த கட்டணமே செலுத்தவேண்டியிருந்தது. அதனைக்கூட செலுத்தாத நிருவாகம் எந்த இலட்சணத்தில் இயங்குகிறது.

எந்தவொரு அமைப்பிலும் நிறுவனத்திலும் நிருவாகம் என்பது மிகவும்  முக்கியமானது. நிருவாகக் குறைபாடுகள் தோன்றுவது வழக்கம்தான். ஆனால், அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யாவிட்டால், அக்குறைபாடு புரையோடிவிடும்.  அதிலும் அறிவுக் களஞ்சியமாக திகழவேண்டிய பொது நூலகங்களின் எதிர்காலம் பாழாகிவிடும்.

வடக்கிலிருக்கும் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நீடிக்கும் முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, மக்கள் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டியது காலத்தின் தேவை.

திலீபன் நினைவேந்தலுக்காக ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது போன்று வடபிரதேசத்தில் இயங்கும் பொது நூலகங்களின் நிருவாக விடயங்களை கவனிக்கவும் ஒரு பொதுக்கட்டமைப்பினை விரைவில் உருவாக்கவேண்டும். 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

பொது நூலகங்களை பேணிக்காப்பதற்கு ஏற்ற சிறந்த நிருவாகக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். 

மின்கட்டணம்தானே – சிற்றுண்டிச்சாலைதானே என கவனக்குறைவோடு இருக்கலாகாது.  மனித உடலில் தோன்றும் காயங்கள் புரையோடினால், மரணமும் நெருங்கிவிடும்.

அவ்வாறுதான் நிருவாகங்களிலும் காயங்கள் புரையோடினால்,  நீதிமன்றங்கள்தான் சீல் வைத்து, முற்றாக  மூடிவிடும். 

வடக்கில் இரண்டு பொது நூலகங்களில் அண்மைக்காலத்தில் நடந்திருக்கும் சம்பவங்களை அங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் அலட்சியமாக பார்த்துவிடாதீர்கள்.

---0---

No comments: