இலங்கையர் 46 பேர் கப்பலில் நாடு கடத்தல்
காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் தொடர்பில் உரிய விசாரணை அவசியம்
போராட்ட இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்
கௌரவ தீர்வு கோரி நூறுநாள் செயலமர்வு
இலங்கையிலுள்ள WFP, UNICEF, UNFPA ஆகியவற்றுக்கு ரூ. 490 மில்லியன் நிதி வழங்கியுள்ள நோர்வே
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு
இலங்கையர் 46 பேர் கப்பலில் நாடு கடத்தல்
நேற்றுக் காலை கொழும்பை வந்தடைந்தனர்
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை,மீளவும் ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலிய கப்பலொன்று நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டனர். இதன் போது அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களே, அவுஸ்ரேலிய கப்பல் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று, மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கை பங்காளிகளுடனான உறவை அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர்வாக மதிப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் . நன்றி தினகரன்
காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் தொடர்பில் உரிய விசாரணை அவசியம்
- சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்
கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் மற்றும் காலிமுகத்திடலில் சடலங்கள் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபர் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக பல தனிநபர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
மேலும் கரையோரப்பகுதிகளில் கரையொதுங்கும் சடலங்கள் குறிப்பாக காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சடலங்கள் மீட்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் எந்த வித விளக்கத்தையும் வெளியிடாததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
போராட்ட இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்
போராட்டக்களத்திலுள்ள அனைத்து தரப்பு இளைஞர், யுவதிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான், தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம், இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க , அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று, நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி, அக்குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.
அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாகும். தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாக இருந்தது.
தற்போது எந்த தவறும் செய்யாது களத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால், அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டி னர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தமை, தங்களது தலைமுறையின் தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும், அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர். ரல் நன்றி தினகரன்
கௌரவ தீர்வு கோரி நூறுநாள் செயலமர்வு
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் நேற்று (03) புதன்கிழமை திருகோணமலை மாவட்டத்தில், ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர்களென 150இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக்கோரி நடைபவனியாக வருகைதந்த இவர்கள், மைதானத்தில் கூடியிருந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன் அடுத்தகட்ட போராட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரத்துரைப்பற்றில் நாளை (04) வியாழக் கிழமை காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.
(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்) - நன்றி தினகரன்
இலங்கையிலுள்ள WFP, UNICEF, UNFPA ஆகியவற்றுக்கு ரூ. 490 மில்லியன் நிதி வழங்கியுள்ள நோர்வே
இலங்கையின் உணவு, போஷாக்கு மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள உலக உணவுத் திட்டம் (WFP), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றுக்கு 13 மில்லியன் நோர்வே குரோன்களை (அண்ணளவாக ரூ. 490 மில்லியன்) நிதி உதவிகளை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நோர்வே வெளி விவகார அமைச்சின் சார்பாக, வெளி விவகார அமைச்சர் அன்னிகென் ஹுட்ஃவெல்ட் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நாம் தற்போது எதிர்கொண்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி தொடர்பில் நான் அதிகம் கவலை கொள்கின்றேன். இந்த நெருக்கடியான சூழல் காரணமாகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரதூரமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் நிலவும் உணவு, போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நோர்வே 13 மில்லியன் நோர்வே குரோன்களை ஒதுக்கீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புகளினூடாக இந்த உதவித் தொகை பகிரப்படும் என்பதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்காக பயன்படுத்தப்படும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரன யுரன்லி எஸ்கடேல் (Trine Jøranli Eskedal) கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது நிலவும் இந்த நெருக்கடி சூழ்நிலைக்கு முன்னதாக, அதிகளவு போஷணைக் குறைபாடுடைய சிறுவர்கள் காணப்பட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரதூரமான போஷாக்குத் தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்த சவால்கள் நிறைந்த சூழலில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு பெருமளவில் முகங்கொடுக்க வேண்டிய நிலையும் அதிகரித்துள்ளது.
விவசாய விளைச்சல்கள் பாதிப்பு மற்றும் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முழு அளவிலான மனிதநேயம் சார்ந்த நெருக்கடியை நோக்கி வியாபிக்கலாம் எனவும் எதிர்வுகூரியுள்ளது. துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், எதிர்வரும் மாதங்களில் இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும். இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதநேய பிரதிவினைத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
உலக உணவு ஸ்தாபனத்துக்கு நோர்வே 5 மில்லியன் நோர்வே குரோன்களை வழங்கும். இதனூடாக, பின்தங்கிய குழுக்களை இலக்காகக் கொண்ட நிவாரண உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மேலும் 5 மில்லியன் குரோன்கள் மற்றும் 3 மில்லியன் குரோன்கள் முறையே ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் போன்றவற்றுக்கு வழங்கப்படும். அதனூடாக சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சிறுவர்களுக்குப் பாதுகாப்பளிப்பது மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நோர்வே முன்னுரிமையளிக்கின்றது. இலங்கையில் தற்போது நிலவும் இந்தச் சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சிகள் அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன.
இந்த உதவித் திட்டம் தொடர்பில் உலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் பிரதிநிதியுமான அப்துர்ரஹிம் சித்திக்கி கருத்துத் தெரிவிக்கையில், “உலக உணவு ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவசியமாக அமைந்திருந்த உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளதையிட்டு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். பல மில்லியன் கணக்கானவர்கள் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது எழுந்துள்ள மனிதநேய நெருக்கடிச் சூழல் மேலும் மோசமடைவதைத் தவிர்க்கும் வகையில் எமது முயற்சிகளை மேம்படுத்துவதற்கு சகல உதவிகளும் பங்களிப்பும் எமக்கு அவசியமானதாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இடைக்கால பிரதிநிதி எம்மா பிரிக்ஹம் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது எதிர்கொண்டு இந்த நெருக்கடிய நிலை சிறுவர்களை பல வழிகளில் பாதித்துள்ளது. அவர்களின் கல்வியை அணுகும் திறன், பாதுகாப்பு, போஷாக்கு, சுகாதாரம் மற்றும் நீர், தூய்மை சார்ந்த சேவைகள் போன்றன இதில் அடங்குகின்றன. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் குழுவினர் களத்தில் செயலாற்றுவதுடன், இந்த அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுகின்றனர். நோர்வேயினால் வழங்கப்பட்டுள்ள இந்தப் பங்களிப்பினூடாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு மேலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் சிறுவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் சென்றடைந்து, அவர்களுக்கு அவசியமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமையும்.” என்றார்.
இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலின வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பில் முக்கியத்துவமளிக்க வேண்டியமை தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி குன்லி அதெனியி கருத்துத் தெரிவிக்கையில், “நோர்வே அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்த உதவியினூடாக, தற்போதைய நெருக்கடியான சூழலில், பாலின வன்முறைக்கு முகங்கொடுக்கக்கூடிய பின்தங்கிய நிலையில் காணப்படும் பெண்களுக்கு அவசியமான சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
உலகளாவிய ரீதியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதான பங்காளராகவும் நன்கொடை வழங்குநராகவும் நோர்வே திகழ்கின்றது. இதில் உலக உணவு ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் போன்றனவும் அடங்குகின்றன. இலங்கை மக்களுக்கு அவசியமான தருணங்களில் மனிதநேய உதவிகளை வழங்கிய வரலாற்றை நோர்வே அரசாங்கம் கொண்டுள்ளது. குறிப்பாக சுனாமி அனர்த்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது இவ்வாறான உதவிகளை நோர்வே இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும், இலங்கையில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கும் நோர்வே தொடர்ச்சியான உதவிகளை வழங்குகின்றது. நன்றி தினகரன்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு
சீனி, பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலைகள் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கத்தின் முக்கியஸ்தரான ஜெ.தேவபிரான் தெரிவித்துள்ளார்.
கேள்விப் பத்திரமின்றி நேரடியாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இதுவரை ஒரு கி.கி. மொத்தவிலை
- 600 ரூபாவாக இருந்த பருப்பு 400 ரூபாவாகவும்
- 330 ரூபாவாக இருந்த சீனி 270 ரூபாவாகவும்
- 1,900 ரூபாவாக இருந்த செத்தல் மிளகாய் 1,300 ரூபாவாகவும்
- 600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளைப்பூடு 400 ரூபாவாகவும்
- உருளைக்கிழங்கு ஒரு கிலோ 150 ரூபாவாகவும்
- பெரிய வெங்காயம் ஒரு கிலோ 135 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேள்விப் பத்திரம் விடுவிக்கப்படாமல் நேரடியாக இறக்குமதியாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாலேயே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் குறைவடைந்திருந்தாலும் சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சில்லரை வர்த்தக நிலையங்களில் அதன் பயன்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment