இலங்கையில் விலைவாசி உயர்வையடுத்து, எரிபொருளுக்கு நேர்ந்த பற்றாக் குறையையடுத்து மக்களின் கடுமையான எதிர்ப்பினை எதிர்நோக்கிய இராஜபக்ஷ குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த அரசு திக்குமுக்காடியது.
அரசில் செல்வாக்கு செலுத்திய
சில அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். நிதியமைச்சர்
பதவியே கேலிக்குரியதாகியது. பிரதி சபாநாயகர்
தெரிவும் அவ்வாறே அமைந்தது. இராஜிநாமாவின்
அடையாளம்தான் இராஜபக்ஷவினரின் இலட்சணம் எனச்சொல்லும் அளவுக்கு இலங்கையை சர்வதேசத்தின்
முன்னால் தலைகுனிய வைத்துவிட்டனர்.
காலிமுகத்திடலில் தொடங்கிய
ஆர்ப்பாட்டம், நாற்பது நாட்களையும் கடந்து
தணிந்துவிடாமல் தொடருகின்றது. அதனை அடக்குவதற்கு முன்னாள் பிரதமரின் கைக்கூலிகள் மேற்கொண்ட
முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் அதில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யுமாறு சட்டமா
அதிபரும் உத்தரவிட்டுவிட்டார். பலருக்கு நாட்டை
விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்க்ஷேக்களின் குடும்ப ஆட்சியில் கடந்த இரண்டு வருடகாலமாக பல போராட்டங்கள் நடந்தன.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா கோரி போராட்டங்களை தொடர்ந்தனர்.
இறுதி யுத்தத்திலும்
அதற்கு முன்னர் நடந்த சம்பவங்களிலும்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்
கடந்த சில வருடங்களாக தொடருகின்றது.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்டமும் பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்ந்தது.
இவை தவிர, மருத்துவ தாதியரின் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் ஏற்கனவே இந்த அரசின் காலத்திலேயே நடந்திருக்கின்றன.
ஆனால், இவற்றில்
எந்த வன்முறைகளும் நடக்கவில்லை.
தமிழர் தரப்பில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடந்த பேரணியிலும் , சஜித் பிரேம தாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரா குமார திசாநாயக்கா தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய பேரணிகளினாலும் வன்முறைகள் நிகழவில்லை.
அவ்வாறுதான், ஏப்பரில் 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் மக்கள்
ஒன்று திரண்டு தன்னெழுச்சியாக தொடங்கிய போராட்டத்திலும் வன்முறைகள் நடக்கவில்லை.
எனினும் மிரிகானயில் ஜனாதிபதியின் வாசஸ்தலம் அமைந்த வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை தொடங்கியது. அதனை கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை , தடியடிப்பிரயோகம் மூலம் கட்டுப்படுத்துவதற்கு முனைந்த அரசு, காலிமுகத்திடலில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
இம்மாதம் 10 ஆம் திகதி காலிமுகப்போராட்டம் 30 நாட்களையும் கடந்துகொண்டிருந்த நிலையில் அலரி மாளிகையில் கூடிய மகிந்தரின் விசுவாசிகளினால், வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பலனை ஆட்சியாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
74 அரசியல் வாதிகளின் சொத்துக்கள், உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டுள்ளன.
அரைநூற்றாண்டுக்கு முன்னர்
பிரதமர் டட்லி சேனநாயக்காவின்
பதவிக்காலத்தில் நடந்த ஹர்த்தால் எனப்படும் போராட்டத்திலிருந்து தற்போதைய ஆர்ப்பாட்டங்கள்
முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், சமகால எழுச்சிகள்
எந்தத் திசையில் செல்கின்றன என்பது குறித்து சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்கள் ஆங்காங்கே
கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் மெய்நிகர் கலந்துரையாடல்களும் நடைபெற்றுவருகின்றன.
இராஜபக்க்ஷேக்களுக்கு எதிரான
காணொளிகள் வைரலாக பரவியிருக்கின்றன.
இவற்றுக்கு மத்தியில் முன்னாள்
பிரதமர் மகிந்த இராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருக்கிறார் என்றும்,
பலாலி இராணுவ முகாமில் மறைந்திருக்கிறார் என்றும்
செய்திகள் கசிந்துகொண்டிருந்தவேளையில் அவர்
நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
கடந்த காலங்களில் மகிந்தவும்
ரணிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் காப்பாற்றியவர்கள்தான். ஜனாதிபதி பதவியிலிருந்து
மைத்திரிபால சிறிசேனவிடம் மகிந்தர் தோற்றபோது, அந்த முடிவுகள் இறுதியானதும் அலரி மாளிகையை
விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அந்த நடு இரவில் அவரால் அழைக்கப்பட்டவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.
இவர்கள் இருவரையும் பற்றி
தனியாகவும் விரிவாகவும் எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. அவை பற்றி பிறிதொரு
சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின்
மூத்த பத்திரிகையாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவின் புதல்வர். ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்கு
உறவு முறையில் மருமகன். பிரதமராக ஏற்கனவே சில
தடவைகள் பதவி வகித்தவர். மேற்குலக நாடுகளுடன் நெருக்கமான உறவைப்பேணியவர். விடுதலைப்புலிகளுடன் சமாதானமாகப்பேசி, அவர்களின்
முக்கிய தளபதிகளுக்கும் வெளிநாடுகளை காண்பித்து,
சாதுரியமாக காய் நகர்த்தி அவ்வியக்கத்தை பலவீனமடையச்செய்தவரும் இவர்தான்.
தற்போது பிரதமர் பதவி ஏற்றதும்
அவர் வெளியிட்ட கருத்துக்களிலிருந்தும் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றியதன் தொனிப்பொருளிலிரும்
அவரது புத்திசாலித்தனத்தை அவதானிக்க முடியும்.
மறைந்தவர்களுக்கு நினைவேந்தல்
நடத்துவதற்கான உரிமை சகலருக்கும் இருக்கிறது என்றும் காலிமுகத்திடல் போராட்டம் தொடரட்டும்
எனவும், தான் பிரதமர் பதவி ஏற்றது இராஜபக்ஷவினரை காப்பாற்றுவதற்கு அல்ல, மக்களின்
பசியை போக்குவதற்குத்தான் எனச்சொன்னதும் பதச்சோற்றுப்
பருக்கைகள்.
அரசாங்க மட்டத்தில் ஜனாதிபதி
கோத்தபாயவினால் இவ்வாறெல்லாம் காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது காலிமுகத்திடலில்
முப்பது நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சிப்போராட்டம், பல்வேறு பரிமாணங்களை பெற்றுவிட்டது.
காலிமுகத்திடலில் கோத்த
கோ கம தொடங்கி, கபுடா கோ… மைனா கோ எனத் தொடர்ந்து அலரி மாளிகை முன்பாக நோ டீல் கம ஆரம்பமானது.
அத்துடன் கடந்த 09 ஆம் திகதி
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் கூடாரங்களை
அடித்து நொருக்கி சேதப்படுத்தி பலரையும் காயங்களுக்குள்ளாக்கிய மகிந்தரின் தீவிர ஆதரவாளர்களை
கைதுசெய்யுமாறும் போராட்டம் வேறு வடிவம் எடுத்துள்ளது.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின்
முன்பாகவும் மக்கள் திரண்டு ஆரப்பாட்டம் நடத்துகின்றனர். கடந்த 09 ஆம் திகதிக்குப்பின்னர் வெகுண்டு எழுந்த
மக்களினால் எரித்து சேதமாக்கப்பட்ட அமைச்சர்களின் வீடுகள், அரசாங்க பஸ்வண்டிகள் உட்பட
வாகனங்கள் பல கோடி ரூபா நட்டத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் காப்புறுதிகள்
மூலம் நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வார்கள் எனச்சொல்லப்பட்டாலும், அதனால் வரக்கூடிய பொருளாதார
நெருக்கடிச் சுமையையும் மக்கள்தான் தாங்கப் போகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும்.
இங்குதான் இலங்கையின் எதிர்காலம்
குறித்த கவலைகள் செறிவடைகின்றன. கோபம், வெறுப்பு,
கொலைவெறி என்பன மனித மனங்களின் அடி ஆழத்தில் உறங்கிக்கிடக்கும் உணர்வுகள். அவை வெளிப்படுத்தப்படும்போது, தீர்க்கதரிசனம் மறைந்துவிடுகிறது.
இராவணன் சீதாப்பிராட்டியரை சிறைப்பிடித்து இலங்கை மலையகத்தில் அசோக வனத்தில்
தடுத்துவைத்திருந்தபோது அவளை மீட்க புறப்பட்ட இராம பக்த அனுமான், இராவணனிடம் முதலில் சமாதானத்
தூதுவனாகத்தான் வந்தார்.
“ யார் இந்தக் குரங்கு..? எனக்கு கட்டளை இடுவதற்கு
இது யார்..? இந்தக்குரங்கை கொன்றுவிடுங்கள் “ என்றுதான் இராவணன் தனது சேவகர்களான அரக்கர்களிடம்
பணித்தான். அந்தச்சபையிலிருந்த தம்பி விபீசணன்தான், தூதுவனாக வந்தவருக்கு அத்தகைய தண்டனை
வழங்கலாகாது எனத் தடுத்தார். ஆனால், இறுதியில்
அரக்கர்கள் அனுமானின் வாலில் தீவைத்தனர். அவர் இலங்காபுரியை எரித்தார். அதனால், இராமாயணத்தில் லங்கா தகனம் பேசுபொருளானது.
அன்று அவரால் தொடங்கப்பட்ட
எரிப்பு, இன்னமும் தொடருவதிலிருக்கும் மாயத்தைத்தான் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற
காலம் முதல் சிங்கள பேரினவாதம் வெகுண்டு எழும்போது முதலில் தீவைத்து எரிக்கும் கைங்கரியத்திலேயே
ஈடுபட்டு வந்திருக்கிறது.
1958 கலவர காலத்தில் தென்னிலங்கையில் சிங்கள கடும்போக்குவாத
தீய சக்திகள் தமிழர் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் தீவைத்து அழித்தன. இது 1977 இலும் 1981 – 1983 இலும் தொடர்ந்தது. மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகளையும்
எரித்தனர். தென்கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்றிருந்த
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இலட்சக்கணக்கான நூல்கள் சாம்பல் மேடாகியது. யாழ். ஈழநாடு , மற்றும் யாழ். எம்.பி.யோகேஸ்வரன்
இல்லமும் எரிந்தன. நாட்டை காக்கவேண்டிய சிங்கள
பொலிஸ் காவலர்களே முன்னின்று இவற்றைச்செய்தனர்.
ஜே.ஆர். ஜெயவர்தனாவின்
பதவிக்காலத்தில் பல தடவைகள் லங்கா தகனம் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள
கடும்போக்காளர்கள் மேற்கொண்ட தகனம் அவை.
ஆனால், இன்று கதை வேறுவிதமாக
எழுதப்படுகிறது. அரசுக்கு எதிராக தமது கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள்
தம்மால் தெரிவுசெய்யப்பட்ட அரசின் சிங்களப்பிரதிநிதிகளின் வீடுகளையும் உடைமைகளையும்
தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் மக்களின் பாவனையிலிருந்த பஸ் வண்டிகளையும்
எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.
மக்களின் பயணப் பாவனைக்கிருந்த
பஸ் வண்டிகளில் , சில சிங்கள அரசியல் வாதிகள்
தமது எஜமானன் மகிந்தவிடத்திலிருக்கும் விசுவாசத்தை
காண்பிப்பதற்காக அடியாட்களை ஏற்றிவந்தனர். அந்த பஸ்
வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன.
பஸ் வண்டிகள் என்ன பாவம்
செய்தன..?
இந்த அரசு நாடெங்கும் புத்த
விகாரைகளை அமைத்துவருகிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு பல காரணங்களினால் புகழ்பெற்ற ஒரு பௌத்த பிக்குதான்
தலைவராக ஜனாதிபதியால் நியமனம் பெற்றிருக்கிறார்.
காலிமுகத்திடல் மக்கள்
எழுச்சிப்போராட்டங்களிலும் ஏனைய மதத் தலைவர்களுடன் பல பௌத்த பிக்குகளும் தலை காட்டியுள்ளனர்.
அத்துடன் ஊடகங்களில் எழுதமுடியாத கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் அரசின் தலைவர்களையும்
பாதுகாப்பு பிரிவினரையும் தாக்குகின்றனர்.
அவ்வாறாயின் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் வாழும் இலங்கையில் சாந்தியும் சமாதானமும்
வெகுதொலைவில்தான் இன்னமும் நிற்கின்றனவா..?
அன்பு மார்க்கத்தை போதிக்கவேண்டிய
பௌத்த தர்மம் இலங்கையில் தோல்வி கண்டுவிட்டதா..?
அதற்கு சிங்கள பௌத்த மேலாதிக்கம்
கொண்டிருந்த ஆட்சியாளர்களே காரணமாகத் திகழ்கிறார்களா..?
----0----
No comments:
Post a Comment