இலங்கைச் செய்திகள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

பவித்ரா, கணவர் CIDயில் சுமார் 05 மணிநேர வாக்குமூலம்

ஆகஸ்ட் முதல் இலங்கையில் கடும் உணவு நெருக்கடி நிலை

LIOC: எரிபொருள் தாங்கிக்கு மாத்திரம் பெற்றோல் விநியோகம்

தமிழகத்திலிருந்து நாளை வந்தடையும் இந்திய மக்களின் முதற் கட்ட ரூ. 2 பில். பெறுமதியான உதவிப் பொருட்கள்

அவசரகால சட்டம் நீக்கம்



சர்வகட்சி அரசாங்கத்தில் 9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

- இதுவரை பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் 13 அமைச்சர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று (20) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

1. நிமல் சிறிபால டி சில்வா  - துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

2. கலாநிதி சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

3. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்

4. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு  மறுசீரமைப்பு அமைச்சர்

5. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

6. நளின் பெனாண்டோ - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

7. டிரான் அளஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

8. ஹரின் பெனாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

9. மனூஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு முன்னர் 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்: வெளிவிவகாரம்

2. தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள்


3. பிரசன்ன ரணதுங்க: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

4. கஞ்சன விஜேசேகர: மின்சக்தி மற்றும் வலுசக்தி

நன்றி தினகரன் 













பவித்ரா, கணவர் CIDயில் சுமார் 05 மணிநேர வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோரிடம் 05 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் மாலை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தவர்கள் அன்றைய தினம் இரவு அங்கிருந்து வெளியேறினர்.

கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந் நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி தினகரன் 







ஆகஸ்ட் முதல் இலங்கையில் கடும் உணவு நெருக்கடி நிலை

முன்னைய அரசு மீது ரணில் குற்றச்சாட்டு

விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை என்பதே எங்கள் முக்கிய கரிசனையாக உள்ளது. இதனால் எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காது போகும். இதன் காரணமாக ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணமென சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி  விலகவேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதையடுத்து தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஊழல் மற்றும் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக பொதுமக்கள் அரசாங்கத்தின் தலைமை மீது குற்றம்சாட்டினர். தலைநகரில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. முன்னைய நிர்வாகத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தியதால் தற்போதைய நெருக்கடிக்கு அவர்கள் மீதே குற்றம் சுமத்தவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம். இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லையென ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். பிரதமர் கடந்த வாரம் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எங்களிடம் டொலர்கள் இல்லை, ரூபாய் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டுமா? என்ற கேள்விக்கு இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். இந்த விடயத்தில் நாட்டில் இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றதென பிரதமர் தெரிவித்தார். இலங்கை 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் 19ஆவது திருத்தத்தை நாடு மீண்டும் கொண்டுவரவேண்டுமென்ற யோசனையை முன்வைத்திருக்கின்றேன். இது பிரதமரின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையென பிரதமர் தெரிவித்தார். அதன் பின்னர் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எதிர்காலம் குறித்த ஏற்பாடொன்றுக்கு வரவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு சந்தித்துள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு கொவிட்19 ,எண்ணெய் விலை அதிகரிப்பு, ஜனாதிபதியும் முன்னைய பிரதமரும் பின்பற்றிய வரிநடைமுறைகள் ஆகியவையே காரணமென தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும். முதியவர்களும் இளையவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளையவர்கள் தங்கள் எதிர்காலம் பறிபோவதாக கருதுகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த முதியவர்கள் தங்கள் வாழ்க்கை முறை வீழ்ச்சியடைவதாக கருதுகின்றனர். உரமில்லாத விவசாயிகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார். பொலிஸ் நிலையங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் வெளியேயும்,வேறு இடங்களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இது மக்களின் சீற்றம் விரக்தி நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றதென அவர் தெரிவித்தார்.

மக்கள் தற்போது இதற்கு மேலும் சுமையை சுமக்க முடியாத நிலையிலுள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நிச்சயமாக ஸ்திரமான நிலையில் இல்லையென்றும் பிரதமர் குறிப்பிட்டார். மே 9ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்தி தீயிட்டு சூறையாடிய 800க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதியளவு உரம் இன்மையால் நாடு உணவு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடுமெனவும் பிரதமர் தெரிவித்தார். வெளிநாட்டு நெருக்கடி காரணமாக 07 பில்லியன் டொலர் கடனை செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை வங்குரோத்து நிலையை அடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கை இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளது. நாங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தை உணர்கின்றோம். இது இன்னமும் அதிகரிக்குமென கருதுகின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை என்பதே எங்கள் முக்கிய கரிசனை. எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காதென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது. அக்காலப்பகுதியிலேயே உலக உணவு நெருக்கடி உருவாகும்.அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோமென பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.







LIOC: எரிபொருள் தாங்கிக்கு மாத்திரம் பெற்றோல் விநியோகம்

- பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளின் நலன்கருதி விசேட ஏற்பாடு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக லங்கா IOC நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்கள், பீப்பாய்கள், போத்தல்களில் பெற்றோல் விற்பனை செய்யப்படாது என நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களினதும் சொத்துகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இதேவேளை, க.பொ. சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளின் நலன்கருதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 






தமிழகத்திலிருந்து நாளை வந்தடையும் இந்திய மக்களின் முதற் கட்ட ரூ. 2 பில். பெறுமதியான உதவிப் பொருட்கள்

- 9,000 மெ. தொன் அரிசி, 50 மெ. தொன் பால்மா, 25 மெ. தொன்னுக்கும் அதிக மருந்துகள்
- மொத்த உதவி ரூ. 5.5 பில்லியனுக்கும் அதிகம்
- ஏற்கனவே இந்தியாவினால் 3.5 பில்லியன் டொலர் பொருளாதார உதவி

இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் (16 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிக பெறுமதியான பாரியதொரு மனிதாபிமான உதவித்தொகுதி நாளை (22) கொழும்பை வந்தடையவுள்ளது.

 

 

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

2022 மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுடன் துணைநின்று, இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பன்முக முயற்சிகளை பூரணப்படுத்துவதாக, இந்திய மக்களிடமிருந்து வழங்கப்படும் இந்த உதவி அமைகின்றது. பல்வேறு அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் சமூக அமைப்புகள் பல தமது உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளன.

இலங்கைக்காக இந்திய மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அபரிமிதமான இந்த ஆதரவு, இவ்வருடம் ஜனவரி முதல் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக அமைகின்றது.

அத்துடன் இதற்கு மேலதிகமாக மருந்துப் பொருட்கள், உலருணவு நிவாரணங்கள் போன்றவை இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 








அவசரகால சட்டம் நீக்கம்

வெள்ளிக்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், கடந்த மே 06ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இன்று நள்ளிரவு (22) முதல் முப்படையினருக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை அமுல்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் பாராளுமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டதுடன், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்பட வேண்டும்.

எனினும் இச்சட்டம் 14 நாட்களுக்கு மேல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை வெள்ளிக்கிழமை நீக்கப்படுபவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.      நன்றி தினகரன் 






No comments: