.
எம் ஜீ ஆரும்,சிவாஜியும் நட்சத்திர நடிகர்களான திகழ்ந்த கால கட்டத்தில் திரையுலகிலும்,அரசியலிலும் மிளிர்ந்து கொண்டிருந்தவர் இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.தமிழக சட்டசபைக்கு அங்கத்தவராக முதன் முறையாக சென்ற நடிகர் என்ற பெருமை இவரையே சேரும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமானவரும் கூட! எம் ஜீ ஆர் சொந்தப் படம் தயாரித்ததைத் தொடர்ந்து இவரும் ராஜேந்திரன் பிக்சர்ஸ் என்ற தனது பட நிறுவனத்தை ஆரம்பித்து சொந்தமாகப் படம் தயாரித்தார்.அப்படி தயாரித்த படம் தான் முத்து மண்டபம்.
எஸ் எஸ் ஆர் படம் என்றால் பொதுவில் குடும்பக் கதை,சமூக சீர்திருத்தம் என்றுதான் கதை அமையும்.ஆனால் தனது சொந்தப் படத்தை ஒரு மர்மப் படமாக தயாரித்தார் எஸ் எஸ் ஆர்.இது அன்றைய கால கட்டத்தில் பலருக்கு வியப்பை அளித்தது.
முத்து மண்டபத்தின் அதிபதியான ஜமீந்தார் முத்துராஜாவின் மகன் கண்ணன் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நீலமணியை காதலிக்கிறான்.நீலமணியும் அவனை காதலிக்கவே திருமணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.திருமண அழைப்பை தன் பாட்டு வாத்தியாராக பரந்தாமனுக்கு கொடுக்க அவனின் வீட்டுக்கு செல்கிறாள் அவள். பரந்தாமனோ அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல அவனிடம் இருந்து தப்பி வருகிறாள் நீலமணி. கண்ணன்,நீலமணி திருமணம் நடக்கிறது.அதே சமயம் பரந்தாமன் கொல்லப் பட்டான் என்ற செய்தியும் எட்டுகிறது.போலீசாரும், பரந்தாமனின் மனைவியும்,கண்ணனும் நீலமணி மீது சந்தேகப் படுகிறார்கள்.கண்ணன்,நீலமணி தாம்பத்தியத்தில் விரிசல் உருவாகிறது.அதே சமயம் பரந்தாமனின் மனைவியின் தங்கை கண்ணனுக்கு காதல் வலை வீசுகிறாள்.
இப்படி அமைந்த கதையில் எஸ் எஸ் ஆரும் ,விஜயகுமாரியும் இணையாக நடித்தார்கள்.ஆரம்பத்தில் குறும்பாக நடிக்கும் விஜயகுமாரி படத்தின் பிற்பகுதியில் உருக்கமாக நடிக்கிறார்.மனைவியை சந்தேகிக்கும் கணவனாகவும்,அதே சமயம் மர்ம முடிச்சை அவிழ்க்க முனைபவராகவும்,குழப்பங்களுக்கு மத்தியில் தவிப்பவராகவும் எஸ் எஸ் ஆர் நடித்தார்.இவர்களுடன் மனோதத்துவ நிபுணராக ,போலீசாருக்கு உதவுபவராக எம் ஆர் ராதா நடித்தார்.படத்தில் அவர் சொல்லும் கருத்துகள் சிந்திக்கவும்,சிரிக்கவும் வைத்தன.இவர்களுடன் எஸ் வி ரங்காராவ்,எஸ் ராமராவ்,அசோகன்,மனோரமா, டி வி நாராயணசாமி ஆகியோரும் நடித்திருந்தனர்.படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தவர் சந்திரகாந்தா.அவரை மையப்படுத்தியே படத்தின் கதையும் அமைக்கப் பட்டிருந்தது.கிடைத்த வாய்ப்பை அவரும் தவற விடவில்லை.
கே வி மகாதேவனின் இசையில்,கண்ணதாசன் இயற்றிய சொன்னாலும் வெட்கமடா சொல்லா விட்டால் துக்கமடா பாடல் எஸ் எஸ் ஆர் நடிப்பில் டி எம் எஸ் குரலில் ரசிகர்களை நன்கு கவர்ந்தது.அதே போல் கொடியவளே பூங்கொடியவளே பாடல் வித்தியாசமாக அமைந்தது.பெரிதும் அறியப்படாத கே ஜி ராதாமணாளன் என்பவர் கதை வசனத்தை எழுதி இருந்தார்.பழம் பெரும் டைரக்டரான ஏ எஸ் ஏ சாமி படத்தை இயக்கியிருந்தார். முத்து மண்டபம் திகில் மண்டபம் !
No comments:
Post a Comment