தூய தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையெலாம் தேயமெங்கும் திருத்தொண்டாய்ப் பரப்பிய தனிநாயக அடிகளார் அவர்களை நினைவு கூர்வோம்!

                                                                                                 


                                                                                           

                                 


'சிவஞானச் சுடர்' பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்   

 மாணிக்கத் தீபமான இலங்கை நகரின்

   வடபகுதி தனிற்பிறந்து கற்று யர்ந்து

காணிக்கையாய்த் தமிழன்னை களிகொளத் தன்னைக்

    கடமையுணர் வொடுவாழ்ந்த அடிக ளார்புகழ்

ஏணிக்கும் அளவேது? இயம்பப்  போமோ?

    ஏசுபதம் போற்றியே தமிழைத் தனித்துவப்

பாணியிலே பரப்பிநின்ற பெற்றி என்னே!

   பண்பாளன் தனிநாயக அடிகள் போற்றி!

 

 அருளதனால் ஒளிர்கின்ற  காந்த விழிகள்!

     அன்பதனால் உயிர்க்கின்ற அறத்தின் தோற்றம்!

தெருளெல்லாம் புலர்கின்ற கர்த்தரின் பேரொளி!

     தெளிவெல்லாம் மலர்கின்ற சாந்த முகம்!

வருந்துவர்க்கு உதவிசெயும் வள்ளல் உள்ளம்!

     வண்டமிழை உலகரங்கிற் பரப்பும் ஓர்மம்!

பெருந்தவத்தோன் தனில்இவைகள் பொதுளிப் பில்கும்

      பேராசான் தனிநாயகம் அடிகள் அன்றோ?

 

 நண்பதனால் எந்தையிடம் தமிழால் இணைந்தார்!

   நடையதனால் தமழ்மொழியை உலகிற் களித்தார்!

பண்பதனால் பாடறிந்து ஒழுகும் பாங்கு!

     பலர்போற்றும் தன்னடக்கம் பழுத்த கேண்மை!

திண்ணமொடு தமிழையுல கரங்கிற் பரப்பத்

     திசையெலாம் தமிழ்மகாநா(டு) அமைத்த ஞானி!

எண்ணரிய அருங்குணங்கள் விஞ்சி வாழ்ந்த

     எழில்பூத்த அடிகளாரை நினைவு கூர்வாம்!

 

  தன்னலத்தைப் பொதுநலமாய்த் தழுவி நடந்தார்!

      தளர்வறியா உறுதியுடன் தனிமனி தனாகிப்

 பொன்னனைய நறுந்தமிழர் பெருமை தன்னைப்

      புவியிலெங்கும் பரப்புவதில் நிறைவு கண்டார்!

 நன்நயமாய் மனிதநேயப் பண்பைத் தாங்கி

      நலம்பெருக்கும் தமிழ்த்தூதாய் மலர்ந்தார் அம்மா!

என்னசொல்வேன் மகாகவியின் கனவை நனவாய்

      இலங்கச்செய் துலகிற்றமிழ் ஒலிக்கச் செய்தார்!

 

 தன்னலமே கருதாது தமிழுக் காகத்

    தன்னையே தியாகஞ்செய் துயர்ந்த சான்றோன்

பன்முகத்து ஆளுமைகள் அலங்க ரிக்கப்

    பலர்போற்றத் தாய்நாட்டிற்(கு) அணிகள் சேர்த்து

மன்பதையில் தாழ்வுயர்வை மறந்தும் ஏற்கா

    மாமனித மாண்புடனே அறவழி வாழ்ந்து

அன்புமிளிர் சமயங்கள் அனைத்தையும்அணைத்த

    அருட்குரவன் தாள்தொழுது போற்று வோமே! 

 

 


No comments: