'அயல்நாட்டுக்கே முதலிடம்' என்ற உறுதியான கொள்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள், ஆதரவுகள் ஏராளம்.இந்நிலையில் சீனக்கப்பலின் இலங்கை வருகையானது இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரப் போவதில்லை!
அம்பாந்தோட்டை துறைமுகமானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படுமென்று இந்தியாவுடன் அவ்வேளையில் இலங்கை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட்டது. ஆனால் அந்த உடன்படிக்ைக மீறப்படும் வகையில் இப்போது சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று அதே துறைமுகத்திற்கு வர இருக்கின்றது.
அதற்கு முன்பதாக இலங்கையின் சமீப கால நெருக்கடி குறித்தும், இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் இவ்விடத்தில் குறிப்பிடுவது முக்கியம். இலங்கைக்கு இந்தியா பல பில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை நட்பு ரீதியாக வழங்கியுள்ளது. பெருந்தொகைக் கடன்தொகையையும் வழங்கியுள்ளது.
இலகுவான வட்டி வீதம் கொண்ட கடன்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த வேளையில் விரைந்து வந்து உதவி வழங்கிய நாடு இந்தியா ஆகும். எந்தவொரு நிபந்தனையின் பேரில் இல்லாத உதவிகளை இந்தியா வாரி வழங்கியுள்ளது.
இந்திய மத்தி அரசானது உணவு நிவாரணம், எரிபொருள், கடனுதவி, மருந்துகள் என்றெல்லாம் ஏராளமான உதவிகளை நெருக்கடி உதவிகளாக சமீப காலமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதேசமயம் தமிழக அரசாங்கமும் இலங்கையில் அல்லலுறும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது தவிர தமிழ்நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் பலர் இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக உதவி வருகின்றார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் உறுதியான கொள்கையொன்று உள்ளது. 'அயல்தேசத்துக்கு முதலிடம்' என்பதே இந்தியாவின் கொள்கை ஆகும். இலங்கைக்கு துயர் நேருகின்ற அனைத்து வேளைகளிலும் இந்தியா இவ்வாறு விரைந்தோடி வந்து உதவிக் கரம் நீட்டியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆசிய நாடுகளிலேயே இலங்கைக்கு முன்னுரிமை அளித்து இந்தியா உதவி செய்து வருகின்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் உதவுவதென்பதில் இந்திய பாராளுமன்றத்தில் கூட மாறுபட்ட நிலைப்பாடு கிடையாது. இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர். அவ்வாறு இலங்கையை உற்ற நண்பனாக இந்தியா நோக்கும் போது, இன்றைய நிலைவரமானது இந்தியாவுக்கு கவலை அளிப்பது தவிர்க்க முடியாததாகும். தனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை இலங்கை மீறுவதாகவே இந்திய இராஜதந்திரிகள் கவலை கொள்கின்றனர். சீனாவின் உளவுக்கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருகை தருவது இந்தியாவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதென்பது இந்திய அரசாங்க வட்டாரங்களில் வெளியாகின்ற தகவல்களிலிருந்து புலனாகின்றது.
இலங்கைக்கு இன்று நேற்று அன்றி பன்னெடுங்காலமாக இந்தியா உதவி வழங்கி வருகின்றது. அத்துடன் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் இந்தியாவின் பங்களிப்பு இருந்துள்ளதென்பது தெரிந்த விடயமாகும். இவ்வாறான பின்னணிகளை வைத்துப் பார்க்கின்ற போது சீனக் கப்பலின் வருகையானது இந்தியாவுக்கு மகிழ்ச்சியளிக்கப் போவதில்லையென்பது திண்ணம்.
சீனா ஏற்கனவே திட்டமிட்டபடி தனது உளவுக் கப்பலை இலங்கைக்கு அனுப்புமானால், எதிர்காலத்தில் இந்தியாவின் பாரிய உதவிகளை இலங்கை இழக்க நேரிடும் என்பது பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.
நிலைமை இவ்வாறிருக்ைகயில் இலங்கையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் கூட சீனாவின் கப்பல் விவகாரத்தை கவலையுடனேயே நோக்குகின்றனர். 'இந்தியாவை பகைக்கக் கூடாது' என்று தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். எரிபொருள் தேவை மற்றும் சிறு பராமரிப்பு வேலைகளை முடித்துக் கொண்டு பயணத்தை தொடரும் நோக்குடன் இந்தக் கப்பல் வருவதாக இலங்கை தெரிவித்தாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு பலரும் தயாராக இல்லை.
இன்றைய வேளையில் இதற்கான அவசரம் என்ன என்பதே சர்வதேச நோக்கர்களின் வினாவாகும். சீனாவின் உளவுக் கப்பலான 'யுவான்வாங் 5' ஹம்பாந்தோட்டைதுறைமுகத்தில் எதிர்வரும் 11 முதல் 17 வரை தரித்து நிற்கும் என இலங்கை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பெருங்கடலை சீனா தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தி வருவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தக் கப்பல் விவகாரம் பிராந்தியத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். 2014 ஆம்ஆண்டு, சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று கொழும்பில் தரித்து நின்றது. அவ்வேளை, இந்தியா தனது கடுமையான கோபத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டமை ஞாபகமிருக்கலாம். அதேபோல, 2021ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் பெறாமல் யுரேனியம் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
2014 ஆம்ஆண்டு இலங்கைக்கு வந்த நீர்மூழ்கிக் கப்பலை விட 'யுவாங்வேங் 5' என்ற கப்பல் மிகவும் சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் கொண்டது என்றும் தென்னிந்தியாவின் துறைமுகங்களிலுள்ள தகவல்களை இலகுவாக கைப்பற்றக் கூடிய திறனை இந்தக் கப்பல் பெற்றிருக்கிறது எனவும் 'எக்கொனொமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மியன்மார் முதல் கிழக்கு ஆபிரிக்க நாடுகள் வரையிலான சீன உள்கட்டமைப்பு திட்டங்களின் 'இரட்டை' பயன்பாடுகள் குறித்து இந்தியா நீண்ட காலமாக கேள்வி எழுப்பி வந்திருக்கிறது. சீனாவின் இத்தகைய நகர்வுகள் இந்தியாவின் நலன்களுக்கு நேரடி சவாலாக அமையும் என்று இந்தியா தொடர்ந்தும் நம்பி வருகிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment