சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - மெல்பேர்ண்

 சிறீலங்கா பேரினவாத அரசபடைகளால் காலத்திற்குக்காலம்


இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும், இறுதி யுத்தத்தின்போது 2009-ம் ஆண்டு மேத்திங்களில் முள்ளிவாய்க்காலில் பேரினவாதப்படைகளால் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழமக்களையும் நினைவுகூருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 13-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18-05-2022 புதன்கிழமை மாலை 7.00மணியளவில் மெல்பேர்ண் கங்கேரியன் சமூகமண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


இளையசெயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. இறுதியுத்தத்தின்போது அரசபடைகளின் எறிகணைத்தாக்குதலில் தனது தந்தையை இழந்து முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலங்கள் அனைத்தையுத் கடந்துவந்த திருமதி.தேனுகா அச்சுதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.


அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சிறுவயதிலேயே முள்ளிவாய்க்கால் பேரவலங்களையும் கடந்துவந்து அரசபடையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள தனது தந்தையை தேடிக்கொண்டிருக்கும் செல்வி.காநிலா ஜெயக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுப் பீடத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இதனை முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரையிலும் அந்த அவலங்களோடு பயணித்து அந்த அவலங்களிலிருந்து மீண்டு வந்தவர்களில் ஒருவரான திருமதி. சுகன்ஜா பரந்தாமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கு நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள். அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது.


அகவணக்கத்தைத்தொடர்ந்து "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்......" என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலயா பள்ளி மாணவிகளின் வணக்கநடனம் இடம்பெற்றது.


சிறப்புரையினை தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திரு. இளையவன்னியன் அவர்கள் நிகழ்த்தினார்.


அடுத்து தாயகத்திலிருந்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரும் முள்ளிவாய்க்கால் சாட்சியங்களில் ஒருவருமான திரு.சிவகரன் ஒளிப்பதிவுசெயது வழங்கியிருந்த உரை திரையிடப்பட்டது.


தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது குழந்தையாக அந்த அவலங்களை கடந்துவந்திருந்த செல்வி. பிறையினி தவச்செல்வம் அவர்களது ஆங்கிலமொழி உரை இடம்பெற்றது.


இறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள இறக்கப்பட்டு உறுதிமொழியோடு இரவு 8.20 மணியளவில் தமிழர் இனவழிப்புநினைவுநாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.


நிறைவாக இறுதி யுத்தகாலப்பகுதியில் பொதுமக்களை பட்டினிச்சாவிலிருந்து பாதுகாத்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட கஞ்சியை நினைவூட்டும்முகமாக முள்ளிவாய்க்கால்கஞ்சி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.


No comments: