என்ன முதலாளி சௌக்கியமா! - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சிவாஜி கணேசனின் 150வது படமான சவாலே சமாளி படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் மல்லியம் ராஜகோபால்.இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் கதை வசனம் எழுதி,டைரக்ட் செய்த படம்தான் என்ன முதலாளி சௌக்கியமா!1972ல் கலரில் இப் படம் உருவானது.



அண்ணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் டி கே சங்கர் இந்தப் படத்தைத் தயாரித்தார்.ஏற்கனவே 1967ம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் இவர் பவானி என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்தப் படத்திற்கு கதை,வசனம் எழுதியவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.திரையுலகில் கோபாலகிருஷ்ணனுக்கும்,ராஜகோபாலு
க்கும் இடையே பனிப் போர் ஒன்று நடந்த வண்ணமே இருந்தது.ஒரே கதைக்கு இருவருமே சொந்தம் கொண்டாடிய ஒரு கால கட்டமும் காணப்பட்டது.இப்போது தனது அடுத்தப் படமான என்ன முதலாளி சௌக்கியமா படத்துக்கு சங்கர் மல்லியம் ராஜகோபாலை தேர்வு செய்திருந்தார்.

சவாலே சமாளி,எ மு சௌக்கியமா இரண்டுமே அடிப்படையில் ஒரே

பிரச்னையை கருவாகக் கொண்டு அமைத்த படமாகும்.சவாலே சமாளி கிராமத்தில் இருக்கும் ஆண்டான்,அடிமை பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது.எ மு சௌக்கியமா முதலாளி,தொழிலாளி பிரச்சனையை மூலமாகக் கொண்டிருந்தது.ஆனால் எ மு சௌக்கியமா படத்தின் மூலக் கதையை ராஜகோபால் எழுதவில்லை.கவிஞர் கண்ணதாசன் அதனை எழுதி இருந்தார்!

கோடீஸ்வரரான மில் முதலாளி கோடிஸ்வரன் தன் தொழிலாளர்களின் உரிமைகளை அடக்கி,ஒடுக்கி தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.அவரின் மகன் சின்னத்துரை தந்தையின் கொள்கைக்கு எதிரானவன்.ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பள்ளி நடத்துகிறான்.அங்கு டீச்சராக சேரும் ஜெயாவுக்கும் சின்னத்துரைக்கும் இடையில் காதல் அரும்புகிறது.ஜெயா தன் தந்தையின் மில்லில் வேலை பார்க்கும் யூனியன் தலைவரின் மகள் என்பதை சின்னத்துரை அறிந்து கொள்கிறான்.ஆனால் அவன் தான் கோடிஸ்வரனின் மகன் என்பது ஜெயாக்கு தெரியாது.தொழில் சங்கப் போராட்டம் காரணமாக யூனியன் லீடர் ஏகாம்பரத்தை கோடிஸ்வரன் குண்டர்களை ஏவி கொன்று விடுகிறானர் .பழி மற்றும் ஒரு தொழிலாளி மீது விழுகிறது.அந்தத் தொழிலாளியின் மகனும்,ஜெயாவும் சேர்ந்து கோடிஸ்வரனை பழி வாங்கத் திட்டமிடுகிறார்கள்.அதன் ஓர் அங்கமாக ஜெயா கோடிஸ்வரனை திருமணம் செய்து கொள்கிறாள்.


இப்படி அமைந்த படத்தின் கதை ஜெயாவாக வரும் கே ஆர் விஜயாவை சுற்றி அமைக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே சபதம் படத்தில் தான் செய்த அதே ரோலை எவ்வித சிரமமும் இன்றி விஜயா இதில் செய்திருந்தார்.கொடியவன் கோடீஸ்வரனாக வரும் சுந்தரராஜன் நடிப்பில் எவ்வித புதுமையும் இல்லை.படத்தின் கதாநாயகன் என்று நாம் நினைத்து ஏமாறும் வேடம் ஜெமினி கணேசனுக்கு! பொருந்தாத வேடம்,நிறைவில்லாத நடிப்பு.

ஆனால் படத்தில் ஆல் ரவுண்டராக வருபவர் நாகேஷ்.இப் படத்தில்

அவர் காதல் செய்கிறார்,டூயட் பாடுகிறார்,தத்துவம் பேசுகிறார்,கர்ச்சிக்கிறார் ,பைட் செய்கிறார் எல்லாமுமாக படம் முழுவதும் நிறைகிறார்.இவர் இல்லாவிட்டால் படம் வெலவெலத்துப் போய் இருக்கும்.இவருக்கு ஜோடி ஜெயபாரதி.நடிப்பை விட இவரின் கவர்ச்சி எடுபட்டது .

இவர்களுடன் வி எஸ் ராகவன்,எம் ஆர்,ஆர் வாசு,காந்திமதி,டீ ஆர் ராமசந்திரன்,எம் பானுமதி உசிலை மணி ஆகியோரும் நடித்திருந்தனர்.விஜயலலிதா,ஆலம் இருவரின் கவர்ச்சி நடனங்களும் கண்களுக்கு விருந்தளித்தன.


மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மேற்கத்திய பாணியில் இசையமைத்து அசத்தியிருந்தார்.எஸ் பி பி யின் குரலில் ஒலித்த அன்பை குறிப்பது ஆனா பாடல் இனிமையாக இசைத்தது.எல் ஆர் ஈஸ்வரியின் மயக்கும் குரலில் வந்த ஏகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழில் அரசி பாடல் உற்சாகமாக ஒலித்தது.பாடல்கள் எல்லாம் கண்ணதாசன்தான்.

பின்னாட்களில் பிரபல இயக்குனராக விளங்கிய கே விஜயன் இப்படத்தில் உதவி டைரக்டராக பணியாற்றினார்.படத்தை அனுபவசாலியான நிமால் கோஷ் ஒளிப்பதிவு செய்தார்.வசனங்கள் மூலம் பல கருத்துகளை சொன்ன மல்லியம் ராஜகோபால் படத்தை போரடிக்காமல் இயக்கியிருந்தார்.

No comments: