உலகச் செய்திகள்

அமெரிக்க ஆளில்லா வான் தாக்குதல்: அல் கொய்தா தலைவர் சவாஹிரி படுகொலை

அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தாய்வான் விஜயத்தால் பரபரப்பு

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிட்டது சீனா: போர் ஒத்திகைகள் தொடர்ந்தும் உக்கிரம்

தாய்வானை சூழ சீனாவின் போர் ஒத்திகைகள் தீவிரம்

ஈரானில் வெள்ள அனர்த்தம்: 80 பேர் பலி: பலர் மாயம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடைமழை; வெள்ளத்தினால் மக்களுக்கு அதிக பாதிப்புகள்


அமெரிக்க ஆளில்லா வான் தாக்குதல்: அல் கொய்தா தலைவர் சவாஹிரி படுகொலை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் ஐமன் அல் சவாஹிரி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கான் தலைநகர் காபுலில் கடந்த ஞாயிறன்று அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரஜைகளுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறைகள் தொடர்பில் சவாஹிரி வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்ததாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதி தொடர்ந்தும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். 2011இல் ஒசாமா பின் லாடன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே சவாஹிரி, அல் கொய்தா தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

செப்டெம்பர் 11 தாக்குதலை அவர் மற்றும் பின்லாடன் இணைந்தே திட்டமிட்டதோடு அவர் அமெரிக்காவின் அதிகம் தேடப்படும் ஒருவராக இருந்து வந்தார்.

பாதுகாப்பு இல்லம் ஒன்றில் மாடி முகப்பு பகுதியில் இருந்தபோதே சவாஹிரி மீது இரு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருந்தபோதும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலில் சவாஹிரி மாத்திரமே கொல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

71 வயதான அல் கொய்தா தலைவர் மீதான தாக்குதல் தொடர்பில் பல மாதங்கள் வகுக்கப்பட்ட திட்டத்திற்குப் பின்னர் இந்தத் துல்லியமான தாக்குதலுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கொலை 2001 இல் கொல்லப்பட்ட சுமார் 3000 பேரின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படுவதாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எத்தனை காலம் எடுத்துள்ளது, எங்கே ஒளிந்துள்ளீர்கள் என்பது விடயம் அல்ல. நீங்கள் எமது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து அகற்றிவிடும்” என்று கூறிய பைடன், “எமது தேசம் மற்றும் அதன் மக்களை பாதுகாப்பதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என்றார்.

2000ஆம் ஆண்டு ஒக்டோபரில் 17 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்ட அதெனில் யு.எஸ்.எஸ் கோல் கடற்படை மீதான தாக்குதல், 223 பேர் கொல்லப்பட்ட கென்யா மற்றும் தன்சானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான 1998 தாக்குதல் உட்பட வன்முறைகளிலும் சவாஹிரி மூளையாக செயற்பட்டதாக பைடன் குற்றம்சாட்டினார்.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கான பாதுகாப்பான தளமாக இருக்காது என்றும் பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை தெளிவாக மீறுவதாக உள்ளது என்று தலிபான் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் சவாஹிரி பற்றி குறிப்பிட்டுக் கூறவில்லை.

“இவ்வாறான செயற்பாடுகள் கடந்த 20 ஆண்டுகளின் தோல்வி அடைந்த அனுபவங்களின் தொடர்ச்சி ஒன்றாகவே இருப்பதோடு, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்கு எதிராக உள்ளது” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த நடவடிக்கை சட்ட அடிப்படையைக் கொண்ட ஒன்று என்பதை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெற்று கிட்டத்தட்ட ஓர் ஆண்டு பூர்த்தி ஆகும் நிலையிலேயே சவாஹி கொல்லப்பட்டுள்ளார்.   நன்றி தினகரன் 
அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தாய்வான் விஜயத்தால் பரபரப்பு

சீனா இராணுவ ஒத்திகை: வர்த்தகக் கட்டுப்பாடு

சீனாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தில் அவர் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென்னை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.

தாய்வானுக்கு கடந்த 25 ஆண்டுகளில் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியாக பெலோசி பதிவாகியுள்ளார். இந்த தீவை அமெரிக்கா கைவிடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துவதற்காகவே தமது தூதுக்குழு இங்கு வந்ததாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெலோசியின் இந்த விஜயத்திற்கு அமெரிக்கா விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என்று சீனா முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.

தாய்வான் சுயமாக ஆளப்படுகின்றபோதும், அதனை தனது பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதுகிறது. அது மீண்டும் தனது நாட்டுடன் ஒன்றிணைக்கப்படும் என்று சீனா குறிப்பிடுகிறது.

“தாய்வானுடன் எப்போதும் நிற்பதாக நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வாக்குறுதி ஒன்றை அளித்தது. இன்று எமது தூதுக்குழு தாய்வானுக்கு வந்து தாய்வான் மீதான எமது பொறுப்பை கைவிடமாட்டோம் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்” என்று பெலோசி தெரிவித்தார். இதில் அவர் அமெரிக்காவின் தாய்வான் உறவுகள் சட்டத்தை குறிப்பிட்டே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதோடு தாய்வான் விவகாரமும் இதன் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது.

பெலோசியின் வருகை இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள், தாய்வானை சூழவுள்ள கடல்பகுதியில் இந்த வாரத்தில் இராணுவ ஒத்திகை பற்றிய அறிவிப்பை சீனா வெளியிட்டது.

அதேபோன்று தாய்வானுடனான வர்த்தகங்களிலும் சீனா கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. நிர்மாணத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ஒன்றான மணல் ஏற்றுமதி மற்றும் தாய்வானின் இறக்குமதிகளான சிட்ரஸ் பழம் மற்றும் சில வகை மீன்கள் நிறுத்தப்படும் என்று சீன வர்த்தக மற்றும் சுங்க அதிகாரசபை அறிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிட்டது சீனா: போர் ஒத்திகைகள் தொடர்ந்தும் உக்கிரம்

தாய்வான் தொடர்பில் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் விரிசல் அடைந்திருக்கும் நிலையில் காலநிலை மாற்றம், போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் உட்பட முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிடுவதாக சீனா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வானுக்கு பயணித்ததை அடுத்து சீனா அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. தாய்வனை தனது பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, அதனை இணைப்பதற்கு தேவை ஏற்படின் இராணுவத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் மறுக்கவில்லை.

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் தாய்வானை சுற்றிவளைத்து பாரிய போர் ஒத்திகைகளை சீனா நடத்தி வருகிறது. இதனை அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் கண்டித்துள்ளன.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சு நேற்று அமெரிக்காவுக்கு எதிராக மேலும் அதிரடி நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறுபட்ட உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகளை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்தது.

உலகின் மிகப்பெரிய சூழல் மாசுக்குக் காரணமான இந்த இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதாக கடந்த ஆண்டு உறுதிபூண்டிருந்தன. காலநிலை பற்றிய பிரச்சினை தொடர்பில் வழக்கமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த இரு நாடுகளும் இணங்கின.

மறுபுறம் தாய்வானுக்கு பயணித்த பெலோசி மீது சீனா தடைகளை அறிவித்துள்ளது. எனினும் நேற்று தனது பயணத்தை காத்துப் பேசிய பெலோசி, தாய்வானை சீனா தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அங்கமாக தாய்வானுக்குச் சென்ற நான்சி பெலோசி, நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சீன எச்சரிக்கையை மீறி தாய்வானுக்குச் சென்றதால் தமக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள சீன நடவடிக்கை குறித்தும் பேசினார்.

அப்போது அவர், “எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது,” என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்திற்கு எதிராக சீனாவின் பதில் செயற்பாடுகள் பற்றி தாய்வானும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கு கூட்டணி நாடுகளுக்கு தாய்வான் பிரதமர் சூ செங் சென்ச் அழைப்பு விடுத்துள்ளார்.

‘அண்டையில் இருக்கும் கொடிய அயலவர் எமது அதிகாரத்தையும் உலகின் பரபரப்பான கடல்பகுதியில் தன்னிச்சையான ஆபத்தை ஏற்படுத்தும் அதன் போர் ஒத்திகையையும் கைவிடும் என்று எதிர்பார்க்க முடியாது’ என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாய்வான் தீவின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் போர் ஒத்திகையை மீண்டும் ஆரம்பித்திருப்பதாக சீன இராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.விமானப்படை மற்றும் கடற்படையின் போர் தளவாட திறன்களை பரிசோதிக்கும் நடவடிக்கையாக இந்த கூட்டுப்படை ஒத்திகை நடத்தப்படுவதாக சீன சமூக ஊடக தளமான வெய்போ தெரிவித்துள்ளது.

தனது போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக 11 ஏவுகணைகளை தாய்வானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் சீனா ஏவியது. அதிக உயரத்துக்குச் சென்று இலக்கை நோக்கி விழும் பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தவை இந்த ஏவுகணைகள்.

தாய்வானின் நிலப்பரப்புக்கு மேலே சில ஏவுகணைகள் சென்றதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக சீனா எதுவும் கூறவில்லை.

இதேவேளை ஏவுகணை அமைப்புகளை தாய்வான் தனது எல்லையில் நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தாய்வான் மட்டுமல்லாமல் அருகேயிருக்கும் ஜப்பானுக்கும் சீனாவின் போர் ஒத்திகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 ஏவுகணைகள் தாய்வானுக்கு மேலே பறந்ததாகவும், 5 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை இந்தப் போர் ஒத்திகை தொடரும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா மற்றும் தாய்வான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பீஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தாய்வானுக்கு தப்பி ஓடியது.

தாய்வான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தாய்வானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாத்திகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தாய்வானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.   நன்றி தினகரன் 

தாய்வானை சூழ சீனாவின் போர் ஒத்திகைகள் தீவிரம்

அமெரிக்க அரசியல்வாதி நான்சி பொலேசி தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அந்த தீவை சூழவிருக்கும் கடல் பகுதியில் சீனா பாரிய போர் ஒத்திகைகளை முடுக்கிவிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று நண்பகல் ஆரம்பமான இந்தப் போர் ஒத்திகைகள் தாய்வானில் இருந்து 12 மைல்களுக்குள் இடம்பெறுகின்றன.

இந்தப் பிராந்தியத்தின் அந்தஸ்தை சீனா மாற்ற முயற்சிப்பதாக தாய்வான் குறிப்பிட்டுள்ளது.

பொலேசி சிறிது காலமே தாய்வானுக்கு பயணித்திருந்தபோதும், அது பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. தாய்வானை தனது பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா கருதுகிறது.

இந்நிலையில் சீனாவின் பதில் நடவடிக்கையாகவே தாய்வானை சூழ இந்த மிகப்பெரிய போர் ஒத்திகை நடைபெறுவதோடு, தாய்வானுடனான சில வர்த்தகங்களையும் சீனா முடக்கியுள்ளது.

பரபரப்பான கடல் பகுதியில் இடம்பெறும் இந்த ஒத்திகையில், நீண்டதூர வெடிகுண்டு தாக்குதல்களும் இடம்பெறும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

தாய்வானின் கடல், ஆகாய எல்லைகளை முற்றுகையிடும் சாத்தியமுள்ள இத்தகைய உத்தேசப் பயிற்சிகள் முன்னெப்போதும் நடத்தப்பட்டதில்லை என்று தாய்வானிய பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அவற்றில் சில தனது கடல், ஆகாயவெளிக்குள் இடம்பெறுவதுபோல் திட்டமிடப்பட்டிருந்ததாக தாய்வானிய பாதுகாப்பு அமைச்சு கூறியது.

இந்த ஒத்திகையை ஒட்டி கடல் மற்றும் வான் பகுதிகள் முடக்கப்படும் நிலையில், கப்பல்களுக்கு வேறு பாதைகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு மாற்று வான் பாதைகள் பற்றி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த இராணுவ ஒத்திகைகள் பொறுப்பற்ற செயல் என்றும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுல்லிவான் எச்சரித்துள்ளார்.

சீனா இந்த இராணுவ ஒத்திகைகளை நடத்தும் பகுதிகள் பற்றி ஜப்பான் கவலை வெளியிட்டுள்ளது. அதன் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அத்துமீறலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

தாய்வான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான ‘முதல் தீவு சங்கிலி’ என்றழைக்கப்படும் பட்டியலில் தாய்வான் உள்ளது.

சீனா தாய்வானை கைப்பற்றினால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.   நன்றி தினகரன் 

ஈரானில் வெள்ள அனர்த்தம்: 80 பேர் பலி: பலர் மாயம்

ஈரானில் வெள்ளப் பேரிடரில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேரைக் காணவில்லை.

பொதுவாக மழை குறைவாக இருக்கும் ஈரானின் தெற்குப் பகுதி உள்ளிட்ட பல வட்டாரங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக தேசிய ஊடகம் தெரிவித்தது. 60 நகரங்களும் 500க்கும் அதிகமான கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெஹ்ரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் முப்பத்தைந்து பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளையும் வாகனங்களையும் மூடிய நிலச்சரிவே பெரும்பகுதி மரணங்களுக்குக் காரணம்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெய்னி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவத்தார். ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டார்.     நன்றி தினகரன் 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடைமழை; வெள்ளத்தினால் மக்களுக்கு அதிக பாதிப்புகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள இராமநதி மற்றும் கடனாநதி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 84 கன அடி கொள்ளளவு கொண்ட இராமநதி, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சுமார் 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகா பகுதியில் உள்ள பாலாற்று நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூரில் உள்ள 12 அடி உயர தடுப்பணை நிரம்பியுள்ளது. பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாலாற்றில் படுகையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும். தற்போத அணையின் நீர்மட்டம் 113.5 அடியை எட்டியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினகளாக கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக உபநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக செல்லும் பாலம் மூழ்க்கும்படி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது

மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக பாலத்தை கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், மாநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேல் அரசம்பட்டு உத்திர காவேரி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேறு வருகிறது

வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஜவ்வாது மலை தொடரிலும் கனமழை பெய்து வருவதால், அமிர்தி காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமிர்தியில் இருந்து ஜமுனாமத்தூர் செல்லும் தரைபாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 


No comments: