திராய்க்கேணியில் 54 பேர் படுகொலையுண்ட 32ஆம் வருட நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

 Saturday, August 6, 2022 - 6:00am

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ்க் கிராமம் திராய்க்கேணி கிராமமாகும். அங்கு 286 குடும்பங்கள் சீரும் சிறப்புமாக நிம்மதியாக வாழ்ந்து வந்தன.

ஆனால் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி அந்த நிம்மதிக்கும், வாழ்க்கைக்கும் வேட்டு வைக்கப்பட்டது. அங்கு வந்தவர்கள் கிராம மக்களை ஆலயத்திற்கு வரவழைத்து ஏதுமறியாத 54 பேரை மிகவும் குரூரமாக ஈவிரக்கமின்றி கத்தியாலும், கோடரியாலும் வெட்டி கொலை செய்தார்கள்.

தமது கண்களின் முன்னால் தமது உறவுகள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததை கண்டவர்கள் மறுகணமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காரைதீவு, விநாயகபுரம் ,கிரான்குளம், மட்டக்களப்பு என்று இடம்பெயர்ந்தார்கள். பலர் துன்ப வேதனைகளோடு காரைதீவில் இருந்த விபுலானந்த மகாவித்தியாலய அகதி முகாமில் தஞ்சம் அடைந்தார்கள்.

பின்னர் 04 ஆண்டுகளுக்கு பிறகு 1994 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊரான திராய்க்கேணியில் குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால் 121 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறின. ஏனையவர்கள் திரும்பவில்லை.

அங்கு கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணி, ஆண், பெண், குழந்தைள் என்று பலரும் அடங்கியிருந்தனரென்பது குறிப்பிடத்தக்கது. வந்தவர்கள் தமிழிலே பேசினார்கள் என்று சம்பவத்தில் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் கண்முன்னால் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மணி நேரம் கழித்து காரைதீவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரும், இராணுவத்தினரும் வந்து எஞ்சிய மக்களை காப்பாற்றினார்கள்.

காயமடைந்தவர்கள் காரைதீவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். அங்கும் இரண்டு பேர் மரணித்தார்கள் .

இந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது மாத்திரமல்லாமல் மாறாத வடுக்களையும் ,மிகுந்த பயபீதியையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு பெரும் துயரம் கண்ட திராய்க்கேணி மக்கள் 32 வருடங்களுக்கு முன்பு அனுபவித்த அழியாத வரலாற்று வடுக்களை இன்று 32 ஆவது வருடமாக நெஞ்சில் சுமந்து கொண்டு நினைவு கூருகின்றார்கள். இன்று அங்கு 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பலியானோருக்கான ஆத்ம சாந்தி வைபவங்களும் இடம்பெறுகின்றன.

வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)

நன்றி தினகரன் 

No comments: