உலகச் செய்திகள்

 மேற்குலகின் கடந்த காலம் குறித்து புட்டின் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

ஜப்பானுக்கு மேலாக வட கொரியா ஏவுகணை வீச்சு: பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்கா: இயன் புயலால் உயிரிழப்பு 80 ஐ தாண்டியது

தென்கொரியா, அமெரிக்கா வடகொரியாவுக்கு பதிலடி


 மேற்குலகின் கடந்த காலம் குறித்து புட்டின் குற்றச்சாட்டு

“உண்மை, சுதந்திரம் மற்றும் நீதிப் பெறுமானங்களுக்கு எதிராக மேற்குலகம் இந்தியா போன்ற நாடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

கிரம்லினின் செயின்ட் ஜோர்ஜ் மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போது புட்டின் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். “மத்திய காலத்தில் மேற்குலகம் தனது காலனித்துவ கொள்கையை ஆரம்பித்து அமெரிக்காவில் செவ்விந்தியர்களை இனப்படுகொலை செய்து, அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டு, இந்தியா, ஆபிரிக்காவில் கொள்ளையில் ஈடுபட்டதோடு சீனாவுக்கு எதிரான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸின் போர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் போதைப்பொருளுக்கு ஆட்படுத்தி ஒட்டுமொத்த இனக் குழுக்களையும் அழித்தது” என்று புட்டின் குறிப்பிட்டார்.    நன்றி தினகரன் 





உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

மேற்குலகுடனான நேரடி  போர் பற்றி ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்யுடன் கடந்த செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரு போர் முனைகளில் தமது படை வேகமாக முன்னேறி பல டஜன் கிராமங்களை மீட்டிருப்பதாக செலென்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுடன் இணைந்து இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பைடன், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனின் நான்கு பகுதிகளை தனது ஆட்புலத்திற்குள் இணைக்கும் அறிப்பை வெளியிட்ட பின்னர் உக்ரைனுக்கான அமெரிக்காவின் முதல் இராணுவ உதவியாக இது உள்ளது.

அமெரிக்க இராணுவ கையிருப்பில் இருந்து உடன் இந்த ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் இதில் நான்கு துல்லியமான ரொக்கெட் லோஞ்சர்கள், 75,000 சுற்று வெடிபொருட்களுடன் 32 ஹோர்விட்சர்கள், கண்ணிவெடிகள் அடங்குவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மேலும் ஆயுதங்களை வழங்குவது அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் அனடோலி அன்டோனோவின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. “இதனை எமது நாட்டின் மூலோபாய நலனுக்கு ஏற்பட்டிருக்கும் உடனடி அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம்” என்று அவர் நேற்று டெலிகிராம் செயலியில் பதிவிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் இந்த இராணுவ தயாரிப்புகளின் விநியோகம், நீடித்த இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை மாத்திரம் ஏற்படுத்தாது அது ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான நேரடிப் போருக்கான அச்சுறுத்தலையும் அதிகரிக்கிறது” என்றும் அவர் எச்சரித்தார்.

ரஷ்ய ஆட்புலத்தை பாதுகாப்பதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அண்மைக் காலத்தில் சூசகமாக எச்சரிக்கை விடுத்து வருகிறார். உக்ரைனுக்கு 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்குவது பற்றிய அறிவிப்பை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் புதிய அறிவித்தல் மூலம் போர் ஆரம்பித்தது தொடக்கம் அமெரிக்கா உக்ரைனுக்கு 16.8 பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது.    நன்றி தினகரன் 






ஜப்பானுக்கு மேலாக வட கொரியா ஏவுகணை வீச்சு: பதற்றம் அதிகரிப்பு

ஜப்பானுக்கு மேலால் வட கொரியா நேற்று (04) இடைநிலைத் தூர ஏவுகணை ஒன்றை வீசியுள்ளது. இது ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் அவதானத்தை அதிகரித்துள்ளது.

சுமார் 4,500 கிலோமீற்றர் பறந்த இந்த பலிஸ்டிக் ஏவுகணை பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இது அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க போதுமான தூரமாகும்.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானுக்கு மேலால் வட கொரியா ஏவுகணை வீசி இருப்பது இது முதல் முறையாகும். இதனால் ஜப்பான் தனது நாட்டு மக்களுக்கு அரிதான எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதம் சோதிப்பதை ஐ.நா. தடை செய்துள்ளது. மற்றொரு நாட்டின் மேலால் முன்னெச்சரிக்கை அல்லது அறிவுறுத்தல் இன்றி ஏவுகணையை பறக்கவிடுவதும் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானதாகும். ஹொகைடோ தீவு உட்பட வடக்கு ஜப்பானில் உள்ள மக்கள் சைரன் ஒலியுடனேயே நேற்றுக் காலை விழித்துக் கொண்டதோடு, “வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. தயவுசெய்து கட்டடங்கள் அல்லது நிலவறைக்குள் இருந்து வெளியேறுங்கள்” என்ற எச்சரிக்கை குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டது.

ஏவுகணை பறந்த நேரத்தில் ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

வட கொரிய ஏவுகணை ஒன்று பயணித்த நீண்ட தூரத்தை இந்த ஏவுகணை பதிவு செய்ததோடு, சுமார் 1000 கிலோமீற்றர் உயரம் வரை தாவியது. இது சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பதை விடவும் உயரமாகும்.

வட கொரியா ஒரே வாரத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




அமெரிக்கா: இயன் புயலால் உயிரிழப்பு 80 ஐ தாண்டியது

அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலைனா, தெற்கு கரோலைனா ஆகிய பகுதிகளில் இயன் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஐத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்கள் மீட்சியடைய பில்லியன் கணக்கான டொலர் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் குறைகூறப்படுகிறது.

புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இயன் புயல் தாக்கிய இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.

எனவே மீட்புக் குழுக்கள் தொலைதூரப் பகுதிகளில் தேடல் பணிகளை மேற்கொள்ள முடிவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 






தென்கொரியா, அமெரிக்கா வடகொரியாவுக்கு பதிலடி

ஜப்பான் வானுக்கு மேலால் வட கொரியா ஏவுகணை வீசியதற்கு பதிலடியாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா தீவிர ஏவுகணை ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் 4,600 கிலோமீற்றர் தூரம் பாய்ந்த வட கொரியாவின் இடைநிலை தூர ஏவுகணை பசுபிக் கடலில் விழுந்தது. இந்நிலையில் நேற்று (05) தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் தரையில் இருந்து தரையை தாக்கும் நான்கு ஏவுகணைகளை கடலுக்கு செலுத்தியதாக தென்கொரிய கூட்டுப் படை பிரதானி தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை தாக்குதல் இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ கூட்டு பயிற்சியில் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது நாட்டின் திறன்களை நிரூபிக்கும் முயற்சி மற்றும் வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களை தடுக்கும் என்று கூட்டுப் படை பிரதானி தெரிவித்துள்ளார்.

வட கொரியா இந்த ஆண்டில் பெரும் எண்ணிக்கையான ஆயுதச் சோதனைகளை நடத்தியிருப்பதோடு இதில், தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளும் அடங்கும்.    ன்றி தினகரன் 






No comments: