யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத்தூதரகத்தினால் நிதியுதவி
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னார் விஜயம்
தேசிய பேரவையின் உப குழுவொன்றுக்கு நாமலுக்கு தலைமை பதவி
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதியுடன் பேச்சு
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத்தூதரகத்தினால் நிதியுதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத்தூதரகத்தினால் ரூபா 43இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சீனத்தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்றுமுன்தினம் (02) பிற்பகல் 4.00மணியளவில் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டு வந்தது. 2022ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத்தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டது.
சீனத் தூதரகத்தின் நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதாந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.
கோப்பாய் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னார் விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (3) மாலை மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மேலுடன் விசேட கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும் கலந்துகொண்டிருந்தனர்.
மன்னார் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
தேசிய பேரவையின் உப குழுவொன்றுக்கு நாமலுக்கு தலைமை பதவி
- மொட்டு கட்சி செயலாளர் சாகர முன்மொழிவு; அலி சப்ரி ரஹீம் வழிமொழிவு
- கொள்கைத் தயாரிப்பு முன்னுரிமைகளை அடையாளம் காண்பதே பொறுப்பு
தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) உபகுழுவின் தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இதனை வழிமொழிந்தார்.
இதில் கொள்கைத் தயாரிப்புத் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அரச நிர்வாகக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், சுகாதாரம் மற்றும் கல்விக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், மீன்பிடி, உணவுக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், மின்சக்தி மற்றும் வலுசக்தி கொள்கைகளை நவீனமயப்படுத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல், தொழில்முனைவுகள் குறித்த கொள்கைகளை நவீனமயப்படுத்தல் தொடர்பில் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள குறித்த துறைசார் நிபுணர்களை உப குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய குறுகிய கால யோசனைகளை ஒரு மாத காலத்துக்குள்ளும், நடுத்தர கால யோசனைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்டகால யோசனைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய பேரவையில் சமர்ப்பிக்க குழுவின் உறுப்பினர்கள் இணங்கினர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்திரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, மனோ கணேசன், அலி சப்ரி ரஹீம், ஜோன்ஸ்டன் பெனாண்டோ, ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதியுடன் பேச்சு
கஜேந்திரகுமாருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு
குருந்தூர் மலை பிரச்சினை உட்பட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை என தெரிவித்த அமைச்சர் தனிப்பட்ட விதத்திலும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் எந்த விதத்திலும் எவரும் இனவாதமாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர் என தெரிவித்த அமைச்சர், நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment