எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 14

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…!

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (1988 - 2022)

தோற்றமும் வளர்ச்சியும் !

                                                               முருகபூபதி


திரும்பிப் பார்ப்பதும் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்த அனுபவம். அதனால்தான் " நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று  கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் திரும்பிப் பார்க்கும் இயல்புகொண்டிருப்பவர்கள். அவர்களின் எழுத்துலகத்திற்கும் கலையுலகத்திற்கும் ஆய்வுலகத்திற்கும்  திரும்பிப் பார்த்தல் அவசியமானது. பிரதானமானது. ஆதாரங்களைப் பெற்றுத்தருவது.


இந்தப்புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு நான் பிரவேசித்தபோது அவ்வாறு என்னையும் திரும்பிப் பார்க்கவைத்த பால்யகால சம்பவம் நினைவுக்கு வந்தது. எனது பாட்டி, அதாவது எனது தாயாரின் தாயார். அவரது பெயர் தையலம்மா.  பாடசாலைக்குச் செல்லாதவர். கையெழுத்தும் போடத்தெரியாதவர். கைநாட்டுப்போடும் அந்த மூதாட்டி,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவேளையில்  பதிவுத்திருமணம் செய்யாதிருந்தமையால் தாத்தா கார்த்திகேசு இறந்த பின்னரும் அவரது ஓய்வூதியம் பெறமுடியாமல் அவதிப்பட்டவர். அவருக்கு பள்ளிப்படிப்பு இல்லையென்றாலும் பாட்டி வைத்தியத்தில் கைதேர்ந்தவர்.

எங்கள் குடும்பம் ஏழ்மையோடு போராடிய காலத்தில் (1956 இல் ) பாடசாலைக்கொப்பி புத்தகம் வாங்குவதற்கும் சிரமப்பட்டவேளையில், எங்கள் பாட்டி கடலைவிற்று பெற்ற பணத்தில் எனக்கு அவற்றை வாங்கித்தந்து பாடசாலைக்கு அனுப்பியவர். அதிகாலையே எழுந்து அம்மா சுட்டுத்தரும் தோசையை வட்டிலில் சுமந்துசென்று விற்றுவந்து எங்கள் பசிபோக்கியவர்.  அவர் எனக்கு என்றைக்கும் ஆதர்சமானவர். அவரது முயற்சியினால் நான் ஆறாம் தரப்புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்றிருக்கின்றேன்.

அந்தப்பாட்டி இரவுவேளையில் உறங்கும்போது தனது மடியில் என்னைக்கிடத்தி சொல்லித்தந்த கதைகளே, பின்னாளில் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரை எழுதவும் அதனை நூலாக்கவும்  என்னைத்தூண்டியிருக்கிறது.

இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய


காலப்பகுதியில்  வடக்கு - கிழக்கில் போர்மேகம் சூழ்ந்திருந்தது. அதனால் நான் தினமும் எழுதிய செய்திகள் போர் பற்றியதாகவும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியதாகவுமே இருந்தன. இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.

எந்தவொரு நாட்டிலும் நடக்கும் உள்நாட்டுப்போரில் முதலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் (தாய்மாரும்) குழந்தைகளும்தான்! இலங்கையிலும் இதுதான் நடந்தது.

எமது தாயகத்தில் நீடித்தபோர், கணவனை இழந்த பெண்களினதும் பெற்றவர்களை இழந்த குழந்தைகளினதும் எண்ணிக்கையைத்தான் பெருக்கும் என்பதை பத்திரிகை வாழ்க்கை தெளிவுபடுத்தியிருந்தது.

இன்றும்,  வருடக்கணக்காக காணாமலாக்கப்பட்ட  தமது கணவர்மாரை தேடும் பெண்களும், காணாமல்போன தந்தைமாரைத்தேடும் குழந்தைகளும்தான் ஊடகங்களில் பேசுபொருள்.


எனது தனிப்பட்ட வாழ்விலும் எழுத்துலக சமூக வாழ்விலும் எனக்கு ஆதர்சமாகத்திகழும்  எனது பாட்டி தையலம்மாவை திரும்பிப்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். எனது  நினைவுகளில் பாட்டியும்  இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த மாணவர்களுமே வந்துகொண்டிருந்தமையால் எனக்கும் ஒரு கனவு வந்தது.  எனது கல்விக்கு உதவுவதற்கு அன்று ஒரு பாட்டி இருந்தார்கள். போரைக் காரணமாகச்சொல்லி இங்கு புகலிடம்  பெற்றிருந்த  எனக்கும் ஒரு தார்மீக கடமை இருப்பதாக அந்தக்கனவில்  உணர்ந்தேன்.  அதனை எனது நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அதன் வெளிப்பாடுதான்  1988 ஆம் ஆண்டு  மெல்பனில் எனது நண்பர்களையும் இணைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட  இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( Ceylon Students Educational Fund) என்ற தொண்டு நிறுவனம்.

எனது கல்விக்காக எனது பாட்டி அன்று  வழங்கிய ஊழியத்தொண்டு அவுஸ்திரேலியா வந்து சேர்ந்த மறுகணமே எனக்கு  முன்னுதாரணமாகியது.

முப்பத்தி நான்கு   ஆண்டுகளை (1988 -2022) நிறைவுசெய்துகொண்டு


தொடர்ந்தும் இயங்கிவரும் இந்த அமைப்பினால் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பெற்றவர்களை,  குறிப்பாக தந்தையை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

வடக்கு - கிழக்கில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும், இடம்பெயர்ந்து வந்து வாழ்ந்த கம்பஹா மாவட்டத்திலும் இந்த நிதியத்தினால்  பல தமிழ் மாணவர்கள் பயனடைந்தனர்.

மலையகத்தில்  வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த பல மாணவர்களும் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கிலும் மலையகத்திலும் கம்பகாவிலும்  மாணவர் கண்காணிப்பாளர்களை தெரிவுசெய்து அவர்கள் ஊடாக போரில் பாதிக்கப்பட்ட  மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களின் விபரங்களைத்திரட்டி அதற்கான விண்ணப்பங்களையும் பெற்று உதவும் அன்பர்களின் பரிசீலனைக்கு வழங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நிதியுதவி அனுப்பி, மாணவர்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், பாடசாலை தவணைப்பரீட்சை புள்ளிவிபர முன்னேற்ற அறிக்கைகளை உதவும் அன்பர்களுக்கு வழங்கிவரும் நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்றுவதனால் இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

இந்தப்பதிவை எழுதும் தருணத்தில் கடந்த முப்பத்தி நான்கு  ஆண்டுகளில் இந்நிதியத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடவிரும்புகின்றேன். இந்நிதியத்திற்கான அமைப்புவிதிகளை (Constitution) தயாரித்து, இந்த அமைப்பினை விக்ரோரியா மாநிலத்தின் Consumer Affairs இல் பதிவுசெய்துதந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் முதலாவது தலைவராகவும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவாகும் தலைவர் பதவிக்கு, கணக்காளர் ஏ.வி. முருகையா, திருமதி புவனா இராஜரட்ணம், குமாரவேலு மகேந்திரன், இராஜரட்ணம் சிவநாதன், சட்டத்தரணி நிவேதனா அச்சுதன்,  Dr. நடேசன்,  Dr சந்திரானந்த், ஆவூரான் சந்திரன்,  Dr (திருமதி) மதிவதனி சந்திரானந்த், (அமரர்) திருமதி அருண் விஜயராணி, விமல் அரவிந்தன், ஆகியோர் தெரிவாகினர். தற்போதுதான் முப்பது ஆண்டுகளுக்கும் பின்னர்தான் பலரதும் வேண்டுகோளையடுத்து நான் தலைவராக தெரிவுசெய்யப்பட்டேன்.



சிட்னியில் இயங்கிய தமிழ் மக்கள் மனித உரிமை  அமைப்பைச் சேர்ந்தவரும் எமது கல்வி நிதியத்தின் துணைத்தலைவராக இருந்தவருமான   அன்பர் துரைசிங்கம் அவர்களின் ஏற்பாட்டினால்  அவர் சம்பந்தப்பட்டிருந்த  தமிழ் மனித உரிமைகள் அமைப்பு  25 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்கியது.  அதனை  நிரந்தர வைப்பிலிட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்திலிருந்தும் பல மாணவர்களுக்கு உதவுகின்றோம். 

குறிப்பிட்ட நிதி அவர்களது அமைப்பின் ஸ்தாபகர் (அமரர்) மருத்துவர் இராசநாயகத்தின் ஞாபகார்த்தமாக இன்றுவரையில் பாதுகாப்பாக நிதியத்தின் நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. எமது நிதியம் காலத்துக்குக்காலம் சேமித்த மேலும்  இருபதினாயிரம் அவுஸ்திரேலியன் ($20,000) வெள்ளிகளுடன், தற்பொழுது மொத்தம் 45 ஆயிரம் வெள்ளிகளை நிரந்தரவைப்பிலிடப்பட்டிருக்கிறது. உதவும் அன்பர்கள்  இதுவரையில் தெரிவுசெய்யப்படாத மாணவர்களுக்கு குறித்த நிரந்தர வைப்பு நிதியிலிருந்து பெறப்படும் வட்டிப்பணத்தின் உதவியுடன் ஆதரவு வழங்கி வருகின்றோம்.

இந்நிதியம் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, நான் வடக்கில் தொடர்புகொண்ட ஆசிரியர்களான எழுத்தாளர்கள் தெணியான், கோகிலா மகேந்திரன், உடுவை தில்லை நடராஜா, மு. பொன்னம்பலம், செங்கை ஆழியான் முதலானோர் சில தகவல்களை தந்தனர்.

முதல்கட்டமாக ஆறு மாணவர்களின் விபரங்கள் கிடைத்ததும், அவர்களின் படங்களுடன் ஒரு செய்தியை எழுதி நண்பர் தெணியானுக்கு அனுப்பினேன்.  அவர் அதனை யாழ். முரசொலி பத்திரிகை ஆசிரியர் நண்பர் திருச்செல்வத்திடம் சேர்ப்பித்தார். அவர் அதனை தனது பத்திரிகையில் வெளியிட்டார்.

அதனைப்பார்த்த போரிலே கணவர்மாரை இழந்த சில விதவைப்பெண்களும் கடிதம் மூலம் தொடர்புகொண்டனர். 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற மாணவர்களின் விபரங்களை கோவைகளில் பத்திரப்படுத்திவைத்துக்கொண்டு, 1988 ஆம் ஆண்டு வந்த நவராத்திரி காலத்தில் எனது ஒரு படுக்கை அறை வீட்டில் சரஸ்வதி பூசையை ஏற்பாடு செய்தேன்.

அதில் குறிப்பிட்ட கோவைகளை வைத்து, அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களை விளக்கேற்றச்செய்து, நிகழ்வில் இணைந்துகொண்ட நண்பர்களிடம் மாணவர்களின் விண்ணப்பங்களை காண்பித்து, சிலரை உதவும் அன்பர்களாகத் தெரிவுசெய்தேன்.

இந்தத்  தொடரில்  இனிவரவிருக்கும் அங்கங்களில் எமது கல்வி நிதியம் பற்றிய மேலதிக தகவல்களை பதிவுசெய்வேன்.

 

இலக்கியவாதிகளின் வருகை

இக்காலப்பகுதியில் எழுத்தாளர்கள்  அருண். விஜயராணி, மாவை நித்தியானந்தன், ரேணுகா தனஸ்கந்தா ஆகியோர் மெல்பனுக்கு வந்து சேர்ந்தனர்.

மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை சிட்னிக்கு வந்துசேர்ந்தார்.  அவர் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் என்னைத்தேடி வீரகேசரி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்ற தகவலை வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபால் சொல்லித்தான் எஸ். பொ. தெரிந்துகொண்டார்.  எனது முகவரியையும் அவரிடம் கேட்டுப்பெற்றுக்கொண்டு புறப்பட்டு வந்தவர்,  சிட்னியில் தமது மகன் மருத்துவர் அநுரா வீட்டிலிருந்து எனக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

அவரது முகவரிக்கு எனது சமாந்தரங்கள் கதைத் தொகுப்பின் பிரதியை அனுப்பிவைத்தேன். அவரும் அதனைப் படித்துவிட்டு நல்லதோர் விமர்சனம் எழுதி அனுப்பினார். அந்த விமர்சனம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை இதழிலும் கொழும்பு தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியானது.

மெல்பன் வை. டபிள்யூ. சி.ஏ. மண்டபத்தில் 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை ஒழுங்குசெய்துவிட்டு, எஸ். பொ.வையும் மாத்தளை சோமுவையும் அழைத்திருந்தேன்.

எனினும் எஸ். பொ. மாத்திரம் வருகை தந்து உரையாற்றினார்.  அதுவே அவர் அவுஸ்திரேலியாவில் மேடையில் தோன்றி உரையாற்றிய முதல் நிகழ்வு. எஸ்.பொ. சுவாரசியமாகப்பேச வல்லவர்.  அன்றும் அவர் அவ்வாறுதான் பேசினார்.

ராஜிவ் காந்தி – ஜே.ஆர். ஜெயவர்தனா கைச்சாத்திட்ட இலங்கை – இந்திய ஒப்பத்தம் ஒருவகையில் குறைப்பிரசவம் என்ற தொனியில்  பேசினார்.  அதற்கு அவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் காலத்து கதையொன்றையும் சொன்னார்.

நாவலர் தாம் எழுதிய சைவவினா விடை நூலில் காலையில் மலசலம் எந்தத்திசையிலிருந்து கழிக்கவேண்டும் எனவும் எவ்வாறு சவுசம் செய்யவேண்டும் எனவும் சொல்லியிருப்பார்.

எஸ். பொ. சொன்ன கதை:

ஊரில் ஒரு பெரியவர் நாவலரின் உபதேசத்தின் பிரகாரம் நடப்பவர்.  ஒருநாள் காலையில் மலசலம் கழிப்பதற்காக கொல்லைப்புறம் சென்றார்.  காரியம் முடிந்ததும் தண்ணீர் எடுத்துவந்த செம்பை கழுவுவதற்காக எடுத்தபோது ஒரு காகம் வந்து அதனை தட்டிவிட்டதாம்.

மறுநாள் சென்றபோது,  செம்பை கையில் வைத்துக்கொண்டே காரியத்தை கவனித்தாராம்.  கழுவமுற்படும்போது அந்தக்காகம் வந்து அதனையும் தட்டிவிட்டதாம்.

மூன்றாம் நாள், காகத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக மலசலம் கழிக்க முன்பே கழுவிக்கொண்டாராம்.

இவ்வாறு கதை சொல்லி சபையிலிருந்தவர்களை சிரிக்கவைத்த எஸ்.பொ, அதன் உச்சமாக,  “ அன்பர்களே… இதில் காகம் யார்..? செம்பு யார்..? அந்தப்பெரியவர் யார்…?

ராஜீவ் காந்தியா.., ஜே.ஆர். ஜெயவர்தனாவா…? அந்த ஒப்பந்தமா..? வீட்டுக்குப்போய் யோசித்து தீர்மானித்துக்கொள்ளுங்கள்  “ என்றார்.

எனது சமாந்தரங்கள் நூல் வெளியீடு பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் – எழுத்தாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது.   பேராசிரியர் எலியேஸர், இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் இராஜன் இராசையா, இந்து சங்கத்தின் தலைவர் மருத்துவர் செல்வேந்திரா, சோமா சோமசுந்தரம் அண்ணர், ரவீந்திரன் அண்ணர்,  சட்டத்தரணி அம்பிகை பாகன், பொறியிலாளர் தணிகாசலம், கணக்காளர் தருமகுலராஜா,  ஆயுர்வேத மருத்துவர் குணரட்ணம், எழுத்தாளர் அருண். விஜயராணி ஆகியோரும் உரையாற்றினர்.

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சட்டத்தரணி கே. கந்தசாமியின் உருவப்படத்தை  இந்நிகழ்வில் திறந்துவைத்தோம்.

அவ்வேளையில் 13 மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள் தயாராகியிருந்தனர். அவர்களையும் விழாவுக்கு அழைத்து பேராசிரியர் எலியேஸரின் கரங்களினால், அம்மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கோவைகளை அந்த அன்பர்களிடம் கையளித்தேன்.  சமாந்தரங்கள் நூலின் விற்பனையில் கிடைத்த நிதியனைத்தையும் கல்வி நிதியத்திற்கே வழங்கினேன்.

அப்போது எனது பாட்டியை நினைத்துக்கொண்டு, அவர்பற்றியும் சில வார்த்தைகளை மேடையில் சொன்னேன். வித்துக்கள் விருட்சமாகும் கதைதான் அது.

எஸ். பொ. அச்சமயம்  என்னுடன் நின்ற அந்த நாட்கள் கலகலப்பாக கழிந்தன. ஒருநாள் அவர் டென்மார்க்கிலிருக்கும் இலக்கியவாதி தருமகுலசிங்கத்தின் மைத்துனர் யாழ். பாஸ்கர் என்று ஒருவர் மெல்பனில் இருக்கிறாராம். அவரிடம் செல்வோம் என்றார்.

அந்த யாழ். பாஸ்கர்தான் பின்னாளில் அக்கினிக்குஞ்சு இதழையும் தற்போது அதே பெயரில் இணைய இதழையும் நடத்திவருபவர். அந்தப்பயணத்தில் எஸ்.பொ. மெல்பனில் கலாநிதி காசிநாதர், மாவை நித்தியானந்தன்,  அருண். விஜயராணி, ரேணுகா தனஸ்கந்தா, நவரத்தினம் இளங்கோ  ஆகியோரையும் சந்தித்தார்.

எஸ்.பொ. வை,  நவரத்தினம் இளங்கோ மெல்பன் 3 ZZZ   தமிழோசை வானொலி கலையகத்திற்கும் அழைத்துச்சென்று பேசவைத்தார். உணவு நாகரீகம் என்ற தலைப்பில் பேசிய அவர், எனது சமாந்தரங்கள் கதைத் தொகுப்பு பற்றியும் உரையாற்றினார்.

அவரது ஒரு புதல்வன் மித்ர , விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த சிறந்த ஒளிப்படக்கலைஞர்.  இந்தியாவுக்கு படகில் சென்றவேளையில் கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மெல்பனில் அவரைச்  சந்தித்த தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவினர், இந்தத் தகவலை கேட்டுத்தெரிந்துகொண்டபின்னர் அவரையும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்.

அதனால், பின்னர் வந்த சிக்கல்கள் பற்றி இனிவரும் அங்கங்களில் எழுதுவேன்.  

( தொடரும் )

 

                                                               ---0---

 

 

 

 

No comments: