பேசாப்பொருளை பேசத்துணிந்த President Supper Star திரைப்படம் அவதானி


இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்  தமிழர்கள்  புலம்பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் வீடுகள் தோறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி பார்த்துவரும் எம்மவர்களுக்கு, சமூகப்பிரக்ஞையுடனும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வெளிவந்து,  சிங்கள மக்கள் மத்தியில் பரவலாகச் சென்ற ஒரு திரைப்படம் பற்றிய  அவதானக்குறிப்புகளையே இங்கு பதிவு செய்கின்றோம்.

சினிமா ஊடகம் மிகவும் வலிமையானது. சினிமாவைப் பார்த்து


சீரழிந்தவர்களும் இருக்கிறார்கள். சீர்திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் கூட சினிமாவுக்குப்போன சித்தாளு என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.  உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக்கொண்டும் பல மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.

இலங்கையில் சமகாலத்தில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடியின் பின்னணியிலும் சிக்கலுக்கு மேல் சிக்கலை தந்துகொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறைபற்றியும், லஞ்சம்,  ஊழல், துஷ்பிரயோகம், அதனூடாக ஏற்படும் சமூகச்சீரழிவுகளையும் அங்கதச்சுவையுடன் பேசும் திரைப்படம்தான் President Supper Star.

 இதனை திரைக்கதை வசனம் எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் சிங்கள திரைப்பட இயக்குநர் உதயகாந்த வர்ணசூரிய.

இலங்கையின் சமகால அரசியலை துணிந்து பேசியிருக்கும் இத்திரைப்படத்தில், ஏற்கனவே சிங்கள திரைப்படங்களில் தோன்றியிருக்கும் பிரபல சிங்கள நடிகர், நடிகையர்களுடன் ஏராளமான பொதுமக்களும்  இடம்பெற்றுள்ளனர்.

அண்மைக்காலத்தில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் சிங்கள நாடக – திரைப்படக் கலைஞர்களும் பங்கேற்றிருந்ததை நாம் மறந்துவிடமுடியாது.

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர், தமது ஊழியர்களை அழைத்து மக்களை பெரிதும் கவரக்கூடிய ஒரு தொலைக்காட்சித்  தொடரை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

ஒவ்வொருவரும் ஆளுக்கொரு யோசனையை தருகிறார்கள். இறுதியில்  மக்கள் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கும் அரசியலையே அவர் கையில் எடுக்கிறார்.


அதுதான் President Supper Star எனத் தயாராகின்றது.  அதில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் முதலில் வெளியாகிறது.  ஏராளமானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். நேர்முகத்தேர்வும் நடக்கிறது.  இறுதிச்சுற்றில் மூன்றுபேர் மாத்திரம் தெரிவாகின்றார்கள்.  அவர்கள் நாட்டின் ஜனாதிபதியானால் என்ன என்ன செய்வார்..? எது எது செய்யமாட்டார்? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கும் ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தலும் அழுத்தமும் அந்த  நிறுவனத்திற்கு வருகிறது.  அதனால், இயக்குநர் சபைக்குள்ளும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

எத்தகைய சவால்களையும் தன்னால் எதிர்கொள்ள முடியும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர்.

சிறந்த ஜனாதிபதி யார்..?  என்பது பற்றிய கருத்துக்கணிப்பையும் நடத்தும் வகையில் அந்த நிறுவனம் பார்வையாளர்களிடமிருந்தும் கைத்தொலைபேசி - வாட்ஸ் அப் ஊடாக வாக்குகளை திரட்டுகிறது.

இறுதிச்சுற்றில் வரும் மூவரில் ஒருவர் தான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால், போயா தின விடுமுறைகளை நிறுத்திவிடுவேன் எனச்சொல்கிறார்.  மற்றும் ஒருவர் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்கிறார். மற்றவர், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார்.

முன்னாள் ஜனாதிபதிகள்  ஜே.ஆர். ஜெயவர்தனா  உகண்டா  இடி


அமீன் தோற்றங்களிலும் இருவர் வருகின்றனர். இருவருமே நிறைவேற்று அதிகாரங்களை தம்வசம் வைத்துக்கொண்டிருந்தவர்கள் என்பதையும் இத்திரைப்படம் அவர்களின் வாக்குமூலங்களின் ஊடாகவே பதிவுசெய்கின்றது.

அத்துடன் ஏகாதிபத்திய வல்லரசு நாடு என உலகமெல்லாம்  வர்ணிக்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா, எவ்வாறு எளிமையுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும்  சுட்டிக்காட்டுவதற்கு அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் காணொளியையும்  இத்திரைப்படம் காண்பிக்கின்றது.

இலங்கையில் அதிகார பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பாவமன்னிப்பிற்காக திருப்பதிக்குச்  சென்று தரிசனம் செய்வதையும் அங்கதமாக சித்திரித்திருக்கும் President Supper Star,  1982 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே. ஆர். தனதும் தனது அரசினதும் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக  நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு பற்றியும் பேசுகிறது.

 சில வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களை இரவில் அச்சுறுத்திய கிறீஸ் தடவிய மனிதர்கள், வடக்கில் அட்டகாசம் புரிந்த ஆவா குழுவினர், ஆட்களை கடத்திய வெள்ளை வேன்கள், ஊடகவியலாளர்கள் மீது நிகழ்ந்த அரச பயங்கரவாதம் பற்றியெல்லாம்  இத்திரைப்படம் சித்திரிக்கிறது.

குறிப்பிட்ட Reality Show வை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்களின் உணர்வுகளையும் இத்திரைப்படம் காண்பிக்கத் தவறவில்லை.

மக்களின் குறைகேட்கச் செல்லும் அரசியல்வாதிகள், ஊடக விளம்பரத்திற்காக ஏழைக் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதும், பின்னர் தமது கைகளை உதவியாளரின் ஆடையில் துடைத்துக்கொள்வதையும் காண்பித்து எள்ளிநகையாடுகிறது.

தமிழ்நாட்டில் எழுத்தாளரும் இதழாசிரியரும் நடிகருமான சோ, தனது முகம்மது பின் துக்ளக் என்ற நாடகத்திலும் பின்னர் அதனை திரைப்படமாக்கியபோதும் இந்திய அரசியலையும், அரசியல் தலைவர்களையும் அங்கதச் சுவையுடன் எள்ளி நகையாடியிருந்தார்.

அதற்கு அவரது நடிப்பும் வசனங்களும் பெரிதும் துணை நின்றன.  ஒரு கட்டத்தில் முகம்மது பின் துக்ளக் திரைப்படம் தடைசெய்யப்பட்டது.

President Supper Star, விருதினைப்பெறும் வெற்றியாளருக்கு குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனம் பெருந்தொகை பரிசையும் அறிவிக்கிறது.

நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை முன்வைக்கும் ஒரு போட்டியாளரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி.  இறுதிச்சுற்றுக்கு வரும் அந்தப்போட்டியாளரால், பிரசவ வலி எடுத்த  தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாமல் போய்விடுகிறது.

அந்தப்பெண் ஒருவாறு மருத்துவமனை சென்று, கணவனுக்கு கைத்தொலைபேசியில் தகவல் அனுப்புகிறார். அப்போது அவர் இறுதிச்சுற்றில் பேசுவதற்கு தயாராகின்றார்.

 நாட்டின் அதிகாரபீடம் தனக்கேற்றவாறு தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக அழுத்தங்களை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது.

அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த முடியாத அதிகார பீடம், இறுதியில், தனக்குச் சாதகமான தீர்ப்பிற்கு மறைமுக அழுத்தம் பிரயோகிக்கின்றது.

இறுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு President Supper Star  திரைப்படத்தை  உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்தும் பார்க்க முடியும். உதயகாந்த வர்ணசூரியவின் கூர்மையான வசனங்கள் இத்திரைப்படத்திற்கு வலிமை சேர்க்கின்றன.

---0---

 

 

 

 

 

 

 

No comments: