படித்தோம் சொல்கின்றோம் தமிழகத்தை சாராதவரின் நாவலில் தமிழகச் சூழல் ! கதை சொல்லி நடேசனின் மற்றும் ஒரு நாவல் பண்ணையில் ஒரு மிருகம் !! முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன்,  இதுவரையில்  சிறுகதை, நாவல்,  பயண இலக்கியம், மற்றும் தனது தொழில்சார் அனுபவக் கதைகள் என பல நூல்களை வரவாக்கியிருப்பவர்.

நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர்.  அதாவது 1990 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்தத்துறையில்  தீவிரமாக இயங்கினார். கடந்துவிட்ட மூன்று தசாப்த காலத்துள்  ஈழத்து மற்றும்  தமிழக இலக்கிய சூழலிலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்டவரானவர்.

அதற்கு அவரது நூல்கள் இலங்கையிலும் தமிழகத்திலும்


அச்சிடப்பட்டமை மாத்திரம் காரணமல்ல, அவரது வலைப்பூவினை தொடர்ந்து வாசிப்பவர்களும் காரணம்தான்.

இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் மூன்று  பதிப்புகளைக்கண்டுள்ளது .  இதுவே இவரது முதலாவது நூலாகும்.

இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். எனினும்,  இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. 1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது

நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது அசோகனின் வைத்தியசாலை என்ற  மற்றும் ஒரு நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவை தவிர கானல் தேசம் ( நாவல் )    சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல்,   அந்தரங்கம்  (  சிறுகதை )
நைல்நதிக் கரையோரம் ( பயண இலக்கியம்  ) முதலானவற்றையும் வரவாக்கியிருக்கும் நடேசனின் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் இந்த ஆண்டு ( 2022 ) வெளியாகியிருக்கிறது.


இலங்கையில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டவரான மூத்த இடதுசாரித் தோழர் வி. பொன்னம்பலம் அவர்களுக்கே இந்த நாவல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டு புறநகரப்பிரதேசத்தில் ஒரு பண்ணையில் வேலை செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு,  அங்கு  தான் கற்றதையும் பெற்றதையும் நீண்டகாலம் மனதில் அசைபோட்டுவந்திருக்கும் நடேசன்,  காலம் தாழ்த்தி கதை சொல்லியாகத் தோன்றி இந்த நாவலை படைத்துள்ளார்.

அந்தத் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தந்த தோழர் வி. பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவிக்குமுகமாக அன்னாருக்கே இந்த நாவலையும் சமர்ப்பணம் செய்துள்ளார். ஆனால், அதனைப் பார்க்கும் பாக்கியம் அற்றவராக நாம்                வி. பி. என அழைக்கும் அந்த சமூகப்போராளி 1994 ஆம் ஆண்டு கனடாவில் மறைந்துவிட்டார்.

அவரும் இலங்கையில் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு அடிநிலை மக்களுக்காக குரல் கொடுத்தவர்தான்.  நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம் நாவலும் சாதி பற்றி பேசுகிறது.  இந்தச் சாதி அமைப்பு முறை இலங்கையிலும் தமிழகத்திலும் வெவ்வேறு கட்டுமானங்களுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது.  இவற்றுக்கு எதிராக போராடியவர்கள் மறைந்தாலும்,  இந்த சாதிக்கட்டுமானங்கள் இன்னமும் மறையவில்லை என்பதையும் நடேசனின் நாவல் சித்திரிக்கின்றது.

இந்நாவலில் நடேசன் எழுதியிருக்கும் என்னுரையிலிருந்து ஒரு பகுதி:

 “ பிறப்பின் அதிர்ஷ்டத்தால், உயர்சாதி என்ற சமூகச் சூழலில் பிறந்தவர்களுக்கு அதனால் ஏற்படும் சிறிய நன்மைகளை தாங்கள் இழக்கவிரும்பாததால், பெரிய துயரங்கள் தொடர்கின்றன. அதே வேளையில், தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராகப் போராடாது இருப்பதும் துயரமே. அவர்களுடைய தலைவர்கள் அதைத் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாதிவேறுபாடுகளைப் பேணிப் புதையலைக்காக்கும் பூதங்களாகிறார்கள்.

இப்போ, பிராமணர் போன்ற உயர்சாதியினரைவிட ஒடுக்குமுறையில் ஈடுபடுவது வன்னியர், நாடார், தேவர் போன்ற இடைச்சாதியினரே என்பது நான் கண்ட உண்மை. அவர்களே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதால் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதற்குப் பொருளாதார நோக்கமும் உள்ளது. 

இலங்கையிலும் இந்தியாவிலும் சாதியின் பெயரால் நடந்த ஆணவக்கொலைகள் பற்றி அறிந்திருக்கின்றோம்.  ஈழத்து மூத்த எழுத்தாளர்கள்  கே. டானியல் , செ. கணேசலிங்கன்  ஆகியோரின் சில நாவல்கள்  இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கின்றன.

நடேசனின் புதிய நாவல்  தமிழகத்தில்  ஒரு  பண்ணையின் அன்றைய  நிலக்காட்சியையும் அங்கு வாழ்ந்த – மடிந்த மாந்தர்கள் பற்றியும் பேசுகின்றபோது,  மாயாவாத சித்திரிப்புக்கும் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்டு  கொல்லப்பட்ட  ஒரு பெண்ணின் குரலை அமானுஷ்யமாக  படரவிட்டு கதையை நகர்த்தும் புதிய பாணியை நடேசன் கையாண்டுள்ளார்.

அந்தப்பண்ணையில் வாழ்ந்த மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் பெயர் சூட்டப்பட்டிருந்தது.  அந்த வாய்பேசாத மிருகங்களுக்கு மத்தியில்,  இளம் குருத்துக்களான சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் மனித உருவில் நடமாடிய  ஒரு மிருகத்தையும் இந்நாவல்  காண்பித்திருக்கிறது.

1985 ஆம் ஆண்டு காலத்தில் தொடங்கும் கதை, சுமார் ஒன்றரை வருடகாலத்து சம்பவங்களையும், அதற்கு முன்னர் நிகழ்ந்தவற்றையும்  சித்திரிக்கின்றது.

காலங்கள் கடந்து 2003 ஆம் ஆண்டளவில், அந்தப்பண்ணை இப்போது எப்படி இருக்கும் என்பதை பார்த்து வந்தும் இந்தக்கதை சொல்லி பின்கதையாக குறிப்புகளை பதிவுசெய்துள்ளார்.

அந்தவகையில்  பண்ணையில் ஒரு மிருகம் புனைவாக  மட்டுமல்ல. நிஜத்தையும் பேசியிருக்கிறது.

இந்நாவலுக்கு எழுத்தாளரும் முன்னாள் ஐ. ஏ. எஸ். அதிகாரியுமான சிவகாமி அவர்கள் இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள் என்ற தலைப்பில் சிறப்பானதோர் முன்னுரை எழுதியிருக்கிறார்.

---00---

( நன்றி: யாழ். தீம்புனல் வார இதழ் )

letchumananm@gmail.com

 

No comments: