எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 25 அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தில் எனது வகிபாகம் ! வடக்கிலிருந்தவர்களின் வெளியேற்றமும் இடப்பெயர்வும் !! முருகபூபதி


சென்னைக்கு புறப்படுவதற்கு முதல் நாள் ( 1990 இல் ) இரவு ஏழு மணியளவில் சகோதரி அருண். விஜயராணி தனது கணவர் அருணகிரியுடன் எனது குடியிருப்புக்கு வந்தார்.

அவரது கையில் ஒரு கோவை.

 “ பூபதி அண்ணா…. இதில் எனது சில சிறுகதைகள் இருக்கின்றன. சென்னையில் உங்கள் நண்பர் தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் இதனை சேர்ப்பித்து அச்சிட்டு தருவதற்கு ஏற்பாடு செய்து தரமுடியுமா..?  “ எனக்கேட்டார்.

எனது சமாந்தரங்கள் தொகுதியையும் தமிழ்ப்புத்தகாலயம்தான்


வெளியிட்டது. அதன் வெளியீட்டு அரங்கு மெல்பனில் 25-06-1989 இல் நடந்தபோது அருண். விஜயராணியும் உரையாற்றியிருந்ததுடன், அந்த  நிகழ்வு பற்றிய செய்திக் கட்டுரையையும் வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தார்.

தன்னிடமிருக்கும் ஏற்கனவே வெளியான சிறுகதைகளையும் புத்தகமாக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் பலதடவைகள் அவர் என்னிடம் சொல்லியிருந்தார்.

அக்காலப்பகுதியில் நாம் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தை தொடக்கியிருந்தோம். அருண். விஜயராணி அந்த அமைப்பின் கலாசார செயலாளராக இயங்கினார்.  ஒன்றியத்தின் ஏடாக அவுஸ்திரேலிய முரசு மாத இதழையும் ஆரம்பித்திருந்தோம்.

அதற்கும் அவர்தான் ஆசிரியர்.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணரின் அலுவலகத்தில் பணியாற்றிய  எனது  நண்பர் இலேடியஸ் பெர்ணான்டோ அவ்விதழை கணினியில் தட்டச்சு செய்து வடிவமைத்து தந்துகொண்டிருந்தார்.

ஒரு தடவை யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு இதழையும் அவரே வடிவமைத்தார்.

சென்னையில் ஓவியர் மணியம்செல்வன் இல்லத்திற்குச் சென்று அவுஸ்திரேலியா முரசு அட்டைக்குரிய நிரந்தர ஓவியத்தையும் வரைந்து தருமாறு கேட்டேன்.


நாம் விரும்பியவாறு, இசை, நடனம், மற்றும் கலை இலக்கியத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் அந்த ஓவியத்தை வரைந்து தந்தார்.

அகிலன் கண்ணனிடத்தில் அருண். விஜயராணியின் சிறுகதைகளையும் ஒப்படைத்தேன். அக்கதைகள் அனைத்தையும் விமானப்பயணத்திலேயே படித்து முடித்திருந்தேன்.

அக்கதைகள் இடம்பெற்ற கன்னிகா தானங்கள் நூலுக்கும் ஓவியர் மணியம் செல்வனே முகப்பு படமும் வரைந்து கொடுத்தார்.

குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு அரங்கு மெல்பன் வை. டபிள்யூ. சீ. ஏ. மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையார்   கலாநிதி காசிநாதன் தலைமையில் நடந்தது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் உட்பட  சிலர் உரையாற்றினர்.

அருண். விஜயராணியின்  கன்னிகா தானங்கள் தொகுப்பில் 


இடம்பெற்ற  சிறுகதைகளை  கனடாவில்  வதியும்  சியாமளா  நவரத்தினம் ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்துள்ளார்.   ஆயினும்  ஆங்கில  வெளியீடு வெளிவருவதில்    தொடர்ந்தும்  தாமதம்  நீடிக்கிறது.

அருண். விஜயராணி  எமது அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்  -  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம் முதலானவற்றிலும்  அங்கம் வகித்து  இவற்றின்  வளர்ச்சிக்கு  ஆதரவு வழங்கியவர்.  அத்துடன்  இந்த  அமைப்புகளின்  தலைவியாகவும்  சில வருடங்கள்  பணியாற்றினார்.    நாம்  தொடர்ந்து  நடத்திவந்த  தமிழ் எழுத்தாளர்  விழாக்களிலும்  அவரது  ஆதரவு  தொடர்ந்தது.


ஒருவிழாவில்  இவருடைய முயற்சியினால்  வெளியான  மறைந்த எழுத்தாளர் முனியப்பதாசனின்  சிறுகதைத்தொகுதி  இலங்கையில் அச்சிடப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டது.   அதனை   மல்லிகைப்பந்தல்  ஊடாக  வெளியிட்டிருந்தார்.    முனியப்பதாசனின்  கதைகளை தேடி எடுத்து தொகுத்தவர்  செங்கை ஆழியான்.

இவர்களும்  மல்லிகைப்பந்தலும்  இல்லையேல்  அந்தத் தொகுப்பு வெளிவந்தே  இருக்காது.  முனியப்பதாசனை  ஈழத்து  இலக்கிய  உலகம் மறந்திருந்த  வேளையில்,  அவரை  நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக  அந்த  நூல்  அமைந்தது. இந்நூல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை இலக்கிய ஆர்வலர் ரேணுகா தனஸ்கந்தா ஒரு எழுத்தாளர்விழாவில் சமர்ப்பித்தார்.

  சில  தமிழ் இணையத்தளங்களில் நிறைவடைந்த  விழுதல் என்பது


  எழுகையே
  என்ற மெகா  தொடர்கதைத்தொடரை   புகலிட நாடுகளிலிருந்து  பல படைப்பாளிகள் எழுதினர்.   அதிலும்  அருண். விஜயராணியின் ஒரு அத்தியாயம்  இடம்பெற்றது.

முன்னர்  வீரகேசரியில்  நாளைய  சூரியன் தொடர்கதையில்    சம்பந்தப்பட்டிருந்த  அருண். விஜயராணி , மீண்டும்  எழுதி அங்கம்வகித்த    தொடர்  சர்வதேச  பார்வையுடன்  நிறைவுபெற்றது.

படைப்பாளிகளின் படைப்புமொழி  மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும்  ஊடகங்களின்  வடிவங்களும்  காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.


இந்த    மாற்றங்களுக்கு  மத்தியில்  அருண். விஜயராணி
,  தமிழ்  இலக்கிய பரப்பில் பலதரப்பட்ட காலகட்டங்களில்  எழுதிக்கொண்டிருந்தவர். அவருடைய   குரல்  பாதிக்கப்பட்டவர்கள்  சார்ந்து,  குறிப்பாக  பெண்கள் சார்ந்தே    ஒலித்துக்கொண்டிருந்தது.

எனது அவுஸ்திரேலியா வாழ்வில் குடும்ப சகோதரியாக திகழ்ந்த அவர்,  எனது பிள்ளைகளின் அன்புக்கும் அபிமானத்திற்குமுரியவராகவும் இருந்தார்.

அவர் 13-12-2015 ஆம் திகதி மெல்பனில் மறைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் நானும் மனைவியும் இரண்டாவது மகள் பிரியாதேவியும் சென்று பார்த்தோம். எமது இலக்கியக் குடும்பத்தில்  சகோதரியின்  அற்பாயுள்  இறப்பு இன்னமும்   துயர்படிந்தே காணப்படுகிறது.

எனது எழுத்துலக பயணத்தில் இணைந்து வந்த பலரையும் இவ்வாறு இழந்துவிட்டேன்.

அருண். விஜயராணி பற்றிய விரிவான பதிவு, எனது யாதுமாகி நூலில் இடம்பெற்றுள்ளது.  அத்துடன்   அவரது குடும்பத்தினர் வெளியிட்ட  விஜயதாரகை  என்ற மலரும்  அவரது நினைவுகளை பதிவுசெய்துள்ளது.

-------

சென்னையிலிருந்து திரும்பிய பின்னர்,  தமிழர் ஒன்றியத்தின்


பணிகளிலும் எனது கவனத்தை முழுமையாக திருப்பியிருந்தேன். 

"கடல்சூழ் கண்டத்தில் தமிழ் வளர்ப்போம், கலை வளர்ப்போம்" என்னும் தாரக மந்திரத்துடன் 1990 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியத்தை அமைப்பினை,  சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் தலைமையில் மெல்பனில்  ஆரம்பித்தோம்.

கலைமகள் விழா, கதம்ப விழா, முத்தமிழ்விழா, பாரதி விழா, கலைவிழா  மற்றும் பரதம்- குச்சுப்புடி முதலான நடனத்துறை சார்ந்த பட்டறை (Workshop) நாடகம் பற்றிய கருத்தரங்கு முதலான நிகழ்ச்சிகளை  எமது  தமிழர் ஒன்றியம்  நடத்தியது.

கதம்ப விழாவில் அருண். விஜயராணி எழுதிய நாடகமொன்றில், யாழ். பாஸ்கர், கண்ணன், பவாணி ஆகிய கலைஞர்களும் நடித்தனர். 

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின்  வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த நடன நர்த்தகிகள்  வள்ளி சுப்பையா, காயத்ரி லக்‌ஷ்மணன்  ஆகியோரின்  நிகழ்ச்சியும் மெல்பனில் லத்ரோப் பல்கலைக்கழகத்தின் அகோரா தியேட்டரில் நடத்தப்பட்டு, திருகோணமலை மாவட்டத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் கலாசார செயலாளர்களாக திருமதி சுமதி சத்தியமூர்த்தி , திருமதி ரேணுகா சிவகுமாரன் ஆகியோரும் இயங்கியிருக்கின்றனர். வருடாந்தம் நாவன்மைப்போட்டிகளும் நடந்திருக்கின்றன. குறிப்பிட்ட போட்டிகளின் நடுவர்களாக திருமதி பாலம் லக்‌ஷ்மணன், யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீக பீடத்தின் முன்னாள்   தலைவர் கைலாசநாத குருக்கள், மற்றும் ரத்தினம் கந்தசாமி, பொன். குமாரலிங்கம்,  ‘ தில்லைக்கூத்தன்  ‘ சிவசுப்பிரமணியம், திருமதி பொன்மணி குலசிங்கம், ஐயாத்துரை மாஸ்டர், பாடும்மீன் ஶ்ரீகந்தராஜா   ஆகியோரும் பணியாற்றியிருக்கின்றனர்.

நாவன்மைப்போட்டிகளிலும் ஒன்றியத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பல குழந்தைகள் இன்று திருமணமாகி குடும்பத்தலைவர்களுமாகிவிட்டனர்.


ஒன்றியத்தின் பாரதி விழா மெல்பன் பார்க்வில் பல்கலைக்கழக கல்லூரியில்
16-02-1991  ஆம் திகதி நடந்தது. சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவில் நடந்த பட்டிமன்றத்திலும் நடுவராக உரையாற்றினார்.

நான் இளமையில் கல்வி கற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலும் அதன்பின்னர் கற்ற யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியிலும்  நீர்கொழும்பு அல்- ஹிலால் மகா வித்தியாலயத்திலும் , நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பௌர்ணமி விழாக்களிலும் நாடகம் எழுதி இயக்கி நானும் நடித்திருக்கின்றேன். படைப்பிலக்கிய பிரதிகள் எழுதுவதற்கு முன்னர் நாடகங்கள் எழுதுவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது.

இலங்கை வானொலியிலும் எனது நாடகங்கள் ஒலிபரப்பாகியிருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியில் 1978 இணைந்திருந்த காலத்தில் கேரளா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இயக்கிய நாடகம் ஒன்றிலும் நடித்திருக்கின்றேன். அந்த நாடகத்தில் தமயந்திபொன்சேக்கா, டில்ருக்‌ஷி முதலான சிங்கள  திரைப்பட நடிகைகளும் தமிழ் நாடக நடிகர்களும் இடம்பெற்றனர்.

குறிப்பிட்ட நாடகம் 1980 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறியபோது. மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் லயனல் போப்பகே இந்நாடக அரங்கேற்றத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அதுவே இலங்கையில் நான்  இறுதியாக நடித்த நாடகம்.  அதன் பின்னர் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் சிறுகதைகள்,  நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திகள் மாத்திரமே எழுதுகின்றேன்.

எமது தமிழர் ஒன்றியத்தின் பாரதி விழாவில் ஒரு நாடகம் மேடையேற்றினால் சிறப்பாகவிருக்கும் என்று அருண் விஜயராணி தெரிவித்தார். எனக்கு மகாகவி பாரதியிடத்தில் மிகுந்த ஈர்ப்பு இருந்தமையால், சுதந்திரத்திற்கு முந்திய  பிரிட்டிஷ் இந்தியாவில் புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த வாழ்க்கையை சித்திரிக்கும் மகாகவி பாரதி என்ற நாடகத்தை எழுதினேன்.

எழுதியபின்னர் அதில் நடிப்பதற்குப்பொருத்தமானவர்களை சில வாரங்களாகத்தேடி,  இறுதியில் சிலரைத் தெரிவுசெய்தேன். பாரதியாக எஸ். கிருஷ்ணமூர்த்தியும்                       ( இவர்தான் தற்போது மயூர் வீடியோ விஷன் ஒளிப்பதிவாளர் ) செல்லம்மாவாக கோகிலவாணி நவநீதராஜாவும், பாரதி பூநூல் சடங்கு செய்வித்த  இளைஞனாக பிரகாஷ் அந்தோனிப்பிள்ளையும் பாரதியின் மகள் தங்கம்மாவாக செல்வி  காயத்திரி குமாரலிங்கமும் வா.வே.சு. அய்யராக வித்தியானந்தனும் அரவிந்தராக தமிழரசனும் செட்டியாராக நவநீதராஜாவும் நடித்தனர்.

நண்பர் நவநீதராஜா அப்பொழுது மெல்பனில் Deadening இல்  குடும்பத்தினருடன் ஒரு வாடகைவீட்டில் குடியிருந்தார். அவருக்கு மகாகவி பாரதி நாடகப்பிரதி மிகவும் பிடித்துக்கொண்டது.

செட்டியார் வேடத்தில் தாமாகவே நடிக்க முன்வந்ததுடன் தமது வீட்டை நாடக ஒத்திகைக்கும் தந்து உதவினார். பிரதி சனி, ஞாயிறு தினங்களில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ஒத்திகை நடந்தது.

அவ்வேளையில் நவநீதராஜாவும் அவரது குடும்பத்தினரும் எமக்கு வழங்கிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. பாரதிக்குத்தேவைப்பட்ட  தலைப்பாகையை திருமதி நேசா இலியேஸர் செய்து தந்தார். செல்லம்மா பாரதிக்கு மடிசார் சேலையை திருமதி மஹாலக்‌ஷ்மி சங்கரன் அணிவித்தார். இதர பாத்திரங்களுக்கும் பாரதிக்கும் நண்பர் கண்ணன் ஒப்பனை செய்தார்.  நாடகத்திற்கான ஒலி, ஒளி சார்ந்த பணிகளை நண்பர் இலேடியஸ் பெர்னாண்டோ கவனித்தார்.

பாரதி விழாவை  முன்னிட்டு நடத்தப்பட்ட நாவன்மைப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு முதல் பரிசிலாக தங்கப்பதக்கமும் அணிவிக்கப்பட்டது.

மெல்பனில் நான் எழுதித்தயாரித்து இயக்கிய முதலும் கடைசியுமான நாடகம்தான் மகாகவி பாரதி. அதன்பின்னர் நாடகம் எழுதவில்லை.

குறிப்பிட்ட பாரதிவிழா தொடர்பாக சிட்னியிலிருந்த  (அமரர்) கலாநிதி ஆ. கந்தையா அவர்களும் தமது நூலொன்றில் பதிவுசெய்துள்ளார்.

அதுவே அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது பாரதி விழாவாகும்.

------ 

எமது தமிழர் ஒன்றியம் மனித உரிமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இயங்கியது என்று இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா..?

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட  சம்பவங்கள் என்னை பெரிதும் வருத்தியிருந்தது. நான் பிறந்து வளர்ந்த ஊரில் மூவின மக்களுடனும் சகோதர  வாஞ்சையுடன் உறவாடியிருந்த நான்,  இறுதியாக கல்வி கற்றதும் முஸ்லிம் வித்தியாலயத்தில்தான்.

எழுத்துலகில் பிரவேசித்த பின்னர்,  நான் இணைந்திருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிலும் சிங்களப்பிரதேசங்களில் நடத்திய கருத்தரங்குகளிலும் பல முஸ்லிம் எழுத்தாளர்களுடன் இணைந்து இயங்கியிருக்கின்றேன்.

எனது இலக்கிய நண்பர் சுபைர் இளங்கீரன் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டவர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில்  நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்தவர்  எம்.எம். சுல்தான் என்பவர்.

தந்தை செல்வநாயகம் தோற்றுவித்த தமிழரசுக்கட்சியிலும் பல முஸ்லிம்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.

அவ்வாறு தமிழ் – முஸ்லிம் உறவு பேணப்பட்டிருந்த  வடக்கிலிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீளக்குடியேற்றவேண்டும் என்ற   கோரிக்கையை விடுத்தும் எமது தமிழர் ஒன்றியம் ஒரு கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தச்செய்தி இலங்கை ஊடகங்களிலும்  வெளியானது.

அதன்பின்னர் சில அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்து என்னை அச்சுறுத்தின.

ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கும் என்று மாத்திரம் அதற்குப்பதில் சொன்னேன்.

எனது சிறிய பராயத்தில் எங்கள் பாட்டி  அடிக்கடி சொல்லும்  வார்த்தையை நான் அப்போது நினைத்துக்கொண்டேன்.

அநியாயம் செய்தால் முனியாண்டி கேட்பான்.

இங்கு முனியாண்டி என்பது பாட்டியின் சிறுதெய்வ வழிபாட்டில் வரும் தெய்வம்.

வேறு விதமாக , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எனவும் வினை விதைத்தால் வினையையே அறுக்கநேரிடும் எனவும் சொல்லலாம்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு, சரியாக ஐந்து  வருடகாலத்தில்  ( 1995 இல் ) அதே ஒக்டோபர் மாதம் வடக்கிலிருந்த தமிழ் மக்கள் வெளியேறுமாறு  நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முஸ்லிம்களை வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தவர்களே ஐந்தாண்டுகளில் தமது மக்களையும் வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

அன்று தொலைபேசி மூலம் என்னை அச்சுறுத்தியவர்களின்  தொடர்பிலக்கம் தெரியாது.  ஆனால்,  நடந்த வரலாற்றை மாத்திரம் எனக்குச் சொல்லத் தெரிகிறது.

( தொடரும் )

 

 

 

 

 

 

No comments: